- மெர்லின் தாமஸ்
- பிபிசி நியூஸ்
பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவிடம் இருந்து யுக்ரேன் மீட்ட கிழக்கு நகரமான லைமன் நகரில், இரண்டு திரள் மயானங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக யுக்ரேன் கூறுகிறது.
கண்டுபிடிக்கப்பட்ட மயானத்தில் பொதுமக்களின் சடலங்கள் இருக்கும் கிட்டத்தட்ட 200 கல்லறைகள் இருந்ததாக டான்டேஸ்க் பிராந்தியத்தின் யுக்ரேன் ஆளுநர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்தார்.
மற்றொரு மயானத்தில் எத்தனை சடலங்கள் உள்ளன என்று இன்னும் தெளிவாக இல்லை என்றும், அவை ராணுவ வீரர்கள், பொதுமக்களின் சடலங்களாக இருக்கும் என்று அவர் கூறினார்.
இறந்தவர்கள் எப்போது, எதனால் இறந்தார்கள் என்ற காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்தக் கூற்றை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
இந்த இரண்டு திரள் மயானங்கள் பற்றி அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக டெலிகிராம் செயலி மூலம் வெளியிட்டுள்ள செய்தியில் கைரிலென்கோ தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை முடியும் வரை மக்களை எதையும் ஊகிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ரஷ்யா தமது படைகளை லைமன் நகரத்தில் இருந்து திரும்பப் பெற்றது. இது கிழக்கு யுக்ரேனில் ரஷ்யாவின் ஆதிக்கத்துக்கு பின்னடைவாக இருந்தது.
ரஷ்யாவால் யுக்ரேனில் ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளில் உள்ள இடங்களில், டான்டேஸ்க்கில் உள்ள லைமனும் ஒன்று. இதை தம்முடன் இணைப்பதாக ரஷ்யா முன்னர் அறிவித்திருந்தது. யுக்ரைனும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் இந்த நடவடிக்கையை சட்டவிரோதமான நில அபகரிப்பு என்று மறுத்துள்ளன.
யுக்ரேனில் மற்ற இடங்களில் ரஷ்யா வேண்டுமென்றே பொதுமக்களைக் கொன்றதாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் தலைநகரமான கியவுக்கு அருகில் உள்ள புச்சாவிலும் சடலங்கள் திரளாகப் புதைக்கப்பட்ட புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜெலன்ஸ்கி கூறினார். மேலும், பிப்ரவரி மாதம் யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததில் இருந்து, இப்போது ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முக்கிய தென்கிழக்கு யுக்ரேன் துறைமுகமான மரியாபோலிலும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
புச்சா மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் வேண்டுமென்றே பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்ததாக புலனாய்வு அதிகாரிகளும் பத்திரிகையாளர்களும் கண்டறிந்தனர்.
இந்த புதைகுழிகளில், பொதுமக்களின் கால்களும், கைகளும் கட்டப்பட்ட பின்னர் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக யுக்ரேன் படைகள் தெரிவித்துள்ளன.
யுக்ரேன் அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்ய துருப்புக்கள் பின்வாங்கிய சில நாட்களுக்குப் பிறகு கிழக்கு நகரமான இசியத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் சிலர் ஷெல் தாக்குதல்களாலும், சுகாதார வசதி இல்லாததாலும் இறந்திருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் கூறுகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com