பட மூலாதாரம், Getty Images
தேவமனோகரி மணிவேலின் வங்கிக் கணக்கில் 70 லட்சம் டாலர் வந்தபோது, தன்னை உலகத்தின் பெரிய அதிருஷ்டசாலி என்று அவர் நினைத்தார். ஆனால் தற்போது அவரும் அவரது நெருங்கிய நண்பர்கள் சிலரும் பிரச்சனையில் உள்ளனர்.
இந்த விவகாரத்தில் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தவிர அவர்கள் இதற்கு வட்டி மற்றும் சட்ட நடவடிக்கை கட்டணங்களையும் செலுத்த வேண்டும்
2021 மே மாதம் Crypto.com, நிலுவையில் இருந்த நூறு ஆஸ்திரேலிய டாலர்களை தேவ மனோகரியின் கணக்கில் போட பணப் பரிவர்த்தனை செய்தபோது இந்த விவகாரம் தொடங்கியது.
ஆனால் தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் தேவ மனோகரிக்கு 100 டாலர்களுக்கு பதிலாக 104,74,143 ஆஸ்திரேலிய டாலர்கள் (சுமார் 70 லட்சம் அமெரிக்க டாலர்கள்) வந்தது. பரிவர்த்தனை செய்த நபரின் தவறு இது என்றும் தொகையை எங்கே போட வேண்டுமோ அதற்கு பதிலாக தேவமனோகரியின் கணக்கு எண்ணை அவர் உள்ளீடு செய்துவிட்டார் என்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.

பட மூலாதாரம், Getty Images
ஒரு நொடியில் கோடீஸ்வரியானார்
தேவ மனோகரி ஒரு நொடியில் கோடீஸ்வரராகிவிட்டார். இந்தப் பணத்தை நிர்வகிக்க அவருக்கு நேரத்திற்கும் பஞ்சமில்லை. அடுத்த சில மாதங்களில் இவர் தனது கணக்கில் இருந்த பணத்தின் பெரும் பகுதியை தனது நண்பருடனான கூட்டுக்கணக்கிற்கு மாற்றிவிட்டார்.
அந்த நண்பர் தனது மகளின் கணக்கிற்கு சுமார் மூன்று லட்சம் டாலர்களை மாற்றினார். மெல்போர்னுக்கு வடக்கே ஒரு வீட்டையும் தேவமனோகரி வாங்கினார். மலேஷியாவில் வசிக்கும் தனது சகோதரி திலகவதி கங்காதரி பெயரில் இந்த வீட்டை அவர் வாங்கியுள்ளார்.
நான்கு அறைகள், நான்கு குளியலறைகள், திரைப்படம் அறை, உடற்பயிற்சி கூடம் மற்றும் இரட்டை கேரேஜ் கொண்ட இந்த வீடு 500 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு 13.5 லட்சம் டாலர்கள் செலுத்தப்பட்டது.
அதே நேரத்தில் கிரிப்டோகரன்சி நிறுவனமும் தனது தவறை உணர பல மாதங்கள் ஆயின.
ஆஸ்திரேலிய மாகாணமான விக்டோரியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜேம்ஸ் எலியட் ,”மனுதாரர் ஏழு மாதங்களுக்குப் பிறகு இந்த பெரிய தவறை அறிந்து கொண்டதாகத் தெரிகிறது” என்று தனது தீர்ப்பில் கூறினார்.

பட மூலாதாரம், CRYPTO.COM
நீதிமன்ற தீர்ப்பு
மனுதாரருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிமன்றம், முழுத் தொகை மட்டுமின்றி அதற்கான வட்டி மற்றும் சட்டச் செலவுகளையும் திருப்பித் தர உத்தரவிட்டுள்ளது.
தேவ மனோகரி தனது சகோதரியின் பெயரில் வீடு வாங்கியது நிரூபணமானதால் அந்த வீட்டை விற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
கிரிப்டோகரன்சி நிறுவனம் இந்த ஆண்டு பிப்ரவரியில் சட்ட நடவடிக்கையைத் தொடங்கியது. மணிவேலுடன் இணைக்கப்பட்ட கணக்குகளை முடக்குவதிலும் வெற்றிபெற்றது.
இருப்பினும், கிரிப்டோ நிறுவனம் கணக்குகளை முடக்குவதற்குள் தேவமனோகரி பெரும்பாலான பணத்தை மற்ற கணக்குகளுக்கு மாற்றிவிட்டார்.
தேவ மனோகரி சொத்துக்கள் முடக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் அவரது சகோதரி வீட்டின் உரிமையாளரானார்.
இதனால் தேவ மனோகரி சகோதரியின் கணக்கையும் முடக்க வேண்டும் என்று கிரிப்டோ நிறுவனம் கோரியிருந்தது. இப்போது அவரது வீட்டை விற்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com