- சீன் கோஃப்லான்
- அரச குடும்ப செய்தியாளர்
பட மூலாதாரம், Getty Images

பிரிட்டன் அரியணைக்கான வாரிசாக நீண்ட காலம் இருந்த சார்ல்ஸ் இப்போது அரசராகிவிட்டார். 70 ஆண்டு காலம் அரியணை வாரிசாக அவர் பெற்ற பயிற்சி அரசர் பணிக்கு அவரைச் சிறந்த முறையில் தயார்படுத்தியுள்ளது. அத்துடன், இதுவரை அரியணைக்கு வந்தவர்களில், அதிக வயதில் புதிய அரசராகப் பொறுப்பேற்றவர் இவர்தான்.
73 வயது அரசர் தமது தாயின் ஆட்சிக் காலம் முழுவதும் பல தலைமுறைத் தலைவர்கள் வருவதையும் போவதையும் பார்த்துள்ளார். ஐக்கிய ராஜ்ஜியத்தின் 15 பிரதமர்களும் ஐக்கிய அமெரிக்காவின் 14 அதிபர்களும் இதில் அடக்கம்.
இரண்டாம் எலிசபெத் ராணியின் குறிப்பிடத்தகுந்த, யுகத்தை வரையறுக்கும் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு வரும் அரசர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்று நாம் எதிர்பார்க்கலாம்?
அரசரான பிறகு, சார்ல்ஸுக்கு இனி தனியாக பாஸ்போர்ட்டோ, ஓட்டுநர் உரிமமோ இருக்காது. பொதுவெளியில் தீவிரமான கருத்துகளை அவர் வெளியிடமாட்டார். அரசர் பதவி அவரது தனிப்பட்ட வாழ்வை பதிலீடு செய்யும்.
இது வெவ்வேறு பாத்திரங்கள், வெவ்வேறு விதிகளைப் பொறுத்தது என்று முன்னணி அரசமைப்பு நிபுணர் பேராசிரியர் வெர்னான் போக்டனோர் நம்புகிறார்.
“அவரது பாணியை மாற்ற வேண்டியிருக்கும் என்று அவர் தனது ஆரம்ப நாட்களிலிருந்தே அறிந்திருந்தார். பொதுமக்கள் ஒரு பிரசார அரசரை விரும்ப மாட்டார்கள்” என்று பேராசிரியர் போக்டனோர் கூறுகிறார்.
குறைந்த அளவே வெளிப்படையாகப் பேச வேண்டியதன் அவசியத்தை அரசர் சார்ல்ஸ் நன்கு அறிவார். 2018இல் பிபிசி நேர்காணலில், “நான் அவ்வளவு முட்டாள் அல்ல. ஓர் அரசராக இருப்பது ஒரு தனிப் பயிற்சி என்பதை நான் உணர்கிறேன். ஏற்கனேவே இருக்கும் வழியிலேயே நான் எப்படியாவது நாட்டை முன் நகர்த்திச் செல்வேன் என்பது முற்றிலும் முட்டாள்தனமானது,” என்று கூறினார்.
ஒரு புதிய அரசர் அரியணைக்கு வரும்போது, நாணயங்களில் உள்ள அரச சுயவிவரம் எதிர்த்திசைக்கு மாற்றப்படும். சார்ல்ஸின் ஆட்சிக் காலத்திலும் வித்தியாசமான கவனம் செலுத்தப்படும்.
அரசர் சார்ல்ஸ் ஆட்சி செய்யும் நாடு, அவரது தாயால் பெறப்பட்ட நாட்டை விட மிகவும் வேறுபட்டது. மேலும் புதிய அரசர் பன்முக கலாசாரம் மற்றும் பல நம்பிக்கைகளைக் கொண்ட பிரிட்டனை அடைவார் என்று பேராசிரியர் போக்டனோர் எதிர்பார்க்கிறார்.
சிறுபான்மை இனத்தவர்களுடனும் பின்தங்கிய குழுக்களுடனும் இணைவதற்கு புலப்படும் வகையிலான கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு, ஐக்கியப்படுத்தும் சக்தியாக அவர் செயல்பட முயல வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.


பட மூலாதாரம், Getty Images

பேராசிரியர் போக்டனோர் கலை, இசை மற்றும் கலாசாரத்தின் அதிக அரச ஆதரவை – அதிக ஷேக்ஸ்பியர் மற்றும் குறைவான குதிரை பந்தயத்தை – எதிர்பார்க்கிறார்.
ஆனால் சர் லாயிட் டோர்ஃப்மேன், அரசர் சார்ல்ஸுடன் அவரது இளவரசர் அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியவர். காலநிலை நெருக்கடி, இயற்கை விவசாயம் போன்ற பிரச்னைகளில் அவரது ஈடுபாட்டை முழுமையாக நிறுத்திவிடுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
“அவர் மிகவும் அறிவாளி, மிகவும் திறமையானவர். அவர் அரசான நாளில் அவற்றைக் கைவிட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கவில்லை,” என்று சர் லாயிட் கருதுகிறார்.
அரசர் “மெலிதான” முடியாட்சியை விரும்புவதைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. இது சார்ல்ஸ், கமில்லா, இளவரசர் வில்லியம், கேத்ரீன் ஆகியோர் மையத்தில் இருக்கும் ஒரு சிறு முக்கிய அரச குடும்ப குழுவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கலாம்.
இருப்பினும், புதிய ஆட்சியின் மிக முக்கியமான விஷயமாக நீட்சி மற்றும் ஸ்திரத்தன்மை இருக்கும் என்று அரச குடும்ப வர்ணனையாளர் விக்டோரியா மர்ஃபி கூறுகிறார்.
“பெரிய, குழப்பமான வேறுபாடுகளை எதிர்பார்க்காதீர்கள். அவர் மிகவும் கவனமாக இருப்பார்,” என்று அவர் கூறுகிறார்.
“தேசிய வாழ்க்கையைப் பொறுத்தவரை, ராணி நிலையானவராக இருப்பாரெனக் கருதுகிறோம். ஆனால், அவரைத் தவிர, பொது வாழ்வில் எந்த அரசியல்வாதியையும் விட, யாரையும் விட, அரசர் நீண்ட காலம் இருந்தார்” என்று அரச வர்ணனையாளரும் எழுத்தாளருமான ராபர்ட் ஹார்ட்மேன் கூறுகிறார்.


பட மூலாதாரம், Getty Images

காலநிலை நெருக்கடி குறித்து அவர் நீண்டகாலமாக பிரிட்டனுக்கும் உலகுக்கும் எச்சரித்துக் கொண்டிருந்த பிரச்னைகள் சரியானவை என்று நிரூபிக்கப்பட்டதன் மூலம் அரசர் சார்ல்ஸ் பலப்படுத்தப்பட்டதாக, எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான சர் அந்தோணி செல்டன் நம்புகிறார். முன்பு கேலி செய்யப்பட்டவருக்கு இப்போது அட்டன்பரோவின் ஒளிவட்டம் ஏற்பட்டுள்ளது என்கிறார் சர் அந்தோணி.
சான்றாக, 2021இல் கிளாஸ்கோவில் நடந்த காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போன்றோர் சார்ல்ஸை தீவிரமாகக் கருத்தில் எடுத்தனர். ஹார்ட்மேன், உலக அரங்கில் இருக்கும் அந்தஸ்து அரசராக அவருக்கு சிறப்பாகச் சேவை செய்யும் என்று கருதுகிறார்.
“இது வெறும் வார்த்தையல்ல. அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து உரையாடினர். ‘இதையெல்லாம் நீங்கள் தொடங்கி வைத்துள்ளீர்கள்’ என்று பைடன் கூறிக் கொண்டிருந்தார்,” என்கிறார்.
ஆனால், புதிய அரசரிடம் நாம் என்ன மாதிரியான தன்மையைக் காண்போம்?
அவரை அறிந்தவர்கள், அவர் உள்ளூர மிகவும் கூச்ச சுபாவமுள்ள, தனிமையை விரும்பு நபர் எனக் கூறுவார்கள். சுருக்கமாகச் சொன்னால், அவர் ஒரு “மென்மையான ஆன்மா.”


பட மூலாதாரம், PA Media

பள்ளியில் துன்புறுத்தப்படுத்தப்பட்டு தனிமைபடுத்தப்பட்டதாகப் புகாரளித்த தனிமையில் இருக்கும் சிறுவனின் தடயம் அரசரிடம் உள்ளது. “அவர்கள் இரவு முழுவதும் செருப்புகளை வீசுகிறார்கள். தலையணைகளால் அடிக்கிறார். அறை முழுவதும் பாய்ந்து தங்களால் முடிந்தவரை என்னைத் தாக்குகிறார்கள்,” என்று அவர் தனது பள்ளி விடுதியில் துன்புறுத்தப்பட்டதைப் பற்றி வீட்டிற்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார்.
இப்போது அவருடைய ராணியாகியுள்ள அவரது மனைவி கமில்லா, “அவர் சற்று பொறுமையில்லாதவர். அவர் செய்ய வேண்டிய விஷயங்களை நேற்றே செய்து முடித்திருக்க வேண்டுமென விரும்புவார். அப்படித்தான் அவர் செய்வார்.”
சார்ல்ஸின் 70வது பிறந்தநாளின்போது ஒரு தொலைக்காட்சி நேர்காணலுக்குப் பேசியபோது, மக்கள் பொதுவில் பார்க்கும் ஆர்வமுள்ள கதாபாத்திரத்திற்குப் பின்னால், அவருக்கு மிகவும் விளையாட்டுத்தனமான பக்கம் உள்ளது என்று கமில்லா கூறினார்.
“அவர்கள் அவரை மிகவும் தீவிரமான நபராகப் பார்க்கிறார்கள். ஆனால், மக்கள் அவருடைய இலகுவான பக்கத்தைப் பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவர் மண்டியிட்டு உட்கார்ந்து குழந்தைகளுடன் விளையாடுவார். அவர்களுக்கு ஹேரி பாட்டரை படித்துக் காட்டுவார், பல குரல்களில் ஒலித்துக் காட்டுவார்,” என்றார் அரசரின் மனைவி கமில்லா.


பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

சார்ல்ஸ் பொதுமக்களைச் சந்திக்கும்போது நிதானமாகவும் அனைவரும் அணுகக்கூடிய நபராகவும் மாறியுள்ளார். தன்னைத் தானே பகடி செய்யும் நகைச்சுவைகளுடன் பார்ப்பவர்களை ஈர்க்கிறார். ஒருவேளை ஓர் அரசராக அது மாறலாம். ஆனால், வேல்ஸ் இளவரசராக அவர் எந்த நிலைப்பாட்டிலும் இல்லாத ஓர் அன்பான தாத்தாவைப் போன்ற பாணியை உருவாக்கினார்.
தன்னுடைய 70களில் இருக்கும் ஒருவராக, அரசர் தன் வேகத்தைக் குறைத்துக் கொள்வதைப் போன்ற எந்த அறிகுறியையும் காட்டவில்லை.
பிரின்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சார்ல்ஸுடன் பணியாற்றிய கிறிஸ் போப், அவரை ஓயாமல் உழைக்கக்கூடிய, ஊக்கம் கொண்ட, அதிக பணிச்சுமையை எடுத்துக்கொள்ளக் கூடிய “ஆற்றல் நிறைந்தவர்” என்று விவரிக்கிறார்.
“அடுத்த தலைமுறையின் நல்வாழ்வில் அவர் அக்கறையுள்ளவர். அவர் செய்யும் பல வேலைகளில் நீங்கள் அதைக் காணலாம்,” என்கிறார் போப்.
இளவரசரின் தொண்டு வேலைகளில் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், பாரம்பரிய கைவினைத் திறன்களைப் பாதுகாத்தல் ஆகியவோடு, புதுமையையும் மாற்றத்தையும் ஊக்குவித்தலும் அடங்கும்.
“பாரம்பரியங்களை இழந்துவிடக் கூடாது என்பதில் அவர் அக்கறை கொண்டிருப்பார். ஆனால் அதற்காக நேரத்தைப் பின்னோக்கித் திருப்ப வேண்டும் என்று கூறுவதும் அதுவும் ஒன்றல்ல என்று அவர் எப்போது அக்கறையோடு இருப்பார்,” என்று போப் கூறுகிறார்.
புதிய அரசரின் குணாதிசயம், வெவ்வேறு திசைகளுக்கு இழுக்கப்படும் இந்தக் கருப்பொருள்களை ஒன்றிணைத்து மரபைப் பாதுகாப்பதோடு, மாற்றத்தையும் விரும்புவதைப் போல் தெரிகிறது.


பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Getty Images

அவர் சில நேரங்களில் 18ஆம் நூற்றாண்டின் ஓவியத்திலிருந்து விலகிய சிவப்புக் கன்னம் கொண்ட நிலவுடைமையாளரைப் போல் தோற்றமளிக்கிறார். சில நேரங்களில் அவர் விரக்தியடைந்த சீர்திருத்தவாதியைப் போலவும் சில சமூகங்கள் புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியிருப்பதைக் கண்டு எரிச்சலடைந்திருப்பதைப் போலவும் தெரிகிறது.
அரசர் சார்ல்ஸ், அதிகமான கடமை உணர்ச்சியையும் கூடவே அவரது மத நம்பிக்கையையும் அவருடைய வலுவான நகைச்சுவை உணர்வையும் அவருடைய தாயாரிடமிருந்து பெற்றுள்ளார்.
2007இல் பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளை அமைக்க உதவியதிலிருந்து அவருடன் ஹிடன் மேத்தா பணியாற்றியுள்ளார்.
“அவர் இதயத்தில் ஒரு மனிதாபிமானி. அவர் எவ்வளவு அக்கறை காட்டுகிறார் என்பதை மக்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர் தனது பேரக்குழந்தைகளுக்காக விட்டுச் செல்லப் போகும் உலகத்தைப் பற்றி அடிக்கடி பேசுவார். அதைப் பற்றி அவர் கவலைப்படுகிறார்,” என்கிறார் மேத்தா.
இது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அவருடைய நேரடி அழைப்புகளைக் குறிக்கும்.
“வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணி இருக்கும். அவரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் குறித்துக் கேள்விப்பட்டேன். நாம் என்ன செய்கிறோம்?’ என்றார். அவர் வேலையேதுமற்றவர் இல்லை. ஆனால், பிரச்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு, தன் வேலைகளுக்கு நடுவிலும் அதில் ஈடுபடுகிறார். அவர் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறார்,” என்று மேத்தா கூறுகிறார்.
“அவர் இரவு உணவைத் தாமதமாகச் சாப்பிட்டுவிட்டு, தன் மேசைக்குச் சென்று வேலை செய்துவிட்டு, தன் நோட்டுகளின் மீதே தூங்கிவிடுவார்,” என்று இளவரசர் ஹேரி தனது தந்தையைப் பற்றிக் கூறினார்.


பட மூலாதாரம், PA Media

சார்ல்ஸ் ஃபிலிப் ஆர்தர் ஜார்ஜ், 14 நவம்பர் 1948 அன்று பக்கிங்ஹாம் மாளிகையில் பிறந்தார். பிபிசி அவரது பிறப்பை அறிவித்தபோது, ராணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று செய்தி வெளியிடவில்லை. அவரது தாயார், “இளவரசரைப் பாதுகாப்பாகப் பெற்றெடுத்துள்ளார்,” என்று தெரிவித்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அரியணை வாரிசானார்.
“நான் இந்தக் குறிப்பிட்ட நிலையில் பிறந்துள்ளதை உணர்ந்தேன். அதை மிகச் சிறப்பாகப் பயன்படுத்துவதில் நான் உறுதியாக இருக்கிறேன். என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்,” என்று சார்ல்ஸ் 2005ஆம் ஆண்டின் பேட்டியில் கூறினார்.
அவர் 400க்கும் மேற்பட்ட அமைப்புகளின் புரவலராக, தலைவராக இருந்தார். மேலும் 1976ஆம் ஆண்டில் அவர் ராயல் கடற்படையிலிருந்து தான் வெளியேறும் கிடைத்த ஊதியத்தைப் பயன்படுத்தி தனது சொந்த தொண்டு நிறுவனமான பிரின்ஸ் அறக்கட்டளையை நிறுவினார்.
இது நாட்டின் சில ஏழ்மையான பகுதிகளைச் சேர்ந்த 9,00,000 பின்தங்கிய இளைஞர்களுக்கு உதவியது, அவருக்குப் பல்வேறு சமூகப் பிரச்னைகள் பற்றிய நுண்ணறிவை வழங்கியது.
“சமுதாயத்தில் அடைவதற்கு மிகவும் கடினமான பகுதி” என்றழைக்கப்படும் எதுவும் சரியாகக் கிடைக்காத பகுதிகளை இணைக்கும் வகையில் இளவரசரின் அறக்கட்டளை திட்டங்கள் இருந்தன.
“உள்துறை அலுவலகம் இதையொரு நல்ல யோசனையாகக் கருதவில்லை,” என்று அவர் 2018இல் பிபிசி பேட்டியில் கூறினார்.
அவருடைய பணி அரசியல் தலையீடு குற்றச்சாட்டுகளை ஈர்த்தது. குறிப்பாக, “கருப்பு ஸ்பைடர் மெமோக்கள்” என்றழைக்கப்படும், அரசாங்க அமைச்சர்களுக்கு 2004 முதல் சார்ல்ஸ் எழுதிய தனிப்பட்ட கடிதங்களைச் சுற்றி குற்றச்சாட்டுகள் எழுந்தன. சார்ல்ஸின் சிலந்தி வலை போன்ற கையெழுத்தில் இருந்து இந்தப் பெயர் வழங்கப்பட்டது.
பாட்டகோனியன் டூத்ஃபிஷ் என்ற வகை மீனின் பாதுகாப்பு உட்பட விவசாயம், நகர்ப்புற திட்டமிடல், கட்டடக்கலை, கல்வி போன்ற பிரச்னைகளில் அரசாங்கத்தின் அணுகுமுறை குறித்து அந்தக் கடிதங்களில் கேள்வி எழுப்பப்பட்டன.


பட மூலாதாரம், Getty Images

சார்ல்ஸுடைய இந்தச் செயல்பாடுகளை எதிர்நோக்கும் பக்கத்தில் இருந்த முன்னாள் கேபினட் அமைச்சர், தான் பெரிய அழுத்தத்திற்கு ஆளாகவில்லை என்கிறார். ஆனால், அவருடைய நினைவில் புதிய அரசர் முன்முடிவான கருத்துகளைக் கொண்ட ஒருவரைப் பற்றியதாக உள்ளது. தன் கருத்துகளின் மீதான் எதிர் வாதங்களில் ஈடுபடுவதை விட, தான் தொடர விரும்பிய செயல்பாடு குறித்த முன்கூட்டி முடிவு செய்யப்பட்ட பார்வைகளோடு வருபவராக முன்னாள் கேபினட் அமைச்சர் அவரைப் பார்க்கிறார்.
“அவர் தலையீடு செய்வார், கடிதங்களைப் பெறுவோம். ஆனால், அவர் வலியுறுத்தவில்லை, அழுத்தம் கொடுக்கவில்லை,” என்று அவர் கூறுகிறார்.
2006ஆம் ஆண்டு நேர்காணலில், குறுக்கீடு செய்ததாகக் கூறப்படுவதைப் பிரதிபலிக்கும் வகையில், “அது தலையிடுவதாகக் கருதப்பட்டால், நான் அதில் மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்று சார்ல்ஸ் கூறினார். ஆனால், எந்தப் பக்கமும் வெற்றி கிடைக்காத சூழ்நிலையில் இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார்.
“நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்றால் புகார் செய்வார்கள். நீங்கள் முயன்று பார்த்து, அதில் ஈடுபட்டு, ஏதாவது உதவி செய்தால், அதையும் புகார் தான் செய்வார்கள்,” என்று கூறினார்.
பிறகு ஒரு நேர்காணலில், அவர் கட்சி அரசியலை தவிர்த்துவிட்டதாகவும் ஆனால், “மக்களின் வாழ்க்கை நிலைமைகள்” போன்ற பிரச்னைகளைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறினார்.
முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சர் கிறிஸ் முல்லின் தனது சார்ல்ஸுடனான தனது விளக்கமளித்தல் குறித்த டைரியில், அவரது ஒன்றின் மீது கவனம் குவிக்கும் பழக்கம் மற்றும் “அதிகாரிகளுக்கு எதிராகச் செயல்படுவதற்கு” அவர் தயாராக இருந்தது ஆகியவற்றால் தான் ஆச்சர்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அவர் நினைத்திருந்தால், அவரது வாழ்வை, இன்ப ஈடுபாட்டுக்குரிய செயல்களில் நாட்டமுடையவராக, செயலற்ற தன்மையில் வாழ்ந்திருக்கலாம். அவர் மீண்டும் அதே விஷயத்திற்கு வருவார். இளைஞர்களுக்கு, குறிப்பாக நம்பிக்கையற்றவர்கள், துரதிர்ஷ்டவசமானவர்கள் மட்டுமின்றி தவறு செய்வதர்களுக்கும் கூட, அவர்களுக்கான அறிவு, புரிதல் மற்றும் அனுபவத்தின் அளவை எப்படிப் பெரிதாக்குவது என்று சிந்திப்பார். அதில் நான் ஈர்க்கப்பட்டதாக ஒப்புக்கொள்கிறேன்,” என்றும் குறிப்பிட்டார்.


பட மூலாதாரம், Chris Jackson / Clarence House

அரசர் சார்ல்ஸ் ஆட்சியைத் தொடங்கும்போது அவருக்கு எவ்வளவு மக்கள் ஆதரவு இருக்கும்?
“மக்களின் மனோபாவத்தை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் முடியாட்சியைப் போன்ற ஒன்று நிலைக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக, மக்கள் அதை விரும்பவில்லை என்றால், அதை இருக்க விடமாட்டார்கள்,” என்று சார்ல்ஸ் கூறியுள்ளார்.
டிசம்பர் 2021இல் YouGov மேற்கொண்ட ஆய்வின்படி, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அவரை நேர்மறையான பார்வையில் பார்க்கிறார்கள். அவர் வளர்ந்து வருகிறார்.
ஆனால், கருத்துக் கணிப்புகள் அவருடைய தாயார் இரண்டாம் எலிசபெத் ராணி அல்லது அவரது மகன் இளவரசர் வில்லியம் ஆகியோரைக் காட்டிலும் இவருக்கான பிரபலம் குறைவாக இருப்பதைக் காட்டுகின்றன. ஆக, அவர் ஈர்க்க வேண்டிய குறிப்பிடத்தக்க அளவிலான மக்கள் இன்னமும் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் இருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 1997இல் தேர் விபத்தில் இறந்த அவரது முதல் மனைவியான வேல்ஸ் இளவரசி டயானா உடனான உறவைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் சார்ல்ஸ் குறித்த அனுதாபமற்ற சித்தரிப்புகளின் பிரதிபலிப்பாக இது இருக்கலாம் என்று விக்டோரியா மர்ஃபி கூறுகிறார்.
இவை உண்மை மற்றும் புனைக் கதைகளின் கலவையாக இருக்கலாம். ஆனால், அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
“அரச குடும்பத்தைச் சுற்றி டயானா எவ்வளவு பெரியளவில் இன்னமும் தொடர்ந்து வருகிறார் என்பதுதான் கடந்த சில ஆண்டுகளில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம்,” என்று மர்ஃபி கூறுகிறார்.
சார்ல்ஸ் அரியணையை நெருங்கிவிட்டதால், பொதுமக்களின் பார்வையை மாற்றும் முயற்சி நடந்துள்ளது என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் ராயல் ஹோல்லோவேயில் உள்ள நவீன முடியாட்சி பற்றிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் பாலின் மெக்லாரன் கூறுகிறார்.
ஸ்பிட்டிங் இமேஜ் போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளில் அவர் முன்பு விளக்கப்பட்டதிலிருந்து, படிப்படியாக ஒரு கண்ணியமான நபராகவும் சுற்றுச்சூழலைப் பற்றிய தீவிரமான அக்கறை கொண்ட ஒரு “முனிவராக” மாற்றப்பட்டார், என்கிறார் பேராசிரியர் மெக்லாரன்.
பொது மக்களுடைய ஆர்வம் எப்போதும் மிகவும் உயர்ந்த அளவிலேயே இருக்காது. அரச குடும்பத்தின் தலைவராக அவர் இளவரசர் ஹேரி, சஸ்ஸெக்ஸ் சீமாட்டி மேகன் மற்றும் அரச குடும்பத்துடனான அவர்களின் உறவு பற்றிய கதைகளுக்கான தீவிர உலகளாவிய ஆர்வத்தோடு போராட வேண்டும்.


பட மூலாதாரம், PA Media

பிரபல வாழ்க்கையின் சோப் ஓபராவுடன் அரச குடும்ப கதைகள் ஒன்று சேரத் தொடங்கும் இடம், அவரது இயற்கையான பிரதேசமல்ல.
விர்ஜீனியா கியுஃப்ரேவின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் தீர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, இளவரசர் ஆண்ட்ரூவின் எதிர்கால பாத்திரம் போன்ற பிற கடினமான குடும்ப முடிவுகளையும் அரசர் சார்ல்ஸ் எதிர்கொள்கிறார்.
பிரிட்டனுக்கு வெளியே, காமன்வெல்த் உடனான நவீன உறவை மறுவரையறை செய்வது ஒரு பெரிய சவாலாக இருக்கும். அதன் புதிய தலைவராக, அடிமைத்தனம் போன்ற பிரச்னைகள், காலனித்துவத்தின் கடினமான மரபுகள் போன்றவை, காமன்வெல்த் நாடுகளுக்கான அவரது வருகைகள் எந்தத் திசையில் கொண்டு செல்லும்?
அரசர் சார்ல்ஸ் பிரிட்டன் மற்றும் 14 நாடுகளின் தலைவரானார். இவற்றில் சில, காமன்வெல்த் உறுப்பினர்களாக இருக்கும்போது, குடியரசுகளாக மாற விரும்பலாம். அதோடு மாற்றம் குறித்த உரையாடல்களுக்குத் தான் தயாராக இருப்பதாக அரசர் சார்ல்ஸ் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார்.
அவரது புதிய ஆட்சியின் பாதையைச் சீரமைக்கும் வகையில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகள் உள்ளன. இளவரசி என்பதைவிட கமில்லா ராணி என்ற பட்டத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று அவரது தாயார் தலையிட்டு முடிவெடுத்தபோது அவர் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும்.
கமில்லா ஒரு முக்கியமான ஆதரவாக இருப்பார். ஏனெனில், அவர் பெரும்பாலான மக்கள் ஓய்வு பெறும் வயதில் உலகின் மிக உயர்ந்த பதவியில் ஒன்றைத் தொடங்குகிறார்.
அனைத்து அச்சுறுத்தும் தன்மையோடும் இந்தத் தருணம், அவருடைய வாழ்நாளின் முன்பாகக் காத்திருந்தது.
இது அரசர் சார்ல்ஸின் நேரம்.
Source: BBC.com