Press "Enter" to skip to content

நோயாளிகளை மோசமாக நடத்திய மனநல காப்பகம்: ரகசியமாக புகுந்து ஆதாரங்களைத் திரட்டிய பிபிசி

  • ஆலன் ஹஸ்லாம்
  • பிபிசி பனோரமா

பட மூலாதாரம், Emma Lynch/BBC

ஒரு பலவீனமான இளம் பெண் ஒரு தடிமனான கண்ணாடி ஜன்னலின் உட்புறத்தில் பூட்டப்பட்டிருந்தார். அப்படியோர் அழுகையை நான் இதுவரை கேட்டதே இல்லை.

மணிக் கணக்காக நான் அந்தச் சிறிய அறைக்கு வெளியே உட்கார்ந்து, தன்னை வெளியே விடுமாறு அவர் கெஞ்சியவாறு இருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஒரு சுகாதார துணை ஊழியராக நான் பிபிசி பனோரமாவுக்காக ரகசியமாகத் தகவல் சேகரிக்க வேலை செய்த மூன்று மாதங்களில் என்னைத் துன்புறுத்திய நினைவு இது.

பிரிட்டனின் மிகப்பெரிய மனநல மருத்துவமனைகளில் ஒன்றான மான்செஸ்டருக்கு அருகிலுள்ள ப்ரெஸ்ட்விச்சில் உள்ள ஈடன்ஃபீல்ட் மனநல காப்பகத்தில் ஊழியர்களின் நடத்தை மற்றும் நோயாளிகள் பாதுகாப்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ரகசியமாக ஊழியரைப் போல் சென்றேன்.

நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு இதுவோர் அச்சமூட்டும் இடமாக இருக்கலாம்.

ஆலன் ஹஸ்லாம்

முதன் முறையாக மருத்துவமனையின் கதவுகள் வழியாக ஒரு ரகசிய ஒளிக்கருவி (கேமரா)வோடு, என்னை திடப்படுத்திக் கொண்டு, இதயத் துடிப்பின் வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு சென்றபோது, நிச்சயமாக மாட்டிக்கொள்வேன் என்றே நினைத்தேன். ஆனால் சிக்கவில்லை.

நான் பல மாதங்கள் இதற்காகத் தயாராகி, சுகாதார நிபுணர்களோடு சேர்ந்து நடித்துப் பழகினேன். பிபிசி ஏற்பாடு செய்த பயிற்சி, பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளுக்கு அடிப்படை கவனிப்பை அளிக்கவும் வன்முறை சூழ்நிலைகளைத் தணிக்கவும் முடியும் என்ற நம்பிக்கையை எனக்குக் கொடுத்தது.

ஆனால், இதையெல்லாம் மருத்துவமனை அறிந்திருக்கவில்லை.

வேலையைத் தொடங்குவதற்கு முன்பு, ஈடன்ஃபீல்ட் கிரேட்டர் மான்செஸ்டர் மனநல மருத்துவமனையை நடத்தும் என்.எச்.எஸ் அறக்கட்டளை எனக்கு பணிச்சூழல், பணியிடம் குறித்த ஒருநாள் இணையவழி வகுப்பை எடுத்தது.

அதற்குப் பிறகு, நான் வார்டில் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வரை நோயாளிகளை கவனித்துக் கொண்டிருந்தேன்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

எனக்கு ஒரு மணிநேரத்திற்கு 9.51 யூரோ ஊதியம் வழங்கப்பட்டது. சில பல்பொருள் அங்காடிகள் தங்கள் அலமாரிகளை அடுக்கி வைப்பதற்குச் செலுத்தும் ஊதியத்தைவிட மிகவும் குறைவாகவே ஊதியம் கிடைத்தது.

ஈடன்ஃபீல்ட் ஒரு நடுத்தர அளவிலான பாதுகாப்பு கொண்ட மனநல காப்பகம். பிராட்மூர், ராம்ப்டன் போன்ற நன்கு அறியப்பட்ட உயர்பாதுகாப்பு மருத்துவமனைகளில் இருந்து ஒரு படி குறைவு. இங்குள்ள நோயாளிகள் தங்களுக்கு அல்லது பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் அபாயம் உள்ளதால், அவர்கள் மனநல நோயாளிகள் சட்டத்தின்கீழ் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நடைமுறையில், மிகவும் பாதிக்கப்படக்கூடிய, மிகுந்த உணர்திறன் கொண்ட நோயாளிகள், சமீபத்தில் மனநல பிரச்னைகளைக் கொண்டிருப்பதாக சிறையிலிருந்து மாற்றப்பட்ட குற்றவாளியான கொலைகாரருடன் சேர்ந்து வாழ்வதைக் காணலாம்.

அவர்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், ஒன்றாக வாழ்கிறார், ஒருவரோடு ஒருவர் பழகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடன்ஃபீல்ட் மையம்

தனிமைப்படுத்துவதற்கான அறைகளின் பயன்பாடுதான் நான் சந்தித்த பல அதிர்ச்சிகளில் முதன்மையானது. இந்த விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பு மனநல மருத்துவமனையில் காலடி எடுத்து வைக்காத என்னைப் போன்ற ஒருவருக்கு இதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம்.

பூட்டி வைக்கப்படும் நோயாளிகள்

ஒரு சிறிய, சுவரிலிருந்து சில மீட்டர்கள் இட வசதி கொண்ட சதுர வடிவிலான படுக்கையறையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதில் தரை விரிப்புகள், அலமாரிகள், மேசைகள், கண்ணாடிகள், மின் விளக்குகள், படங்கள் எதுவுமே இல்லை. நீங்கள் ஜன்னலை திறக்க முடியாது. நீங்கள் தூங்கும்போது, குளியலறைக்குச் செல்லும்போது என்று 24 மணிநேரமும் ஒருவர் உங்களைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார். இதுதான் தனிமைப்படுத்துவதற்கான அறை. நீங்கள் தகுதியானவர் என்று வேறு யாரோ ஒருவர் தீர்மானிக்கும் வரை நீங்கள் அந்த அறையை விட்டு வெளியேற முடியாது.

இது மிகத் தீவிர நிகழ்வுகளின்போது, தேவையான குறுகிய காலத்திற்கு, சம்பந்தப்பட்டவர்கள் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதைத் தடுப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஒரு பெண் ஓராண்டுக்கும் மேலாக இப்படி அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஊழியர்கள் என்னிடம் கூறினார்கள்.

இந்த அறைகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ள நோயாளிகளைக் கவனிப்பதில் நான் பல மணிநேரம் செலவிட்டேன். அவர்களில் சிலர் என் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். வலுவான லட்சியங்கள், தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் விருப்பங்களைக் கொண்ட தெளிவான, வேடிக்கையான மற்றும் கடும் புத்திசாலிகளான இளைஞர்களுடன் நான் முற்றிலும் இயல்பான உரையாடல்களை மேற்கொண்டேன்.

ஆனால், அதற்குப் பதிலாக இந்த நோயாளிகள் தங்கள் வாழ்க்கையைக் கட்டமைக்க வேண்டிய வயதில் இங்கு பூட்டப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, ஈடன்ஃபீல்ட் உண்மையில் அவர்களை மோசமாக்குவதாகவும் என்னிடம் கூறினார்கள்.

ஆலன் ஹஸ்லாம்

அது சில நேரங்களில் சிறைச்சாலையைப் போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்தியது. சாவிக் கொத்து ஏற்படுத்தும் சத்தம், ஒவ்வொரு கதவுகளிலும் உள்ள கனமான பூட்டுகள் அனைத்தும் நீங்கள் மருத்துவமனையில் இருப்பதை மறக்கடிக்கலாம்.

மருத்துவர்கள் இல்லை உதவியாளர்கள்தான்

மனநல மருத்துவர்களையும் மனநல ஆலோசகர்களையும் பார்க்க வேண்டிய மருத்துவமனையில், பெரும்பாலான நேரம் அவர்களை அங்கு பார்க்கவே முடியவில்லை. என்னைப் போன்ற உதவியாளர்கள் தான் நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிட்டனர்.

அவர்களில் பெரும்பாலோர் தங்கள் நாட்களை புகை பிடிப்பது, இசை காணொளிகளைப் பார்ப்பது என்றே செலவிட்டனர். இதுவே அசாத்தியமாக எந்த ஈடுபாடுமற்ற மிகச் சாதாரண இருப்பாக இருக்க வேண்டும்.

கள எதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அதிக நேரம் மேலாளர்கள் வார்டுகளில் இருப்பதில்லை என்று ஊழியர்கள் என்னிடம் தெரிவித்தனர்.

ஒரு வார்டிலுள்ள ஓர் உதவியாளர், அந்த வார்டை “மிகவும் ஆபத்தான சர்ச்சைகளைக் கொண்டது” என்று விவரித்தார். மற்றொருவர், இந்த மருத்துவமனை “மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது,” என்றார்.

மூத்த தலைமையோ மேலாளர்களோ இல்லாத நிலையில், ஒரு வினோதமான இயக்கவியல் அங்கு உருவானது. ஊழியர்களின் நடத்தைகள் விசித்திரமாக, சில நேரங்களில் குழந்தைத் தனமாகவும் சிலநேரங்களில் மிகக் கொடூரமாகவும் இருந்தன.

பளபளக்கும் க்ளிட்டர்களை ஒருவர் மீது ஒருவர் வீசி சண்டையிட்டு விளையாடி இரவுப் பணிகளைக் கழிப்பதாக ஊழியர்கள் என்னிடம் தெரிவித்தனர். ஒரு நாள் காலையில், வார்டில் தூங்கிக் கொண்டிருந்த நோயாளிகளைக் கவனிக்காமல் மூத்த உதவியாளர் வார்டின் வெளிப்புறத்தில் கால்பந்து விளையாடுவதைக் கண்டேன். அதுமட்டுமின்றி, ஊழியர்கள் பணிநேரத்தில் தூங்கிக் கொண்டிருப்பதையும் கண்டேன்.

ஈடன்ஃபீல்டில் ஒலிவியா

அதே வேளையில், நோயாளிகள் முன்னிலையிலும் சரி வார்டுக்கு வெளியிலும் சரி அவர்கள் பேசக்கூடிய மொழி நடை சிலநேரங்களில் திகிலூட்டும்.

22 வயதான ஒலிவியா, தான் கிண்டல் செய்யப்படுவதாகவும், “எல்லா நேரத்திலும்” திட்டப்படுவதாகவும் என்னிடம் கூறினார். மருத்துவமனை தன்னை “அனைத்து வழிகளிலும்” மோசமாக்கிவிட்டது என்று அவர் என்னிடம் கூறினார். ஏன் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஊழியர்கள் தன்னை மிகவும் வெளிப்படையாக மோசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் அவரை “குண்டு” என அழைத்ததாகவும் அவர் கூறினார். அவர் சிரமப்பட்ட நேரத்தில் ஊழியர்கள் அவருக்குப் பின்னால், அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். ஒரு செவிலியர் அவரைச் சென்று கவனிக்கவும்கூட மறுத்தார்.

மேலோட்டமாகப் பார்த்தால், அவர் வேறு எந்த 22 வயது பெண்ணிடமிருந்தும் வித்தியாசமாகத் தெரியவில்லை. ஆனால், அவர் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டவர். பலமுறை தன் வாழ்வை முடித்துக்கொள்ள முயன்றுள்ளார்.

ஒலிவியா மட்டுமே நான் கவனித்துக் கொண்ட பெண் நோயாளி இல்லை. ஆட்டிசம் கொண்ட 23 வயது பெண் ஹார்லி, ஒரு வகையான அரக்கியாக மருத்துவமனை முழுவதும் பேசப்பட்டார். பெரும்பாலான ஊழியர்கள் அவரது சிக்கலான தேவைகளைப் பற்றி மிகச் சிறிதளவே இரக்கமும் புரிதலும் கொண்டிருந்தனர்.

அவர் சிலநேரங்களில் கூச்சலிடுவார். அவர் ஊழியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாக என்னிடம் கூறப்பட்டது. ஆனால், தான் தூண்டிவிடப்பட்டதற்கே எதிர்வினையாற்றியதாக அவர் என்னிடம் கூறினார்.

ஹார்லி தொலைந்துபோன வாழ்க்கையைப் பற்றிய தெளிவான புரிதலுடன் மிகவும் வெளிப்படையாக இருப்பதைக் கண்டேன். அவருக்குத் தேவையானதை அவர் பெறவில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால், உடைந்துபோகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

ஆலன் ஹஸ்லாம்

அவரைக் கட்டுப்படுத்தி வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்த வேண்டும் என்று மேலாளர்கள் ஒப்புக்கொண்டபோது நான் அவருடைய அறையில் இருந்தேன். தரையிலிருந்த மெத்தையிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு, தரையில் அவரது முகத்தை அழுத்திப் பிடித்தபோது, ஹார்லி கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

அது மிகவும் பயங்கரமாக இருந்தது.

நான் அறையை விட்டு வெளியேறி, அந்த நாளின் மற்ற பணிகளைத் தொடர வேண்டியிருந்தது. ஆனால், என் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது அது மீண்டும் என்னை கவலைகொள்ளச் செய்தது. ஒரு பல்பொருள் அங்காடியின் தேர் நிறுத்துமிடத்திற்குச் சென்ற நேரத்தில் உடைந்து போயிருந்தேன், கைகள் நடுங்கின, கண்ணீர் வழிந்தது. எதுவும் என்னை இந்த அளவுக்கு வருந்த வைத்ததில்லை.

பல நோயாளிகள் தாங்கள் கைவிடப்பட்டதைப் போல் உணர்கிறார்கள். ஈடன்ஃபீல்ட் போன்றதோர் இடத்திற்கு யார் வேண்டுமானாலும் அனுப்பப்படலாம் என்பது அச்சுறுத்தக்கூடியதாக உள்ளது.

பலரும் தப்பிக்கவே முடியாத அடைப்பிடத்திற்குள் சிக்கிவிட்டதைப் போல் உணர்கிறார்கள். பலர் குணமடைவதை நான் பார்க்கவில்லை. அவர்கள் குணமடைய உதவக்கூடிய சிகிச்சை மிகச் சிறிதளவே நடந்தது.

ஆலன் ஹஸ்லாம்

பட மூலாதாரம், Emma Lynch/BBC

இனி என்ன நடக்கும்?

நான் சேகரித்த ஆதாரங்கள், நோயாளிகள் பராமரிப்பில் உண்மையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

இந்த நோயாளிகளுக்கு கண்ணியத்துடனும் மனிதாபிமானத்துடனும் சிகிச்சை பெறும் உரிமை உண்டு. அதோடு அவர்களுடைய குரல் முறையாகக் கேட்கப்பட வேண்டும். அவர்களில் சிலர் இந்த உலகத்தில் மறக்கப்பட்டு விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது.

ஆனால், நிச்சயமாக நான் அவர்களை மறக்க மாட்டேன்.

சிவப்புக் கோடு

கிரேட்டர் மான்செஸ்டர் மனநல மருத்துவமனையின் என்.எச்.எஸ் அறக்கட்டளை குற்றச்சாட்டுகளை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் கூறியது.

பல ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறை, சுகாதார ஒழுங்குமுறை பாதுகாப்பு ஆணையம் மற்றும் என்.எச்.எஸ் பிரிட்டன் ஆகியவற்றுடன் இணைந்து அறக்கட்டளை செயல்படுகிறது.

மூத்த மருத்துவர்கள், சம்பந்தப்பட்ட நோயாளிகளை மதிப்பாய்வு செய்துள்ளனர். ஈடன்ஃபீல்டின் சேவைகள் பற்றிய ஒரு சுயாதீனமான மருத்துவ ஆய்வு மேற்கொள்ள அறக்கட்டளை உத்தரவிட்டுள்ளது.

“எங்கள் நோயாளிகள், அவர்களுடைய குடும்பத்தினர், பராமரிப்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் எங்கள் ஊழியர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்தக் குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டு, நாங்கள் சேவை செய்யும் அனைத்து சமூகங்களுக்கும் ஒவ்வொரு நாளும் சிறந்த கவனிப்பை வழங்குவதை உறுதி செய்வோம்,” என்று அறக்கட்டளை தரப்பு கூறியது.

கிரேட்டர் மான்செஸ்டர் காவல் துறையினர் இதுகுறித்த குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Banner

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »