Press "Enter" to skip to content

நிலத்தடியில் 20,000 மக்கள் வசித்த ரகசிய நகரம் – கோழிகள் மூலம் உலகிற்கு தெரியவந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

துருக்கியில் அமைந்துள்ள கப்படோசியாவின் காதல் பள்ளத்தாக்கு வழியாக நான் நடந்தபோது வேகமாக வீசிய காற்றால் புழுதிப் பறந்தது. இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிற மலைச்சரிவுகள் அந்த நிலப்பரப்பை ஆழமான சிவப்பு பள்ளத்தாக்குகளுடன் வண்ணமயமாக்கின.

மேலும், தூரத்தில் புகைக்கூடு போன்ற பாறை வடிவங்கள் தெரிந்தன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கொந்தளிப்பான எரிமலைச் சூழல் இயற்கையாகவே இந்தக் கோபுரங்களை உருவாக்கியுள்ளது. மத்திய துருக்கியில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு சுற்றுப்பயணமும் அதனூடே வெப்பக்காற்று பலூன் சவாரியில் ஈடுபடவும் மில்லியன் கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

ஆனால், கப்படோசியாவின் இடிந்து விழும் மேற்பரப்பிற்கு கீழே, 20,000 மக்களின் வாழ்விட ரகசியத்தை மறைத்து வைத்திருக்கும் ஒரு நிலத்தடி நகரம் பல நூற்றாண்டுகளாக மறைந்திருந்தது.

இன்று டெரிங்குயு என அழைக்கப்படும் பழங்கால நகரமான எலெங்குபு, பூமியின் மேற்பரப்பிலிருந்து 85 மீட்டருக்கு மேலான ஆழத்தில் 18 நிலைகளில் குகைப்பாதைகளை சூழ்ந்திருந்தது. உலகிலேயே மிகப்பெரிய அளவில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட இந்த நிலத்தடி நகரம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது. கிரேக்க-துருக்கியப் போரின்போது அடைந்த தோல்வியை அடுத்து, 1920களில் இந்த நகரம் கப்படோசியன் கிரேக்கர்களால் கைவிடப்பட்டது. அதன் குகை போன்ற அறைகள் நூற்றுக்கணக்கான மைல்கள் நீளத்தில் அமைந்திருப்பது மட்டுமல்லாமல், இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் தனித்தனி நிலத்தடி நகரங்களும் இந்தக் குகைப் பாதைகளுடன் இணைக்கப்பட்டு, பூமிக்கடியில் பெரிய வலையமைப்பை உருவாக்கிருக்கலாம் என தோன்றுகிறது.

எனது பயண வழிகாட்டியான சுலேமானின் கூற்றுப்படி, டெரிங்குயு 1963 ஆம் ஆண்டில் உள்ளூர்வாசி ஒருவரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தன்னுடைய வீட்டை புதுப்பித்தபோது, அவருடைய கோழிகள் தொடர்ந்து காணாமல் போயின. புதுப்பிக்க தோண்டப்பட்ட குழிக்குள் நுழையும் கோழிகள், பின்னர் காணாமல் போய்விடும். இது தொடர்ந்து நடைபெறவே, அந்த இடத்தை அவர் தோண்டியபோது ஓர் இருளடைந்த பாதையைக் கண்டுபிடித்தார்.

டெரிங்குயுவின் இந்த நிலத்தடி நகரத்திற்கு செல்லும் 600 நுழைவுவாயில்கள் தனியார் வீடுகளுக்குள் இருப்பதை கண்டுபிடிப்பதற்கு வழிகோலிய, முதல் முயற்சி இதுதான்.

உடனடியாக தொடங்கிய அகழ்வாராய்ச்சியில், நிலத்தடி குடியிருப்பு, உலர் உணவு சேமிப்பு, கால்நடை தொழுவங்கள், பள்ளிகள், வைன் ஆலைகள் மற்றும் ஒரு தேவாலயம் ஆகியவற்றின் சிக்கலான வலையமைப்பு வெளிப்பட்டது. ஒரு முழு நாகரிகமும் பாதுகாப்பாக நிலத்தடியில் அங்கு புதைந்திருந்தது. அதன் பிறகு, ஆயிரக்கணக்கான துருக்கிய சுற்றுலாப்பயணிகள் அந்த இடத்திற்கு வருகை தர ஆரம்பித்தனர். பின், 1985ஆம் ஆண்டு யுனஸ்கோவின் பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் டெரிங்குயு இணைக்கப்பட்டது.

நிலத்தடியில் 20,000 மக்கள் வசித்த ரகசிய நகரம்

பட மூலாதாரம், Getty Images

இந்த நகரம் எப்போது உருவானது என்பது பற்றி உறுதியான தகவல்கள் இல்லை. ஆனால், கி.பி. 370இல் எழுதப்பட்ட செனோபோனின் அனபாசிஸ் புத்தகத்தில் டெரிங்குயு பற்றிய குறிப்புகள் உள்ளன. அந்தப் புத்தகத்தில், கப்படோசியா பகுதியில் அல்லது அதற்கு அருகில் இருந்த அனடோலியன் மக்கள், அப்பகுதியில் நன்கு அறியப்பட்ட குன்று ஓர குகைக் குடியிருப்புகளைவிட, நிலத்தடியில் தோண்டப்பட்ட வீடுகளில் வசித்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மண்ணில் நீர் பற்றாக்குறை காரணமாக தனிசிறப்பான நிலத்தடி கட்டுமானம், இளகிய மற்றும் எளிதில் வடிவமைக்கும் தன்மை கொண்ட பாறைகள் இந்தப் பகுதியில் அமைந்திருப்பதால் கப்படோசியா இந்த வகையான நிலத்தடி கட்டுமானத்திற்கு மிகவும் பொருத்தமானது என்கிறார் புளோரிடா ஸ்டேட் பல்கலைக்கழக பழங்கால ஆய்வுகளின் இணைப் பேராசிரியரான ஆண்ட்ரியா டி ஜியோர்ஜி.

இந்தப்பகுதியின் நில அமைப்பு, தோண்டுவதற்கு உகந்தது என்றும் மண்வெட்டி மற்றும் பிகாக்ஸ் உதவியுடனே இந்தப் பாறைகளைத் தோண்ட முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால், டெரிங்குயுவின் நிலத்தடி நகரத்தை யார் உருவாக்கினார்கள் என்பது மர்மமாகவே உள்ளது. நிலத்தடி குகைகளின் பரந்த வலையமைப்பிற்கான அடித்தளத்தை ஹிட்டியர்களது வரலாற்றில் பார்க்க முடிகிறது, “கிமு 1200இல் ஃபிரிஜியர்களின் தாக்குதலுக்கு ஆளானபோது அவர்கள் பாறையில் முதல் சில நிலைகளை தோண்டியிருக்கலாம்” என்கிறார் மத்தியதரைக் கடல் நிபுணர் ஏ பெர்டினி. குகை குடியிருப்புகள், பிராந்திய குகை கட்டடக்கலை பற்றிய அவரது கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கும் இந்தக் கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில், ஹிட்டியர்களின் கலைப்பொருட்கள் டெரிங்குயுவின் உள்ளே காணப்பட்டன.

இருப்பினும், நகரத்தின் பெரும்பகுதி ஃபிரிஜியன்களால் கட்டப்பட்டிருக்கலாம். “பிரிஜியர்கள் அனடோலியாவின் மிக முக்கியமான ஆரம்பகால பேரரசுகளில் ஒன்று” என்கிறார் டி ஜியோர்ஜி.

பிரிஜியர்கள் கி.மு.வின் ஆயிரம் ஆண்டுகால இறுதியில் மேற்கு அனடோலியா முழுவதும் பரவியிருந்தனர். பாறை அமைப்புகளை நினைவுச் சின்னமாக்குதல் மற்றும் பாறை வெட்டு முகப்புகளை உருவாக்குவதற்கான திறமை அவர்களிடம் இருந்தது என்றும் டி ஜியோர்ஜி கூறுகிறார்.

நிலத்தடியில் 20,000 மக்கள் வசித்த ரகசிய நகரம்

பட மூலாதாரம், Getty Images

டெரிங்குயு முதலில் பொருட்களை சேமிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான தற்காலிக புகலிடமாகவே அவை இருந்தன. கப்படோசியா பல நூற்றாண்டுகளாகப் பேரரசுகளின் தொடர் படையெடுப்பை எதிர்கொண்டது.

7ஆம் நூற்றாண்டு இஸ்லாமியத் தாக்குதல்களின் போது இந்தக் குடியிருப்புகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன. ஃபிரிஜியன்கள், பெர்சியர்கள், செல்ஜுக்குகள் மற்றும் பலர் இப்பகுதியில் வசித்து வந்தனர். அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் நிலத்தடி நகரம் விரிவடைந்தது. பைசண்டைன் சகாப்தத்தில் டெரிங்குயுவின் மக்கள் தொகை அதன் உச்சத்தை எட்டி, கிட்டத்தட்ட 20,000 குடியிருப்பாளர்கள் நிலத்தடியில் வாழ்ந்தனர்.

இன்று, வெறும் 60 துருக்கிய லிராவுக்கு நிலத்தடி வாழ்க்கையின் கொடூரமான யதார்த்தத்தை நீங்கள் சுற்றிப்பார்க்க முடியும். கருகிப்போன கறை படிந்த சுவர்கள் கொண்ட அந்தக் குகைக்குள் நான் இறங்கியதும், எனக்குள் அச்சம் ஏற்பட்டது. இருப்பினும், டெரின்குயு மீது படையெடுத்த பல்வேறு பேரரசுகளின் புத்திக் கூர்மை வெளிப்படையாகத் தெரிந்தது. படையெடுப்பாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே குறுகலாக உருவாக்கப்பட்டிருந்த நடைபாதைகளால் பார்வையாளர்கள் குனிந்து செல்ல வேண்டியிருந்தது.

அரை டன் வட்ட வடிவ கற்பாறைகள் ஒவ்வொரு 18 நிலைகளுக்கும் இடையில் கதவுகளைத் தடுத்து, உள்ளே இருந்து மட்டுமே நகரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்தன. கதவுகளின் மையத்தில் படையெடுப்பாளர்களைக் குறிவைத்து ஈட்டி எறிவதற்கான சிறிய துளைகள் இருந்தன.

“நிலத்தடி வாழ்க்கை ஒருவேளை மிகவும் கடினமாக இருந்திருக்கலாம்” என்கிறார் என் பயண வழிகாட்டி சுலேமான்.

இங்கு வசித்தவர்கள் முத்திரை செய்யப்பட்ட களிமண் ஜாடிகளில் தங்களைத் தாங்களே ஆசுவாசப்படுத்திக் கொண்டு, டார்ச்லைட் மூலம் வாழ்ந்தனர். இறந்த உடல்களை ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அப்புறப்படுத்தினர் என்றும் அவர் கூறினார்.

இந்த நகரத்தின் ஒவ்வொரு மட்டமும் குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளில் இருந்து வெளிப்படும் வாசனை மற்றும் நச்சு வாயுக்களைக் குறைக்க மேற்பரப்புக்கு அருகிலேயே அவற்றுக்கான தொழுவம் அமைக்கப்பட்டுள்ளது.

நகரின் உள்அடுக்குகளில் குடியிருப்புகள், பாதாள அறைகள், பள்ளிகள் மற்றும் சந்திப்பு இடங்கள் இருந்தன. இரண்டாவது மாடியில் அமைந்துள்ள ஒரு பாரம்பரிய பைசண்டைன் மிஷனரி பள்ளி, அதன் தனித்துவமான பீப்பாய்-வால்ட் கூரைகளால் அடையாளம் காணக்கூடியது. ஓயின் தயாரித்ததற்கான ஆதாரங்கள் பாதாள அறைகளில் இருந்தன. இந்தச் சிறப்பு அறைகள், டெரிங்குயுவில் வசிப்பவர்கள் மேற்பரப்பிற்கு அடியில் பல மாதங்கள் செலவழிக்கத் தயாராக இருந்ததைக் காட்டுகிறது.

நிலத்தடியில் 20,000 மக்கள் வசித்த ரகசிய நகரம்

பட மூலாதாரம், Getty Images

இங்கு அமைந்துள்ள ஒரு சிக்கலான காற்றோட்ட அமைப்பு மற்றும் பாதுகாக்கப்பட்ட கிணறு கவனம் ஈர்க்கக் கூடியதாக இருந்தது. இது முழு நகரத்திற்கும் சுத்தமான காற்று மற்றும் சுத்தமான தண்ணீரை வழங்கியிருக்கும். உண்மையில், டெரிங்குயுவின் ஆரம்பக்கால கட்டுமானம் இந்த இரு அத்தியாவசிய கூறுகளை மையமாகக் கொண்டது எனக் கருதப்படுகிறது. அந்தக் கிணறு கீழே இருந்து எளிதாக துண்டிக்க கூடிய வகையில் 55 மீட்டருக்கும் கீழே தோண்டப்பட்டிருந்தது.

டெரிங்குயுவின் கட்டுமானம் உண்மையில் புத்திசாலித்தனமாக இருந்தபோதிலும், இது கப்படோசியாவில் உள்ள ஒரே நிலத்தடி நகரம் அல்ல. 445 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரம், அனடோலியன் சமவெளிக்கு அடியில் அமைந்துள்ள 200 நிலத்தடி நகரங்களில் பெரியது மட்டுமே. 40க்கும் மேற்பட்ட சிறிய நகரங்கள் இதைவிட மூன்று மடங்கு ஆழமான நிலத்தடியில் அமைந்துள்ளன. அவற்றில் சில டெரிங்குயுவுடன் குகை வழிப்பாதை மூலமாக இணைந்துள்ளன.

மேற்பரப்புக்கு உடனடியாகத் திரும்புவதற்கான அவசரகால தப்பிக்கும் வழிகள் இந்த நகரங்கள் அனைத்திலும் உருவாக்கப்பட்டுள்ளன. கப்படோசியாவின் நிலத்தடி ரகசியங்கள் இன்னும் முழுமையாகத் தோண்டப்படவில்லை. 2014ஆம் ஆண்டில், நெவ்செஹிர் பகுதிக்கு அடியில் ஒரு புதிய பெரிய நிலத்தடி நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெரிங்குயுவின் வரலாறு, 1923இல் கப்படோசியன் கிரேக்கர்கள் வெளியேறியபோது முடிவுக்கு வந்தது. நகரம் உருவாக்கப்பட்டு 2,000 ஆண்டுகளுக்குப் பிறகு, டெரிங்குயு கடைசியாக கைவிடப்பட்டது. டெரிங்குயு அதே இடத்தில் இருந்தாலும், சில கோழிகள் இந்த நிலத்தடி நகரத்தை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் வரை அதன் இருப்பு நவீன உலகத்திற்கு மறந்துவிட்டது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »