- சௌதிக் பிஸ்வாஸ்
- பிபிசி இந்திய செய்தியாளர்
பட மூலாதாரம், Getty Images
இரண்டாம் எலிசபெத் ராணி இந்தியாவுக்கு, 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முறையாக வந்தபோது, டெல்லி விமான நிலையத்தில் இருந்து இந்திய குடியரசு தலைவரின் அலுவல்பூர்வ மாளிகை வரையிலான அவருடைய பாதையில் சுமார் 10 லட்சம் மக்கள் நிரம்பியிருந்ததாகக் கூறப்படுகிறது.
“இந்தியர்கள் தங்கள் பிரச்னைகளை இந்த வாரம் மறந்து விட்டார்கள். முற்றிலுமாக இல்லையென்றாலும், பொருளாதார சிரமங்கள், அரசியல் சண்டைகள், கம்யூனிஸ்ட் சீனா, காங்கோ மற்றும் லாவோஸ் பற்றிய கவலைகள் இதற்குப் பின்னால் நிச்சயமாக மங்கி விட்டன. ராணி இரண்டாம் எலிசபெத் தலைநகரில் இருந்தார். அந்த நேரத்தை முற்றிலுமாகப் பயன்படுத்திக் கொள்வதில் இந்தியா உறுதியாக இருந்தது,” என்று தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
ரயில்கள், பேருந்துகள், மாட்டு வண்டிகள் மூலம் மக்கள் தலைநகருக்கு சென்றதாக டைம்ஸ் கூறியது. இங்கே அவர்கள் தெருக்களில் அலைந்து திரிந்தினர். அரச தம்பதியை ஒருமுறையாவது பார்க்க வேண்டுமென்ற நம்பிக்கையில் புல்வெளிகளில் சுற்றித் திரிந்தனர். “அவர்கள் ராணி மற்றும் எடின்பரோ கோமகனானன இளவரசர் ஃபிலிப்பை பார்த்து தங்கள் கவலை மறந்து, மகிழ்ச்சியடையடைவதை அது சாத்தியமாக்கியதைப் போல் தெரிகிறது,” என்று அந்தச் செய்தி கூறுகிறது.
அதேநேரத்தில், “எலிசபெத் ஒரு பேரரசு ஆட்சியாளராக சுற்றுப்பயணத்துக்கு வரவில்லை. சமமானவராகவே வந்துள்ளார்,” என்று நாளிதழ் செய்தி தெரிவித்தது. 1947-இல் பிரிட்டிஷ் ஆளுகையில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முடியாட்சியை ஏற்ற முதல் பிரிட்டிஷ் ராணி அவர்.

பட மூலாதாரம், Fox Photos/Hulton Archive/Getty Imag
இந்தப் பயணம் பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு “பிரிட்டன் வெளியேறியதிலிருந்து தனது மக்கள் எப்படிச் செயல்பட்டுள்ளார்கள்” என்பதை காட்டுவதற்கான வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கியது. எடுத்துக்காட்டாக, அதன் ஜெட் கால விமான நிலையங்கள், புதிய வீடுகள், அலுவலக கட்டடங்கள், எஃகு ஆலைகள், அவற்றின் உலைகள்” ஆகியவை.
அரச தம்பதி, துணை கண்டத்தின் இந்த ஆறு வார சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் சிறந்த முகத்தைப் பார்க்க முடிந்தது. அந்தப் பயணத்தின் பிரிட்டிஷ் பாத் காட்சிகள் தம்பதிக்குக் கிடைத்த அன்பான வரவேற்பைப் பற்றிய ஒரு கண்கவர் பார்வை வழங்குகிறது.
ராணி மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு (அப்போது பம்பாய், மெட்ராஸ், கல்கத்தா என்று அழைக்கப்பட்டன) சுற்றுப்பயணம் செய்தார். தாஜ்மஹால், ஜெய்பூரில் உள்ள பிங்க் அரண்மனை, பண்டைய நகரமான வாரணாசி போன்ற வரலாற்று அடையாளங்களை அவர் பார்வையிட்டார். அவர் பல வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஒரு மகாராஜாவின் வேட்டை விடுதியில் இரண்டு நாட்கள் தங்கி யானை சவாரி செய்தார். ஜனவரி 26ஆம் தேதி நடந்த பிரமாண்ட குடியரசு தின அணிவகுப்பில் அரச தம்பதி கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
டெல்லியின் பரந்து விரிந்துள்ள ராம்லீலா மைதானத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த பேரணியில் ராணி உரையாற்றினார். அவர் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு திறந்த காரில் மக்கள் கூட்டத்தை நோக்கி கையசைத்தபடி சென்றார். மேற்கு வங்கத்தில் ஆங்கிலேயர் உதவியுடன் கட்டப்பட்ட எஃகு ஆலைக்குச் சென்று அதன் தொழிலாளர்களைச் சந்தித்தார்.
கொல்கத்தாவில், விக்டோரியா மகாராணியின் நினைவாக கட்டப்பட்ட நினைவுச் சின்னத்தைப் பார்வையிட்டார். செழிப்பான உள்ளூர் மைதானத்தில் ஒரு குதிரை பந்தயம் அரச தம்பதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டது. வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளருக்கு ராணி கோப்பை வழங்கினார். கொல்கத்தாவில் உள்ள விமான நிலையத்திலிருந்து நகரத்திற்குள் திறந்த காரில் ராணி பயணித்த செய்தியை வழங்கிய ஆல் இந்தியா வானொலி செய்தியாளர், யார்க்ஷயர் போஸ்ட் தலையங்கத்தை மேற்கோள் காட்டினார். “அவர் இந்தியாவின் பேரரசியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவருடைய இந்தப் பயணத்தில் இந்திய மக்கள் வெளிப்படுத்தும் உற்சாகம், அவர் இன்னும் லட்சக்கணக்கான இந்திய இதயங்களின் பேரரசி என்பதை நிரூபிக்கிறது.”

பட மூலாதாரம், Getty Images
ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, நவம்பர் 1983ஆம் ஆண்டில், காமன்வெல்த் தலைவர்களின் உச்சிமாநாட்டுக்காக ராணி தனது இரண்டாவது பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டார்.
அரச தம்பதி செழுமையான குடியரசு தலைவர் மாளிகையில் விருந்தினர் தங்கும் சொகுசு அறையில் தங்கினர். “அலுவலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் காணப்படும் நாற்காலிகள் தூசு துடைக்கப்பட்டு, அந்தப் பகுதியின் மேல்தளங்கள் பழுது பார்க்கப்பட்டன. படுக்கை துணி, திரைச்சீலைகள், நாடாக்கள் ஆகியவை அரசின் கடந்த காலத்துடன் கலக்கும் வகையில் மாற்றப்பட்டன” என்று அதிகாரிகள் தெரிவித்ததாக ஒரு நாளிதழ் செய்தியில் கூறப்பட்டது. ராணி எளிய உணவுகளை விரும்பியதால், உணவுப்பட்டியலில், “பழைய, மேற்கத்திய பாணி உணவுகள்” அடங்கியிருந்தன.
அக்டோபர் 1997இல் அவரது இறுதி வருகை ஒரு சோகத்தைத் தொடர்ந்து நிகழ்ந்தது. இந்தியா, பாகிஸ்தான் சுதந்திரத்தின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலான நிகழ்வில் ராணி கலந்து கொண்ட இந்த நிகழ்வு தான், இளவரசி டயானாவின் இறுதிச் சடங்குக்குப் பிறகு ராணி கலந்து கொண்ட முதல் பொது நிகழ்வு.
இந்தப் பயணம் சில சர்ச்சைகளுக்கும் ஆளானது. அவர் ஜாலியன்வாலா பாக் நினைவுப் பூங்காவுக்குச் செல்லவிருந்தார். இது பிரிட்டிஷ் வரலாற்றில் மிகவும் மோசமான படுகொலைகளில் ஒன்று. 1919ஆம் ஆண்டு அந்த இடத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மக்கள் கலந்து கொண்டபோது, நூற்றுக்கணக்கான இந்தியர்கள் பிரிட்டிஷ் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வடக்கு நகரான அமிர்தசரஸில் உள்ள தலத்தைப் பார்வையிடுவதற்கு முந்தைய நாள் இரவு, ராணி டெல்லியில் கலந்து கொண்ட ஒரு விருந்தில் பேசினார்.
“கடந்த காலங்களில் சில கடினமான அத்தியாயங்கள் இருந்தன என்பதில் ரகசியமில்லை. அதற்கு, நான் நாளை பார்வையிடும் ஜாலியன்வாலாபாக், ஒரு துன்பகரமான சான்று. ஆனால், வரலாற்றை மாற்றி எழுத முடியாது. சில நேரங்களில் நாம் வேறுவிதமாக விரும்பினாலும், அது சோகத்தின் தருணங்களையும் மகிழ்ச்சியையும் கொண்டுள்ளது. சோகத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டு, மகிழ்ச்சியோடு கட்டமைக்க வேண்டும்.”

பட மூலாதாரம், Getty Images
இந்தப் பேச்சு, பிரிட்டனிடம் இருந்து வெளிப்படையான மன்னிப்பை கோரி வந்த அனைவரையும் திருப்திப்படுத்தவில்லை என்றாலும், அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டத்திற்குத் திட்டமிட்டிருந்த, ஜாலியன்வாலாபாக் படுகொலையில் பலியானோரின் உறவினர்களைச் சமாதானப்படுத்தியது.
அதற்குப் பதிலாக விமான நிலையத்திலிருந்து நகரத்திற்குச் செல்லும் 10 மைல் பாதைக்கு “ஆரவாரமாகக் கொடியசைத்த” மக்கள் கூட்டம் நின்றதாகக் கூறப்படுகிறது. சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலில், ராணி தனது காலணிகளைக் கழற்றிய பிறகு காலுறை மட்டும் அணிந்து கொண்டு நடக்க அனுமதிக்கப்பட்டார்.
‘அரச உடை’ இந்திய ஊடகங்களில் முடிவில்லாத ஈர்ப்பு மற்றும் ஊகங்களுக்கு உட்பட்டது. அவரது 1983 வருகையின்போது, ராணி அணிந்திருந்த அனைத்தையும் பற்றி ஊகங்கள் நிறைந்திருந்ததாக இந்தியா டுடே பத்திரிகை நிருபர் சுனில் சேத்தி கூறுகிறது. ராணியின் வருகை குறித்து சுனில் சேத்தி கூறியது:
“தொப்பி, தொப்பி, இது எதனால் ஆனது?” என்று ஒரு நிருபர் கேட்கிறார்.
“வைக்கோலில்,” என்கிறார் ஓர் ஆங்கிலேயர்.
“ஆடை? அது என்ன பொருளில் ஆனது?”
“பட்டு போன்ற துணியால் ஆனது”
“நீங்கள் ராணியின் வடிவமைப்பாளரா?” என்று நான் கேட்டேன்.
“நானும் ஒரு நிருபர் தான்” என்று கூறிய அந்த நிருபர், “டெல்லியில் இயங்கும் டைம்ஸ் ஆஃப் லண்டன் நாளிதழின் நிருபர் என்று நான் பின்னர் தெரிந்துகொண்டேன்.” என்கிறார்.
ராணி தனது மூன்று மாநில பயணங்களின் போது இந்தியாவிலிருந்த நேரத்தை மிகவும் ரசித்தார்.
“இந்திய மக்களின் அரவணைப்பு, விருந்தோம்பல், இந்தியாவின் செழுமை, பன்முகத்தன்மை ஆகியவை நம் அனைவருக்கும் உத்வேகம் அளித்தன,” என்று பின்னாளில் ராணி கூறினார்.
Source: BBC.com