Press "Enter" to skip to content

கான்ஃபிடன்ஸ் மேன்: டிரம்ப் மகளை பணி நீக்க நினைத்தது முதல் ஆவணங்களை கழிவறையில் அழித்தது வரை

  • நாடின் யூசுஃப்
  • பிபிசி நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தன் மகளை முக்கிய அரசு பொறுப்பிலிருந்து நீக்க நினைத்தார், மேலும் அரசு ஆவணங்களை கழிவறையில் போட்டு ‘ஃபிளஷ்’ செய்தார்.

இதுபோன்ற இன்னும் பல ஆச்சரியகரமான, முன்பு அறிந்திராத தகவல்கள் பல, நியூயார்க் டைம்ஸ் ஊடகவியலாளர் மேகி ஹேபர்மேனின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கான்ஃபிடன்ஸ் மேன்’ புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம் செவ்வாய்க்கிழமை அன்று வெளியாகியுள்ளது.

டொனால்டு டிரம்ப் நியூயார்க் தொழிலதிபராக இருந்த காலம் முதல் அமெரிக்க அதிபர் பதவிக்கு பின்னான வாழ்க்கை வரை இந்த புத்தகம் அவரை பின் தொடர்ந்துள்ளது. டிரம்பின் முன்னாள் உதவியாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோரின் பேட்டிகள், டிரம்ப் உடனான மூன்று பேட்டிகள் அடங்கிய தகவல்களுடன் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

ஹேபர்மேனை தன்னுடைய சமூக ஊடக தளத்தில் விமர்சித்துள்ள டொனால்டு டிரம்ப், இந்த புத்தகம், “எவ்வித உண்மை சரிபார்ப்பும் இன்றி, பல புனைவு கதைகளை” இப்புத்தகம் கொண்டுள்ளதாக எழுதியுள்ளார்.

சிவப்புக் கோடு

இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள டிரம்ப் குறித்த எட்டு முக்கிய தகவல்கள்:

சிவப்புக் கோடு

1) இவான்கா மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை பணிநீக்கம் செய்ய விரும்பினார் டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அரசியல் ஆலோசகர் ஜான் கெல்லி மற்றும் முன்னாள் சட்ட ஆலோசகர் டான் மெக்கான் உடனான கூட்டம் ஒன்றில், அரசின் மூத்த ஆலோசகர் பொறுப்பில் உள்ள தன் மகள் இவான்கா மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் இருவரும் தங்கள் பணியிலிருந்து விலகியதாக டிரம்ப் கிட்டத்தட்ட ட்வீட் செய்யும் நிலைக்குச் சென்றதாக, ஹேபர்மேன் எழுதியுள்ளார்.

ட்வீட் பதிவிடுவதற்கு முன்னர், இவான்கா மற்றும் குஷ்னர் இருவரிடமும் முதலில் பேசுமாறு ஆலோசனை வழங்கி தடுத்து நிறுத்தியுள்ளார் கெல்லி. ஆனால், இருவரிடமும் டிரம்ப் கடைசிவரை பேசாத நிலையில், அவர் அதிபர் பதவியில் இருந்த காலம் முழுவதும் இருவரும் அப்பதவியில் தொடர்ந்து நீடித்தனர்.

தன்னுடைய மருமகன் குஷ்னர் குறித்து டிரம்ப் தொடர்ச்சியாக குறைத்து மதிப்பிட்டே பேசி வந்துள்ளார் என புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டில் குஷ்னர் பொதுமேடை ஒன்றில் ஆற்றிய உரை குறித்து, “சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது” என டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

இவான்கா மற்றும் அவருடைய கணவரை பணிநீக்கம் செய்ய தான் விரும்பவில்லை என மறுத்துள்ள டிரம்ப், “இது முற்றிலும் புனைவு. என்னுடைய சிந்தனையில் கூட இது தோன்றவில்லை,” என தெரிவித்துள்ளார்.

இவான்கா டிரம்ப்

பட மூலாதாரம், @GES2017

2) மெக்சிகோ போதைப்பொருள் ஆய்வகங்களில் வெடிகுண்டு வீச நினைத்தார் டிரம்ப்

மெக்சிகோவின் போதைப்பொருள் ஆய்வகங்களின்மீது வெடிகுண்டு வீச சில முறை டிரம்ப் நினைத்ததாக ஹேபர்மேன் எழுதியுள்ளார். டிரம்பின் இந்த பரிந்துரை, அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பெரை திகைக்க வைத்துள்ளது.

பொதுச் சுகாதார அதிகாரியும் பொதுச் சுகாதார சேவை பிரிவில் அட்மிரலாகவும் உள்ள பிரெட் கிரோய்ர் என்பவருடன் நடத்திய உரையாடலின்போதே டிரம்பிற்கு இந்த யோசனை தோன்றியுள்ளது.

டிரம்பின் அலுவல்பூர்வ அறைக்கு, பொதுச் சுகாதார அதிகாரிகள் வழக்கமாக அணியும் சீருடையில் சென்ற கிரோய்ர், மெக்சிகோவில் சட்டத்திற்கு புறம்பான போதை மருந்துகளை உற்பத்தி செய்யும் ஆய்வுக்கூடங்கள், எல்லையை தாண்டி வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

அவருடைய உடையை கண்டு கிரோய்ர் ராணுவ அதிகாரி என தவறாக நினைத்த டிரம்ப், அத்தகைய போதை மருந்து ஆய்வகங்கள் மீது வெடிகுண்டு வீச பரிந்துரைத்தார். இதன் தொடர்ச்சியாக, கிரோய்ர் தன் சீருடையை அணிவதை நிறுத்த வேண்டும் என, வெள்ளை மாளிகை கேட்டுக்கொண்டது.

3) கொரோனா தொற்றால் இறப்பதை நினைத்து பயந்தார் டிரம்ப்

அக்டோபர் 2020ல் டிரம்ப், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது, அவருடைய உடல்நிலை மோசமானது, அப்போது இறப்பை குறித்து டிரம்ப் பயந்துள்ளார்.

அப்போது அவருடைய துணை ஆலோசகர் டோனி ஆர்னட்டோ, டிரம்பின் உடல்நிலை மேலும் மோசமடைந்தால், அரசாங்கம் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள நேரிடும் என தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றை மட்டுப்படுத்துவதற்கான பல முயற்சிகளுக்கு மத்தியிலும் அவருக்கு இந்த பயம் நீடித்தது, கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தன்னுடைய பிம்பம் மீதும் அரசியல் நோக்கங்கள் மீதும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் வருந்தினார். தன்னை சுற்றியிருந்த உதவியாளர்கள் தங்கள் முகக்கவசங்களை கழற்ற வேண்டும் என்றும் தொலைக்காட்சியில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) குறித்து பேச வேண்டாம் எனவும், அப்போதைய நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோவிடம் டிரம்ப் கேட்டுக்கொண்டதாகவும் ஹேபர்மேன் எழுதுகிறார்.

“இதனை பெரிதாக்க வேண்டாம்,” என்று க்யூமோவிடம் டிரம்ப் கூறியதாக அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நீங்கள் அதை ஒரு பிரச்னையாக்கப் போகிறீர்கள்” என்று டிரம்ப் கூறியுள்ளார்.

4) பிரிட்டன் பிரதமர் உடனான கூட்டத்தில் தன் சொத்து குறித்து குறிப்பிட்ட டிரம்ப்

டிரம்பிற்கும் உலக தலைவர்களுக்குமான சில உரையாடல்கள் குறித்து ஹேபர்மேனின் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு, அப்போதைய பிரிட்டன் பிரதமர் தெரெசா மே உடனான முதல் சந்திப்பில், டிரம்ப் கருக்கலைப்பு குறித்து பேசியுள்ளார். அப்போது, “சிலர் கருக்கலைப்புக்கு எதிராகவும், சிலர் அதற்கு ஆதரவாகவும் உள்ளனர். டாட்டூ குத்திய சில மிருகங்கள் உங்கள் மகளை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாகியதாக நினைத்துப் பாருங்கள்?” என்று கூறியுள்ளார்.

அதன்பின்னர், பேச்சை மாற்றிய டிரம்ப், வட அயர்லாந்தில் தனக்கு சொந்தமான இடத்திற்கு அருகில் கடலில் காற்றாலைகள் அமைக்கும் திட்டத்தை எப்படி தடுப்பது என்பது குறித்து விவாதித்தார்.

தெரெசா மே

பட மூலாதாரம், தெரெசா மே

5) 2020 தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு “எதையாவது செய்யுமாறு” கூறிய டிரம்ப்

2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் டிரம்ப் தோற்கப் போகிறார் என்பது வெளிப்படையாக தெரிந்தநிலையில், டிரம்ப் அப்போதையை நியூயார்க் மேயரும் தன்னுடைய வழக்குரைஞருமான ரூடி க்யூலியானியை அழைத்துப் பேசினார்.

அப்போது, “ஓகே, ரூடி, நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ எல்லாவற்றையும் செய்யுங்கள். நான் பொருட்படுத்தப் போவதில்லை,” என டிரம்ப் கூறியுள்ளார். இதனிடையே, மற்ற வழக்குரைஞர்கள் டிரம்புக்கு ஏற்றவாறு தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு செயல்பட மறுத்துவிட்டனர்.

“என்னுடைய வழக்குரைஞர்கள் பயங்கரமானவர்கள்,” என க்யூலியானிடம் டிரம்ப் கூறியதாக அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வெள்ளை மாளிகை வழக்குரைஞர் பேட் சிபோலோனை தொடர்ச்சியாக வசைபாடியுள்ளார் டிரம்ப்.

அச்சமயத்தில் டிரம்ப் சதி கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டதாகவும், தன்னுடைய சொந்த ஆலோசகர்களே ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த வழக்குரைஞர்களை அவர் தேடி சென்றதாகவும் அப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

6) வருமான வரி குறித்து அறிவிக்காத டிரம்ப்

2016 தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் விமானத்தில் அவருடைய பரப்புரை மேலாளர் கோரே லேவண்டோவ்ஸ்கி மற்றும் அவருடைய ஊடக செயலாளர் ஹோப் ஹிக்ஸ் இருவரும், வருமான வரிக்கணக்கை வெளியிட மறுத்ததைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

அப்போது, டிரம்ப் ஒரு யோசனைக்குப் பின் பின்னால் சாய்ந்துகொண்டே, “என்னுடைய வரிகள் தணிக்கை செய்யப்படுகின்றன என்பது உங்களுக்கு தெரியும்” என கூறியதாக ஹேபர்மேன் எழுதியுள்ளார்.

“எனவே நான் சொல்வது என்னவென்றால், ‘நான் தணிக்கையில் இல்லாதபோது அவற்றை வெளியிடுவேன்” என கூறியுள்ளார்.

ரிச்சர்ட் நிக்சன் முதல் ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் தானாகவே வருமான வரிகணக்கை வெளியிட்டுள்ளனர். டிரம்ப் அதிபராக பதவியேற்ற ஆண்டில் 750 அமெரிக்க டாலர்களை வருமான வரியாக செலுத்தினார் என்று, 2020ம் ஆண்டு வெளியான புலன் விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது.

7) ஆவணங்களை வெள்ளை மாளிகை கழிவறையில் அழித்த டிரம்ப்

டிரம்ப் அதிபராக இருந்தபோது வெள்ளை மாளிகை கழிவறை, அச்சிடப்பட்ட தாள்களால் பலமுறை அடைபட்டதை வெள்ளை மாளிகை பணியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால், டிரம்ப் ஆவணங்களை கிழித்து கழிவறையில் ‘ஃபிளஷ்’ செய்திருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர்.

மேலும் ஆவணங்களை அவர் கிழித்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இது அமெரிக்க அதிபர் பதிவுச்சட்டத்தை மீறுவதாகும். இச்சட்டத்தின்படி, அதிபரால் உருவாக்கப்படும் அல்லது பெறப்படும் ஆவணங்கள், அமெரிக்க அரசுக்கு சொந்தமானவை, மேலும், அதிபர் பதவிக்காலம் முடிவுற்ற பின்னர் அவை அமெரிக்க தேசிய பதிவுகளின்கீழ் கையாளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆட்சிக்காலம் முடிவுற்ற பின்னரும் அரசாங்க பதிவுகளை புளோரிடாவில் உள்ள தன்னுடைய மார்-எ-லாகோ எஸ்டேட்டில் வைத்திருந்தது தொடர்பாகவும், டிரம்ப், நீதித்துறை விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

8) இனச் சிறுபான்மை பணியாளர்களை வெயிட்டர்கள் என கருதிய டிரம்ப்

2017 ஆம் ஆண்டு பதவியேற்ற சிறிது நேரத்திலேயே ஒரு கூட்டத்தில், டிரம்ப் இனரீதியாக வேறுபட்ட ஜனநாயகக் கட்சி ஊழியர்களிடம் திரும்பி, அவர்களை வெயிட்டர்கள் என தவறாக கருதி, கேனாப்களை (உணவுவகை) எடுத்து வரச் சொன்னார்.

செனட்டர் சக் ஷுமர் மற்றும் பிரதிநிதி நான்சி பெலோசி ஆகியோரின் ஊழியர்களிடம் டிரம்ப் இவ்வாறு தெரிவித்ததாக புத்தகம் விவரிக்கிறது.

மேலும், ஓரின சேர்க்கையாளர்கள் குறித்து விரும்பத்தகாத கருத்துக்களை டிரம்ப் கூறியதாகவும் ஹேபர்மேன் தன் புத்தகத்தில் ஆவணப்படுத்தியுள்ளார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »