Press "Enter" to skip to content

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு: நாணயம், தபால் தலை, தேசிய கீதத்தில் என்ன மாற்றம் இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

70 ஆண்டுகளாக அரியணையில் இருந்த இரண்டாம் எலிசபெத் ராணி, பிரிட்டன் மக்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் இருந்தார். அவரது உருவப்படங்களை நாணயங்கள், தபால்தலைகள், தபால்பெட்டிகள் உட்பட பலவற்றில் அவர்கள் பார்த்துப் பழகிவிட்ட நிலையில், இனி அதில் என்ன மாற்றம் இருக்கும்?

நாணயங்கள்

பிரிட்டன் முழுவதும் பயன்பாட்டில் உள்ள 29 பில்லியன் நாணயங்களில் இரண்டாம் எலிசபெத் ராணியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். தற்போதையை நாணயங்களில் அவருக்கு 88 வயதாக இருக்கும்போது எடுத்த படம் உள்ளது. இது கடந்த 2015ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்புமாகும். இது அவரது ஆட்சிக்காலத்தில் நடந்த ஐந்தாவது நாணய புதுப்பிப்பு.

புதிய மன்னர் சார்ல்ஸின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் எப்படி இருக்கும், எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற விவரங்களை பிரிட்டனுக்கான நாணயங்களை உருவாக்கி வரும் ‘தி ராயல் மின்ட்’ அமைப்பு வெளிப்படையாக அறிவிக்காது. எனினும், இன்னும் பல ஆண்டுகளுக்கு ராணியின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் பயன்பாட்டில் இருக்கும் எனத் தெரிகிறது. புதிய மன்னரின் உருவத்துடன் கூடிய நாணயங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடைமுறை படிப்படியாக நடைபெறும்.

1971ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாணய முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றத்திற்கு முன்னதாக, ஒன்றுக்கும் மேற்பட்ட மன்னர்களின் உருவப்படங்களை நாணயங்களில் பார்ப்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக இருந்தது.

நாணயங்களில் மாற்றம்

பட மூலாதாரம், THE ROYAL MINT

புதிய மன்னரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாணயம் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியாவிட்டாலும்கூட, அவரது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாணயம் சில குறிப்புகளைக் கொடுக்கிறது. ஆனால், நாணயத்தில் மன்னர் இடதுபுறம் பார்க்கும் வகையில் இருப்பார் என்பது மட்டும் நிச்சயம். புதிய மன்னரின் உருவப்படம் ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் நாணயத்தில் இருந்ததற்கு எதிர்த்திசையில் இருக்க வேண்டும் என்பது மரபாக உள்ளது.

புதிய நாணயம் உருவாக்குவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தவுடன் அதற்கான நடைமுறையை ‘தி ராயல் மின்ட்’ தொடங்கும்.

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு:

பட மூலாதாரம், Getty Images

ஸ்காட்டிஷ் மற்றும் வடக்கு ஐரிஷ் வங்கிகளால் வெளியிடப்பட்ட நோட்டுகள் நீங்கலாக 1960ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் அனைத்து ரூபாய் தாள்களிலும் ராணியின் படம் இருக்கும். 80 பில்லியன் யூரோ மதிப்பிலான பண நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும் நிலையில், நாணயங்களோடு சேர்த்து அவையும் படிப்படியாக மாற்றப்படும்.

தபால் தலைகள் மற்றும் தபால் பெட்டிகள்

1967ஆம் ஆண்டு முதல் ‘ராயல் மெயில்’ அமைப்பால் வெளியிடப்பட்ட அனைத்து தபால் தலைகளிலும் இரண்டாம் எலிசபெத் ராணியின் படம் இருக்கும்.

ராணியின் உருவம் பதித்த புதிய தபால் தலைகள் அச்சிடுவதை ‘ராயல் மெயில்’ இனி நிறுத்திவிடும். இருப்பினும், பழைய தபால் தலைகளை கடிதம் மற்றும் பொட்டலம் சேவைகளுக்குத் தொடர்ந்து பயன்படுத்தலாம். புதிய மன்னரின் உருவம் பதித்த தபால் தலைகள் அச்சிடும் பணி விரைவில் தொடங்கும்.

2018ம் ஆண்டு, இளவரசர் சார்ல்ஸின் 70வது பிறந்தநாளையொட்டி, அவரை கெளரவிக்கும் வகையில் ஆறு புதிய தபால் தலைகள் வெளியிடப்பட்டன

பட மூலாதாரம், ROYAL MAIL

முன்னதாக ‘ராயல் மெயில்’, புதிய மன்னர் சார்ல்ஸுக்கு தபால் தலை வெளியிட்டிருந்தாலும் அவருடைய புதிய தபால் தலை எப்படி இருக்கும் என்பதை இன்னும் ‘ராயல் மெயில்’ அறிவிக்கவில்லை.

மன்னர் மற்றும் ராணியின் உருவங்களுக்குத் தபால்தலை வெளியிட்டுவரும் ‘ராயல் மெயில்’, அவர்களை அடையாளப்படுத்தும் வகையிலான சின்னத்தையும் தபால்பெட்டிகளில் பொறிக்கும். இதுவரை தபால்பெட்டிகளில் ‘EIIR’ எனக் குறிப்பிடப்பட்ட நிலையில், இனி புதிதாக நிறுவும் தபால்பெட்டிகளில் அரசரை அடையாளப்படுத்தும் சின்னம் பொறிக்கப்படும். ஆனால், புதிய தபால் பெட்டிகள் நிறுவும் நடைமுறை பிரிட்டனில் வெகுவாகக் குறைந்துவிட்டது.

ஒப்புதலுக்கான அரச முத்திரை

தக்காளி கெட்சப் தொடங்கி வாசனைத் திரவியங்கள்வரை சில நிறுவனப் பொருட்களில் ராணியின் தனிச்சின்னத்துடன் “By appointment to Her Majesty the Queen” என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். அரச குடும்பங்களுக்கு தொடர்ந்து பொருட்கள் வழங்கும் நிறுவனங்களுக்கு இத்தகைய ராயல் வாரண்ட் அங்கீகாரம் வழங்கப்படும். கடந்த ஒரு நூற்றாண்டாக இந்த ராயல் வாரண்டை மன்னர்களும் அவரது வாரிசுகளும் வழங்கி வருகின்றனர்.

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு

ராயல் வாரண்ட் வழங்கியவர் இறந்துவிட்டால் அவர் வழங்கிய ராயல் வாரண்ட் செல்லுபடியற்றதாகிவிடும். சம்பந்தப்பட்ட நிறுவனம் இரண்டு வருடங்களுக்குள் அந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

இது அரச குடும்ப அடிப்படையிலானது மட்டுமே என்பதால் வேல்ஸ் இளவரசராக இருந்தபோது சார்ல்ஸ் வழங்கிய ராயல் வாரண்ட் அவர் அரசராக இருக்கும்போதும் தொடரும். தன்னுடைய மகனும் வாரிசுமான இளவரசர் வில்லியமுக்கு இத்தகைய ராயல் வாரண்ட் வழங்கும் அதிகாரத்தை இனி அவர் வழங்கலாம்.

கடவுச்சீட்டு

பணம், தபால்தலைகள், ஒப்புகைச் சான்று மட்டுமல்ல, கடவுச்சீட்டிலும் இனி மாற்றம் கொண்டுவரப்படும். எனினும், ராணியின் ஒப்புதலுடன் வழங்கப்பட்ட கடவுச்சீட்டு தொடர்ந்து செல்லுபடியாகும். அதே நேரத்தில் புதிதாக அச்சிடப்படும் கடவுச்சீட்டு மன்னரின் ஒப்புதலுடன் வழங்கப்படும். வழக்கமாக கடவுச்இருக்கையின் முன்புற அட்டையின் உட்புறத்தில் மன்னரோ அல்லது ராணியோ வழங்கும் ஒப்புதல் குறிப்பு இடம்பெற்றிருக்கும்.

அதேபோல இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள காவல் துறை அதிகாரிகளின் தலைக்கவசத்தில் உள்ள ராணியை அடையாளப்படுத்தும் சின்னம் மாற்றப்படும். ராணியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் இனி அரசரின் ஆலோசகர்களாக அறியப்படுவர்.

இவற்றுக்கெல்லாம் மேலாக, பிரிட்டனின் தேசிய கீதத்திலும் மாற்றம் கொண்டுவரப்படும். ‘கடவுளே ராணியைக் காப்பாற்றுங்கள்’ என்பது கடவுளே அரசரைக் காப்பாற்றுங்கள் என மாற்றப்படும். அதிகாரபூர்வமாக சார்ல்ஸ் அரசராகப் பொறுப்பேற்ற பிறகு இந்த மாற்றமானது நடைமுறைக்கு வரும். இது 1952ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக பிரிட்டனின் தேசிய கீதத்தில் செய்யப்படும் மாற்றமாகும்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »