- ஸ்டெபானி ஹெகார்டியால்
- மக்கள்தொகை செய்தியாளர், பிபிசி உலக சேவை
பட மூலாதாரம், BEN GRAY
உலகெங்கிலும் உணவு விலைகள் அதிகரித்துள்ளன, சில இடங்களில் பற்றாக்குறையும் நிலவுகிறது. எல்லா இடங்களிலும் மக்கள் புதிய சூழ்நிலைகளுக்கு மாற வேண்டிய நிலை காணப்படுகிறது.சில சமயங்களில் இது அவர்களின் உணவுப்பழக்கங்களின் மாற்றத்தைக் குறிக்கிறது.
அமெரிக்காவில் வால்மார்ட்டுக்கு நள்ளிரவு பயணம்
காலை 4 மணி. ஜார்ஜியாவில் கோடையின் வெப்பத்துடன் காற்று ஏற்கெனவே பிசுபிசுப்பாக ஒட்டிக்கொள்கிறது. டோனா மார்ட்டினின் வேலை அப்போது ஆரம்பிக்கிறது. மற்றொரு நாள் என்பது தன் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க மற்றொரு போராட்டம்.
மார்ட்டின் ஒரு உணவு சேவை இயக்குநர். 4,200 குழந்தைகள் அவர் பொறுப்பில் உள்ளனர். இந்தக்குழந்தைகள் அனைவரும் ஃபெடரல் இலவச பள்ளி உணவு திட்டத்தில் உள்ளனர்.
“22,000 பேர் கொண்ட எங்கள் முழு சமூகத்திலும் இரண்டு மளிகைக் கடைகள்தான் உள்ளன. இது ஒரு உண்மையான உணவு பாலைவனம்.”என்று அவர் கூறுகிறார்.
மேலும் கடந்த ஒரு வருடமாக தனக்கு தேவையானதை பெற முடியாமல் அவர் தவித்து வருகிறார்.

பட மூலாதாரம், BEN GRAY
ஆண்டு உணவுப் பணவீக்கம் ஜூலையில் 10.9% ஐ எட்டியது. 1979 க்குப் பிறகு இது மிக அதிக அளவாகும். விலைகள் உயர்ந்து வருவதால், மார்ட்டினின் சில உணவு வழங்குநர்கள் பள்ளிகளுக்கு உணவளிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
“நீங்கள் எல்லோரும் ஏன் இதுதான் வேண்டும் என்று சொல்கிறீர்கள். எங்களுக்கு லாபமே இல்லை என்று அவர்கள் என்னிடம் சொல்கிறார்கள்,”என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் ஃபெடரல் பள்ளி உணவுத் திட்டம் கண்டிப்புடன் கண்காணிக்கப்படுகிறது. அதாவது ‘கோழிக்கறியில் பிரட்தூள்கள்’ முழுமையான உணவாக இருக்க வேண்டும் மற்றும் உணவுகளில் சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக இருக்க வேண்டும். எனவே, தானியங்கள் முதல் பேகல்கள் அல்லது யோகர்ட்ஸ் வரை குறிப்பிட்ட வகைகளைத்தான் மார்ட்டின் பெற வேண்டும்.
தன்னுடைய விநியோகம்யர்களும் சிரமப்படுவதை அவர் அங்கீகரிக்கிறார். தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக வாகன ஓட்டுநர்கள் கிடைப்பதில்லை. எரிபொருள் விலையும் கடந்த ஆண்டை விட 60% அதிகரித்துள்ளது.
• அமெரிக்காவில் ஆண்டு உணவு பணவீக்கம் ஜூலை மாதத்தில் 10.9% ஆக இருந்தது
• அமெரிக்கர்கள் தங்கள் வருமானத்தில் 7.1% உணவுக்காக செலவிடுகிறார்கள் (USDA 2021)
விநியோகம்யர்கள் பொருட்களை வழங்காதபோது அவர்தான் மாறுபட்டு சிந்திக்கவேண்டியுள்ளது. சமீபத்தில், குழந்தைகள் விரும்பும் வேர்க்கடலை வெண்ணெயை அவரால் பெற முடியவில்லை, எனவே அதன் இடத்தில் மார்டின், பீன்ஸ் டிப்பை கொடுத்தார்.
“குழந்தைகளுக்கு அது அவ்வளவாக பிடிக்காது என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் அவர்களுக்கு ஏதாவது உணவை தந்துதானே ஆகவேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
பெரும்பாலும் அவரும் அவருடைய ஊழியர்களும் வால்மார்ட் போன்ற உள்ளூர் கடைகளில் இருந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பொருட்களை வாங்குவார்கள்.
“ஒரு வாரத்துக்கு தினமும் யோகர்ட் வாங்க ஊர்முழுவதும் அலைந்தோம்.”
“நிறைய குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்வதில் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் ‘அம்மா, இன்று எங்களுக்கு ஸ்மூத்திஸ் கிடைக்கவில்லை’ என்று சொல்வதை நான் விரும்பவில்லை.”என்கிறார் அவர்.
இலங்கைக்கு கைக்கொடுக்கும் பலாக்காய்

பட மூலாதாரம், CHAMIL RUPASINGHE
மத்திய இலங்கையில் கண்டிக்கு வெளியே ஒரு காலத்தில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை நெல்வயல்கள் இருந்த இடத்தில், அனோமா குமாரி பரநாதலா தனது காய்கறித் தோட்டத்தின் சலசலக்கும் இலைகளுக்கு இடையிலிருந்து பச்சை பீன்ஸ் மற்றும் புதினா இலைகளைப் பறித்து வருகிறார்.
அரசும் பொருளாதாரமும் சரிந்ததால் நாட்டில் பிற இடங்களில் நிலவும் குழப்பத்தை இங்கிருந்து கற்பனை செய்வது கடினம்.
மருந்துகள், எரிபொருள், உணவு என எல்லாவற்றுக்கும் தட்டுப்பாடு உள்ளது. நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட அடிப்படை பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
“இப்போது மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள்,” என்று அனோமா பரநாதலா கூறுகிறார். “சாப்பிட எதுவும் இருக்காது என்று மக்கள் பயப்படுகிறார்கள்.”
இந்த நிலம் அவர் குடும்பத்துக்குச் சொந்தமானது. அவர் தொற்றுநோய் காலகட்டத்தில் பொழுதுபோக்கிற்காக இங்கே நடவு செய்யத் தொடங்கினர். இப்போது உயிர்வாழ இதுதான் கைக்கொடுக்கிறது.
• இலங்கையில் ஆண்டு உணவுப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 75.8% ஆக இருந்தது
• இலங்கை மக்கள் தங்கள் வருமானத்தில் 29.6 சதவிகிதத்தை உணவுக்காக செலவிடுகின்றனர்
புத்தகங்கள் மற்றும் யூடியூப் காணொளிக்கள் மூலம் காய்கறிகளை எவ்வாறு வளர்ப்பது என்பதை அவர் கற்றுக்கொண்டார். இப்போது அவரது தோட்டத்தில் தக்காளி, கீரை, பாகற்காய், மரவள்ளிக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்கு உள்ளன.
சொந்தமாக நிலம் இருக்கும் அதிருஷ்டம் எல்லோருக்கும் இல்லை. ஆனால் பல இலங்கையர்கள் மற்றொரு உணவு ஆதாரத்திற்கு மாறுகிறார்கள் – பலா மரங்கள்.
“கிட்டத்தட்ட எல்லா தோட்டத்திலும் பலா மரம் இருக்கிறது” என்கிறார் பரநாதலா.
“ஆனால் சமீப காலம் வரை மக்கள் பலாப்பழத்தை கவனிக்காமல் இருந்தனர். அவை மரங்களிலிருந்து கீழே விழுந்து வீணாயின.”

பட மூலாதாரம், CHAMIL RUPASINGHE
இப்போது விலை அதிகமான காய்கறிகள் அல்லது இறைச்சிக்கு பதிலாக, பலாக்காயை கொண்டு சுவையான தேங்காய் குழம்பு தயாரிக்கத் தொடங்கினார். பலாக்காய் இப்போது கொட்டுவிலும் போடப்படுகிறது. கொட்டு என்பது தெரு உணவாக விற்கப்படும் ஒரு பிரபலமான வறுவல் உணவாகும். மேலும் சிலர் பிரட்,இனிப்புக்கட்டி (கேக்) மற்றும் சப்பாத்திக்கு பலா விதைகளை அரைத்து மாவு தயாரித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு உலகெங்கிலும் உள்ள பெரிய உணவகங்களின் மெனுவில் இறைச்சிக்கு மாற்றாக பலாக்காய் தோன்றியது. ஆனால் அது வளரும் இடத்தில் அதை பிரபலமாக்க உணவுநெருக்கடி தேவைப்பட்டது.
இந்தப்பழத்தின் சுவை எப்படி இருக்கும்? “இது விவரிக்க முடியாத ஒன்று.சொர்க்கம் போல இருக்கும்,” என்று அவர் கூறுகிறார்.
நைஜீரியாவில் ‘மூடப்பட்டுவரும் பேக்கரிகள்’

பட மூலாதாரம், TOM SAATER
இம்மானுவேல் ஒனுஓராவுக்கு பொதுவாக அரசியலில் ஆர்வம் அதிகம் இல்லை. அவர் ஒரு பேக்கர்,அவர் பிரட் விற்கவே விரும்புகிறார்.
ஆனால் சமீபத்தில் நைஜீரியாவில், அவரது வேலை சாத்தியமற்றதாகிவிட்டது.
“சென்ற ஆண்டில் கோதுமை மாவு விலை 200% அதிகரித்துள்ளது. சர்க்கரை கிட்டத்தட்ட 150% அதிகரித்துள்ளது.பேக்கிங்கிற்கு பயன்படுத்தும் முட்டைகளின் விலை சுமார் 120% உயர்ந்துள்ளது,” என்று அவர் கூறுகிறார்.
“நாங்கள் நஷ்டத்தில் இயங்குகிறோம்,” என்று அவர் கூறுகிறார். தனது 350 ஊழியர்களில் 305 பேரை அவர் பணிநீக்கம் செய்ய வேண்டியிருந்தது. “அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு எப்படி உணவளிப்பார்கள்?”
நைஜீரியாவின் முக்கிய ப்ரட் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான அவர் ஒரு இயக்கத்தை நடத்தினார். ஜூலையில், “சேவைகளை நிறுத்துதல்” என்ற நடவடிக்கையின் கீழ் ஐந்து லட்சம் பேக்கரி நடத்துபவர்களை நான்கு நாட்களுக்கு தங்கள் கடைகளை மூடவைத்தார்.
அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு தாங்கள் இறக்குமதி செய்யும் பொருட்களின் மீதான வரியைக் குறைக்கும் என்று அவர் நம்பினார்.
மோசமான மகசூல் மற்றும் தொற்றுநோய்க்குப் பிறகு அதிகரித்த தேவை ஆகியவற்றின் கலவையானது உலகம் முழுவதும் கோதுமை மற்றும் தாவர எண்ணெய் விலைகளை உயர்த்தியது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, நிலைமையை இன்னும் மோசமாக்கியது.
நைஜீரியாவில், பேக்கரியில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் இங்கு ஒரு ப்ரட் பாக்கெட், ஐரோப்பாவில் விற்கப்படும் விலையில் ஒரு சிறு பகுதிக்கே விற்கப்படுகிறது. எனவே விலை உயர்வை சமாளிப்பது மிகவும் கடினம்.
• நைஜீரியாவில் ஆண்டு உணவுப் பணவீக்கம் ஜூலையில் 22% ஆக இருந்தது.
• நைஜீரியர்கள் தங்கள் வருமானத்தில் 59.1%ஐ உணவுக்காக செலவிடுகிறார்கள்
நாட்டில் மின்விநியோகம் ஒழுங்கற்றதாக உள்ளது, எனவே பெரும்பாலான வணிகங்கள் டீசலை பயன்படுத்தும் ஜெனரேட்டர்களை இயக்குகின்றன. ஆனால் எரிபொருளின் விலை 30% அதிகரித்துள்ளது. எண்ணெய் வளம் இருக்கும்போதிலும் நைஜீரியாவில் ஒருசில எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களே உள்ளன எனவே கிட்டத்தட்ட டீசல் முழுவதும் இறக்குமதி செய்யப்பட வேண்டும்.
தன்னுடைய செலவுகள் மும்மடங்காக உயர்ந்துள்ளபோதிலும் விலைகளை 10-12% மட்டுமே உயர்த்த முடியும் என்று ஒனுஓரா கூறுகிறார். அவரது வாடிக்கையாளர்களால் அதற்கு மேல் விலைகொடுத்து வாங்க முடியாது.

பட மூலாதாரம், TOM SAATER
“நைஜீரியர்கள் வறுமை நிலையில் உள்ளனர். வணிகங்கள் மூடப்படுகின்றன. ஊதியங்கள் தேக்க நிலையில் உள்ளன. எனவே அவர்களை அதிக சுமைப்படுத்த முடியாது,” என்று இம்மானுவேல் ஒனுஓரா கூறுகிறார்.
சராசரியாக, நைஜீரியர்கள் தங்கள் வருமானத்தில் கிட்டத்தட்ட 60%ஐ உணவுக்காக செலவிடுகிறார்கள். மாறாக அமெரிக்காவில், இது 7%க்கு அருகில் உள்ளது.
இப்படியே தொடர்ந்தால் பேக்கரிகளால் தாக்குப்பிடிக்க முடியாது. “நாங்கள் ஒரு தொண்டு நிறுவனம் அல்ல. நாங்கள் லாபம் பார்க்கவே இந்த வணிகத்தில் இருக்கிறோம்.”
“ஆனால் நைஜீரியர்கள் சாப்பிடுவதற்காக நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம்,” என்று அவர் கூறுகிறார்.
பெருவில் சமூக பானை 75 பேருக்கு உணவளிக்கிறது

பட மூலாதாரம், GUADALUPE PARDO
பனிமூட்டமான லிமா நகருக்கு அருகே இருக்கும் ஒரு குன்றின் மோசமான பாதையில் ஏறிக்கொண்டிருக்கும் ஜஸ்டீனா ஃபுளோரஸ் இன்று என்ன சமைப்பது என்ற சிந்தனையில் உள்ளார்.
இது ஒவ்வொரு நாளும் தீர்க்க கடினமாக இருக்கும் ஒரு பிரச்னை.
தொற்றுநோயின் உச்சக்கட்டத்தில் அவர் 60 அண்டை வீட்டாருடன் சேர்ந்து அவர்கள் சமைக்க வேண்டிய உணவை ஒன்று திரட்டினார். சான் ஜுவான் டி மிராஃபுளோரிஸில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் வீட்டுப் பணியாளர்கள் – சமையல்காரர்கள், பணிப்பெண்கள், ஆயாக்கள் மற்றும் தோட்டக்காரர்கள். ஆனால் தொற்றுநோயின் போது ஜஸ்டீனாவைப்போலவே பெரும்பாலானவர்கள் தங்கள் வேலையை இழந்தனர். குடும்பங்கள் பசியுடன் இருந்தன.
எரிபொருளுக்காக தாங்கள் சேகரித்த விறகுகளைக் கொண்டு அவர்கள் ஜஸ்டீனாவின் வீட்டிற்கு வெளியே ஒரு தொட்டியில் சமைக்கத் தொடங்கினர். பின்னர் அவர்கள் ஒரு சிறிய குடிசையைக் கட்டினார்கள். உள்ளூர் பாதிரியார் ஒரு அடுப்பை வழங்கினார். வீணாகிப்போகும் உணவை நன்கொடையாக அளிக்குமாறு சந்தை வியாபாரிகளிடம் ஜஸ்டீனா கேட்டுக் கொண்டார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் 75 பேருக்கு வாரத்திற்கு மூன்று முறை உணவளிக்கிறார். கோவிட்டுக்கு முன் சமையலறை உதவியாளராக பணிபுரிந்த ஜஸ்டீனா, தனது சமூகத்தில் ஒரு தலைவர்போல ஆகிவிட்டார். “நான் உதவி கேட்டு தொடர்ந்து கதவுகளைத் தட்டுகிறேன்.”என்கிறார் அவர்.
• பெருவில் ஆண்டு உணவு பணவீக்கம் ஜூலையில் 11.59% ஆக இருந்தது.
• பெரு மக்கள் தங்கள் வருமானத்தில் 26.6%ஐ உணவுக்காக செலவிடுகிறார்கள்
இறைச்சி மற்றும் காய்கறிகளுடன் சுவையான ஸ்ட்யூவை தயார் செய்து சாதத்துடன் அவர் , பரிமாறினார். ஆனால் கடந்த சில மாதங்களில் நன்கொடைகள் பெருமளவு குறைந்துவிட்டன. கூடவே எல்லா வகை உணவையும் சமைக்க பொருட்களைப்பெறுவது அதிக கடினமாக உள்ளது.
“நாங்கள் நம்பிக்கை இழந்த நிலையில் இருக்கிறோம், நான் உணவின் அளவை குறைக்க வேண்டியிருந்தது,” என்று ஜஸ்டீனா கூறுகிறார். அரிசிதொலைபேசிற அடிப்படைப் பொருட்களைப் பெற அவர் போராட வேண்டியுள்ளது.

பட மூலாதாரம், GUADALUPE PARDO
எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்வுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஏப்ரல் மாதம் தொடங்கிய போராட்டம், உணவு விநியோகத்தை மேலும் சீர்குலைக்கும் தொடர் வேலைநிறுத்தங்களுக்கு வழிவகுத்தது.
அதிகரித்து வரும் விலைகள் காரணமாக சமீபத்தில் இறைச்சி வழங்குவதை ஜஸ்டீனா நிறுத்த வேண்டியிருந்தது. அவர் ரத்தம், கல்லீரல், எலும்புகள் மற்றும் கிஸர்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தினார். ஏனெனில் அவை மலிவானவை. கிப்லெட்டின்(உள் உறுப்புகள்) விலை ஏறியபோது அதற்கு பதிலாக வறுத்த முட்டைகளைக் கொடுத்தார். எண்ணெய் விலை ஏறியபோது வீட்டில் சமைத்துக்கொள்ளும்படி கூறி முட்டைகளை மக்களிடம் கொடுத்தார். ஆனால் இப்போது முட்டைகளும் இல்லை.
எனவே இன்று அவர் வெங்காயம் மற்றும் மூலிகைகளால் செய்யப்பட்ட சாஸுடன் பாஸ்தாவை பரிமாறுகிறார்.
வேலைநிறுத்தங்கள் அல்லது பற்றாக்குறைக்கு அவர் விவசாயிகளை குறை கூறவில்லை.
“நாங்கள் இங்கு பெருவில் உணவை வளர்க்க முடியும். ஆனால் அரசு உதவுவதில்லை,” என்று அவர் கூறுகிறார்.
ஜோர்டனில் கோழிக்கறி புறக்கணிப்பு

பட மூலாதாரம், AHMAD JABER
மே 22 அன்று ஒரு பெயர்குறிப்பிடாத ட்விட்டர் கணக்கில் இருந்து அரபு மொழியில் ஒரு ட்வீட் வெளியானது. #Boycott_Greedy_Chicken_Companies என்ற வலையொட்டு (ஹேஷ்டேக்)குடன் கோழி தயாரிப்புகளை புறக்கணிக்குமாறு அது மக்களை கேட்டுக்கொண்டது.
சில நாட்களுக்குப் பிறகு ஜோர்டனில், சலாம் நஸ்ரல்லா சூப்பர் சந்தையில் இருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்த பிரச்சாரம் மிகுதியாக பகிரப்பட்டதைக் கண்டார்.
“நாங்கள் எல்லா இடங்களிலிருந்தும் இதைப் பற்றி கேள்விப்பட்டோம். எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் இதைப் பற்றி பேசினர். இது சமூக ஊடகங்கள் மற்றும்தொலைக்காட்சிமுழுவதும் இருந்தது,” என்று திருமதி நஸ்ரல்லா கூறுகிறார்.
தன் சொந்த கடையில் வாங்குதல் பில் அதிகரித்திருப்பதை அவர் கவனித்தார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இவர், தன் பெற்றோர், சகோதரிகள், மருமகள், மருமகன்கள் ஆகியோருக்கு தொடர்ந்து சமைத்து கொடுப்பதால் அதிகமாக கோழிக்கறி வாங்குவார்.
எனவே இந்த பிரச்சாரத்தில் இணைய அவர் முடிவு செய்தார்.
10 நாட்களுக்கு அவர் கோழியை தவிர்த்தார். ஆனால் அது கடினமாக இருந்தது. மற்ற இறைச்சி மற்றும் மீன் விலை அதிகம் என்பதால் சலாம் மற்றும் அவரது குடும்பத்தினர் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கோழியை சாப்பிடுகிறார்கள்.
அவர்கள் இறைச்சிக்கு பதிலாக ஹம்மஸ், ஃபாலாஃபெல் அல்லது வறுத்த கத்தரிக்காய் சாப்பிட்டனர். பிரச்சாரம் தொடங்கி பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு, கோழியின் விலை மூன்றில் ஒரு பங்கு குறைந்தது, கிட்டத்தட்ட ஒரு கிலோவிற்கு $1 (0.7 தினார்).
• ஜோர்டனில் ஆண்டு உணவுப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 4.1% ஆக இருந்தது
• ஜோர்டானியர்கள் தங்கள் வருமானத்தில் 26.9%ஐ உணவுக்காக செலவிடுகிறார்கள்
கோழிப் பண்ணைகள் மற்றும் இறைச்சிக் கூடங்களை நிர்வகிக்கும் ராமி பர்ஹோஷ், புறக்கணிப்பு யோசனையை ஆதரிக்கிறார். ஆனால் இது சரியான விளைவை ஏற்படுத்தவில்லை என்று அவர் நினைக்கிறார்.
அவரது பண்ணைகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, எரிபொருள் மற்றும் கோழித் தீவனத்தின் அதிகரித்து வரும் செலவுகளுடன் போராடி வருகின்றன.
பன்றிக் காய்ச்சலுக்குப் பிறகு சீனா தனது சொந்த பன்றிக் கூட்டத்தை உருவாக்கியது, தென் அமெரிக்காவில் வறட்சி மற்றும் யுக்ரேனில் போர் போன்ற காரணிகளால் எரிபொருள் மற்றும் தானியங்களின் விலை உயர்ந்தன.

பட மூலாதாரம், AHMAD JABER
ஜோர்டனில் அரசு கோழிக்கறி மற்றும் வேறு சில பொருட்களுக்கு விலை வரம்பை முன்மொழிந்தது. ரமலான் முடியும் வரை விலைவரம்பை செயல்படுத்த விவசாயிகள் ஒப்புக்கொண்டனர். ஆனால் மே மாத தொடக்கத்தில் அவர்கள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் விலை அதிகரிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது.
” மற்ற எல்லாவற்றின் விலையும் உயர்ந்து வருவதால் ஏற்பட்ட அதிருப்தியை கோழிக்கறி பிரதிநிதித்துவப்படுத்துகிறது,” என்று அவர் கூறுகிறார்.
எதிர்ப்பு ஏற்படுத்திய விளைவைக் கண்டு திருமதி நஸ்ரல்லா மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அது பிரச்சனையின் மையத்திற்கு செல்லவில்லை என்று அவர் கூறுகிறார்.
“துரதிர்ஷ்டவசமாக சிறு விவசாயிகள் மற்றும் கோழி விற்பனையாளர்கள் தான் இதன்காரணமாக அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகளுக்கு தேவையான அனைத்திற்கும் விலையைக்கூட்டிய பெரிய வியாபாரிகள் அல்ல.”என்று அவர் குறிப்பிட்டார்.
(சுனேத் பெரேரா, குவாடலுபே பார்டோ மற்றும் ரிஹாம் அல் பகைன் ஆகியோரின் உதவியுடன்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com