Press "Enter" to skip to content

லெஸ்டர் இந்து – முஸ்லிம் மோதல் ஏன் அதிர்ச்சி தருகிறது?

பட மூலாதாரம், BBC/JEREMY BALL

பல தசாப்தங்களாக ஒற்றுமைக்கான முன்மாதிரி நகரமாக இங்கிலாந்தின் லெஸ்டர் நகரம் இருந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் அண்மையில் நடந்த இந்து மற்றும் முஸ்லிம் குழுக்கள் இடையேயான மோதல் அந்த நகரின் பன்முகக் கலாசாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

1951ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தெற்காசியாவைச் சேர்ந்த வெறும் 624 பேர் மட்டுமே அந்த நகரில் வசித்தனர். 70 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று அந்த நகரம் அதிக அளவிலான பிரிட்டிஷ் தெற்காசியர்கள் வாழும் நகரங்களில் ஒன்றாக உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து கிழக்கு மிட்லாண்ட்ஸ் பகுதிக்கு ஆரம்பக்கால வருகைகளை இரண்டு முக்கிய நிகழ்வுகளில் அறியலாம்.

அவற்றுள் ஒன்று, பிரிட்டிஷ் இந்தியா பிரிவினை. 1947 பிரிவினைக்குப் பிறகு பிரிட்டிஷ் இந்தியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு சுதந்திர நாடுகளாகப் பிரிந்தது. அப்போது ஏற்பட்ட மதக்கலவரத்தால் 10 முதல் 12 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். மற்றொன்று, 1948 பிரிட்டிஷ் குடியுரிமைச் சட்டம் மூலம் ஒவ்வொரு காமன்வெல்த் குடிமகனுக்கும் பிரிட்டன் செல்ல அனுமதி வழங்கியது.

Presentational grey line
Presentational grey line

பிரிவினையால் வாழ்க்கை சீர்குலைந்த பல மக்கள், பிரிட்டனை மீண்டும் கட்டியெழுப்ப உதவவும், புதிய வாழ்க்கையைத் தொடங்கவும் தங்கள் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளர் கொடுத்த அழைப்புகளுக்கு செவிசாய்த்தனர்.

இந்திய பிரிவினை

பட மூலாதாரம், Getty Images

1950 முதல் இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் ஏற்கனவே இந்த நகருக்கு வந்து வாழ்க்கையைத் தொடங்கிய தங்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது கிராமத்தினர் மூலமாக லெஸ்டர் நகருக்கு வரத்தொடங்கினர். செழிப்பானதாகவும் நிறைய வேலை வாய்ப்புகளும் இருந்ததால் லெஸ்டர் நகரம் அவர்களைக் கவரக்கூடியதாக இருந்தது.

புதிதாக வந்தவர்களில் பலர் முதலில், வடக்கு மற்றும் கிழக்கு லெஸ்டரில் உள்ள ஸ்பின்னி ஹில் பார்க் மற்றும் பெல்கிரேவ் சாலையைச் சுற்றியுள்ள மலிவு விலை தனியார் வீடுகளில் வசித்தனர்.

பெரும்பாலானோர் பஞ்சாபிலிருந்து வந்தவர்கள். அவர்கள் பிரிவினை மற்றும் மத வெறுப்பின் விளைவுகளைக் கண்ட சீக்கியர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள். லெஸ்டரில் இந்தியத் தொழிலாளர் சங்கம் மூலம் இனப் பிரச்னைகளைப் பற்றி பிரசாரம் செய்வதற்கும் சமத்துவத்திற்காகப் போராடுவதற்கும் அவர்கள் ஒன்றாக வேலை செய்தனர்.

1960களின் தொடக்கத்தில் இந்திய துணைக்கண்டத்தில் இருந்து அவர்களது மனைவிகளும் குழந்தைகளும் வந்து கணவனுடன் இணைந்து கொண்டனர். முன்பு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த டாங்கன்யிகா மற்றும் சான்சிபார் சுதந்திரம் பெற்றதால் அங்கு கட்டுப்பாடுகள் அதிகரித்தன. அதனால் அந்த தசாப்தத்தின் நடுப்பகுதியில் கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்த தெற்காசியர்கள், குறிப்பாக குஜராத்திகள் லெஸ்டருக்கு வரத் தொடங்கினர்.

1972 உகாண்டா ஆசிய மக்கள் ஸ்டஸ்டெட் விமான நிலையத்திற்கு வருகை

பட மூலாதாரம், Getty Images

பலர் பெல்கிரேவ், ருஷே மீட் மற்றும் லெஸ்டரின் மெல்டன் சாலை பகுதிகளில் குடியேறினர்.

1972இல் உகாண்டா பிரதமர் இடி அமீன் ஆசியர்களை வெளியேற்றியபோது, லெஸ்டர் நகர சபை அதிகமான வருகையை எதிர்பார்த்தது. பிரிட்டனில் குடியேற வந்த அகதிகள் மத்தியில் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் வகையில் உகாண்டா பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியாகின. இருப்பினும், நிறைய மக்கள் வந்தனர். சில்லறை விற்பனை, உள்ளாடைகள் மற்றும் உற்பத்தி உட்பட கிழக்கு ஆப்ரிக்க – ஆசிய சமூகத்தில் பலர் தங்கள் சொந்த வெற்றிகரமான வணிகங்களைத் தொடங்கினார்கள்.

1971ஆம் ஆண்டில் லெஸ்டரில் தெற்காசியாவைச் சேர்ந்த 20,190 பேர் இருந்தனர். முன்னாள் காலனிகளில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்ததும், தீவிர வலதுசாரி தேசிய முன்னணி உள்நாட்டில் பிரபலமடைந்தது.

லண்டனில் உள்ள எஸ்.ஓ.ஏ.எஸ். பல்கலைக்கழகத்தின் சீக்கிய மதம் மற்றும் பஞ்சாப் குறித்த படிப்புகளின் ஓய்வுபெற்ற பேராசிரியரான குர்ஹர்பால் சிங், தனது முழு வாழ்நாளையும் லெஸ்டரில் வாழ்ந்தார். இவர், 1964இல் பஞ்சாபிலிருந்து வந்தவர். இவரது தந்தை அந்த நகரில் இருந்த உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளராக இருந்தார்.

பள்ளி மற்றும் அண்டை வீட்டாரிடம் வளர்ந்து வந்த வெளிப்படையான இனவெறியையும், தெருக்களில் தேசிய முன்னணி அணிவகுத்துச் செல்வதைப் பார்க்கும்போது ஏற்படும் பயத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.

1976ஆம் ஆண்டு நடந்த உள்ளூர் தேர்தலில் தீவிர வலதுசாரிக் குழுவினர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றனர். அவர்கள் அபே வார்டில் 61 வாக்குகள் பெற்றனர். மேலும் நகரம் முழுவதும் மொத்த வாக்குகளில் 18% பெற்றனர். பத்தாண்டுகள் முழுவதும், இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் பிரிட்டிஷ் முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் இணைந்து பணியாற்றினர். ஆனால் சில நேரங்களில் இனவெறிக்கு எதிராக போராடுபவர்களுக்கும் தேசிய முன்னணிக்கும் இடையே மோதல்கள் நடந்தன.

1973 லண்டனில் குடியேறிகளுக்கு எதிராக நடந்த போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

1976ஆம் ஆண்டு சட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் இன உறவுகளுக்கு உள்ளூர் சபைகள் பொறுப்பாகிவிட்டன. மேலும் 1980களில் பிரிட்டிஷ் தெற்காசியர்கள் நகர சபையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டனர்.

உள்ளூர் அதிகாரசபை மத மற்றும் கலாசார நடவடிக்கைகளை மேம்படுத்துவதை ஏற்றுக்கொண்டது. அந்த தசாப்தத்தில் தீபாவளி, ரம்ஜான், வைசாகி ஆகிய பண்டிகைகள் ஆசிய பண்டிகைகளாக லெஸ்டர் நகரில் கொண்டாடப்பட்டன.

லெஸ்டர் பெரிய முன்மாதிரி நகரமாக மாறியதாகக் கூறுகிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் இனம் மற்றும் குடியுரிமை ஆய்வு மையத்தின் நிறுவன இயக்குநரான பேராசிரியர் தாரிக் மொடூட்.

1984ஆம் ஆண்டு பஞ்சாபில் உள்ள பொற்கோவிலில் இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் ஆயுதப் படையினர் நுழைந்தனர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் இந்த சம்பவத்தின்போது லெஸ்டரில் சீக்கிய தீவிரவாதிகளால் சில தாக்குதல்கள் நடத்தப்பட்டன என நினைவு கூர்கிறார் பேராசிரியர் சிங்.

2002ஆம் ஆண்டின் போது குஜராத்தில் இந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற தொடர் வண்டிஒன்று தீயீட்டு கொளுத்தப்பட்டதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த போது நிகழ்வுகளை, சிங் டிவியில் பார்த்து கொண்டிருந்தார். இதற்கு பிறகு கலவரங்கள் மூண்டன. 1947ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் இந்து மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையே மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் இதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.

2006 ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாட்டம்

பட மூலாதாரம், Getty Images

“அந்த கலவரம்தான் நடந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே 24 மணி நேர செய்திகளில் சர்வதேச ஊடகங்களால் கவரேஜ் செய்யப்பட்ட முதல் கலவர நிகழ்வு அது. லெஸ்டரில் சில வீதியில் போராட்டங்களை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் வன்முறை ஏதும் இல்லை. 2014ஆம் ஆண்டு இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய துணை கண்டத்தின் அரசியல் வேறு மாதிரியாக உணரப்பட்டது,” என்கிறார் பேராசிரியர் சிங்.

பாஜகவின் வளர்ச்சி லெஸ்டர் மக்களின் மத்தியில் புதிய தேசியவாதத்தை வளர்த்தது. “பாஜக குஜராத்தி இந்து சமுதாய மக்களிடையே பிரபலமாக உள்ளது. அது சமூகத்தின் பார்வையிலும் அரசியலிலும் பிரதிபலிக்கிறது.

லெஸ்டரில் மக்கள் தொகை விரிவாக்கம் சமீபத்தில் கூட மாற்றத்தை கண்டதாக சிங் தெரிவிக்கிறார்.

“தெற்காசிய மக்கள் தென் ஆப்ரிக்கா மற்றும் மலாவியிலிருந்து வந்தவர்கள், சிலர் இந்தியாவிலிருந்தும் வந்துள்ளனர். இவர்களில் பலர் கடும்போக்கு தேசியவாத கொள்கையுடன் வளர்ந்தவர்கள்.”

லெஸ்டரில் உள்ள தெற்காசிய மக்களுக்கு மேலும் பல சவால்கள் உள்ளன. சமூதாயங்கள் தனிதனியாக பிரிந்து செல்வதால் வேலையின்மை பிரச்னை வளர்கிறது. பல சமூக பிரச்னைகளும் உருவாகிறது. லெஸ்டரில் சில நாட்களாக சில பதட்டங்கள் நிலவி வந்தாலும் சமீபத்திய பதற்றம் எதனால் உருவானது என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தால் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்திய வன்முறையில் எடுத்ததாக இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இருதரப்பும் கூறும் காணொளிக்களில் இரு தரப்பும் கோபமாக உள்ளனர் என்பதை காட்டுகிறது.

கலவரம்

பட மூலாதாரம், Getty Images

இந்துக்கள் அதிகமாக உள்ள பகுதியில் முகத்தை மறைத்து கொண்ட நபர் ஒருவர் அலங்காரங்களை கீழே இழுத்து தள்ளுவதும், ஜன்னல்களில் தொங்குவதும் தெரிகிறது.

ஒரு காணொளியில் ஒரு நபர் இந்து கோவிலின் கூரைக்கு சென்று அங்குள்ள மத கொடியை கீழ தள்ளுகிறார். மற்றொரு காணொளியில் கொடிக்கு தீயிட்டு கொளுத்துவது தெரிகிறது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் தெருக்களில் பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆகஸ்டு மாதம் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இதை கேட்க முடிந்தது.

“சமீபமாக ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் ஒலித்தன. ஜெய் ஸ்ரீராம் என்பதற்கு ஆன்மிக ரீதியான பொருள் உண்டு. ஆனால் இது முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை கொண்ட இந்து கடும்போக்குவாதிகளாலும் பயன்படுத்தப்படுகிறது,” என்கிறார் பேராசிரியர் மோதூத். சமூக ஊடகங்களில் வேண்டுமென்றே போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன.

லெஸ்டரில் நடைபெற்ற வன்முறை நகருக்கு வெளியே உள்ளவர்களால் மேலும் தூண்டப்படுவதாக சொல்லப்படுகிறது. லெஸ்டரில் பல குடிபெயர்வுகள் நடந்துள்ளன. ஆனால் பிரிட்டிஷ் தெற்காசிய சமூக மக்களுக்கு இடையே நடைபெற்ற இந்த வன்முறை எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளது. இம்மாதிரியான வன்முறைகள் பிரிட்டனில் அதிலும் லெஸ்டரில் அரிதாகவே நடக்கும்.

பல ஆண்டுகளாக இந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் இந்த வன்முறையை கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்து போயுள்ளனர். இது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது என்கிறார் பேராசிரியர் மூதூத். பலதரப்பட்ட கலாசாரத்தை பார்த்த நகரத்தில் தற்போது அஞ்ச தகுந்த வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »