பட மூலாதாரம், Reuters
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.
கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.
பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில், மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் சிறைவாசம், கொசுக்கள் நம்மில் ஒரு சிலரை கடிப்பது ஏன்?, காட்டுயிர் விஞ்ஞானி ரவி செல்லத்தின் நேர்காணல், விநாயகர் சதுர்த்தி, டி20 உலகக்கோப்பை ஆகியவை குறித்த ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
ஊழல் வழக்கு: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிபிற்கு சிறை

பட மூலாதாரம், Getty Images
மலேசிய வரலாற்றில் கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு சில வழக்குகள் மட்டுமே ஒட்டுமொத்த நாட்டையும் உற்று கவனிக்க வைத்தன எனலாம். அந்த வரிசையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக் மீதான ஊழல் வழக்குகளுக்கு அந்த பட்டியலில் நிச்சயம் இடமுண்டு.
முன்பொரு சமயம், மங்கோலிய பெண் அல்தான் தூயா வழக்கிலும் நஜிப்பின் பெயர் அடிபட்டது. எனினும் அந்த நெருக்கடியில் இருந்து அவர் பின்னர் தப்பித்தார். ஆனால் 1எம்டிபி நிதி முறைகேடு உள்ளிட்ட ஊழல் வழக்குகள் அவரை மீளமுடியாத சிக்கலில் ஆழ்த்தி விட்டன.
கொசுக்கள் நம்மில் ஒரு சிலரை மட்டுமே கடிக்கும் – அது ஏன்?

பட மூலாதாரம், Science Photo Library
கொசுக்களும் அவை பரப்பும் நோய்களும் வரலாற்றில் நடந்த அனைத்துப் போர்களையும் விட அதிக மக்களைக் கொன்றுள்ளன.உண்மையில், புள்ளிவிவரங்களின்படி, கொசுதான் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் உலகின் மிகக் கொடிய உயிரினம். 2018ல் மட்டும் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் இறப்புகளுக்கு இந்த கொசுக்கள் காரணமாக இருந்தன.
ஆப்பிரிக்காவின் சிவிங்கிப் புலிகளை இந்தியாவுக்குக் கொண்டு வரும் திட்டம் நல்லதா?

பட மூலாதாரம், Getty Images
ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகளைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தும் திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. இந்தியாவுக்கு வரத் தயாராகவுள்ள சுமார் 16 சிவிங்கிப் புலிகளில் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரவுள்ளவை அங்கு தனிமைப்படுத்தப்பட்ட அடைப்பிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நான்கு சிவிங்கிப் புலிகள் நமீபியாவில் அதேபோல் வைக்கப்பட்டுள்ளன.
அப்படிக் கொண்டு வரப்படும் சிவிங்கிப் புலிகள், மத்திய பிரதேசத்திலுள்ள குனோ தேசிய பூங்காவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. ஆனால், அந்தப் பகுதிக்கு உலகில் வேறு எங்குமே காணப்படாத, குஜராத்தில் மட்டுமே வாழக்கூடிய ஆசிய சிங்கங்களில் ஒரு பகுதியை அங்கு இடம் மாற்ற வேண்டுமென்று காட்டுயிர் பாதுகாப்பு விஞ்ஞானிகளும் ஆர்வலர்களும் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி:விநாயகரும் கணபதியும் ஒன்றா?

பட மூலாதாரம், Getty Images
ஆகஸ்ட் மாத இறுதியில் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்போதெல்லாம், கிரிக்கெட் விநாயகர், நடன விநாயகர், கொரோனா விநாயகர், என வித்தியாசமான விநாயக வடிவங்கள் அந்தந்த சமயங்களில் பேசப்படுவதுண்டு.
ஆனால், விநாயகரைத் தெரிந்த நம்மில் எத்தனை பேருக்கு விநாயகியைத் தெரியும்? ஆம் , விநாயகி, கணேஷினி, பிள்ளையாரினி என்று அழைக்கப்படும் பெண் வடிவ பிள்ளையார் சிலைகளும் உண்டு. அதிகம் அறியப்படாத அல்லது பிரபலமடையாத இந்த பெண் விநாயக சிலைகள் இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் காணக்கிடைக்கின்றன. அதுமட்டுமன்றி, கையில் வளையல்களுடன், கழுத்துக்கு மேல் யானை முகத்துடன் இருக்கும், இந்த விநாயகி சிற்பங்கள் தமிழ்நாட்டிலும் பல்வேறு மாவட்டங்களில் காணப்படுகின்றன.
ஆசிய கோப்பை: இந்திய கிரிக்கெட் அணி குறித்து எழும் கேள்விகள்

பட மூலாதாரம், Getty Images
ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலம் இந்திய கிரிக்கெட் பிரியர்களுக்கு மிகவும் சுவாரசியமாக இருக்கும். பல நாடுகளுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடுவது மட்டுமின்றி, ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி பங்கேற்கிறது.
ஆசிய கோப்பை 2022, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறும். இந்தப்போட்டிக்காக 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com