Press "Enter" to skip to content

ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் ஆப்ரிக்கா: நீண்டகால உறவு

  • சிசிலியா மெக்காலே
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

ராணி இரண்டாம் எலிசபெத் இதயத்தில் ஆப்பிரிக்காவுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு என்று கூறப்படுவதுண்டு. தமது வாழ்வின் சில முக்கியத் தருணங்களில் ராணி ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்துள்ளார்.

அவரது தந்தை ஆறாம் ஜார்ஜ் அரசர் லண்டனில் இறந்ததைத் தொடர்ந்து, உடனடியாக 25 வயதில் இளவரசி எலிசபெத், ராணி இரண்டாம் எலிசபெத் ஆனபோது அவர் கென்யாவின் ஊரகப் பகுதியில் உள்ள ட்ரீடாப்ஸ் ஓட்டலில் தங்கியிருந்தார். இப்போது மூடப்பட்டுவிட்ட அந்த ஓட்டல் உயரமான மரங்கள், வன விலங்குகள் அடங்கிய பசுமைப் பகுதியில் அமைந்திருந்தது.

தனது 70 ஆண்டு ஆட்சியில் 20க்கும் மேற்பட்ட ஆப்ரிக்க நாடுகளுக்கு ராணி இரண்டாம் எலிசபெத், பயணம் மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட வேறு எந்த இடத்தையும்விட தாம் ஆப்பிரிக்காவுக்கே அதிகம் வந்திருப்பதாக ஒரு முறை நெல்சன் மண்டேலாவிடம் நகைச்சுவையாக குறிப்பிட்டார் இரண்டாம் எலிசபெத்.

தென்னாப்பிரிக்காவில் வெள்ளை இன சிறுபான்மையினர் ஆட்சிக்கு எதிராகப் போராடிய அந்நாட்டுத் தலைவர் நெல்சன் மண்டேலாவுடன், ராணி எலிசபெத் தனிப்பட்ட முறையில் நல்லுறவு பேணினார். ராணியின் மறைவுக்கு நெல்சன் மண்டேலா அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. “அவர்கள் இருவரும் அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து பரஸ்பரம் ஒருவர் மற்றவரது முதல் பெயரை சொல்லி பேசுவார்கள். இது அவர்களிடம் பரஸ்பரம் நிலவிய அன்பையும், மதிப்பையும் காட்டுகிறது” என்று அந்த இரங்கல் குறிப்பில் அந்த அமைப்பு கூறியுள்ளது.

அது மட்டுமல்ல, ராணி எலிசபெத்தைக் குறிப்பிட நெல்சன் மண்டேலா ஒரு சிறப்புப் பெயர் வைத்திருந்தார். ‘மோட்டலேபுலா’ என்ற அந்தப் பெயருக்கு ஆப்பிரிக்க மொழியில் “மழையுடன் வருபவர்” என்று பொருள். மண்டேலா நாட்டின் அதிபராக இருந்த காலத்தில் ராணி இரண்டாம் எலிசபெத் ஒரு முறை தென்னாப்பிரிக்கா சென்றிருந்தார். அது அந்நாட்டின் தீவிர மழைக்காலம். இதனால்தான் ராணியைக் குறிப்பிட இந்த சிறப்புப் பெயரைத் தேர்ந்தெடுத்தார் மண்டேலா.

ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூடியபோது ஆப்பிரிக்க கண்டத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்திருந்தது. ஆனால், இரண்டாம் எலிசபெத் ஆட்சிக் காலத்தில் 14 ஆப்பிரிக்காவில் இருந்த பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளும் விடுதலை அடைந்தன. 1957ல் கானா முதல் முதலாக விடுதலை பெற்றது. அதைத் தொடர்ந்து மற்ற நாடுகள் விடுதலை அடைந்தன. எனினும் அந்த நாடுகளோடு ராணி எலிசபெத் நல்லுறவு பேணினார்.

கானா நாட்டின் விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவரும் அந்நாட்டின் முதல் அதிபரானவருமான க்வாமே க்ருமாவுடன் 1961ம் ஆண்டு ராணி எலிசபெத் சகஜமாக நடனமாடும் புகைப்படம் ஒன்று மிக முக்கியமானது.

குறிப்பாக, பேரரசினைத் தொடர்ந்து உருவான காமன்வெல்த் அமைப்பின் மூலமே இந்த உறவை அவர் முன்னெடுத்தார். இப்போது பிரிட்டன் மற்றும் சில காமன்வெல்த் நாடுகளின் அரியணையில் நீண்டகாலம் இருந்தவரான ராணியின் மரணத்துக்கு ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1953ம் ஆண்டு ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூட்டிக்கொண்ட போதே, பேரரசு என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. தற்போது கண்டங்கள் கடந்தும், மக்கள் ராணிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

எலிசபெத், ராணியாக தனது வாழ்வை தொடங்கிய கென்ய நாட்டின் தற்போதைய அதிபர் உஹுரு கென்யட்டா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மனித குலத்துக்கு தன்னலமற்ற சேவை செய்த உயர்ந்த தலைவர் என்றும், பிரிட்டனுக்கோ, கென்யா மதிப்பான இடம் பெற்றுள்ள காமன்வெல்த் நாடுகளுக்கோ மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திலும் முக்கியத் தலைவராக இருந்தவர் ராணி எலிசபெத்” என்று தெரிவித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டில், ராணி கென்யாவில் உள்ள ட்ரீடாப்ஸ் ஹோட்டலை மீண்டும் பார்வையிட்டார். அங்கு அவர் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு ராணியானார்.

பட மூலாதாரம், Getty Images

ஜிம்பாப்வே – பிரிட்டன் உறவுகள் நீண்டகாலமாக நல்லவிதமாக இல்லை. ராபர்ட் முகாபே அதிபராக இருந்தபோது இதனால், ஜிம்பாப்வே காமன்வெல்த் அமைப்பில் இருந்து வெளியேறியது. ஆனால், முகாபேவுக்குப் பிறகு அதிபரான ராபர்ட் முனங்காக்வா, ராணி இறந்தவுடன் அரச குடும்பத்துக்கும், பிரிட்டன் மக்களுக்கும், காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்தோருக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்காவில் உள்ள பிரிட்டனின் முன்னாள் குடியேற்ற நாடுகளிலேயே மிகப் பெரியதான நைஜீரியாவின் அதிபர் முகமது புஹாரி ராணியின் இறப்பு செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றதாகக் கூறி ட்விட்டரில் நீண்ட இரங்கல் குறிப்பு எழுதியுள்ளார்.

“உயர்ந்த உலகத் தலைவரான ராணி இரண்டாம் எலிசபெத் பற்றிய அத்தியாயம் இன்றி, நவீன நைஜீரியாவின் வரலாறு முழுமை அடையாது. பிரிட்டன், காமன்வெல்த் நாடுகள் மட்டுமின்றி வாக்கு மொத்த உலகத்தையும் சிறந்த இடமாக்க அவர் தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரிட்டன் அரசராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்க உள்ளதற்கும் அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் அமைப்பில் புதிதாக இணைந்த காபான் நாட்டு அதிபர் அலி போங்கோவும், தனது ட்விட்டர் பதிவில் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஆப்ரிக்க நாட்டு தலைவர்கள் பலர் ராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், வேறு சில ஆப்பிரிக்கர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் தாங்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றியும், பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் பெயரிலேயே பெரும்பாலான காலனி ஆதிக்கம் பெரிதும் நிகழ்ந்தது என்பதையும் பேசுகின்றனர்.

ஆப்பிரிக்காவின் சில முடியரசுகளும் இரங்கல் தெரிவித்துள்ளன. தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜுலு இன மக்களின் தலைவரான அரசர் மிசுஜுலு காஸ்வெலிதினி சார்பாக, இளவரசர் மங்கோசுது புத்தேலெசி சார்ல்ஸ் மன்னருடனான தனது மதிப்பு மிக்க நட்பை நினைவுகூர்ந்து அவருக்கு தனிப்பட்ட முறையில் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.

அரசர் சார்ல்சுக்கு நிகழ்ந்துகொண்டிருப்பது என்ன என்பதை அரசர் மிசுஜுலுவுக்கு நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால் 50 ஆண்டு காலம் அரியணையில் இருந்த மிசுஜுலுவின் தந்தை கடந்த ஆண்டுதான் காலமானார்.

1947ம் ஆண்டு தனது 21வது பிறந்த நாளைக் கொண்டாடும்போது ராணி எலிசபெத் தென் ஆப்ரிக்க சுற்றுலாவில் இருந்தார். அப்போது, கேப்டவுன் நகரில் உள்ள வானொலி நிலையத்தில் உரையாற்றியபோது, காமன்வெல்த்துக்கு தன் வாழ்வை அர்ப்பணிப்பதாகவும், ஆப்பிரிக்கவில் இருப்பது தாய் நாட்டில் இருப்பதைப் போல இருப்பதாகவும், தன் வாழ்வு முழுவதையும் அங்கே வாழ்ந்தது போல இருப்பதாகவும் அவர் கூறினார்.

மண்டேலா தென்னாப்பிரிக்க அதிபராகப் பதவியேற்று, சட்டபூர்வமான இனவெறிக் கொள்கையான ‘அபார்த்தீட்’ என்பதை முடிவுக்குக் கொண்டு வந்த அடுத்த ஆண்டு, 1995ல் அவர் தென்னாப்பிரிக்கா சென்றபோது வலுவான அரசியல் தொனி கொண்ட கருத்து ஒன்றை வெளியிட்டார். வழக்கமாக அரசியலுக்கு அப்பாற்பட்டு பேசக்கூடிய அவரிடம் இருந்து அப்படி ஒரு கருத்து வந்தது.

நல்லிணக்கத்துக்கான உங்கள் நாட்டின் நம்பிக்கை உலகத்துக்கு ஒரு ஒளிமயமான எடுத்துக்காட்டாகியுள்ளது. மீண்டும் இங்கு வந்து பார்க்கும்போது கிட்டத்தட்ட ஓர் அதிசயத்தைப் பார்ப்பதாகவும் அப்போது தெரிவித்தார் ராணி இரண்டாம் எலிசபெத்.

ராணி நெல்சன் மண்டேலாவுடன் நட்பைக் கொண்டிருந்தார், அவருடன் 1995இல் கேப் டவுனில் அவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »