Press "Enter" to skip to content

இரண்டாம் எலிசபெத் ராணி: ‘அன்பான மனம் கொண்ட ராணி’யை நினைவுகூரும் உலகத் தலைவர்கள்

  • டிஃபானி வெர்தெய்மர்
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

தனது 96வது வயதில் காலமான ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உலகத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தங்களது அஞ்சலியை செலுத்திவருகின்றனர்.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஆழ்ந்த கடமை உணர்வு, கடினமான சூழ்நிலைகளை தாங்கும் வலிமை மற்றும் அவருடைய நகைச்சுவைத் திறன், இரக்க குணம் ஆகியவற்றை அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர்.

“அன்பான மனம் படைத்த ராணி” என்றும் அவர் “பிரான்ஸின் நண்பர்” என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

“இரக்கம், சீரிய பண்பு மற்றும் அயராத உழைப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட ஆட்சி மூலம் இந்த உலகை கவர்ந்தவர்” என்று, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

“அவரது அரவணைப்பு, மக்களை இலகுவாக்கும் விதம், பெரும் ஆடம்பரமான மற்றும் பல்வேறு சூழ்நிலைகளில் அவருடைய நகைச்சுவை மற்றும் வசீகரத்தால் பலமுறை நாங்கள் கவரப்பட்டிருக்கிறோம்”, என பல சந்தர்ப்பங்களில் ராணியை சந்தித்துள்ள பராக் ஒபாமா அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் “அரசி என்பதற்கும் மேலாக அவர் ஒரு யுகத்தை வரையறுத்தவர்” என்று கூறியுள்ளார்.

2021ம் ஆண்டு அதிபராக பிரிட்டனுக்கு சென்றதை விவரித்துள்ள பைடன், “தன் அறிவுத்திறனால் அவர் எங்களை வசீகரித்தார். தன் அன்பான குணத்தால் எங்கள் மனதை தொட்டார். அவருடைய அறிவுத்திறனை தாராளமாக எங்களுடன் பகிர்ந்துகொண்டார்” என தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ஆளுகையில் ராணி இரண்டாம் எலிசபெத் 14 அமெரிக்க அதிபர்களை சந்தித்துள்ளார்.

ஜூன் 11, 2021ல் பிரிட்டனின் கார்ன்வல்லில் உள்ள செயின்ட் ஆஸ்டெல்லில் இரவு விருந்தின் போது ராணி.

பட மூலாதாரம், 10 Downing Street

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், தான் “மாட்சிமை பொருந்திய ராணியின் பெருந்தன்மையான நட்பு, பெரும் அறிவுத்திறன் மற்றும் வியக்கத்தக்க நகைச்சுவை உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

“என்னவொரு கம்பீரமான மற்றும் அழகு பொருந்திய பெண் அவர் – அவரைப் போன்று யாரும் இல்லை!” என ட்ரூத் சோஷியல் எனும் தன்னுடைய சமூக ஊடக தளத்தில் எழுதியுள்ளார் டிரம்ப்.

ராணி தன்னுடைய ஆளுகையில் 12 கனடா பிரதமர்களை கண்டுள்ளார். அவர் காலமான செய்தி அறிவிக்கப்பட்ட உடனேயே உணர்ச்சிவயப்பட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “கனடா மக்கள் மீது ஆழமான மற்றும் நிரந்தரமான அன்பை அவர் வெளிப்படையாக கொண்டிருந்தார் அவர்” என்று தெரிவித்தார்.

“சிக்கலான உலகில் அவருடைய நிலையான அன்பு மற்றும் தன் முடிவுகளில் உறுதி ஆகியவற்றால் நம் அனைவரையும் ஆற்றுப்படுத்தியவர்,” என தெரிவித்துள்ள ட்ரூடோ, “சிந்தனை வயப்பட்ட, விவேகமுடைய, புதுமையான, உதவிகரமான, வேடிக்கையான மற்றும் இன்னும் பல அடங்கிய அவருடனான “உரையாடல்கள்” இனி நிகழாது என்பதை நினைத்து அவர் தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.

“இந்த உலகில் எனக்கு மிகவும் பிடித்த நபர்களுள் அவரும் ஒருவர்” எனக்கூறிய அவர் தன் கண்ணீரை அடக்கிக்கொண்டார்.

இங்கிலாந்தின் விண்ட்சர் கோட்டையில் மார்ச் 7, 2022 அன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ராணி இரண்டாம் எலிசபெத் சந்தித்தபோது.

பட மூலாதாரம், Getty Images

‘அசாதாரணமான ஓர் ஆளுமை’

நெதர்லாந்து அரசரும் ராணி எலிசபெத்தின் ஐந்தாம் நிலை உறவினருமான வில்லியம்-அலெக்சாண்டெர் கூறுகையில், தானும் ராணி மாக்சிமாவும் “உறுதியான மற்றும் அறிவார்ந்த” ராணியை “மிகுந்த மரியாதை மற்றும் பெரும் அன்புடன்” நினைவுகூர்வதாக தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம் அரசர் பிலிப் மற்றும் ராணி மதில்டே இருவரும் கூறுகையில், “அவர் ஓர் அசாதாரணமான ஆளுமை… தன்னுடைய ஆளுகை முழுவதும் பெருந்தன்மை, துணிவு மற்றும் அன்பை காட்டியவர்” என தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனுக்கு இருமுறை பயணம் சென்றபோது ராணியுடனான “மறக்க முடியா சந்திப்புகளை” இந்திய பிரதமர் நரேந்திர மோதி நினைவுகூர்ந்தார்.

“அவருடைய கனிவு மற்றும் அன்பை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்,” என அவர் ட்வீட் செய்துள்ளார். “அவருடனான சந்திப்பு ஒன்றில் தன் திருமணத்தின்போது மகாத்மா காந்தி பரிசளித்த கைக்குட்டையை தனக்கு காண்பித்தார். அவருடைய இந்த குணத்தை நான் எப்போதும் மனதில் வைத்திருப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பிரிட்டனில் நீண்ட காலம் ஆளுகை செய்த மாட்சிமை பொருந்திய ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவால் ஆழ்ந்த வருத்தமுற்றேன்.

ஏழு தசாப்தங்கள் நீடித்த ஆளுகை, 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளுக்குப் பிறகு, இரண்டாவது எலிசபெத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

பொது வாழ்க்கையில் கண்ணியம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் ராணி எலிசபெத் நீண்ட காலம் நினைவுகூரப்படுவார்.

அரச குடும்பம், பிரிட்டன் மக்கள் மற்றும் எல்லா காலங்களிலும் சிறந்த அரசியாக திகழ்ந்த ராணியின் மறைவால் வாடும் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.

2015ம் ஆண்டு பக்கிங்ஹாம் அரண்மனையில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன் ராணி இரண்டாம் எலிசபெத்.

பட மூலாதாரம், Getty Images

ராணியின் “அதிசயிக்கத்தக்க நகைச்சுவையை” குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தியுள்ள ஜெர்மன் ஆட்சித்துறை தலைவர் ஓலாஃப் ஷோட்ஸ், “இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான பயங்கரங்களிலிருந்து ஜெர்மன் – பிரிட்டிஷ் நல்லிணக்கத்திற்காக அவர் மேற்கொண்ட உறுதிப்பாடு எப்போதும் மறக்க முடியாதது” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘உறுதியான இருப்பு’

ஏழு தசாப்தங்களாக முடியாட்சியில் இருந்த ராணி எலிசபெத் அசாதாரண மாற்றங்கள் நிகழ்ந்த காலங்களை கடந்துள்ளார், இது பல அஞ்சலி குறிப்புகளில் பிரதிபலித்துள்ளது.

“சந்திரனில் தரையிறங்கியது முதல் பெர்லின் சுவற்றின் வீழ்ச்சி வரை செழிப்பான மற்றும் தேக்க காலங்களில் அவர் வாழ்ந்துள்ளார்” என பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஐரிஷ் அதிபர் மைக்கேல் டி ஹிகின்ஸ், “பிரிட்டிஷ் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள அதிசயிக்கத்தக்க கடமை உணர்வை கொண்டவர் ராணி” என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

“70 ஆண்டுகால ஆளுகையில் மிகப்பெரும் மாற்றங்கள் சூழ்ந்துள்ள காலங்களை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், பிரிட்டிஷ் மக்களுக்கு உறுதியளித்த குறிப்பிடத்தகுந்த ஆதாரம்,” என தன்னுடைய நீண்ட அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

“இது வரலாற்றின் எந்தவொரு குறுகிய கருத்தையும் விட, நடப்பு நிகழ்வுகளின் முக்கியத்துவத்தின் யதார்த்தத்தின் அடிப்படையில் அமைந்த உறுதிமொழி” என அவர் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்தின் மைக்கேல் மார்ட்டின் ராணியின் ஆளுகை குறித்து கூறுகையில், “அதுவொரு வரலாற்று காலம்” எனவும் ராணியின் மறைவை “ஒரு யுகத்தின் முடிவு” எனவும் விவரித்துள்ளார்.

“கடமை மற்றும் பொதுச் சேவை மீதான அவரின் அர்ப்பணிப்பு வெளிப்படையானது. அவரின் அறிவுத்திறன் மற்றும் அனுபவம் உண்மையில் தனித்துவமானது,” என தன் அறிக்கையில் மார்ட்டின் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு அயர்லாந்துக்கு அரசு பயணம் மேற்கொண்டபோது ராணியின் “பல்வேறு அன்பான உடல்மொழி மற்றும் வார்த்தைகள்” குறித்து அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

ஐநா சபையின் தலைமைச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் கூறுகையில், “ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காலனித்துவ நீக்கம் மற்றும் காமன்வெல்த் அமைப்பின் பரிணாமம் உட்பட பல தசாப்தங்களாக ஏற்பட்ட பரவலான மாற்றங்களின்போது உறுதியான இருப்பை கொண்டிருந்தவர்” என தெரிவித்துள்ளார்.

“மக்களுக்கு சேவையாற்றுவதற்கான அசையாத வாழ்நாள் அர்ப்பணிப்புடன் இருந்தவர். அவருடைய முழு ஈடுபாடு மற்றும் தலைமையை இந்த உலகம் என்றும் நினைத்திருக்கும்” என்று அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கூறுகையில், தன் ஆளுகை முழுவதும் ராணி கண்டுள்ள மாற்றங்களை குறிப்பிட்டு, “இம்மாற்றங்களின்போது அவர் நிலையான, பொறுப்பான தலைமையாக இருந்தார். ஒழுக்கம், மனிதநேயம் மற்றும் தேசபக்தியின் கலங்கரை விளக்கமாக அவர் திகழ்ந்தார்” என தெரிவித்துள்ளார்.

“ராணி எலிசபெத் ஓர் வரலாற்று ஆளுமை: அவர் வாழும்போதே வரலாறு ஆனவர், வரலாற்றை உருவாக்கியவர். தன் இறப்பின் மூலம் அற்புதமான, உத்வேகம் தரும் பாரம்பரியத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்,” என அதிபர் ஹெர்சாக் தெரிவித்துள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »