Press "Enter" to skip to content

பொருளாதாரத்தில் முன்னேறிய தமிழ்நாடு சாதி, தீண்டாமை ஒழிப்பில் சறுக்கிவிட்டதா?

  • விக்னேஷ்.அ
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images

கல்வி, மருத்துவம், தொழில் மேம்பாடு உள்ளிட்ட பெரும்பாலான சமூக – பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில் இந்திய மாநிலங்களைப் பட்டியலிட்டால் அவற்றில் முதல் சில இடங்களுக்குள் தமிழ்நாடு இடம்பிடிக்கத் தொடங்கி பல தசாப்தங்கள் ஆகிவிட்டன.

ஆனால், இத்தனை ஆண்டுகளாகவும் சுடுகாட்டுக்கு செல்வதற்கு ஆதிக்க சாதியினரால் பாதை மறுக்கப்பட்ட பட்டியல் சாதியினர், ஊராட்சி மன்றக் கூட்டத்தின்போது நாற்காலியில் அமரவிடாமல் தடுக்கப்பட்ட பட்டியல் சாதி ஊராட்சித் தலைவர், தனிநபர் பிரச்னைகளால் தாக்குதலுக்கு உள்ளான தலித் கிராமம், சாதிய கட்டுப்பாடுகளை மீறி காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் ஆணவப் படுகொலை செய்யப்படும் நிகழ்வுகள், அரசுப் பள்ளியில் தலித் சாதி ஒன்றைச் சேர்ந்த சமையலர் சமைத்த உணவை உண்ண தங்கள் குழந்தைகளுக்குத் தடை விதித்த பெற்றோர், மிகச் சமீபமாக பெட்டிக் கடையில் பணம் கொடுத்து வாங்க முயன்றும் தின்பண்டம் மறுக்கப்பட்ட பட்டியலின குழந்தைகள் போன்ற செய்திகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

சாதிப் பெயரை அல்லது ஒருவரின் சாதியை எளிதில் அடையாளம் காண உதவும் குடும்பப் பெயரை பெயரின் பின்னொட்டாகச் சேர்த்துக் கொள்ளும் வழக்கம் பெரும்பாலானவர்களால் கைவிடப்பட்ட வழக்கம் தமிழ்நாட்டுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் ஆகிறது. (1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் பெரியார் தலைமையில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் தமது ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்னும் பெயரில் உள்ள ‘நாயக்கர்’ என்னும் சாதிப் பெயரை நீக்குவதாக பெரியார் அறிவித்தார். தமிழ்நாட்டில் சாதிப் பெயரை நீக்கும் வழக்கம் பரவலாவதற்கு இது ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.)

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த சமூக முன்னேற்றத்தை அடைந்த தமிழ்நாடு சாதி ஒழிப்பில் லட்சியபூர்வமான இலக்குகளை அடைந்துள்ளதா என்றால் இல்லை என்பதே அதற்கு பதில்.

இந்தியாவின் சில பின்தங்கிய மாநிலங்களில் இருக்கும் சில பிற்படுத்தப்பட்ட சாதிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் உள்ள சில தலித் சாதியினர் பொருளாதாரம், கல்வி உள்ளிட்டவற்றில் அடைந்துள்ள மேம்பாடு அதிகமாகவே உள்ளது. ஆனால், தமிழ்நாட்டிலேயே இருக்கும் சில பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் சமூக – பொருளாதார வலிமையுடன் ஒப்பிடுகையில் தமிழக தலித்துகள் சமநிலையை இன்னும் முழுமையாக எட்டவில்லை.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சமீபத்தில் 386 கிராம ஊராட்சிகளில் நடத்திய ஆய்வில் 22 கிராம ஊராட்சிகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள் அலுவலகத்தில் அமர நாற்காலி கூட வழங்கப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.

சமூக – பொருளாதார அளவீடுகளில் பல இந்திய மாநிலங்களை விடவும் முன்னேறிய நிலையில் இருக்கும் தமிழ்நாடு, சாதி ஒழிப்பில் குறிப்பிடத் தகுந்த சாதனைகளைச் செய்யவில்லையா?

ஒரு நீதிமன்ற தீர்ப்பு – ஒரு தாய் – இரு குழந்தைகள்

வளர்ச்சிக் குறியீடுகள் பலவற்றில் தமிழ்நாடு தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது. ஆனால், மருத்துவம், கல்வி, உள்கட்டுமானம் போன்றவற்றில் தமிழ்நாடு வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும், அந்த வளர்ச்சி அனைத்து சாதிகளையும் சரிவிகிதத்தில் சென்று சேரவில்லை என்ற விமர்சனமும் உண்டு.

ஜூன் மாத இறுதியில் மட்டும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது இரு வெவ்வேறு நிகழ்வுகளில் தலித் தொழிலாளர்கள் ஐந்து பேர் சென்னையில் உயிரிழந்தனர். (சித்தரிப்புப் படம்.)

பட மூலாதாரம், Getty Images

ஆட்சியாளர்களின் சமூக நீதி குறித்த குறுகலான பார்வையே தமிழ்நாடு பலவற்றில் வளர்ச்சியடைந்திருந்தாலும் இன்னும் சாதிய ஒடுக்குமுறைகள் தொடரக் காரணம் என்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் சி. லஷ்மணன்.

அங்கன்வாடி ஊழியர்கள், சமையலர்கள், சத்துணவு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் இட ஒதுக்கீட்டு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சில பெண்கள் ரிட் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்களில் இட ஒதுக்கீட்டு விதிகளின் கீழ் தங்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி இருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி கே. சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தன.

அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழியர்கள் இல்லை; அவர்கள் உள்ளூர் சமூகங்களில் இருந்து ‘மெரிட்’ அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இந்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 2003ஆம் ஆண்டு வழங்கிய அறிவுறுத்தல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது; அதில் அங்கன்வாடி பணிகளில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருப்பதால் பணி நியமனங்களில், பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சத்துணவுப் பொறுப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் உள்ளிட்ட 29,773 பணியிடங்களை மதிய உணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கல்வித் தகுதி, வயது, சாதி ரீதியான இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் நிரப்ப முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சகத்தின் அறிவுறுத்தலால் இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி சந்துரு, மேற்கண்ட திட்டங்களை அமல்படுத்துவதற்கான செலவு, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் செலவு உள்ளிட்டவற்றை அரசே ஏற்றுக் கொள்வதால் இந்தப் பணிகளும் அரசுப் பணிகள்தான் என்று தமது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த பணிகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14 (சட்டத்தின் முன் அனைவரும் சமம்; சாதி, மதம், பிறப்பிடம், பால் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு கூடாது) மற்றும் 16 (பணி வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்) ஆகிய பிரிவுகளின் ஷரத்துகளுக்கு உட்பட்டு இருக்கும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால் இட ஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்றி அந்த பணியிடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயத்துக்கு தமிழ்நாடு அரசு உள்ளானது. இதன் மூலம் பல்லாயிரம் கிராமத்துப் பெண்கள் இட ஒதுக்கீடு மூலம் பணிகளைப் பெறும் சூழ்நிலை தமிழ்நாட்டில் உண்டானது.

2019 டிசம்பரில் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்து பல தலித்துகள் உயிரிழந்த நிகழ்வின்போது, தாம் அங்கு சென்றதாகவும் அப்போது மேற்கண்ட நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பயனடைந்த தலித் பெண் ஒருவரைச் சந்தித்தாகவும் பிபிசி தமிழிடம் கூறினார் லஷ்மணன்.

“சமையலரான அந்தப் பெண்மணி அந்த வருமானத்தில் தமது இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்து மருத்துவர் ஆக்கியிருந்தார். பெரியார், அம்பேத்கர் படங்களை ஏந்திப் பிடிக்கும் கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது இட ஒதுக்கீடு, பட்டியல் வகுப்பினருக்கான திட்டங்களை முறையாக அமலாக்குவதில் போதிய கவனம் செலுத்துவதில்லை. அரசும், அரசு அதிகாரிகளும் அரசமைப்புச் சட்டத்தின்படி தங்கள் பணிகளைச் செய்தாலே சமநிலை உண்டாகும்,” என்று லஷ்மணன் கூறினார்.

பல்லாயிரம் ஆண்டுகால பிரச்னை – 75 ஆண்டுகால விடுதலை

சாதி

பட மூலாதாரம், Getty Images

”சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகள் தொடக்க காலத்தில் பிறப்பின் அடிப்படையில் இருந்தன. பின்பு சமூக ரீதியிலான ஒடுக்குமுறைகள் ஆயின. அதன் பின்னர் கலாசார ரீதியிலான ஒடுக்குமுறைகளாக உருவெடுத்தன. தற்காலத்தில் பெரும்பாலும் பொருளாதார ரீதியிலான ஒடுக்குமுறைகள் ஆகியுள்ளன. பொருளாதார ஒடுக்குமுறைதான் இப்போதைய ஒடுக்குமுறையின் வடிவமாகியுள்ளது,” என்கிறார் மூத்த ஊடகவியலாளர் ஆர். இளங்கோவன்.

தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம் சம்பவம், மதுரை மாவட்டம் பாப்பாபட்டி மற்றும் கீரிப்பட்டி ஆகிய ஊராட்சித் தலைவர் பதவிகள் தலித்துகளுக்கு ஒதுக்கப்படாததால் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது, மேலவளவு முருகேசன் படுகொலை உள்ளிட்ட தமிழ்நாட்டையே பல சாதிய மோதல் மற்றும் ஒடுக்குமுறைகள் குறித்த செய்திகளை களத்தில் இருந்து பதிவு செய்தவர் இளங்கோவன்.

”ஒரு காலத்தில் நமக்கு அடிமையாக இருந்தார்கள் இப்போது படிக்கிறார்கள், முன்னேறுகிறார்கள் என்ற பொறாமை உணர்வு ஆதிக்க சாதியினரிடையே உண்டாகும். அதைத்தான் செருப்பு அணியக்கூடாது, தெரு வழியாக நடக்கக்கூடாது, வண்டியில் போகக்கூடாது என்றெல்லாம் கட்டுப்படாக விதிக்கிறார்கள்,” என்று ஆவர் கூறுகிறார்.

சமீபத்தில் தென்காசி மாவட்டம் பாஞ்சான்குளம் கிராமத்தில் தலித் சிறுவர்களுக்கு தின்பண்டம் விற்பனை செய்வது மறுக்கப்பட்டது குறித்துப் பேசிய அவர், காவல் துறையே தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது, குற்றவாளிகள் தற்காலிகமாக ஊருக்குள் நுழைய அனுமதி மறுக்கும் சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டது ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.

“அரசு என்பது ஒரு மிகப்பெரிய இயந்திரம், அதிகாரிகள் சிரத்தையுடன் இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்தால் சாதிய ரீதியிலான ஒடுக்குமுறை நடக்கும் நிகழ்வுகளைத் தடுக்க முடியும். அதே போல தலித்துகளுக்குள்ளேயே பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முன்னேறியவர்கள் தாங்கள் அடைந்ததை சமூகத்துக்கு திரும்பியளிக்க வேண்டும். அது நிகழவில்லையென்றால் அவர்கள் அடைந்த வளர்ச்சி தனிமனித வளர்ச்சியாக மட்டுமே இருக்கும். அவர்கள் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சியாக இருக்காது,” என்று இளங்கோவன் கூறுகிறார்.

பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறையை, நாடு விடுதலை அடைந்த 75 ஆண்டுகளுக்குள் சரி செய்வது சற்று சவாலானதுதான். ஆனால், தலித்துகளில் பெரும்பாலானவர்கள் கல்வி, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவற்றைப் பெறும்போது சமூக – பொருளாதார சமநிலையும், சமத்துவமும் உண்டாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி சாதியை ஒழித்துவிடுமா?

ஒரு மாநிலம் அல்லது நாடு சமூக மற்றும் பொருளாதாரக் குறியீடுகளில் வளர்ச்சி அடைந்திருப்பது மட்டுமே அங்கு சமத்துவம் வந்துவிடுவதற்கான வழியாகிவிடாது என்பதற்கும் சில எடுத்துக்காட்டுகள் உள்ளன.

சென்னை

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அரசின் அலுவல்பூர்வ தரவுகளின்படி, அந்நாட்டில் உள்ள குடியேறிகளில் (வேறு நாடுகளில் இருந்து சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள்) மெக்சிகோ மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர்.

வேறு நாடுகளில் இருந்து குடியேறிவர்களைப் போல அல்லாமல் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இருந்து குடியேறியவர்களிடையே ஒரு தனித்துவமான பிரச்னை உள்ளது. சாதிதான் அது.

அமெரிக்காவில் இயங்கும் தலித் உரிமைகள் அமைப்பான ‘ஈக்வாலிட்டி லேப்ஸ்’ என்ற அமைப்பு 2016இல் அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களிடையே 2016இல் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் பங்கேற்ற தலித்துகளில் 25% பேர் தங்கள் சாதி காரணமாக உடலால் அல்லது சொற்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கியதாகக் கூறியுள்ளனர்.

கருத்துக்கணிப்பில் பங்கேற்ற மூன்றில் இரண்டு பங் கு தலித்துகள் தங்கள் சாதி காரணமாக பணியிடத்தில் மரியாதை குறைவாக நடத்தப்படுவதாகவும், 60% பேர் மரியாதை குறைவான நகைச்சுவைகள் அல்லது விமர்சனங்களுக்கு உள்ளானதாகவும் கூறியுள்ளனர்.

கருத்துக்கணிப்பில் பங்கேற்ற தலித் சாதியினரின் இருவரில் ஒருவரும், ‘சூத்திர சாதியினர்’ என்று கூறப்படும் சாதியினரில் நான்கில் ஒருவரும் தங்கள் சாதி வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் வாழ்வதாகவும் தெரிவித்தனர் என்று ‘ஈக்வாலிட்டி லேப்ஸ்’ கூறுகிறது.

மனித உரிமைகள், ஜனநாயகம் போன்றவற்றில் மேம்பட்ட நாடாகத் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும், பொருளாதார மற்றும் மனித வளர்ச்சிக் குறியீட்டில் மேல் நிலையில் இருக்கும் நாடான அமெரிக்காவில்தான் இந்த நிலைமை.

அமெரிக்காவில் சிஸ்கோ சிஸ்டம்ஸ் இன்க். எனும் நிறுவனத்தில் பணியாற்றிய தலித் ஒருவர் 2018இல் தமது சாதி காரணமாக அலுவலகக் கூட்டங்களில் புறக்கணிக்கப்பட்டு, பதவி உயர்வு மறுக்கப்பட்டதாக, உயர் சாதியினர் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் சாதிகளைச் சேர்ந்த இரு உயரதிகாரிகள் மீது குற்றம்சாட்டினார்.

சாதி ரீதியான பாகுபாடுகளுக்கு எதிராக சட்டங்கள் இல்லையென்றாலும், கலிஃபோர்னியா மாகாண அரசு பெயர் வெளியிடாத அந்த ஊழியருக்கு எதிராக வழக்கு நடத்தி வருகிறது.

நிறவெறியால் காட்டப்படும் பாகுபாடுகள் குறித்த விவாதங்களைப் போலவே சமீப ஆண்டுகளில் சாதி குறித்த விவாதமும் மேற்கத்திய நாடுகளில் தொடங்கியுள்ளது.

கலிபோர்னியா மாகாணப் பல்கலைக்கழகம், ஹார்வர்டு பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக தெற்காசியர்களை கணிசமான எண்ணிக்கையில் பணியமர்த்தும் இணைய மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சாதி ரீதியிலான பாகுபாடுகளுக்கு எதிராக விதிகளை வகுக்கத் தொடங்கிவிட்டன.

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவென்று தனி சட்டங்கள் இயற்றவில்லையென்றாலும் தங்கள் சட்ட வரையறைகளுக்கு உள்பட்டு சாதிய பாகுபாடுகளுக்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கத்திய நாடுகள் எடுப்பதும் மெல்லமாகத் தொடங்கியுள்ளது. கலிஃபோர்னிய மாகாண அரசு தலித் ஊழியர் சார்பாக நீதிமன்றத்தில் வாதிடுவதும் அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையே.

தமிழ்நாடோ, அமெரிக்காவோ உணர்த்துவது என்னவென்றால் சாதிய பாகுபாடுகளை ஒழிக்க இலக்கு வைத்து எடுக்கப்படும் நடவடிக்கைகளே அவற்றை ஒழிக்குமே அல்லாமல், வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமே சாதியை ஒழித்துவிடாது.

இந்தியாவில் நன்றாகப் படித்து, அமெரிக்காவில் உள்ள பெருநிறுவனம் ஒன்றில் சென்று பணியாற்றும் அளவுக்கு பொருளாதார முன்னேற்றத்தை அடைந்த சிஸ்கோ தலித் ஊழியரே அதற்கு ஒரு சான்று.

Banner

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »