Press "Enter" to skip to content

பெரியார் பிறந்தநாள்: ஈ.வெ.ராவின் தாக்கம் மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களிடம் இருக்கிறதா? ஓர் அலசல்

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக

கிட்டத்தட்ட 92 ஆண்டுகளுக்கு முன்னால் இன்று மலேசியா என்று அழைக்கப்படும் ‘மலாயா’ நாட்டிற்கு கப்பலில் வந்திறங்கினார் தந்தை பெரியார்.

அந்தப் பயணம் குறித்தும், பெரியார் பற்றியும் இன்றளவும் அந்த மலைநாட்டுத் தமிழ்ச் சமூகம் பேசிக் கொண்டிருக்கிறது. மலேசியாவில் இருந்து பிரிந்து சென்று இன்று வளமாக வளர்ந்து நிற்கும் சிங்கப்பூரிலும் அவரைப் பற்றி பேசுகிறார்கள்.

பெரியாரைப் பற்றி பேசுவதற்கும், அவரைப் பற்றி எழுதப்பட்டவற்றைப் படிக்கவும், அவரது சீர்திருத்த கருத்துகளைக் கேட்பதற்கும் தமிழகத்தில் எல்லையற்ற வாய்ப்புகள் உள்ளன.

கடல் கடந்து சென்று, தாம் எதிர்கொண்ட அனைத்து நாடுகளிலும் தனது கருத்துகளை விதைத்து வந்துள்ளார் பெரியார். அவற்றின் தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது என்கிறார்கள் கடவுள் மறுப்புக் கொள்கையை வலியுறுத்திய பெரியாரியத்தை ‘பின்தொடருபவர்கள்’.

“பெரியார் முன்வைத்த கருத்துகள், அவற்றை எதிர்ப்பவர்கள் என்று குறுகிய கண்ணோட்டத்துடன் நாம் அவரைப் பற்றி நாம் விவாதித்து விட முடியாது. அவரது பரந்துபட்ட சிந்தனைகள், கடல் கடந்து வாழ்ந்த தமிழர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது,” என்கிறார்கள் பெரியார் அபிமானிகள்.

1929ஆம் ஆண்டு முதன் முறையாக மலாயாவுக்குப் (மலேசியா) பயணம் மேற்கொண்டார் பெரியார். அச்சமயம் மலாயா சுதந்திரம் பெறவில்லை. மேலும், சிங்கப்பூரும் அதன் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்தது.

பெரியாரின் வருகை மலாயா தமிழர்கள் மத்தியில் எந்த அளவுக்குப் பரவசத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியதோ, அதே அளவுக்கு அந்தப் பெரியவர் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டார்.

தமது பயணத்தின் மூலம் மலேசியா, சிங்கப்பூரில் பெரியார் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தினார்? அந்தத் தாக்கம் இன்றளவும் நீடிக்கிறதா?

உலகமயமாக்கல், 5ஜி தொழில்நுட்பம், கார்ப்பரேட் ஆதிக்கம் என்று உலகம் மாறிவிட்ட நிலையில், ‘பெரியாரிசம்’ என்பது தேவைதானா? நவீன அவசர உலகில் அவரது போதனைகள் செவிமடுக்கப்படுமா? எனும் கேள்விகள் எழுகின்றன.

கள நிலவரத்தை அறிந்து கொள்ள பிபிசி தமிழ் முற்பட்டபோது கிடைத்த தகவல்களையும் கருத்துகளையும் இங்கே பகிர்ந்துள்ளோம்.

மலேசியாவில் கால்பதிக்கும் முன்பே கிளம்பிய எதிர்ப்பு

“மலாயா நாட்டில் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுகொண்ட ஆர்வலர்கள் தந்தை பெரியாரை 1929ஆம் ஆண்டு மலாயாவுக்குப் பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற தமிழர் சீர்திருத்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

“இது தொடர்பாக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அவருக்கு கடிதம் வழி தகவல் தெரிவிக்க, பெரியாரும் மாநாட்டில் பங்கேற்க ஒப்புக்கொண்டார்.

“அதன்படி தமது மனைவி நாகம்மையார், தொண்டர்களுடன் மலாயாவுக்குப் பயணம் மேற்கொண்ட அவருக்கு பினாங்கு துறைமுகத்தில் கால்பதிக்கும் முன்பே எதிர்ப்பு கிளம்பியது. பெரியாரின் வருகை குறித்து உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதே வேளையில் ஒரு முன்னணி நாளேடு பெரியார் மலாயா மண்ணில் கால் பதிக்கக்கூடாது என்றும், அவர் கப்பலை விட்டு இறங்கும் முன்பே, திரும்பிச் செல்லும் வகையில் எதிர்ப்புச் செய்திகளை வெளியிட்டதாகச் சொல்கிறார் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் உறுப்பினரான பூபாலன்.

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் உறுப்பினர் பூபாலன்

பட மூலாதாரம், BOOPALAN

எனினும் தந்தை பெரியாரின் மீது மிகுந்த அபிமானம் கொண்ட மலாயா தமிழ்ச் சமூகத்தின் முக்கியப் பிரமுகர்களான அ.சி.சுப்பையா, தமிழவேள் கோ.சாரங்கபாணி, தாமோதரனார், கோ.ராமலிங்கம் உள்ளிட்டோர் எதிர்ப்புகளையும் மீறி பெரியாருக்கு சிறப்பான வரவேற்பை நல்கினர்.

பினாங்கில் சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் அவரை ஆரவாரமாக வரவேற்றனர். இதேபோல் சிங்கப்பூரிலும் அவர் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதாக பூபாலன் சொல்கிறார்.

“மலாயா நாட்டுக் குடிமகனாகி அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும்”

“ARRIVAL IN SINGAPORE OF AN INDIAN SOCIAL REFORMER என்று தலைப்பிட்டு, பெரியாரின் சிங்கப்பூர் வருகையைக் குறிப்பிட்டு, The Malayan Saturday Post 28-12-1929 செய்தி வெளியிட்டது. மலேசியாவில் பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பங்கேற்ற பெரியார், அங்கிருந்த இந்தியா வம்சாவளியினருக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு வழங்கிய அறிவுரைகளில் முக்கியமானது, ‘மீண்டும் தமிழகத்துக்கு திரும்பாதீர்கள்’ என்பதுதான்.

“மலாயா நாட்டுக்கு வந்து, கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே இங்கேயே குடியுரிமை பெற்று, இந்நாட்டின் குடிமகனாக அனைத்து உரிமைகளையும் பெற்றவர்களாக மாற வேண்டும். இதை நோக்கியே உங்களுடைய பயணம் இருக்க வேண்டும்.

“நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சரியாகப் பயன்படுத்துங்கள். எக்காரணத்தை முன்னிட்டும்ம இந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டாம். பழமைவாதத்துக்கு முடிவு கட்டிவிட்டு புது வாழ்க்கையைத் தொடங்குங்கள் என்றார். அவர் அன்று சொன்னதன் முக்கியத்துவத்தை மலேசிய, சிங்கப்பூர் தமிழர்கள் உணர்ந்துள்ளனர்,” என்கிறார் பூபாலன்.

மலாயா பயணத்தின்போது, சிங்கப்பூர் வந்தடைந்த பெரியாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிங்கப்பூரின் முக்கிய பிரமுகர்களான அ.சி.சுப்பையா, தமிழவேள் கோ.சாரங்கபாணி போன்றோர் வரவேற்பு நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினர்.

சிங்கப்பூர் செல்வந்தர் உ.ராமசாமி நாடார், தந்தை பெரியாருக்காக புதுக்கார் ஒன்றை வாங்கி, அதில் அவரை ஏற்றி சிங்கப்பூரை வலம்வரச் செய்தார். இந்தச் செய்தி உள்நாட்டு ஊடகங்களில் புகைப்படத்துடன் வெளியானது.

“அதன் பின்னர் தாம் பங்கேற்ற ஒவ்வொரு கூட்டத்திலும் தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு, பெண் கல்வி, சுயமரியாதை, சமதர்மம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தினார் பெரியார்.

பெரியாரின் மலாயா வருகைக்கு முன்பே, தமிழகத்தில் அவரது கருத்துகளைத் தாங்கி வந்த குடி அரசு இதழ் மலாயா நாட்டில் அதிகமாகப் பரவி இருந்தது. சிங்கப்பூரில் தமிழ் வளர்த்த கோ.சாரங்கபாணி குடி அரசு இதழின் முகவராகச் செயல்பட்டு, அதன் பிரதிகளை மலாயா, சிங்கப்பூருக்கு வரவழைத்தார்.

“குடி அரசு இதழ் மலேசியத் தமிழர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. எந்தவொரு தலைவராக இருந்தாலும் அவர் நமக்காகப் போராடுவார், குரல் கொடுப்பார் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட வேண்டும். அப்போதுதான் தலைவரின் வழியில் நடைபோட விரும்புவர். அந்த காலகட்டத்தில் மலேசியத் தமிழர்கள் மத்தியில் பெரியாரின் சுயமரியாதை கருத்துகள், சிந்தனைகள் குடி அரசு இதழின் வழியாக நல்ல வரவேற்பைப் பெற்று அவரை தலைவராக ஏற்றுக்கொள்ள வைத்தது,” என்கிறார் பூபாலன்.

சிங்கப்பூர் என்ற சிறிய நாட்டில் பல்லின மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் அனைவருக்குமே அனைத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இன்றி சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. சிங்கப்பூரின் அடிப்படை தாரக மந்திரமே சமதர்மம், பாகுபாடற்ற சமூகம் என்பதுதான். இங்குள்ள சீனர்கள், தமிழர்கள், மலாய்க்காரர்கள் என அனைவருக்குமே உரிய வாய்ப்புகள் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்கிறது.

“எனவே, பெரியாரின் சிந்தனைகளை பின்பற்றி சிங்கப்பூர் செயல்படுவதாகச் சொல்லவில்லை. ஆனால் சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் பெரியார் தெரிவித்த கருத்துக்கள் இன்றைக்கும் எடுபடுகிறது என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டு.

1929-ல் பெரியாரின் மலாயா. சிங்கப்பூர் பயணத்திற்கு பிறகு சிங்கப்பூரில் 1930-ல் அ.சி.சுப்பையா, தமிழவேள் கோ.சாரங்கபாணி இன்னும் பல தமிழர்களின் முயற்சியால் தமிழர் சீர்த்திருத்த சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அந்த சங்கத்தின் மூலமாக சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் அந்நாட்டுக் குடியுரிமையைப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

பெரியாரின் அறிவுரையை கேட்ட தமிழர்கள் மலாயா குடியுரிமை பெற்றார்கள். அவர்கள் பின்னாளில் சிங்கப்பூரின் தேசத்தந்தையான லீ குவான் யூவுடன் இணைந்து செயல்பட்டார்கள். சிங்கப்பூரின் சுதந்திரித்திற்காக, தமிழர்கள் லீ குவான் யூவுடன் இணைந்து நாட்டுக்காக போராடினர்கள். அதுவே சிங்கப்பூரில் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் உரிய அங்கீகாரம் பெற காரணமாக அமைந்தது . சிங்கப்பூரின் தேசத்தந்தையான லீ குவான் யூ அவர்கள் கூறியுள்ளார்.

தமிழுக்கும் தமிழர்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் சிங்கப்பூர்

இன்றைய சூழலுக்கு பெரியாரிசம் தேவையா என்றும் பெரியாரின் தாக்கம் இன்னும் உள்ளதா? என்றும் கேட்கப்படுகிறது.

மனிதனை முதலில் மனிதனாக மதிக்க வேண்டும், சாதி பாகுபாடு கூடாது, பெண் கல்வி என்று என்னென்ன நல்ல கருத்துகளை முன்வைத்தாரோ, அவற்றில் பல சிங்கப்பூரில் நடைமுறையி்ல் உள்ளன. சுமார் 92 ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் விதைத்த விதையின் பலன்களை சிங்கப்பூர் தமிழ்ச் சமூகம் அறுவடை செய்து வருகிறது.

முந்தைய தலைமுறையினர் பெரியாரையும் அவரது போதனைகளையும் நன்கு அறிந்து வைத்திருந்தனர். அவற்றை அடுத்த தலைமுறையினருக்கு கடத்தும் கடமையை சரிவர செய்தனர். இன்றுள்ள இளம் தலைமுறைக்குப் பெரியார் பற்றி அதிகம் தெரியாமல் இருக்கலாம். ஆனால் சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் இன்று சாதி பாகுபாடுகள் ஏதும் இல்லை. இங்கு சாதி சங்கங்களை பதிவு செய்ய இயலாது.

1990கள் வரை சிங்கப்பூர் திராவிடர் கழகம் செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் வெளிநாட்டு அமைப்புகளுக்கு சிங்கப்பூரில் கிளை நிறுவுவது தடைசெய்யப்பட்டதால் அந்தக் கழகம் தொடர்ந்து செயல்பட முடியாமல் போனது.

எனினும் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் என்ற பெயரில் சிங்கப்பூரில் உள்ள தமிழர்களால் தொடங்கி இயங்கி வருகிறது. இன்றளவும் பெரியாரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்கிறார் பூபாலன்.

1943ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தமிழ் பாட சாலைகள் தொடங்கப்பட்டன.

சிங்கப்பூரில் தமிழர்கள் நல்ல கல்வியறிவுடன் தமிழ் மொழியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று பெரியார் தொண்டர்களும், தமிழ் ஆர்வலர்களும் 1940-50களில் சுமார் 40க்கும் மேற்பட்ட தமிழ் பாடசாலைகளை நிறுவி நடத்தியுள்ளார்கள்.

அந்த பள்ளிகளுக்கு வள்ளுவர், பெரியார் ஈ.வே.ரா.நாகம்மையார், பாரதிதாசன் போன்றவர்களின் பெயர்களை சூட்டினர்.

அப்போது நிறுவப்பட்ட பாடசாலைகளில் சில:

1. பெரியார் ஈ.வெ.ரா.சமதர்ம தமிழ் பாடசாலை

2. வள்ளுவம் தமிழ் பாடசாலை

3. வாசுகி தமிழ் பாடசாலை

4. ஈ.வெ.ரா. தமிழ் பாடசாலை (அ) ஏர்போஸ்

5. ஈ.வெ.ரா. தமிழ் பாடசாலை (ஆ)

6. நாகம்மையார் தமிழ் பாடசாலை

7. பாரதிதாசன் தமிழ் பாடசாலை

பொதுப் பணித்துறை, மாநகர மன்றம் போன்ற அரசாங்கத் துறைகளில் வேலை செய்தவர்கள்தான் தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கியவர்கள். அவர்களின் பிள்ளைகள்தான் அப்பள்ளிகளில் படித்தார்கள்.

ஒரு காலக்கட்டத்தில் சிங்கப்பூரில் இந்தி எதிர்ப்புப் போராட்டமும் நடைபெற்றது. பிறிதொரு சமயத்தில் இந்தி, சமசுகிருதத்தை முன்னிறுத்தும் முயற்சியும் முறியடிக்கப்பட்டது.

ஆனால் சிங்கப்பூர் அரசாங்கம் இன்றளவும் தமிழுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கிறது எனில், அதற்கு பெரியார் போட்ட விதையும், தமிழவேள் கோ.சாரங்கபாணி உள்ளிட்டோர் மேற்கொண்ட அயராத பணிகளும் மொழிச்சேவையும் முக்கிய காரணிகளாக அமைந்தன எனலாம்.

சிங்கப்பூரின் இன்றைய வளர்ச்சியான நிலையைப் பார்க்கும்போது நம் அனைவருக்கும் பெரிதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் பிள்ளைகள், பெற்றோர்கள், பெண்கள் என சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் நல்ல கல்வி, வேலை, தொழில் என அனைத்து துறைகளிலும் ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் நன்றாக உழைத்து நாமும் நம் சமுதாயமும் முன்னேறி, இன்று உலகம் போற்றும் வளர்ச்சி அடைந்த சிங்கப்பூர் குடியரசில் வாழ்கிறோம் என்பது நமக்கு பெருமைக்குரிய நிலையாகும்.

இன்றைய இந்த வளர்ச்சியடைந்த நிலையிலிருந்து சற்று பின்னோக்கி ஆரம்பக்கால சிங்கப்பூரைப் பார்த்தால் நம் சமூகம் எவ்வளவு பின்னடைவில் இருந்துள்ளது. அதனை மாற்றி நல்லதொரு சமுதாயமாக்கி நம்மையும் நம் நாட்டையும் முன்னேற்றமடைய எவ்வளவு கடுமையாக உழைத்துள்ளார்கள் என்பது நமக்கு புலப்படும். அப்படி உழைத்து அரும்பாடுபட்டவர்களில் பெரியார் தொண்டர்கள்.

சீர்திருத்த சிந்தனையாளர்கள், பெரியார் பற்றாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்பும், தொண்டும் போற்றத்தக்கது. குறிப்பாக, 1920களில் உ.இராமசாமி (நாடார்) ஜெ.பி. (சி.பா.ஆதித்தனார் மாமனார்), அ.சி.சுப்பையா, க.ரெ.தங்கவேல், இளைஞராக இருந்த தமிழவேள் கோ.சாரங்கபாணி, அ.அதிசயம் அவர்களுடன் இணைந்து 1940களில் செ.நடராசன், மா.ஜகதீசன் து.லெட்சுமணன், 1950, 60, 70களில், மீ.முருகு, சீனிவாசன், வை.திருநாவுக்கரசு, சே.நடேசன், சு.தெ.மூர்த்தி, மயிலாடுதுறை நாகரெத்தினம் போன்ற பல தொண்டுள்ளம் படைத்தவர்கள் பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்கள் மூலமாகவும், பல செய்தித்தாள்கள் மூலமாகவும் சீர்திருத்த சிந்தனைகளை மக்கள் மத்தியில் பரப்பினர்.

“மலேசிய திராவிடர் கழகம் தன் பணியை சரிவர செய்யவில்லை”

தந்தை பெரியாரின் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய மலேசிய திராவிடர் கழகம் அந்தப் பணியை சரிவர செய்யவில்லை,” என்கிறார் மூத்த செய்தியாளரும், மலேசிய தமிழர் தன்மான இயக்கத்தின் தலைவருமான தமிழ்மணி.

“தமிழர்கள் மத்தியில் மதம், சம்பிரதாயங்கள் அடிப்படையில் பிற்போக்குத்தனம் நிலவியது. தமிழகம் மட்டுமல்லாமல், மலேசியத் தமிழர்களிடமும் இந்தப் பிரச்சினை இருந்தது. எனவே, பெரியாரின் முற்போக்குச் சிந்தனைகளும் அவரது கருத்தியலும் இங்கு அவசியமானதாக இருந்தன,” என்கிறார் அவர்.

பெரியார் மலேசியாவுக்கு வந்து சென்ற பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் கவனிக்கத்தக்கவை என்று குறிப்பிடுபவர், அவற்றைப் பட்டியலிடுகிறார்.

“1931ஆம் ஆண்டு கோலாலம்பூரில் உள்ள செந்தூல் பகுதியில் குடியரசு வாசகர் சாலை தொடங்கப்பட்டது. அடுத்தகட்டமாக சுயமரியாதைச் சங்கம் தொடங்கப்பட்டது.

மூத்த செய்தியாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தலைவருமான தமிழ்மணி

பட மூலாதாரம், TAMILMANI

கடந்த 1946ஆம் ஆண்டு பெரியார் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி ஒரு மாநாட்டை நடத்தினர். அகில மலாயா திராவிடர் கழகம் உருவாகிறது. பள்ளிகொண்டான் என்பவர் முதல் தலைவராகப் பொறுப்பேற்கிறார். 1963இல் மலாயா சுதந்திரம் பெற்ற பின்னர், இந்த அமைப்பு மலேசிய திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் கண்டது.

இதே போல் சிங்கப்பூரிலும் 1934ஆம் ஆண்டு தமிழர் சீர்திருத்தச் சங்கம் அமைக்கப்படுகிறது. இவையெல்லாம் பெரியாரின் முதல் வருகைக்குப் பிறகான மாற்றங்கள்.

இதன் பின்னர் 1955ஆம் ஆண்டு அவர் மீண்டும் மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். இடைப்பட்ட காலத்தில், மலேசியத் தமிழர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டது.

“மலேசிய திராவிடர் கழகத்தில் உள்ளவர்கள் கடந்த 60 ஆண்டுகளில் கழகத்தில் உள்ள பதவிகளைப் பிடிப்பதில்தான் கவனம் செலுத்தி வந்தனர். இதனால் ஏற்பட்ட போட்டி, மோதல்களுக்கு மத்தியில் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய பணி பாதிக்கப்பட்டது. தொடக்க காலத்தில், கழகத்தின் பணி கொள்கை சார்ந்திருந்தது. அதன் பின்னர், கொள்கைகளைக் கொண்டு சேர்ப்பதில் தோல்வி ஏற்பட்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

“அதே சமயம், பெரியார் சிந்தனைகள் தனி மனித அளவில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் வழி அந்த தனி நபர்களின் குடும்பத்தார் மத்தியிலும் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன.குறிப்பாக, எனது குடும்பம் முற்றிலும் நாத்திக குடும்பமாக மாறி உள்ளது. எனது நான்கு பிள்ளைகளும் நாத்திகவாதிகளாக மாறிவிட்டனர். எங்களுக்கு கடவுள் இல்லை, எந்த மதமும் இல்லை, சாதியும் இல்லை. ஒரு தனி மனிதனால் ஒரு குடும்பம் மாறுகிறது எனில், ஓர் இயக்கம் சரியாகச் செயல்பட்டிருந்தால், நல்ல தாக்கம் ஏற்பட்டிருந்திருக்கும்.

“தமிழகத்து குப்பைகள் மலேசியாவுக்குள் வந்துவிட்டன

“1876இல் தமிழகத்தில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற அடிப்படையில், தமிழர்கள் அழைத்து வரப்பட்ட போதே, சாதிகளும் மலேசியாவுக்குள் கால்பதித்துவிட்டன.

தமிழகத்தில் இருந்து மலேசியா வருவதற்காக, கப்பலில் ஏற்றப்பட்ட போதே, இரு வெவ்வேறு சாதியினர் ஒன்றாக அமர மறுத்துவிட்டனர். எனவே, ஒவ்வொரு சாதியினருக்கும் கப்பலில் ஒரு பகுதி ஒதுக்க வேண்டியிருந்தது. அந்த அடக்குமுறை காலத்திலேயே இதுதான் நிலைமை.

தாய் தமிழகத்தில் சாதிய கோட்பாடுகளின் கீழ் வாழ்ந்து பழகிய நம் மக்களால் சாதியைக் கைவிட முடியவில்லை. மலேசியா வந்தடைந்த பிறகு ஏராளமான தோட்டப்புறங்களுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தோட்டங்களில் வெவ்வேறு சாதியினர் ஒன்றாக இருப்பதை விரும்பவில்லை. தேவர், கவுண்டர், கள்ளர், பறையர் என்று ஒரே தோட்டத்தில் ஒவ்வொரு பகுதியாக பிரித்துக்கொண்டு வாழத் தொடங்கினர். தமிழகத்தில் பின்பற்றிய சாதிய நடைமுறைகளை மலேசியாவிலும் கடைப்பிடிக்க தமிழர்கள் மத்தியில் பெரியாரின் வருகைக்குப் பிறகே, சிறிய அளவில் அசைவு ஏற்படத் தொடங்கியது.

1940களிலேயே மலாயாவில் சாதி சங்கங்கள் உருவாகிவிட்டன. தமிழகத்தில் இருந்த குப்பைகள் மலேசியாவுக்கும் வந்துவிட்டன. பினாங்கு மாநிலத்தில் முக்குலத்தோர் சங்கம் அமைக்கப்பட்டது. பிறகு சிலாங்கூரில் வேளாளர் சங்கம் உருவானது. கிள்ளான் பகுதியில் பறையர்கள் சங்கம் தொடங்கினர். பின்னர் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டது.

தோட்டப்புறத்தில் இருந்து நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்ந்த பிறகும், சாதிய நடைமுறைகளைக் கைவிட தமிழர்கள் தயாராக இல்லை. இவ்வாறு ஆழமாக வேரூன்றிவிட்ட சாதிகளின் பிடியில் இருந்து மலேசியத் தமிழர்களை விடுவிக்க பெரியாரின் வருகை கைகொடுத்தது.

ஆனால், அவர் விட்டுச்சென்ற பணியை இங்குள்ளவர்கள் முறையாகச் செய்யவில்லை. அதனால் இன்றளவும் மலேசியாவில் சாதிச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மலேசியத் தமிழர் தன்மான இயக்கம் என்ற அமைப்பை 2015ஆம் ஆண்டு நான் அமைக்க நேரிட்டது. அந்த இயக்கத்தின் மூலம் அனைத்துலக் பகுத்தறிவு மாநாட்டை நடத்தினேன்.

எங்கெல்லாம் சாதி உள்ளதோ, அங்கெல்லாம் பெரியாரின் கொள்கைகள் இருக்க வேண்டியது அவசியம். மலேசியாவில் இன்றும் சாதிச் சங்கங்கள் உள்ளன. சிலர் மறைமுகமாகச் செயல்படுகிறார்கள் எனில், சிலர் வெளிப்படையாக சங்கங்களைப் பதிவு செய்து செயல்படுகிறார்கள்.

Presentational grey line
Presentational grey line

“மலேசியாவில் சாதி சங்கங்களை தடை செய்ய முடியவில்லை”

சாதி சங்கங்களை அனுமதிக்கக் கூடாது என்று மலேசிய உள்துறை அமைச்சிடம் மனு கொடுத்திருக்கிறோம். என் பங்குக்கு இரு முறை சாதி ஒழிப்பு மாநாட்டை நடத்தி உள்ளேன். இரண்டாவது மாநாடு 2014ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால், இந்நாட்டுச் சட்டப்படி, யார் வேண்டுமானாலும் சங்கம் தொடங்க முடியும். அதே சமயம் ஏற்றத்தாழ்வுகளை முன்வைத்து ஏதேனும் வன்முறை நிகழும் பட்சத்தில், அதை குற்றச்செயலாகப் பதிவு செய்ய முடியும் என உள்துறை அமைச்சு கூறிவிட்டது.

எனினும், காலத்தின் போக்கில் சாதிகளின் தாக்கம் குறைந்திருக்கிறது எனலாம். ஒவ்வொரு தனி மனிதனும், ‘இவ்வாறு நடந்துகொள்வது நாகரிகம் அல்ல’ என்று கருதுவதன் மூலம் மாற்றம் நிகழ்கிறது. இதனால் மலேசியத் தமிழர்கள் மத்தியில் கலப்புத் திருமணங்கள் அதிகரித்தன.

கல்வி, பொருளாதாரம், பெண் சுதந்திரம் ஆகிய அம்சங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு குடும்பத்தில் மூன்று பெண்கள் இருந்தால், அதில் இருவராவது கலப்பு மணம் புரிகிறார்கள். முன்பு போல் இது தவறான செயலாகக் கருதப்படுவதில்லை. சில குடும்பங்களில் தொடக்கத்தில், ஒருவித எதிர்ப்பு இருக்கலாம். ஆனால், அது வன்மமாக மாறும் போக்கு இப்போது இல்லை.

அதே சமயம், வேறு சில காரணங்களால் சாதிச் சங்கங்களின் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன. உதாரணமாக, தமிழகத்தைச் சேர்ந்த பாமக நிறுவனர் ராமதாஸ், மலேசியாவுக்கு வந்து சென்ற பின்னர் வன்னியர் சங்கம் ஒன்று தொடங்கப்பட்டதாக நினைக்கிறேன். முறைப்படி பதிவு செய்து சங்கம் நடத்தினார்கள். ஆனால், உட்பூசல் காரணமாக அது இரண்டாக உடைந்துவிட்டது. எந்த சாதியின் சங்கமாக இருந்தாலும், பதவி என்று வரும்போது மோதல் ஏற்படுகிறது.

அண்மையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் மலேசியாவுக்கு வந்து சென்றார். இதுபோன்ற வருகைகளுக்கு சாதிச் சங்கங்கள் ஏற்பாடு செய்யாமல், வேறு சில பொதுவான அமைப்புகளின் பெயரில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ஆனால், இந்த நிகழ்ச்சிகளின் பின்னணியில் அந்தந்த வட்டாரங்களில் உள்ள சாதிப் பிரமுகர்கள்தான் இருப்பார்கள். எனவே, தமிழகத்தில் இருந்து வரக்கூடிய தலைவர்கள் இத்தகைய அழைப்புகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், எத்தகைய பின்னணியில், எத்தகைய நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்பது அந்த தலைவர்களுக்கு நன்கு தெரியும்.

தமிழகத்தில் உள்ள சூழ்நிலையை மலேசியாவுடன் ஒப்பிட இயலாது. இங்கு பல்லின மக்கள் வாழ்கின்றனர். ஒரு திருமணம் என்றாலோ, கோவில் திருவிழா என்றாலோ, எல்லோரும் ஒன்றுகூடி மகிழ்கிறோம்.

மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்பதுதான் பெரியாரின் முக்கிய அறிவுரை. இந்த நாட்டில் இரண்டு இனங்கள் முக்கியமானவை. மலாய்க்காரர்கள் இனம், மதத்தால் மாறுபட்டிருந்தாலும், ஒற்றுமையை முன்னிறுத்தி வாழக்கூடியவர்கள்.

அடுத்து, சீனர்கள். தங்களுடைய இனத்தை மிகக் கச்சிதமாக கட்டமைத்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய கோடீஸ்வரர்களாக இருந்தாலும், இந்த கட்டமைப்பை விட்டு சீனர்கள் விலகிச் செல்லமாட்டார்கள். இவ்விரு இனத்தவர்களும் தமிழர்களுக்கு நல்ல பாடமாக முன் நிற்கிறார்கள்.

மனிதனை மனிதனாக போற்றக்கூடிய பண்பு மலேசியாவில் பரவலாகக் காணப்படுகிறது. அதை கெடுக்கக்கூடிய எந்தவொரு செயல்பாட்டையும் மலேசியர்கள் வரவேற்க மாட்டார்கள். அன்றைய காலகட்டத்தில், தோட்டப்புற மக்கள் மத்தியில், பெரியார் போட்ட விதை, பின்னர் நகர்ப்புறங்களில் ஊடுருவி உள்ளது. அதன் பலனாக இளைஞர்கள் நல்ல புரிதலுடன் இருக்கிறார்கள்.

எனினும், இயக்க ரீதியில் பார்க்கும்போது, மலேசிய திராவிடர் இயக்கம் தன் பங்கை சரிவர ஆற்றவில்லை என்பதுதான் உண்மை. எனவே, பெரியாரின் சிந்தனைகள் இன்றைய காலகட்டத்துக்கும் அவசியமானவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.அந்த இயக்கம் சரியாகச் செயல்பட்டிருந்தால் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட்டிருக்கும்,” என்கிறார் மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தலைவர் தமிழ்மணி.

Presentational grey line
Presentational grey line

“பெரியாரின் தொடர்பு மலேசிய இலக்கிய, பண்பாடு, சிந்தனை வளர்ச்சிக்கு அடிப்படையானது”

மலாயா – சிங்கப்பூர்ச் சூழலில் திராவிட இயக்கம், இலக்கிய உருவாக்கத்தில் மிக ஆழமான பங்களிப்பை ஆற்றியிருக்கிறது என்றும் குறிப்பாக ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் தொடர்பு மலேசிய இலக்கிய, பண்பாடு, சிந்தனை வளர்ச்சிக்கு அடிப்படையானது என்றும் சொல்கிறார் எழுத்தாளர் ம.நவீன்.

“தமிழகத்தில் ஏற்கனவே நவீன இலக்கியமும் முற்போக்கு இலக்கியமும் உருவாகியிருந்த சூழலில் திராவிட இயக்கத்தின் இலக்கியப் பங்களிப்பு பெரியதல்ல. ஆனால் மலாயாவில் அது ஒரு தொடக்கமாக அமைந்தது.

ஈ.வெ.ராமசாமி பெரியாரின் மலேசிய வருகை (1929, 1954)

“ஈ.வெ.ராமசாமிப் பெரியார் பழைய மலாயா நாட்டுக்கு இருமுறை வருகை புரிந்துள்ளார். இந்த இரண்டு வருகையும் மலேசியத் தமிழர்களின் வாழ்வியலில் அரசியலில் சிந்தனையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின. முதல் வருகையிலும் இரண்டாம் வருகையிலும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்த அவர் பல இடங்களில் உரையாற்றினார். இந்த உரையில் அடிப்படையாக அவர் வலியுறுத்தியவை இரண்டு. முதலாவது தமிழர்கள் மலாயாவில் குடியுரிமை பெற வேண்டும். இரண்டாவது மலாயா தமிழர்கள் கல்வி கற்ற சமூகமாக மாற வேண்டும் என வலியுறுத்தினார்.

எழுத்தாளர் நவீன்

பட மூலாதாரம், NAVIN

“ஈ.வெ.ரா மலேசியாவுக்கு வர காரணியாக இருந்த கோ.சாரங்கபாணி அவர்களால் தமிழ் முரசு நாளிதழ் தொடங்கப்பட்டு அது தமிழர்களின் சிந்தனையை வடிவமைத்தது. மேலும் அவர் முன்னெடுத்த பல்வேறு திட்டங்கள் மூலம் மலாயாவில் தமிழ் மொழியும் தமிழர் பண்பாடும் செழித்தது. பெரியாரின் வழி வந்த முருகு சுப்பிரமணியம் போன்றவர்களால் நவீன இலக்கியத்தின் எழுச்சி மலாயாவில் துவக்கம் கண்டது என தாராளமாகக் கூறலாம்,” என்கிறார் நவீன்.

“கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்க இயலாது”

மலேசியத் தமிழர்கள் ஆன்மிகச் சிந்தனையைப் போற்றக்கூடியவர்கள் என்கிறார் மலேசியாவில் வெளியாகும் ‘தமிழ் மலர்’ நாளேட்டின் நிறுவனர் எஸ்.எம்.பெரியசாமி.

ஆனால், பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையை விதைக்க முற்பட்டவர் என்றும், அதை ஏற்க இயலாது என்றும் சொல்கிறார்.

“இன்று தமிழகத்தின் முதல்வராக இருக்கும். மு.க.ஸ்டாலினின் மனைவியும்கூட கோவிலுக்குச் சென்று வழிபடுகிறார். அதை யாரும் தடுக்கவில்லை. அதேபோல் மலாய் இனத்தைச் சேர்ந்த மலேசிய பிரதமர்கள் உலக பிரசித்தி பெற்ற பத்துமலை முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்கிறார்கள். தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதும் உண்டு.

“இந்த விஷயத்தில் பெரியாரின் கொள்கைகளை ஏற்க இயலாது. அதே சமயம் கல்வி, பெண்ணியச் சுதந்திரம் ஆகியவை குறித்து அவர் முன்வைத்த கருத்துகளை ஏற்கிறேன்,” என்கிறார் பெரியசாமி.

'தமிழ் மலர்' நாளேட்டின் நிறுவனர் எஸ்.எம்.பெரியசாமி

பட மூலாதாரம், PERIYASAMY

“மலேசியத் தமிழ் இளையர்கள் பெரியார் கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர்கின்றனர்”

மலேசிய இளைஞர்கள் மத்தியில் பெரியார் குறித்துப் புரிதல் இல்லை என்று கூறுவதை தம்மால் ஏற்க இயலாது என்கிறார் மலேசிய திராவிடர் கழகத்தின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் அன்பழகன்.

சமூக ஊடகங்களில் ஏராளமான மலேசியத் தமிழ் இளையர்கள் பெரியார் கருத்துகளைப் பகிர்ந்து வருவதாக அவர் கூறுகிறார்.

“பெரியார் தமது மலேசிய சுற்றுப்பயணத்தின்போது இரண்டு விஷயங்களை மையப்படுத்தி கூட்டங்களில் பேசினார்.

பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர் பொருள் சேர்க்க வேண்டும். மலேசியத் தமிழர்கள் தமிழகத்துக்கு திரும்பாமல், குடியுரிமை பெற்று இங்கேயே வாழ வேண்டும்.

இதுகுறித்து அவர் பேசிய அனைத்து கூட்டங்களிலும் அவர் வலியுறுத்தினார்.

மலேசிய திராவிடர் கழகத்தின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் அன்பழகன்.

பட மூலாதாரம், Anbalagan

மலேசியாவில் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அது நடைமுறையில் உள்ளது. மேலும், திராவிடர் கழக பொறுப்பாளர்கள், துணைப்பதிவாளராகச் செயல்பட்டு திருமணங்களை நடத்தி வைக்க இயலும். சீர்திருத்தத் திருமணங்களின் எண்ணிக்கை குறைந்து போனாலும், அறவே நடைபெறவில்லை என்று கூற முடியாது. பெரியார் கொண்டுவந்த எழுத்து சீர்திருத்தத்தை மலேசியத் தமிழர்களும் ஏற்றுக்கொண்டனர். மலேசிய திராவிடர் கழகம் பெரியார் கொள்கைகளைப் பரப்புவதில் சரிவரச் செயல்படுவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.

மிக அதிக எண்ணிக்கை இல்லை என்றாலும், இன்றளவும் இளைஞர்கள் பலர் என்னைத் தொடர்புகொண்டு பேசி, கழக நடவடிக்கைகள் குறித்து கேட்டறிகிறார்கள். இயக்கத்தில் உறுப்பினராக இருந்தால்தான் பெரியார் பாதையில் நடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வெளியே இருந்தபடியும் செயல்படலாம்.

முன்பு தோட்டப்புறங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசித்தபோது, பகுத்தறிவுக்கான பிரசாரக் களங்களாக அவை விளங்கின. ஆனால் தோட்டத் துண்டாடலுக்குப் பிறகு அனைவரும் சிதறிப்போயினர். நகர்ப்புறங்களில் குவிந்தவர்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

மலேசிய இளைஞர்கள் மத்தியில் பெரியார் குறித்துப் புரிதல் இல்லை என்று கூறுவதையும் ஏற்க மாட்டேன். சமூக ஊடகங்களில் ஏராளமான இளையர்கள் பெரியார் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். தமிழ் குடும்பங்களில் பெண்களுக்கு பன்மடங்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வீட்டில் முடங்கிக்கிடந்த பெண்கள் இன்று இருசக்கர வாகனங்கள், கார்களில் தனியே வெளியே சென்று திரும்புகிறார்கள்.

அனைவருக்கும் அடிப்படைக் கல்வி கிடைத்துள்ளது. மேற்படிப்புக்காக வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். பெரியாரின் பகுத்தறிவு பிரசாரமும் அவரது சிந்தனைகள் மலேசியத் தமிழர்கள் மத்தியில் பரவியதாலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இவை.

இன்றைய சூழலுக்கும் பெரியாரின் கருத்துகள் நிச்சயம் தேவை. நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் நல்லவிதமாக மாறிவிடவில்லை, எல்லாம் ஆக்கப்பூர்வமாக நடந்துவிடவில்லை. இதை உணர்ந்திருப்பவர்களுக்கு பெரியார் பாதை தேவை என்பது புரியும். இதற்கு மாறாகச் சிந்திப்பவர்களை காலம் மாற்றும் என நம்புகிறேன்,” என்கிறார் அன்பழகன்.

சாதிகள் இல்லை என்ற நிலை முழுமையாக உருவாக வேண்டும்”

நமது தமிழ்ச் சமுதாயத்தில் பரவிக்கிடந்த அநீதிகளை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் சமூக நிதிக்காகவே போராடியவர் தந்தை பெரியார். ஆகவே, அவரது பிறந்தநாளை சமூக நிதி நாளாகவே இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்கிறார் மலேசியாவில் பள்ளி ஆசிரியையாக உள்ள நீலமலர்.

“பெரியார், பெண் விடுதலை, சாதி ஒடுக்குமுறை, மூடநம்பிக்கையை எதிர்த்து என்று பல வகையிலும் தனது கருத்துக்களைப் பகிரங்கமாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.

இவை அனைத்துக்குமே மூல காரணம் என்ன என்று ஆராய்ந்தபோது, கடவுள் நம்பிக்கைதான் சிக்கலாக உள்ளது என்பதை உணர்ந்தார். அதன் பிறகே கடவுள் மறுப்பு என்ற சிந்தனை அவருக்கு ஏற்படுகிறது.

இந்த சிந்தனையை ஒழுங்குபடுத்தும்போது மக்கள் மத்தியில் வேறூன்றிக் கிடந்த மூட நம்பிக்கைகளை அகற்ற முடியும் என நம்பினார்.

நீலமலர், பள்ளி ஆசிரியை

பட மூலாதாரம், NEELAMALAR

பெண் விடுதலை குறித்த சிந்தனையை மேம்படுத்த முடியும், சாதிகளைப் புறந்தள்ள முடியும் என்றும் கணக்கிட்டு அவர் தனது நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டார்.

மலேசியத் தமிழர்கள் இடையே சாதிய சிந்தனை இருப்பதை மறுப்பதற்கில்லை. இன்றைய நவீன உலகில் யார் சாதி மதத்தை எல்லாம் பார்க்கிறார்கள் என்று சிலர் ஒப்புக்குச் சொல்லலாம். ஆனால், இன்றும்கூட ஏராளமானோர் சாதிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்பதே உண்மை.

இன்றைய விஞ்ஞான உலகத்திலும்கூட, சோதிடம் பார்ப்பது, விதியை நம்புவது, முற்பிறவி-மறுபிறவி-கர்மா என்பதை எல்லாம் நம்புவது, படையல் வைப்பது எனப் பல்வேறு மூட நம்பிக்கைகளை உள்ளன.

படித்தவர்கள் மத்தியிலும் இத்தகைய போக்கு காணப்படுகிறது. எனவே, இப்போதும் நமக்கு பெரியாரின் சிந்தனைகள் தேவை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ஒப்பீட்டு அளவில் மலேசியாவில் தமிழ்ப் பெண்கள் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், தமிழ்ச் சமூகத்தில் இன்னும் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

எனவே, இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்லாமல், எதிர்வரும் அடுத்த தலைமுறைக்கும் பெரியாரின் சிந்தனைகள் போதிக்கப்பட வேண்டும். சாதிகள் இல்லை என்ற நிலை முழுமையாக உருவாகும் வரை, பெரியாரைப் பற்றி நாம் பேச வேண்டும், அவரைப் பின்பற்றவும் வேண்டும்,” என்கிறார் ஆசிரியை நீலமலர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »