Press "Enter" to skip to content

இஎம்எஸ் உடைகள்: ஜிம்மில் நீங்கள் செலவிடும் நேரத்தை குறைக்குமா? – நிபுணர்கள் சொல்வது என்ன?

  • ஸ்டாவ் டிமிட்ரோபோலஸ்
  • வர்த்தக செய்தியாளர்

பட மூலாதாரம், LEBBY EYRES

நீண்ட தூரம் படகோட்டும் விளையாட்டு வீராங்கனையான லெபி ஏயர்ஸ் முதன்முறையாக இ.எம்.எஸ் எனப்படும் முழு உடல் மின் தசை தூண்டுதல் உடையை அணிந்துகொண்டு உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்தபோது, அது விசித்திரமான அனுபவத்தைத் தந்ததாகக் கூறுகிறார்.

அந்த உடைக்குள் என்னுடைய உடலை நுழைத்ததும், பயிற்சியாளர்கள் என் மீது தண்ணீர் தெளித்தனர். பின்னர், அந்த உடையை என்னுடைய கைகள், கால்கள் மற்றும் பிட்டத்தைச் சுற்றி கட்டினார்கள். இதை அணிந்து கொண்டு நம்மால் உடற்பயிற்சி செய்ய முடியுமா என்று நினைத்தேன்” என்கிறார் 51 வயதான லெபி ஏயர்ஸ். அதன் பிறகு, அந்த உடை தனக்கு வழக்கத்திற்கு மாறான உணர்வை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார்.

லண்டனில் உள்ள வீட்டில் மறுநாள் காலை எழுந்தபோது, சில மணி நேரங்கள் உடற்பயிற்சி செய்தால் ஏற்படும் வலியை உணர்ந்ததாக அவர் கூறுகிறார். ஆனால், லெபி ஏயர்ஸ் 20 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்திருந்தார்.

மனித இயக்கத்தை முடக்கும் பக்கவாதம், நரம்பியல் மண்டலத்தின் மத்திய பகுதியை பாதிக்கும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற நோய்களில் இருந்து மீண்டு வருபவர்களின் இயக்கத்தை மேம்படுத்த இந்த இஎம்எஸ் முறை நீண்டகாலமாகவே மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

தசைகள் மற்றும் நரம்புகளைத் தூண்டுவதற்கு குறைந்த மின்னோட்டத்தைப் பயன்படுத்தும் இந்தச் செயல்முறையை, பிரசவத்தின் போது வலியைக் குறைப்பதற்காக ‘டென்ஸ் மெஷின்’ வடிவில் பிரசவிக்கும் பெண்கள் பயன்படுத்துகிறார்கள். கீழ் முதுகில் இந்தக் கருவியின் பட்டையை பொருத்திவிட்டு கையடக்கக் கட்டுப்படுத்தி மூலம் அந்தப் பட்டையில் இருந்து வெளிப்பட வேண்டிய மின்னோட்டத்தின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

வலியை குறைக்க இந்த இ எம் எஸ் முறை பயன்படுத்தப்பட்டு வந்தது

பட மூலாதாரம், Getty Images

மருத்துவப் பயன்பாட்டிற்காக உடலின் குறிப்பிட்ட பகுதியில் இந்த முறை பிரயோகிக்கப்பட்ட நிலையில், தற்போது முழு உடலுக்கான இஎம்எஸ் உடைகள் பயன்படுத்தும் போக்கு உடற்பயிற்சி ஆர்வலர்களிடையே அதிகரித்துவருகிறது.

இந்த உடைகள் உங்கள் தசைகளில் மின் தூண்டுதலை ஏற்படுத்தி, உடற்பயிற்சி மற்றும் வலுவூட்டலின் விளைவைத் துரிதப்படுத்துகிறது. இந்த உடை அணியாமல் 90 நிமிடங்களுக்கு நீங்கள் செய்யும் உடற்பயிற்சியை, இந்த உடை அணிந்து 20 நிமிடங்களுக்குச் செய்தால் போதும்.

இது கற்பனையாகத் தெரிந்தாலும், இஎம்எஸ் உடைகள் வழங்கும் உடற்பயிற்சிக் கூடங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரான்சில் 100க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி மையங்களைத் திறந்து, ஐரோப்பாவில் தொடர்ந்து விரிவடைந்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்த ‘அயர்ன் பாடிஃபிட்’டும் இந்தச் சேவையை வழங்கிவருகிறது.

இந்த வளர்ச்சியானது இஎம்எஸ் உடைகளின் உலகளாவிய சந்தை மதிப்பை அதிகப்படுத்துகிறது. 2020இல் 122 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் அதன் சந்தை மதிப்பு 2030ஆம் ஆண்டில் 51 சதவிகிதம் அதிகரித்து 184 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என ஓர் அறிக்கை கூறுகிறது.

சில ஜிம்களில் இந்த இ எம் எஸ் உடைகள் பரிந்துரைக்கப்படுகின்றன

பட மூலாதாரம், Getty Images

இஎம்எஸ் ஃபிட்னெஸ் துறையில் உண்மையிலேயே பலனளிக்கிறதா? உடற்பயிற்சியின் செயல்திறனை மேம்படுத்தி குறைந்த முயற்சியில் தசைகளை விரிவாக்குகிறதா?அதைவிட மேலாக, பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதா?

“நாம் மூளையைக் கடந்து செல்கிறோம், மூளை தசைகளைத் தூண்டுவதைவிட நாம் சிறந்த மற்றும் திறமையான வழியில் தசைகளைத் தூண்ட முடியும்” என்கிறார் இஎம்எஸ் உடைகளின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒருவரான ஜெர்மனியை சேர்ந்த மிஹா பாடிடெக் நிறுவனத்தின் பிரிட்டனுக்கான இயக்குநர் பில் ஹார்டன்.

சிறிய மின் தூண்டல் ஆழமான தசை திசுக்களை எளிதில் சென்றடையும் எனக் கூறும் அவர், கடத்துத்திறனை அதிகரிக்க அதன் மீது அடிக்கடி தண்ணீர் தெளிக்கப்படும் என்கிறார்.

ஃபிட்னெஸ் உலகில் இஎம்எஸ் உடைகள் பலனளிக்குமா என்பது தொடர்பான ஆய்வில் கலவையான முடிவுகளே கிடைத்துள்ளன. கிடைத்திருக்கும் சாதகமான முடிவுகள்கூட உறுதியுடன் கூறப்படவில்லை.

இஎம்எஸ் தொடர்பான கடந்த 2011இல் வெளியான அறிக்கை, உடல் வலிமையில் கணிசமான முன்னேற்றங்களை இம்எம்எஸ் உடைகள் ஏற்படுத்துவதாகக் கூறினாலும், அந்த முடிவுகள் தெளிவற்றது, கூடுதல் ஆய்வு தேவை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தாண்டின் தொடக்கத்தில் வெளியான ஆய்வுக்கட்டுரையும் இம்எம்எஸ் பலன் குறித்து தெளிவான முடிவுகள் இல்லை என்றே கூறுகிறது.

முறையான உடற்பயிற்சி மற்றும் உணவுப்பழக்கத்தோடு இஎம்எஸ் உடைகளைப் பயன்படுத்தினால் அவை தற்காலிகமாக தசைகளை வலுப்படுத்தவோ, ஒழுங்குபடுத்தவோ அல்லது உறுதிப்படுத்தவோ செய்யலாம் என்கிறது இஎம்எஸ் உடைகளை ஒழுங்குப்படுத்தும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு.

ஒழுங்குபடுத்தப்படாத சாதனங்களைப் பயன்படுத்தும் போது எலக்ட்ரிக் அதிர்ச்சி, தீக்காயங்கள், தோல் எரிச்சல் மற்றும் வலி ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த அமைப்பு எச்சரிக்கிறது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விளையாட்டு அறிவியல் நிபுணர் நிக்கோலா மஃபியுலெட்டி, முழு உடலுக்கான இஎம்எஸ் உடைகளை நீண்ட காலமாகவே எதிர்த்துவருகிறார்.

முழு உடலுக்கும் சரியான அளவில் மின் தூண்டல் கொடுப்பது கடினம் எனக் கூறும் அவர், குறைந்த அளவு என்றால் எந்தப் பாதிப்பும் இல்லை, அதிக அளவு தூண்டல் கொடுக்கப்படும்போது அவை தசைகளில் சேதத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்.

“முழு உடல் மின் தூண்டுதலின் தீங்கு மற்றும் நன்மை பயக்கும் விளைவுகளை நாம் வெளிப்படையாகப் பார்த்தால், அது நன்மை பயப்பதற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை” என்றும் அவர் கூறுகிறார்.

ராபர்ட் ஹெர்ப்ஸ்ட்

பட மூலாதாரம், ROBERT HERBST

முழு உடல் இஎம்எஸ் உடையை வெளிப்படையாக எதிர்க்கும் 64 வயதான மூத்த அமெரிக்க பளுதூக்கும் வீரர் ராபர்ட் ஹெர்ப்ஸ்ட், இது பயனளிக்காது என்கிறார்.

தசைகளில் பளுதூக்குதல் ஏற்படுத்தும் நுண் அதிர்ச்சியை இஎம்எஸ் உடைகளால் ஏற்படுத்திவிட முடியாது என்கிறார் ராபர்ட் ஹெர்ப்ஸ்ட். பல அமெரிக்க மற்றும் உலக சாம்பியன்ஷிப்களை வென்றுள்ள இவர், தற்போதும் பளுதூக்குதல் போட்டிகளில் ஈடுபட்டு வருகிறார்.

எனினும், முழு உடல் இஎம்எஸ் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மக்களை அதிக உடற்பயிற்சி செய்ய அது ஊக்குவிக்கும் என்றும் அமெரிக்க உடற்பயிற்சி உடலியல் நிபுணர் டாம் ஹாலண்ட் கூறுகிறார்.

அதேநேரத்தில், இது மலிவானது அல்ல என்றும் அவர் கூறுகிறார். முழு உடல் இ.எம்.எஸ். பயன்படுத்த அமெரிக்காவில் 125 டாலர்களும், இங்கிலாந்தில் 20 நிமிட அமர்வுக்கு 130யூரோ வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

2021ஆம் ஆண்டு டாலிஸ்கர் விஸ்கி அட்லாண்டிக் படகோட்டப் போட்டியில் படகோட்டுவதற்கு லெபி ஏயர்ஸ் முழு உடல் இ.எம்.எஸ்.ஐப் பயன்படுத்தினார். படகில் தன்னுடைய மூன்று நண்பர்களுடன் சென்ற அவர் அந்தப் போட்டியை வெற்றிகரமாக முடித்தார்.

முழு உடல் இ.எம்.எஸ். ஆடைக்கு நன்றி தெரிவிக்கும் அவர், தன்னுடைய வயிற்றுப் பகுதி 21 வயதில் இருந்ததைவிட மிகவும் சிறப்பாக இருப்பதாகக் கூறுகிறார்.

தன்னுடைய வலிமையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட உடலை அனைவரும் பாராட்டியதாகவும் லெபி ஏயர்ஸ் கூறுகிறார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »