பட மூலாதாரம், Getty Images
ஐக்கிய ராஜ்ஜியத்தின் வரலாற்றில் நீண்ட காலம் அரியணையில் இருந்தவரான ராணி இரண்டாம் எலிசபெத் ‘வாழ்க்கையின்’ மீது பேரார்வம் கொண்டவர். நாட்டின் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான அவருக்கு வாரிசுரிமையாக அரண்மனைகள், மணி மகுடங்கள், நிலங்கள் ஆகியவை சொந்தமாயின. அவை தவிர, தனித்துவமான எதிர்பாராத பொருள்கள் சிலவும் அவருக்கு சொந்தமாக இருந்தன. அவை அனைத்தும் தற்போது புதிய அரசர் மூன்றாம் சார்ல்சுக்கு சொந்தமாகியுள்ளன.
ஆடைகள்
“ராணியும், ராணியின் தாயும் ஃபேஷனை உருவாக்குகிறவர்கள் அல்ல. அதை விட முக்கியத்துவம் குறைந்த வேலையை செய்கிறவர்களின் பணி அது,” என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு 1953ல் அளித்த பேட்டியில் குறிப்பிட்டார் அரச குடும்ப டிசைனர் சர் நார்மன் ஹார்ட்னெல்.

பட மூலாதாரம், Getty Images
அது ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூடிக்கொண்ட ஆண்டு. அதன் பிறகு, அவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் தனக்கென ஆடை பாணிகளை உருவாக்கிக்கொண்டார். இந்த ஆடை பாணிகள், மேற்கத்திய நாடுகளின் பெண் தலைவர்களுக்கான அளவுகோலாக மாறின.
அவர் ஐந்து சென்டிமீட்டர் ஹீல்ஸ் அணிந்தார். அத்துடன் முழங்காலுக்கு கீழே வரும் வகையிலும், அவற்றின் கீழ் விளிம்புகள் சற்று கனத்து இருக்கும்படியுமான ஸ்கர்ட்டுகளை அவர் அணிந்தார். மரியாதை குறைவான முறையில் ஆடைகள் விலகும் நிகழ்வுகளைத் தவிர்க்க இத்தகையை ஆடை வடிவமைப்பை அவர் தேர்ந்தெடுத்தார்.
விளிம்புகள் சிறியதாகவும், உயரமாகவும் இருக்கும் தொப்பிகளை அவர் அணிந்தார். தலை அணி இல்லாமல் ராணியை வெளியில் பார்ப்பது அரிது. எலுமிச்சை நிறம், பவழ நிறம் போன்ற எடுப்பான மென் நிறங்களிலேயே தலை அணிகள் இருந்தன. அவை அவருக்குப் பொருந்தின. பெண் ஆளுமையை எடுத்துக்காட்டும் ஆடை வகைகளுக்கான அடிப்படையை அவை உருவாக்கின.
நீலம் ராணிக்கு மிகவும் பிடித்தமான நிறம் என்று நம்பப்பட்டது. பயணங்களின்போதும், விளையாட்டு நிகழ்வுகளின்போதும் இந்த நிற ஆடைகளேயே அவர் பெரிதும் அணிந்தார்.
தற்போது ராணி இறந்த நிலையில், அவரது ஆடைகள் எங்கே வைக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. விக்டோரியா ராணி, இளவரசி டயானா போன்ற பிரபல அரச குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரின் உடைகள் பல அருங்காட்சியகங்களில் உள்ளன.
கைப்பைகள்
ராணியின் ஆடை அணிகலன்களில் மிகவும் பிரபலமானது அவருடைய கைப்பைகள்.

பட மூலாதாரம், Getty Images
தன்னுடைய ஆடைகளுக்கு அழகு சேர்க்கும் வகையில் அவர் வெளியில் செல்லும்போது எப்போதுமே ஒரு கைப்பை வைத்திருப்பார். அவரது கடைசியாக வெளியான அதிகாரபூர்வ புகைப்படத்திலும்கூட அவர் கையில் கைப்பை வைத்திருந்தார். Launer என்ற பிரிட்டிஷ் பிராண்ட் மூலமாக அவருடைய கைப்பைகள் செய்யப்படும். ராணியிடம் சுமார் 200 கைப்பைகள் இருந்திருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. மாட்டிக் கொண்டு கை குலுக்குவதற்கு ஏற்ற வகையில் அவை அனைத்திலும் வார்கள் நீளமாக இருக்கும்.
“ராணி மிகப்பெரிய ஈர்ப்புள்ள அற்புதமான சீமாட்டி” என்கிறார் Launer உரிமையாளர் ஜெரால்டு
“தன்னுடைய கைப்பை இல்லாவிட்டால், தன்னுடைய ஆடை முழுமை அடைந்ததாக தோன்றுவதில்லை என்று சந்தித்த பல சந்தர்ப்பங்களில் ராணி கூறியிருக்கிறார்” என ஜெரால்டு பிபிசியிடம் கூறினார்.
ராணியில் கைப்பையில் என்ன இருக்கிறது என்பது குறித்து நீண்ட காலமாக ஊகங்கள் உள்ளன. தேவாலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அளிப்பதற்காக மடித்துவைக்கப்பட்ட 5 பவுண்டு நோட்டு எப்போதும் அதில் இருக்கும் என்று சில விமர்சகர்கள் கருதினர். இது தவிர, லிப்ஸ்டிக், கண்ணாடி போன்றவை இருக்கலாம் என்றும் பேரப்பிள்ளைகளை அழைப்பதற்காக ஒரு கைபேசி இருக்கும் என்றும் வேறு சிலர் கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
தன்னுடைய ஊழியர்களுக்கு குறிப்பாக தகவல் கூற தனது கைப்பையை ராணி பயன்படுத்துகிறார் என்று 2018ல் வெளியான பிபிசி கல்ச்சர் செய்தி ஒன்று கூறியது. எடுத்துக்காட்டாக, ஒரு விருந்தில் தனது கைப்பையை ராணி மேசை மீது வைத்தால் நிகழ்ச்சி விரைவாக முடியவேண்டும் என்று அவர் விரும்புவதாகப் பொருள்.
அன்னங்களும் டால்பின்களும்
இங்கிலாந்திலும், வேல்சிலும் உரிமையாளர் அடையாளம் இல்லாமல் இருக்கும் அனைத்து வெள்ளை மியூட் அன்னங்களும் அரசிக்கு அல்லது அரசருக்கு சொந்தம் என்கிறது சட்டம்.

பட மூலாதாரம், Getty Images
ஒவ்வோர் ஆண்டும் லண்டன் தேம்ஸ் ஆற்றில் ‘ஸ்வான் அப்பிங்’ எனப்படும் அன்னம் பிடித்து எண்ணும் நிகழ்வு நடக்கும். 12ம் நூற்றாண்டில் இருந்து இந்த நிகழ்வு நடக்கிறது.
அப்போது, திறந்த வெளி நீர்நிலைகளில் உள்ள உரிமையாளர் குறியீடு இல்லாத எல்லா அன்னங்களும் அரியணைக்கு சொந்தமானது என்று அப்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விருந்துகளுக்கு தேவையான அன்னம் விநியோகம் தடைபடாமல் கிடைக்கவே இந்த ஏற்பாடு என்று கூறப்படுகிறது.
“இப்போது அன்னங்கள் உண்ணப்படுவதில்லை என்றபோதும் அன்னம் பிடிக்கும் நிகழ்வு இன்று அவற்றைப் பாதுகாக்கவும், அவற்றைப் பற்றி அறிவதற்குமான நடவடிக்கை,” என்கிறார் அரசரின் அன்னம் கண்காணிப்பாளர் டேவிட் பார்பர்.
இவர் ராணியின் அன்னம் கண்காணிப்பாளராக 30 ஆண்டுகள் இருந்தவர். ராணி இறக்கும் வரையில் அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார். கடற்கரையில் இருந்து 4.8 கி.மீ. தொலைவுக்குள் இருக்கும் டான்பின்களும் அரசருக்கு/ராணிக்கு சொந்தமானவை.
இப்படி உரிமை கொண்டாடுவதற்கு ஒரு சட்ட அடிப்படை உள்ளது. இரண்டாம் எட்வர்ட் அரசராக இருந்தபோது 1324ல் இந்த சட்டம் இயற்றப்பட்டது. “கடலிலோ, வேறெங்குமோ உள்ள திமிங்கிலங்கள், ஸ்டர்ஜன் மீன்கள் ஆகியவற்றை அரசர் தனது ஆளுகைக்குள் எடுத்துக்கொள்ளலாம்” என்கிறது அந்த சட்டம்.
இந்த சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. திமிங்கிலங்களும், டால்பின்களும் “ஃபிஷஸ் ராயல்” என்று அழைக்கப்படுகின்றன. தமது தாயின் மரணத்தைத் தொடர்ந்து இந்த உயிரினங்கள் இனி அரசரின் உரிமையாகும்.
குதிரைகள்
நாய்கள் மீது ராணிக்கு இருந்த பிரியம் குறித்து நிறைய கூறப்பட்டுள்ளன. தனது வாழ்நாளில் அவர் 30 கோர்கி நாய்களுக்கு மேல் வைத்திருந்தார். ஆனால், இன்னொரு விலங்கும் ராணியின் இதயத்தை கொள்ளை கொண்டது. அவர் ஏராளமான குதிரைகளை சொந்தமாக வைத்திருந்ததாக நம்பப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
தனது 4வது பிறந்த நாளுக்கு தமது தாத்தா ஐந்தாம் ஜார்ஜ் பரிசாக அளித்த பெக்கி என்னும் ஷெட்லேன்ட் மட்டக் குதிரையை ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டார் எலிசபெத்.
சான்ட்ரிங்கம் என்ற இடத்தில் உள்ள பந்தயக்குதிரை இனப்பெருக்க மையம் அவருக்கு பிற்காலத்தில் மரபுரிமையாக வந்தது. பந்தயங்களில் வெற்றி பெற்ற அவரது பல குதிரைகள் இங்கே உருவானவையே.
ராணிக்காக 100க்கும் மேற்பட்ட வெற்றிக் குதிரைகளை மேற்பார்வை செய்தவரான பயிற்சியாளர் சர் மைக்கேல் ஸ்டௌட், ராணிக்காக வேலை செய்வது மகிழ்ச்சி அளிக்கக்கூடியது என்று கூறினார்.
“அவரது புரிதல், ஆழமான அறிவு, மேலும் அறிவதற்கான தாகம் ஆகியவற்றின் காரணமாக ராணியின் குதிரைகளைப் பயிற்றுவிப்பது மன அழுத்தம் தருவது அல்ல” என்று அவர் கூறினார்.
தெளிவாக ஒரு செய்தியை சொல்லும் விதத்தில் தன் குதிரைகளுக்குப் பெயர் வைப்பார் ராணி. எடுத்துக்காட்டாக, டியூட்டி பௌன்ட், கான்ஸ்டிடியூஷன் அன்ட் டிஸ்கிரீஷன் என்பவை அவரது சில குதிரைகளின் பெயர்கள்.
“சின்ன சின்ன விஷயங்களையும் ராணி எப்படி கவனத்தில் எடுத்துக்கொண்டார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு உண்டு. தனது குதிரைகளைப் பார்க்க வரும்போது ராணி எப்போதும் நறுமணத் தைலம் போட்டுக்கொண்டு வரமாட்டார். காரணம், டெஸ்டோஸ்டெரோனால் தூண்டப்பட்ட குதிரைக் குட்டிகளை இது உணர்ச்சிவசப்படுத்தும்,” என்கிறார் ஒளிபரப்பாளர் கிளேர் பால்டிங். இவரது தாத்தா, தந்தை, சகோதரர் ஆகியோர் ராணியின் குதிரைகளைப் பயிற்றுவித்தவர்கள்.
பிரிட்டனின் ஐந்து கிளாசிக் பந்தயங்களில் நான்கில் ராணியின் குதிரைகள் வெற்றி பெற்றுள்ளன.
கார்கள்
அலுவல்சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு குதிரை வண்டிகளை பயன்படுத்தினார் ராணி. அல்லது பாரம்பரியமான முறையில் தயாரிக்கப்பட்ட பென்ட்லே காரினைப் பயன்படுத்துவார். ஓட்டுநர்களால் இயக்கப்படுகிறவை இவை.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், அலுவல் சாராத பயணங்களில் அவர் லேண்ட்ரோவர் கார்களை தானே ஓட்டுவதைப் பார்த்திருக்க முடியும். காலம் சென்ற அவரது கணவர் இளவரசர் பிலிப்புக்கும் ராணிக்கும் டிரைவிங்கில் ஆர்வம் அதிகம். ஜாகுவார் மற்றும் லேன்ட் ரோவர் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கார்கள் இந்த ஜோடிக்கு மிகவும் பிடித்தமானவை. லேண்ட் ரோவர் முதலில் பிரிட்டிஷ் நிறுவனம்யாக இருந்தது. இப்போது அது இந்தியப் பெருநிறுவனமான டாடாவுக்கு சொந்தமானது.
ராணி ஆவதற்கு முன்பு இளவரசி எலிசபெத் இரண்டாம் உலகப் போர் நேரத்தில் பார வண்டி டிரைவராகவும், மெக்கானிக்காவும் தன்னார்வ சேவை புரிந்தார்.
சில நேரங்களில் தனது விருந்தினர்களை அழைத்துக்கொண்டு அவர் டிரைவிங் செய்வார்.
1998ல் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் அப்துல்லாவை பால்மோரல் கோட்டைக்கு விருந்துக்கு அழைத்த ராணி தன்னுடைய 20 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை சுற்றிப் பார்க்க அழைத்தார்.
முதலில் தயங்கிய அப்துல்லா பிறகு ஒப்புக்கொண்டு காரின் பயணியர் இருக்கையில் அமர்ந்தார். அவர் ஆச்சரியப்படும் வகையில் டிரைவர் சீட்டில் அமர்ந்த ராணி ஸ்காட்லாந்தின் மலைப்பாங்கான பகுதிகளில் “எப்போதும் பேசிக்கொண்டே” வண்டி ஓட்டினார் என்று பிரிட்டனின் முன்னாள் தூதர் ஷெரார்டு கௌபர்-கோல்ஸ் தனது நினைவுக் குறிப்பில் தெரிவிக்கிறார்.
அவ்வப்போது கவலைப்பட்ட அப்துல்லா ராணியை மெதுவாக ஓட்டும்படி கேட்டுக்கொண்டுள்ளார். சௌதி அரேபியாவில் பெண்கள் தேர் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படுவதற்கு வெகு காலம் முன்பே இது நடந்தது. தனது வாழ்நாளில் 30 லேண்ட்ரோவர் கார்களின் உரிமையாளராக ராணி இருந்ததாகவும், அவரது கார்களின் மதிப்பு 1 கோடி அமெரிக்க டாலர்களுக்கு இணையானது என்றும் பிரிட்டிஷ் பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.
நிலவுடமை
2022ல் வெளியான ஒரு சண்டே டைம்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் ராணியின் தனிப்பட்ட செல்வம் 37 கோடி பவுண்டுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சொத்துகள், நகைகள், பத்திரங்கள், கலைப்பொருள்களாக உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
இவை தவிர, அரியணைக்கு சொந்தமாக வேறு பல அரசு இல்லங்களும், பரந்த பொது நிலங்களும் உள்ளன. கிரௌன் எஸ்டேட் என்று அறியப்படும் இவை அரசகுடும்பத்துக்கு தனிப்பட்ட முறையில் சொந்தமானவை அல்ல. இவற்றை அவர்கள் விற்க முடியாது.
பெர்க்ஷயரில் உள்ள அஸ்காட் பந்தயப் பாதை, லண்டன் ரெஜன்ட் வீதியின் பெரும் பகுதி ஆகியவை கிரௌன் எஸ்டேட்டை சேர்ந்தவை.
ஐக்கிய ராஜ்ஜியத்தின் பெரும்பாலான கடற்கரைகளில் இருந்து 12 நாடிகல் மைல் தொலைவுக்கான கடற்பரப்பும் அரியணைக்கு சொந்தமானவை. கடலோர காற்றாலைகளை அமைக்கும் நிறுவனங்கள் இதனால், அரியணைக்கு ராயல்டி செலுத்தவேண்டும்.
கிரௌன் எஸ்டேட் சொத்துகளில் இருந்து வரும் வருவாயில் 25 சதவீதம் அரசருக்கு சொந்தமானவை. 15 சதவீதமாக இருந்த இந்த அளவு 2017ல் 25 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 10 ஆண்டுகள் நீடித்த பக்கிங்ஹாம் அரண்மனையை புதுப்பிக்கும் பணிக்கு செலவு செய்வதற்காக இந்த அளவு உயர்த்தப்பட்டது.
ஐக்கிய ராஜ்ஜியத்தின் கருவூலத்துக்கு இவற்றின் லாபம் செல்லும். இதில் இருந்து அரச மானியம் மூலமாக மீண்டும் அரசருக்கு பணம் அனுப்பப்படும்.
குடும்ப சொத்துரிமை
தமது முன்னோர்களிடம் இருந்து வாரிசுரிமையாக சில தனிப்பட்ட பொருள்களையும் பெற்றார் ராணி எலிசபெத். இவை ராயல் கலெக்ஷனில் இடம் பெற்றிருக்கும். இவை தற்போது அரசருக்கு செல்லும்.

பட மூலாதாரம், Getty Images
விக்டோரியா ராணியின் திருமண ஆடையும் இதில் அடக்கம். வெள்ளை திருமண ஆடையை பிரபலப்படுத்திய பெருமை விக்டோரியா ராணியை சேரும். எட்டாம் ஹென்றி அணிந்த முழு உடல் கவச உடையும் ராயல் கலெக்ஷனில் இடம் பெற்றுள்ளது.
போப்பாண்டவரோடு முரண்பட்ட எட்டாம் ஹென்றி இங்கிலாந்து திருச்சபையை சுதந்திரமானதாக்கி தம்மையே அதன் தலைவராக நியமித்துக்கொண்டார். இந்த பதவி அடுத்தடுத்த அரசர்கள், ராணிகளுக்கு மரபுரிமையாக கொடுக்கப்பட்டது.
நகைகள்
அரச குடும்பம் என்று நினைக்கும்போதே நம்மில் பலருக்கும் பிரகாசிக்கும் தங்கம், வைரங்கள் நினைவுக்கு வரும்.

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டிஷ் காலனியாதிக்கப் பேரரசுதான் மனித குல வரலாற்றிலேயே மிகப்பெரிய பேரரசு. இதனால், உலகின் மிகச்சிறந்த வைரங்கள், மணிகளை பிரிட்டிஷ் அரச குடும்பம் கையகப்படுத்த முடிந்தது.
இவற்றில் பல மணிகள், கற்கள் எப்படி பிரிட்டிஷ் அரியணையின் கைகளுக்கு சென்றன என்பதில் மிகப்பெரிய சர்ச்சைகள் இருக்கின்றன. இந்த வைரங்களை, மணிகளை அவை எங்கிருந்து வந்தனவோ அந்த நாடுகளுக்கே திருப்பித் தரவேண்டும் என்ற கோரிக்கைகளும் இருக்கின்றன. இவற்றில் விண்மீன் ஆஃப் ஆப்ரிக்கா, கோஹினூர் வைரங்களும் அடக்கம்.
மணி மகுடங்கள் அரசருக்கோ, ராணிக்கோ சொந்தமானவை அல்ல. நாட்டுக்காக இவற்றை தங்கள் பாதுகாப்பில் அவர்கள் வைத்திருக்கிறார்கள். முடிசூட்டு விழா, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடக்கம் போன்ற நிகழ்வுகளில் மட்டும் அவர்கள் இவற்றை அணிகிறார்கள்.
கிரௌன் ஜுவல்ஸ் எனப்படுகிறவை நாட்டுக்கு சொந்தமானவை. ஆனால், இவை இல்லாமல் வேறொரு தொகுப்பு உள்ளது. இதில் உள்ளவை ராணிக்கு சொந்தமானவை. இவற்றில் உள்ள நகைகள் பெரும்பாலும் மூன்றாம் சார்ல்ஸ் அரசருக்கு செல்லும். ராயல் கலெக்ஷனில் இருந்து மிகப்பிரகாசமான கிரீடம் ஒன்றை தற்போதைய அரசர் மூன்றாம் சார்ல்சின் மனைவி கமில்லாவுக்கு ஏற்கெனவே இரவலாகத் தந்துள்ளார் இரண்டாம் எலிசபெத் ராணி.
சிறிது காலத்தில் ராணியின் பிற நகைகளையும், குறிப்பாக எலிசபெத் பாணியாக ஆகிவிட்ட அந்த முத்து மாலை, காதணி ஆகியவற்றையும் அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அணிவதை நாம் பார்க்கலாம்.
புதைக்கும்போது
கிட்டத்தட்ட ராணி எலிசபெத்தின் நகைகள் அனைத்தும் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் வசம் செல்லும் என்றபோதிலும், இரண்டு நகைகளோடு அவர் புதைக்கப்படுவார் என்று அரச குடும்ப விவகார வல்லுநர் ஒருவர் கணிக்கிறார். அந்த இரண்டு நகைகள் வெல்ஷ் தங்க திருமண மோதிரம் மற்றும் முத்து காதணிகளாக இருக்கலாம் என்று நம்புகிறார் நேச்சுரல் டைமன்ட் கவுன்சிலின் தலைவர் லிசா லெவின்சன். இது நடந்தால் ராணியின் கடைசியான பணிவான வெளிப்பாடாக அது இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
Source: BBC.com