Press "Enter" to skip to content

புதினை கண்டித்து பைடன் ஐநாவில் உரை – 10 முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், @POTUS

தற்போது நடைபெற்று வரும் ஐநா பொதுச்சபை அமர்வில் பல்வேறு நாட்டு தலைவர்களும் உரையாற்றி வருகின்றனர். இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.

உணவுப் பாதுகாப்பின்மை, மோதல்கள், இயற்கை பேரழிவுகள் உட்பட உலகம் முழுவதும் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு அதிபர் பைடன் உரையை தொடங்கினார்.

யுக்ரேன் போர்

  • யுக்ரேன் விவகாரம் குறித்துப் பேசும்போது, கடந்த ஆண்டு உலகம் மிகப்பெரும் எழுச்சியையும், ஒரு மனிதரால் தொடங்கப்பட்ட தேவையற்ற போரையும் சந்தித்தது என்றார் பைடன். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யா, அதன் அண்டை நாடு மீது படையெடுத்ததாகவும், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் முக்கிய கொள்கைகளை தெளிவாக மீறியதாகவும் பைடன் குற்றம்சாட்டினார்.
உணவு பாதுகாப்பின்மை

பட மூலாதாரம், Getty Images

  • ரஷ்யாவிற்கு அச்சுறுத்தல் இருந்ததால் தான் செயல்பட வேண்டியிருந்ததாக புதின் கூறுகிறார், ஆனால் யாரும் ரஷ்யாவை அச்சுறுத்தவில்லை, ரஷ்யாவைத் தவிர வேறு யாரும் மோதலை நாடவில்லை எனக் கூறிய பைடன், ஐரோப்பாவிற்கு எதிராக அணு ஆயுத அச்சுறுத்தல்களை புதின் விடுத்துள்ளதாக கூறினார்.
  • ரஷ்யாவின் படையெடுப்பு யுக்ரேன் நாட்டின் உரிமையை, மக்களின் உரிமைகளை நசுக்குவது தொடர்பானது என்று பைடன் கூறினார். போரை தொடங்குவதற்கு முன்பு, யுக்ரேன் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது, உண்மையான நாடான இருந்ததில்லை என்று புதின் கூறியதை பைடன் நினைவூட்டினார். இப்போது பள்ளிகள், தொடர் வண்டிநிலையங்கள், மருத்துவமனைகளின் மீது தாக்குதல் நடத்தவதாக குற்றம்சாட்டிய பைடன், ரஷ்யாவின் போர்க்குற்றம் இழைத்து வருவதற்கு இதைவிட மோசமான வெகுஜன புதைக்குழி சான்றுகளையும் நாம் பார்த்துவருவதாகக் கூறினார்.
பைடன்

பட மூலாதாரம், Reuters

  • யுக்ரேனுக்கு தனிப்பட்ட முறையில் பெரிய அளவிலான பாதுகாப்பு உதவி மற்றும் நேரடி பொருளாதார ஆதரவை அமெரிக்கா வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
  • “ஒரு நாட்டின் பிரதேசத்தை தங்கள் விருப்பப்படி யாரும் கைப்பற்றி விட முடியாது” என்று நாங்கள் அனைவரும் கையெழுத்திட்ட தீர்மானத்தின்படி, இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா விரும்புவதாக தெரிவித்த பைடன், அதற்கு குறுக்கே இருக்கும் ஒரே நாடு ரஷ்யா மட்டும்தான் என்றார்.
  • இந்தத் தீர்மானத்தில் ஐ.நா. உறுப்பினர்கள் உறுதியாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட பைடன், இறையாண்மையுள்ள நாடுகளுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் யுக்ரரேனுக்கு இருக்கிறது என்றும், ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக யுக்ரேனுக்கு ஆதரவாக நாங்கள் நிற்போம் என்றும் தெரிவித்தார்.

எரிசக்தி

  • ரஷ்ய படையெடுப்பால் எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து பேசிய பைடன், “எந்த நாடும் எரிசக்தியை ஆயுதமாகப் பயன்படுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்தவும், வற்புறுத்தல் அல்லது ஆதிக்கத்திலிருந்து நாடுகளைப் பாதுகாக்கவும் உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா செயல்படுகிறது”என்று கூறுனார். ஐரோப்பிய ஒன்றிய தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எரிவாயு விநியோகத்தை ரஷ்யா ஆயுதமாக பயன்படுத்துவதாக ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இந்தக் கருத்தை பைடன் தெரிவித்திருக்கிறார்.

அணு ஆயுத அச்சுறுத்தல்

கெர்சோனில் ரஷ்ய துருப்புகள்

பட மூலாதாரம், EPA

  • அணு ஆயுத போர் குறித்து பேசிய ஜோ பைடன், அணு ஆயுதப் போரில் யாரும் வெற்றி பெற்று விட முடியாது என்றும், ஒருபோதும் அதில் ஈடுபட வேண்டாம் என்றும் தெரிவித்தார். ராஜதந்திர உரையாடல் மூலம் அணு ஆயுத பரவல் தடையை அனைத்து நாடுகளும் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட பைடன், என்ன நடந்தாலும், அமெரிக்கா ஆயுத கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தொடர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
  • அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்ட அனு ஆயுதப் பரவல் தடுப்பு கொள்கையை புறக்கணித்த ரஷ்யாவால் இன்றைய நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்த பைடன், அணு ஆயுத பயன்பாடு குறித்து பொறுப்பற்ற அச்சுறுத்தல்களை ரஷ்யா விடுத்து வருவதாகவும் பேசினார். “எங்கள் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, ரஷ்யாவையும், எமது மக்களையும் பாதுகாக்க நிச்சயமாக எங்கள் வசம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என இன்று காலை தொலைக்காட்சியில் உரையாற்றியபோது புதின் தெரிவித்திருந்த நிலையில், இந்தக் கருத்தை ஜோ பைடன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

மனித உரிமைகள்

  • மனித உரிமைகளை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசிய பைடன், அனைத்து மக்களின் முழு திறனையும் வெளிக்கொணரும் நாடுகளுக்கே எதிர்காலம் எனத் தெரிவித்தார். இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்கள் உண்மையில் மிகப்பெரியவை என்பதை ஒப்புக்கொண்ட பைடன், நாம் வரலாற்றின் செயலற்ற சாட்சிகள் அல்ல, நாம் வரலாற்றின் ஆசிரியர்கள். நமக்காகவும், எதிர்காலத்திற்காகவும், மனிதகுலத்திற்காகவும் நாம் இதைச் செய்வோம் எனக் கூறி உரையை நிறைவு செய்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »