Press "Enter" to skip to content

பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸின் பணிகள், அதிகாரங்கள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images

பால்மோரல் கோட்டையில் தனது தாய் இரண்டாம் எலிசபெத் ராணி மரணமடைந்த பிறகு, மூன்றாம் சார்ல்ஸ் மன்னராகி இருக்கிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ராணி தனது பிளாட்டினம் விழாவைக் கொண்டாடினார். அப்போது அவர் நீண்ட காலம் பணியாற்றிய அரசத் தலைவர் ஆனார்.

இப்போது என்ன நடக்கிறது?

ராணி இறந்ததும் உடனடியாக அவரது வாரிசான, இளவரசர் சார்ல்ஸுக்கு மணிமுடி சென்றது.

லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில், வாரிசுரிமை கவுன்சில் எனப்படும் சம்பிரதாய அமைப்புக்கு முன்பாக சனிக்கிழமை பிரிட்டன் நேரப்படி காலை 10மணிக்கு அவர் அதிகாரப்பூர்வமாக அரசராக அறிவிக்கப்படுவார்.

அரசரின் அதிகாரங்கள் என்னென்ன?

அரசர் பிரிட்டன் அரசத் தலைவர். இருப்பினும், அவரது அதிகாரங்கள் குறியீடு மற்றும் சம்பிரதாயம் மட்டுமே. அரசியல் ரீதியாக அவர் நடுநிலை வகிப்பார்.

அரசிடமிருந்து முக்கியமான கையொப்பம் தேவைப்படும் ஆவணங்கள், கடிதங்கள், கூட்டங்களுக்கான விளக்கங்கள் உள்ளிட்டவை சிவப்பு தோல் பெட்டியில் அவருக்கு வரும்.

பொதுவாக புதன்கிழமையன்று அரசரை நாட்டின் பிரதமர் பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்திப்பார். அரசாங்க விவகாரங்களை அவருக்குத் தெரிவிப்பார்.

இந்த சந்திப்புகள் முற்றிலும் தனிப்பட்டவை. அதில் பேசப்படுவை பற்றி எந்தப் பதிவும் இருக்காது.

அரசருக்கு நாடாளுமன்றத்தில் இருக்கும் பணிகள் என்னென்ன?

அரசை நியமித்தல்– வழக்கமாக பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சியின் தலைவர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைக்கப்படுவார். அங்கு அவரிடம் முறையாக அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பு விடுக்கப்படும். பொதுத் தேர்தலுக்கு முன் முறையாக அரசைக் கலைக்கும் பணியையும் அரசர் மேற்கொள்கிறார்.

நாடாளுமன்ற முதல் கூட்டம், அரசரின் உரை – ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தை அரசர் தொடங்கி வைப்பார். பிரபுக்கள் அவையின் சிம்மாசனத்தில் அமர்ந்து அவர் ஆற்றும் உரையில் அரசின் திட்டங்களை அறிவிப்பார்.

அரச ஒப்புதல் – ஒரு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, அது சட்டமாக மாறுவதற்கு அரசரால் முறையாக ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். கடைசியாக 1708- இல் அரச ஒப்புதல் மறுக்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தொடக்க நிகழ்வில் இளவரசர் சார்ல்ஸுடன் ராணி

பட மூலாதாரம், Getty Images

இவை தவிர நாட்டுக்கு வருகை தரும் பிற நாட்டுத் தலைவர்களுக்கு அரசர் விருந்தளிப்பார். பிரிட்டனில் உள்ள வெளிநாட்டுத் தூதர்கள், தூதரக உயர் ஆணையர்களைச் சந்திப்பார். நவம்பர் மாதம் லண்டனில் உள்ள அடையாளக் கல்லறையில் நடைபெறும் வருடாந்திர நினைவு நிகழ்வுக்கு அரசர் தலைமை தாங்குவார்.

56 சுதந்திர நாடுகள் மற்றும் 240 கோடி மக்களைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவராக புதிய மன்னர் இருப்பார். அவற்றில் 14 நாடுகளுக்கு அவர் அரசத் தலைவராகவும் இருப்பார்.

இருப்பினும் 2021-ஆம் ஆண்டில் பார்படாஸ் நாடு பிரிட்டன் அரசத் தலைமையை விட்டு குடியரசாக மாறியதில் இருந்து கரீபியனில் உள்ள பிற காமன்வெல்த் நாடுகளை இதையே பின்பற்றலாம் எனக் கருதப்படுகிறது.

தபால் வில்லைகள், பேங்க் ஆப் இங்கிலாந்தின் பணத் தாள்கள், புதிய பாஸ்போர்ட்கள் ஆகியவற்றில் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு பதிலாக புதிய மன்னரின் படம் அல்லது பெயர் இடம்பெறும்.

தேசிய கீதம் இனிமேல் “God Save the King” என மாறிவிடும்.

முடி வரிசை எவ்வாறு செயல்படுகிறது?

முடி வரிசை அல்லது வாரிசுரிமை வரிசை என்பது அரசத் தலைவராக இருப்பவர் இறக்கும்போதோ அல்லது பதவியைத் துறக்கும்போதோ அரச குடும்பத்தைச் சேர்ந்த எந்த உறுப்பினர் அந்தப் பதவியில் நியமிக்கப்பட வேண்டும் என்பதை வரையறுக்கிறது.

அரசர் அல்லது ராணியின் முதல் குழந்தை இந்த வரிசையில் முதலாவதாக இருப்பார்.

ராணி இரண்டாம் எலிசபெத் இறந்ததும் அவரது முதல் குழந்தையாக இருப்பதால் சார்ல்ஸ் மன்னரானார். அவரது மனைவியான கமீலா அரசத் துணைவரானார்.

2013-ஆம் ஆண்டில் அரச குடும்ப வாரிசுரிமை விதிகள் திருத்தப்பட்டன. அதன்படி ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாரிசுரிமையில் சமவாய்ப்பு வழங்கப்பட்டது. அதாவது மகன்களுக்கு அவர்களுடைய மூத்த சகோதரிகளைவிட முன்னுரிமை கிடைக்காது.

இப்போது மன்னர் சார்ல்ஸின் வாரிசு அவருடைய மூத்த மகனான இளவரசல் வில்லியம். அவருக்கு தந்தையின் கான்வால் கோமகன் பட்டம் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது.

1px transparent line
அரச குடும்பம் மற்றும் அரியணை வாரிசுகளின் வரிசை குறித்து மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்
1px transparent line

கிங் சார்ல்ஸின் வாரிசு அவரது மூத்த மகன் இளவரசர் வில்லியம் ஆவார், அவர் தனது தந்தையின் டியூக் ஆஃப் கார்ன்வால் பட்டத்தை பெற்றார். இருப்பினும், அவருக்கு தானாகவே வேல்ஸ் இளவரசர் பட்டம் கிடைத்துவிடாது. அது அவருக்கு அரசரால் வழங்கப்பட வேண்டும்.

இளவரசர் வில்லியமின் மூத்த குழந்தையான இளவரசர் ஜார்ஜ் அரியணைக்கான வாரிசு உரிமை வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூத்த மகள் இளவரசி சார்லோட் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

முடிசூட்டு விழாவில் என்ன நடக்கும்?

முடிசூட்டு விழா என்பது அரசருக்கு முறைப்படி முடிசூட்டப்படும் விழா. இது முந்தைய அரசத் தலைவருக்கான துக்க காலம் முடிந்த பிறகு நடைபெறும்.

தந்தை ஆறாம் ஜார்ஜ் 1952-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி மறைந்ததும் இரண்டாம் எலிசபெத் ராணியானார். ஆனால் 1953-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2-ஆம் தேதி வரை அவரை அவர் முடிசூட்டிக் கொள்ளவில்லை.

வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் முடிசூட்டப்பட்ட 39-ஆவது அரசத் தலைவர் ராணி இரண்டாம் எலிசபெத்

பட மூலாதாரம், PA Media

புதிய மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டுவிழா எப்போது நடைபெறும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டுவிழாதான் முதன் முதலில் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பானது. அதை 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்தனர்.

கடந்த 900 ஆண்டுகளாக வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் முடிசூட்டு விழா நடைபெற்று வருகிறது. வில்லியம் தி கான்குவரர் அங்கு முடிசூட்டப்பட்ட முதல் அரசர். சார்லஸ் அந்த வரிசையில் 40-ஆவது அரசர்.

இது ஒரு ஆங்கிலிகன் மத சேவை. கேன்டர்பரி பேராயர் இதை நடத்துவார்.

அரசுக்கு “புனித எண்ணெய்யால்” அபிஷேகம் செய்யப்படும். அரசின் சின்னங்களான உருண்டையும் செங்கோலும் வழங்கப்படும். இறுதியாக சார்ல்ஸின் தலையில் செயின்ட் எட்வர்ட் கிரீடத்தை பேராயர் வைப்பார். இது 1661 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு திடமான தங்க கிரீடம்.

இது லண்டன் கோபுரத்தில் உள்ள அரச நகைகளில் மையமானது. முடிசூட்டும் தருணத்தில் மட்டுமே மன்னர் அணிவார்.

அரச திருமணங்களைப் போலல்லாமல், முடிசூட்டு விழா என்பது ஓர் அரசு விழா. இதற்கான செலவை அரசே ஏற்கிறது. விருந்தினர் பட்டியலையும் அரசே தீர்மானிக்கிறது.

அரச குடும்பத்தில் வேறு யார் இருக்கிறார்கள்?

கார்ன்வால் மற்றும் கேம்பிரிட்ஜ் கோமகன் (இளவரசர் வில்லியம்): மன்னர் சார்ல்ஸ் மற்றும் அவரது முதல் மனைவி டயானா ஆகியோரின் மூத்த மகன். அவர் கான்வால் மற்றும் கேம்பிரிட்ஜ் கோமகளை (கேத்தரின்) மணந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் லூயிஸ்.

இளவரசி ராயல் (இளவரசி ஆன்னி) ராணியின் இரண்டாவது குழந்தை, ஒரே மகள். துணை அட்மிரல் திமோதி லாரன்ஸை அவர் மணந்தார். அவருக்கு இரண்டு குழந்தைகள். அவரது முதல் கணவர் கேப்டன் மார்க் பிலிப்ஸுடன் பீட்டர் ஃபிலிப்ஸ், மற்றும் ஜாரா டிண்டால்.

2019-இல் நடந்த ராணியின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழாவில் அரச குடும்பத்தினர்.

பட மூலாதாரம், PA Media

வெசெக்ஸ் கோமகன் (இளவரசர் எட்வர்ட்) ராணியின் இளைய குழந்தை. அவர் வெசெக்ஸ் கோமகளை (சோஃபி ரைஸ்-ஜோன்ஸ்) மணந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்: லூயிஸ் மற்றும் ஜேம்ஸ் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்

யார்க் கோமகன் (இளவரசர் ஆண்ட்ரூ) ராணியின் இரண்டாவது மகன். அவரது முன்னாள் மனைவி, யார்க் கோமகள் (சாரா பெர்குசன்) உடன் அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்: இளவரசி பீட்ரைஸ் மற்றும் இளவரசி யூஜெனி. வர்ஜீனியா கியூஃப்ரேவை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து 2019-இல் அரச குடும்ப பதவியில் இருந்து விலகினார். 2022 பிப்ரவரியில் கியூஃப்ரே கொண்டு வந்த வன்கொடுமை வழக்கை முடிப்பதற்காக வெளியிடப்படாத தொகை ஒன்றை தொகையை ஆண்ட்ரூ கொடுத்தார்.

சசெக்ஸ் கோமகன் (இளவரசர் ஹாரி) வில்லியமின் இளைய சகோதரர். அவர் சசெக்ஸ் கோமகளை (மேகன் மார்க்ல்) மணந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்: ஆர்ச்சி மற்றும் லிலிபெட். 2020-ஆம் ஆண்டில், அவர்கள் அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து அமெரிக்காவுக்குச் சென்றனர்

அரச குடும்ப உறுப்பினர்கள் எங்கு வாழ்கிறார்கள்?

அரசர் சார்ல்ஸ் மற்றும் அவரது மனைவி பக்கிங்ஹாம் அரண்மனைக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் முன்பு லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸிலும், க்ளவ்செஸ்டர்ஷையரில் உள்ள ஹைக்ரோவிலும் வசித்து வந்தனர்.

இளவரசர் வில்லியம், கேத்தரின் ஆகியோர் மேற்கு லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனையிலிருந்து குயின்ஸ் வின்ட்சர் தோட்டத்தில் உள்ள அடிலெய்ட் காட்டேஜுக்கு சமீபத்தில் குடிபெயர்ந்தனர்.

அரச குடும்பம்

பட மூலாதாரம், PA Media

இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட், இளவரசர் லூயிஸ் ஆகியோர் பெர்க்ஷயரில் அஸ்காட் அருகே உள்ள லாம்ப்ரூக் பள்ளிக்குச் செல்கின்றனர்.

இளவரசர் ஹாரி, மேகன் மார்க்கல் ஆகியோர் கலிபோர்னியாவில் வசிக்கின்றனர்.

மன்னராட்சிக்கு மக்களின் ஆதரவு எந்த அளவு இருக்கிறது?

ராணியின் பிளாட்டின விழா நடந்த நேரத்தில் YouGov நடத்திய கருத்துக் கணிப்பில், 62% பேர் நாடு முடியாட்சியை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர். 22% பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச தலைவரைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினர்.

2021-இல் இரண்டு Ipsos Mori கருத்துக் கணிப்புகள் ஒரே மாதிரியான முடிவுகளை அளித்தன. ஐந்தில் ஒருவர் முடியாட்சியை ஒழிப்பது நாட்டுக்கு நல்லது என்று நம்புவதாக அந்த முடிவுகள் தெரிவித்தன.

இருப்பினும், YouGov ஆய்வின் முடிவுகள் கடந்த தசாப்தத்தில் முடியாட்சிக்கான மக்கள் ஆதரவு சரிந்திருப்பதைக் காட்டியது. 2012 இல் 75% ஆக இருந்தது 2022 இல் 62% ஆக சரிந்துள்ளது.

வயதானவர்களிடையே முடியாட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும், இளையவர்களிடம் பெரும்பான்மை ஆதரவில்லை என்று கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டியது.

2011 இல், YouGov முதன்முதலில் இந்த அம்சத்தை பதிவு செய்யத் தொடங்கியபோது 18 முதல் 24 வயதுடையவர்களில் 59% பேர் முடியாட்சி தொடர வேண்டும் என்று கூறினர். இது 2022 இல் 33% ஆகக் குறைந்துவிட்டது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »