Press "Enter" to skip to content

சீன ட்ரோன்களை எச்சரிக்க தைவான் துப்பாக்கி சூடு – அரிதான எதிர்வினை

  • பிரான்சஸ் மாவோ
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

சீனாவுக்கு அருகில் உள்ள தமது தீவுகளுக்கு மேலே பறந்து சென்ற சீன ட்ரோன்களை எச்சரிக்கும் விதமாக தைவான் முதல் முறையாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

இந்த நடவடிக்கைக்குப் பிறகு மூன்று ட்ரோன்களும் மீண்டும் சீன நிலப்பகுதியை நோக்கி திரும்பிப் பறந்ததை பார்க்க முடிந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய வாரங்களாகவே சீன ட்ரோன்கள் சீன நிலப்பகுதிக்கு அருகே உள்ள தமது தீவுக் கூட்டங்களுக்கு மேலே பறந்து வருவதாக தைவான் புகார் கூறி வந்தது.

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க அரசியல் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது முதல் சீன, தைவான் நீரிணை பகுதிகளில் பதற்றம் அதிகமாக உள்ளது.

பெலோசியின் வருகைக்குப் பிறகு, தைவானை ஒட்டிய கடல் பகுதிகளில் தமது படை பலத்தை பெருக்கிய சீனா மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சியிலும் ஈடுபட்டது. இதன் பின்பாக தைவான் கடல் பகுதியில் சீனா ட்ரோன்களை பறக்க விடுவதாக தைவான் கூறியது.

தைவான் தலைவர் சாய் யிங்-வென், “சில ட்ரோன்கள் ராணுவ புறக்காவல் சாவடிகளுக்கு மேல் பறந்தது – ஒரு வகை போர் நடவடிக்கை என்று அழைத்தார்.

சீன நகரமான ஜியாமெனில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூன்று கின்மென் தீவுகளான தாடன், எர்டான், ஷியு ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை மூன்று சிவிலியன் ட்ரோன்கள் காணப்பட்டதாக கின்மென் பாதுகாப்பு கட்டளை மையம் கூறியது.

இதையடுத்து ஆளில்லா விமானத்தை நேரடியாகச் சுடுவதற்கு முன், எச்சரிக்கும் விதமாக தீப்பொறிகளை பறக்கும் குண்டுகளை வானை நோக்கிச் சுட்டதாக தைவான் கூறியது. இதன் பிறகு அந்த ட்ரோன்கள் ஜியாமென்னை நோக்கித் திரும்பின

Map

தைவானின் சமீபத்திய குற்றச்சாட்டு தொடர்பாக சீனா இன்னும் பதிலளிக்கவில்லை. ஆனால் சமீபத்திய வாரங்களாக சீன ட்ரோன்களை பயன்படுத்து துன்புறுத்துவதாக தைவான் சுமத்திய குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்துள்ளது.

“சீனாவின் எல்லையில் பறக்கும் ட்ரோன்கள் அவை. இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்தார்.

ஆனால், அவரது கருத்துக்கு தைவான் வெளியுறவு அமைச்சகம் கோபத்துடன் எதிர்வினையாற்றியது. “அழைக்கப்படாதவர்களை திருடர்கள் என்று அழைக்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில், தைவான் வீரர்கள் ட்ரோன்களை விரட்டும் முயற்சியாக அவற்றை நோக்கி கற்களை வீசும் காட்சிகள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பப்பட்டன. இந்த காணொளி சீன சமூக ஊடகங்களில் பயனர்களால் பரவலான கேலிக்கும் ஆளானது.

கடந்த வாரம் நாட்டு மக்களுக்கு உறுதியளித்த தைவான் தலைவர் சாய் யிங்-வென், தீவின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று கூறினார். கடந்த வாரம், அவரது அரசாங்கம் T$586.3 பில்லியன் ($19 பில்லியன்; £16பில்லியன்) மதிப்பிலான பாதுகாப்புத்துறைக்கான வரவு செலவுத் திட்டத்தை வெளியிட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை எதிர்வினையாற்றிய தைவான், “எதிர்காலத்தில் சீன விமானங்களும் கப்பல்களும் எல்லைக்குள் நுழைந்தால் “எதிர் தாக்குதலுக்கு” தயார்,” என்று கூறியது.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பெலோசியின் வருகைக்கு பதிலடியாக தைவானைச் சுற்றி சீனா தனது மிகப்பெரிய ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது. அதன் ஒரு வாரத்துக்குள்ளாகவே தைவான் மீது உரிமை கோரும் இடங்களை நோக்கி ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை சீனா அனுப்பியது.

Presentational grey line

சீனா மற்றும் தைவான்: சில அடிப்படைகள்

சீனாவும் தைவானும் ஏன் மோசமான உறவுகளைக் கொண்டுள்ளன? சீனா சுயாதீன தீவை தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக அதை பிரதான நிலத்துடன் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

தைவான் எவ்வாறு ஆளப்படுகிறது? தீவில் அதன் சொந்த அரசியலமைப்பு உள்ளது, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அங்கு ஆளுகை செய்கிறார்கள். தைவான் ஆயுதப்படைகளில் சுமார் 3,00,000 படையினர் உள்ளனர்.

• தைவானை யார் அங்கீகரிக்கிறார்கள்? சில நாடுகள் மட்டுமே தைவானை அங்கீகரிக்கின்றன. பெரும்பாலானவை சீன அரசாங்கத்தை அங்கீகரிக்கின்றனர். தைவானுடன் அமெரிக்காவிற்கு அலுவல்பூர்வ உறவுகள் இல்லை. ஆனால் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை தீவுக்கு வழங்க வேண்டும் என்று ஒரு சட்டம் அமெரிக்காவில் உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »