- எஸ்மி ஸ்டல்லார்ட், ஓவன் பின்னெல் & ஜெஸ் கெல்லி
- பிபிசி நியூஸ்
பட மூலாதாரம், HUSSEIN FALEH/BBC
பசுமை இல்ல வாயு வெளியேற்றம் தொடர்பான போதிய ஆதாரங்களைப் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் வழங்கவில்லை என்பது பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது.
பிபி, எனி, எக்ஸான்மொபில், செவ்ரான் மற்றும் ஷெல் ஆகிய நிறுவனங்களின் எண்ணெய் வயல்களில் எரியும் வாயுவிலிருந்து, மில்லியன் டன் கணக்கான அறிவிக்கப்படாத கார்பன் உமிழ்வை பிபிசி கண்டறிந்துள்ளது.
எண்ணெய் உற்பத்தியின்போது அதிகப்படியான வாயுக்கள் கழிவுகளாக வெளியேறுகின்றன.
இந்த வாயு வெளியேற்றம் பற்றிய தங்களது அறிக்கை, நிலையான தொழில் நடைமுறை என்று இந்த நிறுவனங்கள் கூறுகின்றன.
இப்படி எண்ணெய் வயல்களில் எரியும் வாயு காற்றை மாசுபடுத்தும், புவி வெப்பமடைதலைத் துரிதப்படுத்தும் கரியமில வாயு, மீத்தேன் மற்றும் கருப்புக் கரி ஆகியவற்றின் கலவையை வெளியிடுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள்
இராக்கில் எண்ணெய் வயல்களுக்கு அருகே வசிக்கும் மக்களின் உடலில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் இருப்பதையும் பிபிசி கண்டுபிடித்தது.
இந்த வயல்களில் உலகிலேயே அதிக அளவிலான அறிவிக்கப்படாத எரிப்பு நடந்துகொண்டிருப்பதும் பிபிசியின் ஆய்வில் தெரியவந்தது.
மனித ஆரோக்கியம், மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலைவிட இலாபம் மற்றும் தனியார் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் இந்தப் பகுதிகளை, நவீன தியாக மண்டலங்களோடு மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் டேவிட் பாய்ட் ஒப்பிடுகிறார்.
இராக்கின் பருவநிலை மாற்றத்தை மையமாகக் கொண்டு பிபிசி அரேபிய சேவை செய்த விசாரனையில் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு, குழந்தைகள் மற்றும் பூமியின் மீது அவை ஏற்படுத்தும் கொடிய தாக்கம் வெளிப்பட்டுள்ளது.
அவசர எரிப்பு தவிர மற்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டிய தேவையை இந்த நிறுவனங்கள் நீண்ட காலமாகவே உணர்ந்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
2030ஆம் ஆண்டிற்குள் வழக்கமாக எரியவிடுவதை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலான உலக வங்கியின் உறுதிமொழியை, பிபி, எனி, எக்ஸான்மொபில், செவ்ரான் மற்றும் ஷெல் ஆகிய நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. 2025ஆம் ஆண்டிற்குள் வழக்கமான எரிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக ஷெல் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
தினசரி செயல்பாடுகளை நடத்த பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதால் எரியும் உமிழ்வு குறித்து அறிவிப்பது அவர்களது பொறுப்பு என்று இந்த நிறுவனங்கள் கூறுகின்றன.
எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பகுதிகளாக இருக்கும் இந்த வயல்களில்தான், மேற்கண்ட ஐந்து நிறுவனங்களின் மொத்த உற்பத்தியில் 50 சதவிகித எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது.
எண்ணெய் வயல் அருகே வசிப்போருக்கு….
ஆனால், பிபிசியின் பல மாத ஆய்வின் முடிவில், எந்த நிறுவனங்களும் வாயு உமிழ்வு குறித்து அறிவிப்பதில்லை என்பது தெரியவந்துள்ளது.
உலக வங்கியின் எரிப்பு-கண்காணிப்பு செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்தி, இந்தத் தளங்களிலிருந்து வெளிப்படும் உமிழ்வின் அளவைக் கண்டறிய முடிந்தது. இந்த எரிப்புகளில், 2021ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 20 மில்லியன் டன் அளவிலான கரியமில வாயு உமிழ்வு பதிவாகவில்லை என்று மதிப்பிட்டுள்ளோம். இந்த அளவு ஓர் ஆண்டில் 4.4 மில்லியன் கார்கள் வெளியிடும் பசுமை இல்ல வாயு உமிழ்வுக்கு சமம்.
தாங்கள் நேரடியாக செயல்படும் தளங்களில் இருந்து மட்டுமே உமிழ்வுகள் பற்றி அறிக்கையளிக்கும் நடைமுறை, நிலையான தொழில் நடைமுறை என்று இந்த ஐந்து நிறுவனங்களும் கூறுகின்றன.
இயக்கப்படாத தளங்களில் வெளிப்படும் உமிழ்வுகள் உட்பட ஓட்டுமொத்த உமிழ்வு குறித்த விவரங்களையும் தாங்கள் வெளியிடுவதாக ஷெல் மற்றும் எனி நிறுவனங்கள் கூறுகின்றன.
இராக்கில் எண்ணெய் வயல்களுக்கு அருகே வசிப்பவர்களுக்கு சில வகை புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதையும் பிபிசி அரேபிய சேவையின் விசாரணை சுட்டிக்காட்டுகிறது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் வயல்களான பஸ்ரா, தென்கிழக்கு ஈராக்கில் உள்ள ருமைலா, மேற்கு குர்னா, ஜுபைர் மற்றும் நஹ்ரான் ஓமர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் மத்தியில் குழந்தைப் பருவ பார்வைகேமியா புற்றுநோய் அதிகரித்து வருவதாகவும், அதன் பின்னணியில் எண்ணெய் வயல்களின் எரிப்பு இருப்பதாகவும் நீண்ட காலமாகச் சந்தேகிக்கின்றனர்.

பட மூலாதாரம், HUSSEIN FALEH/BBC
பஸ்ரா பகுதியில் 2015 – 2018க்கு இடைபட்ட காலத்தில் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 மடங்கு அதிகரித்திருப்பது இராக் சுகாதாரத்துறையின் அறிக்கை கசிவு மூலம் தெரியவந்துள்ளது. பிபிசி அரேபிய சேவைக்கு கிடைத்த அந்த அறிக்கை, காற்று மாசுபாட்டை இதற்கு காரணமாகக் கூறுகிறது.
பிபி மற்றும் எனி நிறுவனங்கள் ருமைலா மற்றும் ஜுபைர் எண்ணெய் வயல்களில் முன்னணி ஒப்பந்ததாரர்களாக உள்ளன. ஆனால், அவர்கள் உமிழ்வுகளை அறிவிக்கவில்லை. அந்தத் தளத்தில் தினசரி வேலைகளைக் கவனிக்கும் ஒப்பந்த நிறுவனங்களும் அவற்றை அறிவிக்கவில்லை.
கடந்த 2021ஆம் ஆண்டு எண்ணெய் வயல்களுக்கு அருகேயுள்ள பகுதிகளில் சூழலியல் மற்றும் சுகாதார வல்லுநர்களுடன் இணைந்து எண்ணெய் எரிப்புடன் தொடர்புடைய புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப் பொருள்கள் குறித்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக பிபிசி அரேபிய சேவை சோதனை நடத்தியது.
அந்தச் சோதனை முடிவில், பார்வைகேமியா மற்றும் பிற ரத்தக் கோளாறுகளை ஏற்படுத்தும் பென்சீனின் அளவு, இராக்கின் தேசிய வரம்பைவிட அந்த நான்கு இடங்களில் அதிகமாக இருப்பது தெரியவந்தது.
குழந்தைகள் உடலில் புற்றுநோய்க் கூறுகள் அதிகரிப்பு
52 குழந்தைகளிடம் சேகரித்த சிறுநீர் மாதிரிகளில் 70 சதவிகிதத்தில், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய நாப்தலீனின் ஒரு வடிவமான 2-நாப்தலின் அளவு அதிகரித்திருப்பது தெரியவந்தது.
“இந்தக் குழந்தைகளின் உடலில் அதிக தாக்கம் உள்ளது. இது அவர்கள் உடல்நலம் குறித்தது என்பதால் அவர்கள் தொடர்ந்து நெருக்கமாக கண்கானிக்கப்பட வேண்டும்” என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் குழந்தைப் பருவப் புற்றுநோயியல் பேராசிரியர் மருத்துவர் மானுவேலா ஓர்ஜுவேலா-க்ரிம்.

பட மூலாதாரம், HUSSEIN FALEH/BBC NEWS
ஃபாத்திமா ஃபலாஹ் நஜேம் தமக்கு 11 வயதாக இருந்தபோது லிம்போநெகிழி (பிளாஸ்டிக்) பார்வைகேமியா எனப்படும் ரத்த மற்றும் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பென்சீனின் அதிகப்படியான வெளிப்பாடு இது மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும்.
எனி நிறுவனம் முன்னணி ஒப்பந்ததாரராக இருந்த ஜுபைர் எண்ணெய் வயல் அருகே பாத்திமா தனது பெற்றோர் மற்றும் ஆறு உடன்பிறப்புகளுடன் வசித்துவந்தார்.
எனி நிறுவனமோ, ஜூபைர் நிறுவனமோ எண்ணெய் எரிவதால் ஏற்படும் உமிழ்வு பற்றி அங்கு ஏதும் அறிவிக்கவில்லை.
உடல் நலக் காரணங்களுக்காக மக்கள் வசிக்கும் இடங்களில் இருந்து 6 மைல் தொலைவிற்கு எண்ணெய் வயல் எரிப்பை இராக் சட்டம் தடை செய்துள்ளது.
ஆனால், தொடர்ந்து எரியும் ஜுபைர் எண்ணெய் வயல் ஃபாத்திமா ஃபலாஹ் நஜேம் வீட்டின் முன்கதவில் இருந்து 1.6 மைல் தொலைவிலேயே உள்ளது.
தனது கீமோதெரபி சிகிச்சையின் போது, தனது வீட்டைச் சூழ்ந்திருந்த உமிழும் தீப்பிழம்புகளை பாத்திமா வரைந்தார்.
அவற்றைப் பார்ப்பது மகிழ்ச்சியளித்தாதாகவும், அவைப் பார்த்து பழகிவிட்டதாகவும் பிபிசியிடம் ஃபாத்திமா தெரிவித்தார்.
ஆனால், தன்னுடைய மகள் உடல்நிலை மோசமடைவதைப் பார்ப்பது அணைக்க முடியாத நெருப்பில் இருப்பதுபோல இருப்பதாக அவர் தந்தை தெரிவிக்கிறார்.
அவரது குடும்பத்தினர் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு தீவிரமாக முயன்று கொண்டிருந்த நிலையில், ஃபாத்திமா கடந்த நவம்பர் மாதம் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 13.

பட மூலாதாரம், ESS KELLY/BBC NEWS
இது குறித்து எனி நிறுவனத்திடம் கேட்டபோது, இராக் மக்களின் உயிரை தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஆபத்துக்குள்ளாக்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை உறுதியாக மறுத்தது.
ஜுபைர் எண்ணெய் வயல்கள் எரிவதற்கு ஒப்பந்த அடிப்படையில் தாங்கள் பொறுப்பில்லை என்றும் எனி நிறுவனம் கூறுகிறது.
பிபிசி கணக்கீட்டின்படி, உலகில் அதிக வாயுவை எரிக்கும் எண்ணெய் வயலான ரூமைலா அங்கிருந்து 25 மைல் தொலைவில் உள்ளது. இந்த வயலின் முன்னணி ஒப்பந்ததாரராக இருக்கும் பிபி நிறுவனம், வயலில் நடக்கும் எரிப்பு குறித்து ஏதும் அறிவிக்கவில்லை.
ஆனால், பிபி நிறுவனம் கையொப்பமிட்டுள்ள ஆர்.ஓ.ஓ.வின் செயல்பாட்டுத் தரநிலைகள், தேசிய வரம்புகளை மீறும் மாசு அளவுகளால் பாதிக்கப்படுபவர்கள் சட்டப்பூர்வமாக இழப்பீடு பெறத் தகுதியுடையவர்கள் என்று கூறுகிறது.
ஆனால், 2020 மற்றும் 2021ஆம் ஆண்டில் பிபியிடம் இழப்பீடு கேட்டபோது எந்தப் பதிலும் இல்லை என்கிறார் பார்வைகேமியா புற்றுநோயிலிருந்து உயிர்ப்பிழைத்த 19 வயதான அலி ஹுசைன் ஜூலூட்.
பிபிசி எழுப்பியுள்ள பிரச்னைகளால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். அவற்றை உடனடியாக மதிப்பாய்வு செய்வோம் என்று பிபி நிறுவனம் கூறியுள்ளது.
பஸ்ரா பகுதியில் புற்றுநோய் தொடர்பான கசிந்த அறிக்கை குறித்து, இராக்கின் எண்ணெய் வள அமைச்சர் இஹ்சான் அப்துல் ஜப்பார் இஸ்மாயில் பிபிசியிடம் பேசும்போது, எண்ணெய் வயல்களில் செயல்படும் அனைத்து ஒப்பந்த நிறுவனங்களையும் சர்வதேச தரத்துடன் செயல்பட அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார்.
உலக அளவில் இப்படி எண்ணெய் வயல்களில் எரியும் இயற்கை எரிவாயு மொத்தத்தையும் சேர்த்தால் அது ரஷ்யாவில் இருந்து ஐரோப்பா இறக்குமதி செய்யும் எரிவாயு அளவில் 10-ல் 9 மடங்குக்கு அதிகமாக இருக்கும் என்று சர்வதேச எரிசக்தி முகமையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பட மூலாதாரம், ESSAM ABDULLAH MOHSIN/BBC NEWS
உலக வங்கியின் கூற்றுப்படி, எரியும் வாயுவை சேகரிப்பது ஆரம்பத்தில் செலவு மிக்கதாகவும், தொழில்நுட்ப ரீதியாக கடினமாகவும் இருக்கலாம். அனைத்து வழக்கமான எரிப்பையும் முடிவுக்கு கொண்டுவர 100 பில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எண்ணெய் வயல்களில் எரியும் வாயு மொத்தத்தையும் சூழலில் இருந்து பிரித்து அகற்றுவது குறித்து எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் கேப்டெரியோவின் தலைமை நிர்வாகி மார்க் டேவிஸ் பிபிசியிடம் பேசுகையில், நார்வே போன்ற நாடுகள் உறுதியான ஒழுங்குமுறை உதவியுடன் இதைச் சாத்தியப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com