Press "Enter" to skip to content

மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன்: ஓ.பி.ரவீந்திரநாத்

பட மூலாதாரம், Twitter @OPRavindhranath

(இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (06/09/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.)

மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்பதாக, அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளதாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் நேற்று (செப். 05) மாலை பழநி சென்றார். பழநி தண்டாயுதபாணியை ராஜ அலங்காரத்தில் தரிசித்தார். பின்னர் தங்க ரதம் இழுத்து வழிபட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக இலவச மடிக்கணினி, மிதிவண்டி என பல சலுகைகளை வழங்கினார். அதேபோல் தற்போது இருக்கிற அரசு மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கியிருப்பதை வரவேற்கிறேன்.

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்வது குறித்து வழக்குரைஞர்களுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். சசிகலா, டிடிவி தினகரன் உட்பட பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line
Presentational grey line

டெல்லி ‘ராஜபாதை’க்கு ‘கடமைபாதை’ என பெயர் மாற்ற இந்திய அரசு முடிவு?

ராஜபாதை

பட மூலாதாரம், Kriangkrai Thitimakorn / Getty Images

குடியரசு அணிவகுப்பு நடைபெறும் முக்கிய பகுதிகளின் பெயர்களை மாற்ற இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என, ‘தினத்தந்தி நாளொதழில் செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் சாலை ராஜபாதை என அழைக்கப்படுகிறது. இந்த ராஜபாதையில் குடியரசு தினத்தின்போது முப்படை அணிவகுப்பு நடைபெறும். இந்நிலையில், ராஜபாதை பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜபாதைக்கு கடமைபாதை (கர்த்தவியா பாதை) என பெயர் மாற்ற இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என அச்செய்தி தெரிவிக்கிறது.

“பொருளாதார மீட்சிக்கான ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்க இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பச்சைக்கொடி”

அலி சப்ரி

பட மூலாதாரம், ALI SABRY FB

இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவை வெளிப்படுத்திவருகின்றது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாக, ‘வீரகேசரி’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, அவர் மேலும் கூறுகையில், “இப்போது எமது அரசாங்கம் பொருளாதார மீட்சிக்கே அதிக முக்கியத்துவம் வழங்கிவருகின்றது. அதனை முன்னிறுத்தி கடன்வழங்குனர்களுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்குத் தயாராகிவருகின்றோம்.

இதற்கு ஜப்பான், சீனா மற்றும் பாரிஸ் கிளப்பில் அங்கம்வகிக்கும் நாடுகள் நேர்மறையான பிரதிபலிப்பை வெளிக்காட்டியுள்ளன. அதேவேளை இந்தியா எமக்கு தொடர்ந்து ஆதரவை வெளிப்படுத்திவருகின்றது

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

நாட்டில் மீண்டும் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளளன.

மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான அதிகாரங்கள் பகிரப்படுவதற்கு வழிவகுக்கக்கூடிய அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலவரைபு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைக்கப்பெற்றதன் பின்னர், அடுத்தவாரமளவில் அத்திருத்தச்சட்டமூலத்தை அரசியலமைப்பில் உள்வாங்குவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்” என்று அவர் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜபக்ஷக்களுக்குக் காலக்கெடு

கோட்டாபய ராஜபக்ஷ

ஜனவரி 25ஆம் தேதிக்குப் பின்னர், ராஜபக்ஷக்களை விரட்டியடிப்பதற்கான வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கும் எனவும் அதுவரையில் அவசரப்படாமல் மெதுவாகச் செயற்பட வேண்டும் எனவும் புதிய சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்ததாக ‘தமிழ் மிரர்’ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் அவர் கூறுகையில், “நாடாளுமன்றத்துக்கு வருவதற்கான அனுமதிச்சீட்டை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவே எனக்கு வழங்கினார். அதுபோல புதியக் கட்சி ஒன்றை ஆரம்பிக்கவும் சஜித் எனக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்” என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்த குமார வெல்கம, மீண்டும் அரசியலுக்கு வர வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »