பட மூலாதாரம், WHO
ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் மரணம் அடைந்ததற்கு இந்தியாவில் தயாரான 4 இருமல் மருந்துகளுக்குத் தொடர்பு இருப்பதாக கூறி, உலக சுகாதார நிறுவனம் ‘மருந்து எச்சரிக்கை குறிப்பு’ விடுத்துள்ளது.
இந்த மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் சிறுநீரக காயங்கள் காரணமாக குழந்தைகள் இறந்தது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புலனாய்வுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மெய்டன் ஃபார்மாசூட்டிகல் நிறுவனத்திடமும், இந்திய அதிகாரிகளிடமும் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டு விசாரணைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த சிரப்புகளின் விற்பனையை நிறுத்தும்படி மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய சுகாதார அமைச்சகமோ, மருத்துவ ஒழுங்குமுறை அமைப்போ இதுவரை கருத்து ஏதும் கூறவில்லை.
மெய்டன் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திடம் கருத்து கேட்டு பிபிசி மின்னஞ்சல் அனுப்பியது.


செப்டம்பர் 29ம் தேதி இந்த விவகாரம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக சில வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கு உள்ளான 4 இருமல் சிரப்புகளின் மாதிரிகளைப் பரிசோதனை செய்து தாங்கள் கண்டுபிடித்ததை உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குனர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியோசஸ் புதன்கிழமை அறிவித்தார்.
உலக சுகாதார நிறுவனம் கண்டுபிடித்தது என்ன?
மனித உடலுக்கு நஞ்சாகக் கூடிய, சாப்பிட்டால் உயிரைப்பறிக்கக் கூடிய டை எத்திலின் கிளைகோல் மற்றும் எத்திலின் கிளைகோல் ஆகிய பொருள்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு இந்த சிரப்பில் கலந்து இருந்ததை ஆய்வகப் பகுப்பாய்வுகள் காட்டியதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நான்கு மருந்துகளும் காம்பியாவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், முறைசாரா சந்தைகள் மூலம் வேறு சில நாடுகளிலும் இந்த மருந்துகள் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
“அந்தந்த நாடுகளின் தேசிய மருந்து ஒழுங்குமுறை அமைப்புகள் பகுப்பாய்வு செய்யும்வரை இந்த மருந்து பேட்ச்கள் அனைத்தும் பாதுகாப்பற்றவை என்று கருதப்பட வேண்டும்,” என்றும் அது கூறியுள்ளது.
உலகில் உற்பத்தியாகும் மருந்துகளில் மூன்றில் ஒரு மடங்கு இந்தியாவில் உற்பத்தியாகின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஜெனரிக் மருந்துகளாகும்.
உலகின் மிகவேகமாக வளரும் மருந்து நிறுவனங்களைக் கொண்டுள்ள, ‘உலகின் மருந்துக்கூடம்’ என்று அறியப்படுகிற இந்தியா, ஆப்பிரிக்க நாடுகளின் மருந்துத் தேவைகளை பெருமளவில் நிறைவு செய்கிறது.


தற்போது சர்ச்சைக்குள்ளாகிய மருந்துகளைத் தயாரிக்கும் மெய்டன் ஃபார்மாசூட்டிகல் நிறுவனம் ஹரியாணா மாநிலத்தில் அமைந்துள்ளது என்றும், ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இந்த நிறுவனம் மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது என்றும் கூறுகிறது ராய்டர்ஸ் செய்தி முகமை.
காம்பியாவில் டஜன் கணக்கான குழந்தைகளுக்கு தீவிரமான சிறுநீரகப் பிரச்னை வந்ததை அடுத்து கடந்த ஜூலை மாதம் இது குறித்த எச்சரிக்கை எழுப்பினார்கள் காம்பியாவில் உள்ள மருத்துவத்துறை அதிகாரிகள்.
இந்த மருந்துகளின் விற்பனையை தங்கள் நாடு தடை செய்திருப்பதாகவும், கடந்த சில வாரங்களில் இத்தகைய மரணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் காம்பியாவின் சுகாதார சேவைகள் இயக்குநர் முஸ்தபா பிட்டாயே ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார்.
“ஆனாலும், இந்த சிரப்புகள் இன்னும் சில தனியார் மருத்துவமனைகளில் விற்கப்படுகின்றன,” என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com