- நந்தினி வெள்ளைச்சாமி
- பிபிசி தமிழ்
பட மூலாதாரம், @IndiaUNGeneva
இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் 2009இல் நடைபெற்ற இறுதிகட்ட போரின்போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக நேற்று (அக்டோபர் 06) வரைவுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்ததாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இலங்கையில் அனைத்து மக்களின் நல்லிணக்கத்துக்கும் மனித உரிமைகளுக்கும் அரசை பொறுப்பேற்கச் செய்ய வலியுறுத்தி, ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இந்த வரைவுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
47 உறுப்பினர் நாடுகள் அடங்கியுள்ள இந்த கவுன்சிலில், இத்தீர்மானத்திற்கு பிரிட்டன், அமெரிக்கா, அர்ஜென்டினா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மெக்சிகோ, நெதர்லாந்து, பராகுவே, போலாந்து, தென் கொரியா, யுக்ரேன் உள்ளிட்ட 20 நாடுகள் ஆதரவாகவும் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்த நிலையில், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா, ஜப்பான், நேபாளம், கத்தார் ஆகிய நாடுகள் வாக்களிக்காமலும் தீர்மானத்தை புறக்கணித்துள்ளன.


இத்தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை புறக்கணித்துள்ள இந்தியா, “சமத்துவத்திற்கான தமிழர்களின் நம்பிக்கை” மற்றும் “இலங்கையின் அமைதி மற்றும் இறையாண்மை” என்கிற இரண்டு அடிப்படை தத்துவங்களின் அடிப்படையில் இந்தியா வழிநடத்தப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கை தமிழர்களின் நியாயமான விருப்பங்கள் மற்றும் அனைத்து இலங்கை மக்களின் வளர்ச்சிக்காக, இலங்கை மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து இந்தியா தொடர்ந்து பணியாற்றும் எனவும், இந்தியா தெரிவித்துள்ளது.
தவிர, அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண தேர்தல்களை விரைந்து நடத்துதல் உள்ளிட்டவற்றை இலங்கை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும், இந்தியா கேட்டுக்கொண்டதாக, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழ் தெரிவிக்கிறது.
இலங்கைக்கு எதிராகக் கடந்த 2012, 2013, 2014, 2015, 2017, 2019 மற்றும் 2021 ஆண்டுகளிலும் ஐநா மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தங்கள் நாட்டு இறையாண்மைக்கு எதிரானது என, இந்த தீர்மானங்களை இலங்கை அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
இந்திய பிரதிநிதி பேசியது என்ன?
நேற்றைய தினம் தீர்மானத்தை நிறைவேற்றும்போது ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி இந்திரா மணி பாண்டே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் உணர்வு, அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துதல் மற்றும் அவற்றை நோக்கிய முன்னேற்றம் போதுமானதாக இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
“அனைத்து இலங்கை மக்களின் வளர்ச்சி மற்றும் கண்ணியம், அமைதி ஆகியவற்றுக்கான இலங்கை தமிழர்களின் நியாயமான விருப்பங்களை உணர்ந்து செயல்படுதல் இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை” என அவர் தெரிவித்துள்ளார்.
2009க்குப் பிறகு இலங்கையில் நிவாரணம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்புச் செயல்முறைகளுக்கு இந்தியா கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“இந்திய அரசின் இரட்டை நிலைப்பாடு”
இலங்கையின் நிலைப்பாடு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன், “இந்தியா வாக்களிப்பை புறக்கணித்திருப்பது புதிதல்ல. இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை அறியப்பட்ட இந்தியாவின் போலி வேஷம்தான் இது. இதில் வாக்களிக்க வேண்டியது அரசியல் கடமை. இது மனித உரிமை சார்ந்தது. இலங்கை அரசுக்கு எதிரானது என பார்க்க வேண்டியதில்லை.
புவிசார் அரசியலும் இதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும், புவிசார் அரசியலில் முன்னர் மாற்றங்கள் இல்லாதபோதும் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவே செயல்பட்டிருக்கிறது. சிங்கள ஆளும் ஆட்சியாளர்களுக்குத்தான் இந்தியா ஆதரவாக இருந்திருக்கிறது. சர்வதேச அரசாங்கம் இதனை இரட்டை நிலைப்பாடாகத்தான் பார்க்கும்” என்கிறார்.
இதனை சுட்டிக்காட்டி, “இந்த பேச்சு அரசியல் அழுத்தத்தினால் கூறப்பட்டதுதான்” என்று கூறிய அவர், சீன கப்பல் யுவான் வாங்-5 இலங்கை வந்த சமயத்தில் இந்தியா தன் கோபத்தை வெளிப்படுத்தியதாகத்தான் ஐநாவில் பேசியதை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் நேற்று வாக்களிக்காமல் புறக்கணித்ததுதான் இந்திய அரசின் கொள்கை என்றும் கூறினார்.


இந்தியாவின் இரட்டை நிலைப்பாட்டை இது உணர்த்துகிறது. இந்திய அரசின் இந்த முரண், இலங்கைக்கு ஆதரவாக இருக்குமே தவிர தமிழர்களின் நலனுக்கானதாக இருக்காது.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் நேர்மையாகவோ அல்லது துணிந்தோ இந்தியா செயல்பட வாய்ப்பில்லை. இலங்கை அரசு நமக்கு (இந்தியாவுக்கு) கட்டுப்பட்டு இருக்க வேண்டுமென்றால், நாம் அவர்களுக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதுதான் இந்திய அரசு பேசும் அரசியல் தர்மம்” என முடித்தார்.

இந்தியாவின் முடிவு எதனை உணர்த்துகிறது?
சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்தவே இந்தியா இத்தகைய முடிவெடுத்திருப்பதாக, மூத்த பத்திரிகையாளர் மணி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “இலங்கையை சர்வதேச அமைப்புகளிடமிருந்து குறிப்பாக இனப்படுகொலை புகாரிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இந்தியாவின் தொடர் நிலைப்பாடாக இருந்திருக்கிறது. கடந்த மாதம் ஐநாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா பேசியது ஆச்சரியத்துக்குரிய ஒன்றுதான். இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா இதற்கு முன்பு இப்படி வெளிப்படையாக எடுத்ததில்லை. ஆனால், இப்போது வாக்களிக்காமல் புறக்கணித்திருப்பது புதிதல்ல.

பட மூலாதாரம், HINDUSTAN TIMES/ GETTY IMAGES
இறுதிகட்ட போரின் போது நிகழ்ந்த பெரியளவிலான மனித படுகொலைகளுடன் பொருத்திப் பார்த்தால் இந்தியாவின் நிலைப்பாடு தவறானது.


இலங்கை அரசியலில் சீனாவின் செல்வாக்கை நீர்த்துப்போகச் செய்ய எடுத்த முடிவாகவே இதனை கருத வேண்டும். இந்தியா இலங்கைக்கு எதிராக முடிவெடுத்தால், சீனாவின் செல்வாக்கு இன்னும் அந்நாட்டின் மீது தீவிரமாகும்.
சீனாவின் கைகள் இலங்கை மீது ஓங்குவதைத் தடுக்கவே இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கச்சத்தீவைக் கொடுத்ததாக ஒரு பார்வை இருக்கிறது” என்கிறார்.

இலங்கையில் இறுதிகட்ட போரில் நிகழ்ந்த படுகொலைகளை யூதப்படுகொலைகளுடன் ஒப்பிட்டு பேசிய மூத்த பத்திரிகையாளர் மணி, இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச விசாரணை நடைபெறும் என தான் நம்புவதாகவும், அந்த நடைமுறைகள் நீண்ட நெடியதாக இருக்கும் என்றும் கூறினார்.
“இலங்கையில் நடந்த படுகொலைகள் குறித்த சர்வதேச விசாரணை நிச்சயம் நடைபெறும் என நம்புகிறேன். ஆனால், அது மிக நீண்ட நெடிய நடைமுறைகளைக் கொண்டது.
1945ல் ஹிட்லரின் ஆட்சி முடிவுற்றபோது நிகழ்ந்த கோடிக்கணக்கிலான யூதர்கள் கொலை செய்யப்பட்டது குறித்து விசாரிக்க நியூரெம்பெர்க் என்ற விசாரணை ஆணையத்தை அமைத்தனர். இந்த விசாரணை ஆணையத்தின்படி மிகச்சமீப ஆண்டில் கூட ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலான இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இலங்கையில் மக்கள் பெரிதளவில் கொல்லப்பட்டதை இத்தகைய நியூரம்பெர்க் உடன் தான் ஒப்பிட்டு பேச முடியும்” என தெரிவித்தார்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com