- நிகில் இனாம்தார்
- பிபிசி வணிகத் துறை செய்தியாளர், மும்பை
பட மூலாதாரம், Apple
ஆப்பிள் நிறுவனம் தமது அதி நவீன செல்பேசி மாடலான ஐபோன்14 தயாரிப்புப் பணியை இந்தியாவில் நடத்த இருப்பதாக கடந்த வாரம் அறிவித்தது.
தங்கள் நிறுவனப் பொருள்களின் தயாரிப்புப் பணியை சீனாவுக்கு வெளியே பரவலாக்கவேண்டும் என்ற அந்த நிறுவனத்தின் திட்டத்தை செயல்படுத்துவதில் இது முக்கிய மைல் கல்.
ஐபோன் 14 மாடலின் தயாரிப்புப் பணியில் 5 சதவீதம் இந்த ஆண்டே இந்தியாவுக்கு வரவிருக்கிறது. ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததைவிட மிக விரைவாக இது நடக்கிறது.
2025க்குள் இந்நிறுவனம் உருவாக்கும் கால்வாசி ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என, ஜேபி மோர்கன் முதலீட்டு வங்கியின் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


2017 முதல் இந்தியாவில் தமிழ்நாட்டில் ஐபோன்களை தயாரித்து வருகிறது ஆப்பிள் நிறுவனம்.
சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான வணிக பதற்றங்கள் தணிவதற்கான அறிகுறிகள் காணப்படாத நிலையில், ஆப்பிள் நிறுவனம் தங்களின் மிக முக்கியமான ஐபோன் மாடலை இந்தியாவில் தயாரிக்கும் திட்டம் கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது.
சீனாவின் “ஜீரோ – கோவிட்” கொள்கையால் ஏற்பட்ட ஆபத்துகளை நீக்குவதற்கான ஆயத்த நடவடிக்கைகள் உலக விநியோக சங்கிலியில் நடைபெற்றுவருவதன் பின்னணியில், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
‘சீனா பிளஸ் ஒன்’
சீனாவில் கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக தொழில்கள் முடக்கம் மற்றும் விநியோக சங்கிலியில் பெரிய அளவிலான இடையூறுகள் ஏற்பட்டன.
இதன் விளைவாக, சர்வதேச நிறுவனங்கள், சீனாவில் மட்டும் முதலீடு செய்வதை தவிர்த்து, வேறுதிசையில் கவனம் செலுத்தும் “பிளஸ் ஒன்” உத்தியை கையாளத் தொடங்கின.
“சீனாவில் கொள்கை மாற்றம் ஏற்படுவதற்காக காத்துக்கொண்டு உட்கார்ந்திருக்க நிறுவனங்கள் இனி தயாராக இல்லை,” என லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான டி.ஹெச்.எல் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஆஸ்கார் டீ போக் பிபிசியிடம் தெரிவித்தார்.
“தங்களுக்கு இரண்டு அல்லது மூன்று மாற்று வாய்ப்புகள் இருப்பதை நிறுவனங்கள் உறுதி செய்துகொள்ள விரும்புகின்றன,” என தெரிவித்த அவர், சூழலுக்கு ஏற்ப இவ்வாறு தகவமைத்துக்கொள்ளும் போக்கினால், இந்தியா, வியட்நாம் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் பயன்பெறும் என்றார்.
டி.ஹெச்.எல். நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்களின் சேமிப்புத் திறன் மற்றும் பணியாளர்களை இரட்டிப்பாகும் நோக்கில், 500 மில்லியன் யூரோ மதிப்பீட்டிலான முதலீடு குறித்து அறிவிப்பு வெளியிடுவதற்காக, இந்தியாவின் பொருளாதார தலைநகரமான மும்பையில் ஆஸ்கார் டீ போக் உள்ளார்.
இந்தியாவை தங்களின் உற்பத்தி மையமாக உருவாக்கும் நோக்கிலான நிறுவனங்களுக்கு நரேந்திர மோதி அரசாங்கம் வழங்கும் ஊக்கத் தொகையால், தயாரிப்பு மற்றும் மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட துறைகளில் வெளிநாட்டு முதலீடுகள் வளர்ந்துவரும் நிலையில், தங்கள் நிறுவனம் இத்தகைய முயற்சிகளை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் (பி.எல்.ஐ) ஒருபகுதியாக, வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம், சுமார் 20 பில்லியன் டாலர்கள் முதலீட்டில், தைவானின் மின்சாதன உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கானுடன் இணைந்து இந்தியாவில் குறைக்கடத்தி (செமி கண்டக்டர்) ஆலையை அமைக்கவுள்ளன.
வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் கடந்த மாதம் கூறுகையில், “சீனா பிளஸ் ஒன்’ உத்தியை சர்வதேச நிறுவனங்கள் எதிர்நோக்கி வரும் நிலையில், “இந்தியா உண்மையில் அதற்கொரு சிறப்பான இடம்” என தெரிவித்தார்.
இந்தியாவுக்கான அனுகூலங்கள்
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்தியா, பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக ஆவதற்கு கடுமையாக முயன்று வருகிறது.
இந்தியாவிடம் பெரிய அளவிலான உள்நாட்டு சந்தை மற்றும் குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கத் தயாராக மனித வளம் ஆகியவை உள்ளன.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6-7 சதவீதமாக உள்ள நிலையில், மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பணவீக்கம் குறைவாக உள்ளது. இந்த ஆண்டு சிறப்பாக செயலாற்றும் பெரும் பொருளாதாரம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
வணிகப் பொருட்கள் ஏற்றுமதி கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக 300 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் தேங்கியிருந்த நிலையில், தற்போது அது 400 பில்லியன் டாலர்கள் என்ற மதிப்பீட்டை கடந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நிதி உதவிகள் தவிர்த்து இந்தியாவை உலக விநியோக சங்கிலியில் இணைப்பதற்கும் தொழில் பேச்சுவார்த்தைகளில் மெதுவாக செயலாற்றும் நாடு என்ற பிம்பத்தை மாற்றுவதற்கும், இருநாட்டு தொழில் ஒப்பந்தங்களுக்கு நரேந்திர மோதி அரசாங்கம் பெரிய அளவிலான ஊக்கத்தை அளித்துவருகிறது.
தொழில் நிறுவனங்கள் இத்தகைய முயற்சிகளை வரவேற்றுள்ளன.
ஆனால், வணிக தாராளமயமாக்கலில் இந்தியாவின் முயற்சிகள் ஒரு படி முன்னே சென்றால், மூன்று படிகள் பின்னே செல்லும் விதத்தில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சந்தை அணுகலை மேம்படுத்துதல், கட்டணங்களைக் குறைத்தல், தடையற்ற வர்த்தக உடன்படிக்கைகள் ஆகியவற்றுக்கான தேவை தற்போது எழுந்துள்ளது. சுமார் 3,000 பொருட்கள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சுயசார்புக்கான கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
சமமான வாய்ப்பு மற்றும் பாதுகாப்பை வழங்குவதில் உள்ள போதாமை குறித்து பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் புகார் கூறுகின்றன.


இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கருதப்படும் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தியாவின் மிகச் சிக்கலான அரசு நடைமுறைகளை கடந்து செல்வதில் இன்னும் இடர்பாடுகள் தொடர்கின்றன. தடையற்ற ரீதியில் நிலம் கையகப்படுத்தும் வகையிலான மாற்றங்கள் மற்றும் வேகமாக உரிமங்களை வழங்குதல் ஆகியவை, இன்னும் பிடிபடாத ஒன்றாகவே உள்ளன என, நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், பலவீனமான உள்கட்டுமானம் ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது.
“இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு வெற்றி பெற்ற ஒன்றாகும், ஆனால், இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் பெரிய முதலீடுகள் மட்டும் போதாது. மாறாக, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான சூழலும் தேவை,” என, அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் இயக்குனர் மிஹிர் ஷர்மா தெரிவிக்கிறார்.
“இந்த முதலீடுகள் எண்ணிக்கையில் எப்படி இருக்கும், அவை இங்கு நிலைத்திருக்குமா என்பது குறித்து இப்போதே கூறுவது மிகவும் கடினம்,” என அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிய சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மோதியின் நிதி ஊக்கத்தொகை திட்டத்தில் விடுபட்டுள்ளன என, ஷர்மா தெரிவித்தார்.
அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் கூற்றுப்படி, டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை நிறுவனங்கள் தவிர்த்து, இந்தியாவிற்கு ஏற்றுமதி ரீதியிலான வளர்ச்சியின் ‘பிளஸ்-ஒன்’ உத்தியை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் தொகுப்பில் சேரும் 1 கோடியே 20 லட்சம் இந்தியர்களுக்கு வேலைகளை உருவாக்கவும் உதவும் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த திட்டத்தின்கீழ் இணைக்கப்படவில்லை என்று கூறுகிறது.
மற்ற ஆசிய நாடுகளுடன் போட்டியிடும் வகையிலான “வரவேற்கத்தக்க வணிகச்சூழலை” இந்தியா உருவாக்க வேண்டும் என்றும், வேலைகளில் இணைபவர்களுக்கு திறன் மேம்பாட்டை அளிக்க வேண்டும் எனவும் ஷர்மா கூறினார்.
எளிதில் தொழில் புரிவதற்கான உலக வங்கியின் தரவரிசையில், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கும் மேலான இடத்தில் உள்ளன. அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான ஒருங்கிணைந்த உள்கட்டுமான காரிடாரை 2030ம் ஆண்டுக்குள் அமைப்பதற்கான மக்கள் விரும்பத்தக்கதுடர் பிளான் ஒன்றை வியட்நாம் உருவாக்கியுள்ளது.
மாற்றம் ஏற்படுமா?
இத்தகைய சவால்கள் இருந்தாலும், இந்த “வரலாற்று வாய்ப்பை” பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்தியா சிறந்த இடத்தில் இருப்பதாக, ஹின்ரிச் ஃபவுண்டேஷனில் ஆய்வில் ஈடுபட்டு வரும் அலெக்ஸ் கேப்ரி கூறுகிறார்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனாவிலிருந்து விலகிச் செல்வதால், தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் வடக்கில் டெல்லி நகரம் போன்றவை, உற்பத்தியில் ஒரு முக்கியமான மையமாக உருவாக நன்கு தயாராக உள்ளன என்று அவர் கூறுகிறார்.
இது மாநிலங்களுக்கிடையே போட்டி சகாப்தத்தை கட்டவிழ்த்துவிட வாய்ப்புள்ளது.
மற்ற நட்பு நாடுகளுக்கு நிறுவனங்கள் இடம்பெயர்வதால், மலிவான திறமைகள் எளிதில் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்ள, தைவான் தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவும் பயனடையலாம், என்று கேப்ரி மேலும் கூறுகிறார்.
மாற்றத்திற்கான புள்ளியா இது?
“இந்தியாவை சேர்ந்த என்னுடைய நண்பர் ஒருவர் தெரிவித்தார். வாய்ப்பை தவறவிடுவதற்கு எப்போதும் இந்தியா வாய்ப்பை தவறவிடுவதில்லை என்று. ஆனால், இம்முறை வேறுமாதிரி நிகழும் என நினைக்கிறேன்,” என கேப்ரி கூறினார்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com