Press "Enter" to skip to content

இரானில் ஹிஜாப்பை தீயிட்டுக் கொளுத்தும் பெண்கள் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், TWITTER

இரானில் ஹிஜாப் சட்டத்தை மீறியதற்காகக் கைதுசெய்யப்பட்ட இளம்பெண் மாசா அமினி, காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்ததன் விளைவாக அங்கு நடந்துவரும் போராட்டத்தைப் பெண்கள் முன்னின்று நடத்தி வருகின்றனர்.

ஐந்தாவது நாளாக தொடரும் இந்த போராட்டம் பல்வேறு பகுதிகளுக்குப் பரவிவரும் நிலையில், சரி நகரில் நடந்த போரட்டத்தில் பெண்கள் தங்களுடைய ஹிஜாப்பைத் தீயிட்டுக் கொழுத்தினர். அப்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள் அதனை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

வட மேற்குப்பகுதியான உர்மியா, பிரன்ஷாஹர் மற்றும் கெர்மன்ஷாவில் நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட போராட்டக்காரர்களில் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டதாக செயற்பாட்டாளாகள் தெரிவிக்கின்றனர்.

கெர்மன்ஷாவில் இரண்டு குடிமக்களையும், ஷிராஸில் நடைபெற்ற போராட்டத்தில் காவல் உதவியாளர் ஒருவரையும் போராட்டக்காரர்கள் கொன்றுவிட்டதாக அதிகாரிகள் குற்ற்ம்சாட்டுகின்றனர்.

மாசா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து ஹிஜாப் சட்டம் மற்றும் ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறை காவல்துறையினருக்கு எதிராக நடந்துவரும் இந்தப் போராட்டத்தில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமேற்கு நகரமான சாகேஸ் பகுதியைச் சேர்ந்த 22 வயதான குர்து இன பெண், மாசா அமினி, மூன்று நாள் கோமா நிலையில் அவதியுற்ற பின்பு, கடந்த வெள்ளியன்று உயிரிழந்தார்.

ஹிஜாப் சட்டத்துக்கு எதிராக போராட்டம்

உயிரிழந்த மாசா அமினி

பட மூலாதாரம், MAHSA AMINI FAMILY

டெஹ்ரானில் அவருடைய சகோதரரோடு இருந்தபோது, தலைமுடியை ஹிஜாப்பால் மறைப்பது மற்றும் தளர்வான ஆடையால் முழு உடலையும் மறைக்க உத்தரவிடும் ஹிஜாப் சட்டத்தை மீறியதாக மாசா அமினி, ஹிஜாப் ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த அவர், மயங்கி விழுந்த சில நிமிடங்களிலேயே கோமா நிலைக்குச் சென்றார்.

அமினியின் தலையில் காவல்துறையினர் பிரம்பால் அடித்ததாகவும், காவல்துறையினரின் வாகனத்தில் அவரது தலையைக் மோதச் செய்ததாகவும் தகவல்கள் உள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் தற்காலிக உயர் ஆணையர் நடா அல்-நஷிப் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் காவல்துறையினர், அவருக்கு திடீர் இதய செயலிழப்பு ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். ஆனால், அமினி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மாசா அமினியின் இந்தத் துயர மரணமும், அவர் சித்ரவதை படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் சுயாதீன மற்றும் உகந்த அதிகாரம் கொண்ட நிறுவனத்தால் பாரபட்சமின்றி துரிதமாக விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் கூறும் நஷிப், அவரது குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்கிறார்.

ஹிஜாப் சட்டங்களை மீறுபவர்களைக் கண்காணிப்பதற்காக கடந்த சில மாதங்களாக ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்துறையினர் தங்களது ரோந்துப் பணிகளை அதிகப்படுத்தியிருத்த நிலையில், பெண்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பான உறுதிசெய்யப்பட்ட பல காணொளிகள் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசு நடவடிக்கை – விமர்சிக்கும் செயல்பாட்டாளர்கள்

ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண்கள்

பட மூலாதாரம், AFP

ஹிஜாப் சட்டங்களை மீறும் பெண்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனக் கூறும் நடா அல்-நஷிப், இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிறார்.

இரானின் அதிஉயர் தலைவரான அயதுல்லா அலி கமேனியின் உதவியாளர் அமினியின் குடும்பத்தை திங்கட்கிழமை சந்தித்து, மீறப்பட்ட உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்படை இரானுக்கு இழப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்துவதாக மூத்த எம்.பி ஜலால் ரஷிதி கூச்சி வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தில் தேவையற்ற மற்றும் அளவுக்கதிகமான காவல்துறையினர் பயன்படுத்தப்பட்டுவருவதாக நடா அல்-நஷிப் எச்சரிக்கிறார்.

மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தின் பிரன்ஷாஹர் மற்றும் உர்மியா பகுதியில் செவ்வாய் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவனும் 23 வயது இளைஞரும் கொல்லப்பட்டதாக ஹெங்காவ் அமைப்பு தெரிவிக்கிறது. நார்வேயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்த அமைப்பு, இரானின் குர்து இன பகுதியில் மனித உரிமைகளை கண்காணித்து வருகிறது. மேலும், அண்டை மாகாணமான கெர்மன்ஷாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணை சுட்டு கொன்றுள்ளதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

இந்தப் போராட்டமானது 15 நகரங்களில் நடந்துவருவதாக இரான் தெரிவிக்கிறது. வீதிகளை முடக்கியுள்ளவர்கள், கல்லெறியில் ஈடுபடுவர்கள், காவல்துறையினரின் வாகனங்களுக்குத் தீ வைப்பவர்களுக்கு எதிராக கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்துவதாகவும், கைது நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இரான் அரசு தெரிவித்துள்ளது.

ஹிஜாபை எதிர்க்கும் பெண்கள்

செய்திகள்

பட மூலாதாரம், WANA NEWS AGENCY

தலைநகரில் நடந்த போராட்ட காணொளியில் பெண் ஒருவர் தன்னுடைய ஹிஜாப்பை கழட்டிவிட்டு ‘சர்வாதிகாரி ஒழியட்டும்’ எனக் கூச்சலிடுகிறார். இது இரானின் அதிவுயர் தலைவருக்கு எதிராக அடிக்கடி பயன்படுத்தப்படும் முழக்கமாகும். அந்தக் காணொளியில் மற்றவர்கள் நீதி, சுதந்திரம், கட்டாய ஹிஜாப் வேண்டாம் என கத்தினர்.

ராஷ்ட் பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர், தன்னை காவல்துறையினர் தடிகள் மற்றும் குழாய்களைக் கொண்டு தாக்கியதாக குற்றம்சாட்டி, காயமுற்ற புகைப்படங்களை பிபிசி பாரசீக மொழி சேவையிடம் பகிர்ந்து கொண்டார்.

காவல்துறையினர் தொடர்ந்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதால், கண்ணெரிச்சல் ஏற்பட்டதாக அவர் தெரிவிக்கிறார். “நாங்கள் அங்கிருந்து ஓடினோம். ஆனாலும், அவர்களை என்னைக் குறிவைத்து தாக்கினர். என்னுடய உடலை விற்பதற்காக பொதுவெளியில் நிற்பதாகவும், என்னை விபச்சாரி என்றும் காவல்துறையினர் கூறினர்” என்கிறார் அவர்.

இஸ்பஹானில் நடந்த போராட்டத்தில் பங்கெடுத்த பெண் ஒருவர் பிபிசியிடம் பேசும்போது, “ஹிஜாப்பை கழற்றி அசைத்த தருணத்தில், ஆண்களால் சூழப்பட்டு தான் பாதுகாக்கப்பட்டதைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறினார். இந்த ஒற்றுமையைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்த அவர், உலக மக்கள் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

இந்தப் போராட்டம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த தெளிவான திட்டமிடலுடன் நடந்துவருவதாக டெஹ்ரான் ஆளுநர் மொஹ்சென் மன்சூரி கடந்த செவ்வாயன்று ட்வீட் செய்திருந்தார். அதேபோல, குர்து இன பிரிவினைவாதிகளாலும் அரசை விமர்சிப்பவர்களாலும் அமினியின் மரணம் சாக்குப்போக்காக பயன்படுத்தப்படுவதாக அரசு தொலைக்காட்சி குற்றம்சாட்டியுள்ளது.

என்ன சொல்கிறது ரானின் ஹிஜாப் சட்டம்?

1979 இஸ்லாமியப் புரட்சிக்கு பிறகு, இரானில் ஹிஜாப் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, பெண்கள் தலையை முழுமையாக மறைக்கும் வகையிலான ஹிஜாப்பையும், முழு உடலை மறைக்கும் வகையிலான தளர்வான ஆடையையும் கட்டாயம் அணிய வேண்டும்.

இதனை உறுதிசெய்வதற்காக காஷ்ட்-இ எர்ஷாத் என்றழைக்கப்படும் ஹிஜாப் ஆடை ஒழுங்குமுறையை அமலாக்கும் காவல்படை உருவாக்கப்பட்டது. பெண்களை பொதுவெளியில் நிறுத்தி அதிக அளவிலான தலைமுடி தெரியும்படி ஹிஜாப் அணிந்திருக்கிறாரா? அணிந்திருக்கும் உடை குட்டையாக உள்ளதா? இறுக்கமான உடை அணிந்திருக்கிறாரா? எனச் சோதனையிட அனைத்து அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல், விதிகளை மீறுபவர்களுக்கு எதிரான நடவடிக்கையாக அபராதம், கைது, கசையடி உள்ளிட்டவற்றை வழங்கவும் அதிகாரம் உண்டு.

2014ஆம் ஆண்டு இரானியப் பெண்கள் ஹிஜாப் சட்டத்தை மீறி “என் திருட்டுத்தனமான சுதந்திரம்” என்ற பெயரில் தங்களுடைய புகைப்படங்களையும் காணொளிகளையும் பகிர்ந்து இணையதள பிரசாரத்தை மேற்கொண்டனர். இது ‘வெள்ளை புதன்கிழமைகள்’, ‘புரட்சித் தெரு பெண்கள்’ போன்ற இயக்கங்களுக்கும் உத்வேகம் அளித்தது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »