Press "Enter" to skip to content

திருடுபோன ரூ.8 கோடி மதிப்பிலான நாணயத்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரேல் மீட்டது எப்படி?

  • ரஃபி பெர்க்
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், MIRI BAR, ISRAEL ANTIQUITIES AUTHORITY

தொலைந்து போன 10 லட்சம் டாலர் மதிப்புள்ள பண்டைய கால நாணயத்தை கண்டுபிடிப்பதற்கான பணி பல நாடுகளைக் கடந்து இறுதி கட்டத்தை அடைய 20 ஆண்டுகள் பிடித்திருக்கிறது.

“வரலாற்றின் அரிய வகைப் பொருள் கடைசியாக அதன் தாய்நாட்டுக்குச் செல்கிறது,” என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் இதற்கான விழாவில் முத்தாய்ப்பாக தெரிவித்துள்ளார்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு யூத கிளர்ச்சியின்போது தயாரிக்கப்பட்ட உயர்ந்த அடையாளமாக கருதப்படும் வெள்ளி நாணயம் வரலாற்றின் சிறு துண்டுதான்.

இது கடந்த 2002ஆம் ஆண்டு இஸ்ரேலில் இருந்து கொள்ளைடிக்கப்பட்டது. எனினும் கூட அது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செயப்பட்டு எங்கிருந்து வந்ததோ அங்கு திருப்பி அனுப்பப்படுகிறது.

ஜெருசேலத்தின் தெற்கு பகுதியான எலா பள்ளத்தாக்கில் இருந்து கண்டெடுக்கப்பட்டு, வைக்கப்பட்டிருந்த நாணயத்தை பாலஸ்தீனியர்கள் எடுத்துச் சென்றிருக்கலாம் என்று இஸ்ரேலின் பழங்கால பொருட்களுக்கான அமைப்புக்கு தகவல் கிடைத்தது. அப்போது முதல் இது தேடப்பட்டு வருகிறது.

அந்த நாணயம் எங்கிருக்கிறது என்பதை கண்டறியவே 15 ஆண்டுகள் ஆகிவிட்டதாக இஸ்ரேலிய பழங்கால பொருள்களுக்கான அமைப்பான ஐஏஏ கூறுகிறது. இஸ்ரேலில் உள்ள சட்டவிரோத பழங்கால பொருட்கள் சந்தைகளில் இருந்து, ஜோர்டான் மற்றும் இங்கிலாந்து வழியே கடத்தப்பட்டிருக்கிறது. 2017ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகி, கொலராடோ மாநிலத்தின் டென்வர் நகர ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

அப்போது ஐஏஏவை அமெரிக்காவின் ஹோம்லேண்ட் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பானது தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் கொடுத்தது. அப்போது அந்த அமைப்பு இந்த நாணயத்தை நிர்வாக ரீதியாக தன் வசம் வைத்திருந்தது. மாண்ஹாட்டன் மாவட்ட அட்டார்னியின் பழம் பொருட்கள் கடத்தல் பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் உதவியுடன் ஐந்து நாடுகளில் இருந்து கிடைத்த தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நாணயத்தை திரும்பப் பெற நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பட்டது.

இந்த நாணயம் கடந்த திங்களன்று மான்ஹாட்டன் மாவட்ட அட்டர்னி அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்ற ஐநா சபைக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டான் உள்ளிட்ட, இஸ்ரேல் அதிகாரிகளிடம் அமெரிக்க அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டது.

இஸ்ரேல்

பட மூலாதாரம், GIL COHEN-MAGEN

“இஸ்ரேல் வரலாற்றில் மிகவும் அரிய வகை பொருளான பழமை வாய்ந்த நாணயத்தை, ரோமானியர்களின் காலகட்டத்தில் இருந்து விடுதலைக்கான அடையாளமான நாணயத்தை, இப்போதைய நவீன இஸ்ரேலிடம் திரும்ப ஒப்படைக்கும் நிகழ்வில் இன்றைக்கு நாங்கள் எங்களின் பங்கெடுப்பாளர்களுடன் சேர்ந்திருக்கின்றோம்,” என ஹெச்எஸ்ஐ முகவர் ரிக்கி ஜே பட்டேல் கூறினார்.

இந்த வெள்ளி நாணயத்தில் யூத வடிவமைப்பு பதிக்கப்பட்டிருக்கிறது இது போன்று நான்கு நாணயங்கள் மட்டுமே இன்றைக்கு இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்றாகும். ஐஏஏ இதனை பெரும் கிளர்ச்சியின் நான்காவது ஆண்டான கிபி 69 காலத்தையது என்று குறிப்பிடுகிறது.

“யூதர்கள் காலத்துக்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசாட்சியிடம் இருந்து யூதர்கள் விடுதலையை அறிவிக்கும் விதமாக இந்த நாணயம் அச்சிடப்பட்டிருக்கலாம்” என ஐஏஏவின் இலான் ஹாடாட் கூறினார் .

ரோமானியர்களின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக, யூதேயாவில் யூதர்களின் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ரோமானியர்கள் அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் யூத சுதந்திரத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருந்தனர்.

கி.பி 70 இல் ரோமானியர்கள் ஜெருசலேம் மற்றும் இரண்டாவது யூத கோவிலை அழித்ததன் மூலம் எழுச்சி உச்சக்கட்டத்தை அடைந்தது.

பல்லாயிரக் கணக்கானோர் முதல் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர் என்று மதிப்பிடப்படுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »