- பரணி தரன்
- பிபிசி தமிழ்
மியான்மிரில் மோசடி நிறுவனங்களின் பிடியில் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் இருந்து தாய்லாந்துக்கு தப்பி அங்கிருந்து இந்திய மற்றும் தமிழ்நாடு அரசு உதவியுடன் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் தாயகம் திரும்பிய பிறகு தெரிவித்த புகார்களால், மியான்மரில் உள்ள மோசடி நிறுவனங்கள் இந்தியர்களை வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, அங்கு மேலும் ஐந்து தமிழர்கள் தப்பி வர முடியாத நிலையில் உள்ளனர்.
வெளிநாட்டு வேலைக்காக இந்தியாவில் இருந்து துபாய்க்கு சென்ற இளைஞர்களுக்கு அங்கு வேலை இல்லை என்றும் அங்கிருந்து தாய்லாந்துக்கு போனால்தான் வேலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தாய்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய இளைஞர்கள், அங்கிருந்து வேறொரு ஏஜென்டிடம் ஒப்படைக்கப்பட்டு சட்டவிரோதமாக மியான்மர் நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளனர்.
அங்கு அரசு கட்டுப்பாடு இல்லாத தொலைதூர நிறுவனங்களில் இந்த இளைஞர்கள் சட்டவிரோத பணிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்தகைய ஓர் நிறுவனத்தில் இருந்துதான் சமீபத்தில் 13 தமிழர்கள் உள்ளிட்ட 16 இந்தியர்கள் தாய்லாந்துக்கு தப்பிச் சென்று அங்குள்ள சிறையில் இரு வாரங்கள், தடுப்பு முகாமில் ஒன்றரை மாதம் வைக்கப்பட்டனர். கடைசியாக கடந்த 4ஆம் தேதி தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் சொந்த ஊருக்குத் திரும்பினர்.

முன்னதாக, இந்த தமிழர்களை மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதினார். அதன் பிறகு தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், தமிழ்நாடு உளவுப்பிரிவு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரும் இந்திய வெளியுறவுத்துறை, தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட முயற்சியால் தாய்லாந்தில் சிக்கிய தமிழர்கள் மீட்கப்பட்டனர்.
ஆனால், சென்னை திரும்பியதும் அந்த தமிழர்கள் தங்களுக்கு மியான்மரில் நடந்த கொடுமைகள், சட்டவிரோத வேலைக்கு உடன்படாத இளைஞர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் குறித்த தகவல்களை வெளியிட்டனர்.
ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த பலரும் தங்களுடைய அடையாளங்களை வெளியிட விரும்பாதவர்களாக இருந்தனர். இந்த தமிழர்கள் தாயகம் திரும்பும் முயற்சியில் ஆரம்பம் முதலே பிபிசி தமிழ் அவர்களுடன் தொடர்பில் இருந்து அவர்களுடைய விவரங்கள் மற்றும் இருப்பிட தகவலை தமிழக அரசு உயரதிகாரிகளிடம் பகிர்ந்து வந்தது.


அதிர்ச்சி தரும் தண்டனைகள்

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில், மியான்மரில் வேலை பார்த்து வரும் இந்தியர்களை பிரிக்கும் விதமாக அவர்களை பணியமர்த்தியுள்ள நிறுவனங்கள் வெவ்வேறு அலுவலகங்களுக்கு மாற்றியுள்ளன.
அந்த நிறுவனங்களில் இருந்து வெளியேற முற்பட்டவர்கள் மற்றும் பணிக்கு ஒத்துழைக்க மறுக்கும் இளைஞர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பது, கைவிலங்கு பூட்டி வைப்பது போன்ற தண்டனைகள் வழங்கப்படுவதாக அங்கிருந்து நமக்கு தகவல்கள் வருகின்றன.

பட மூலாதாரம், Google Map
மியான்மரில் உள்ள இந்திய இளைஞர்கள், சொந்த ஊர்களுக்கு பேசுவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் பேசுவதற்கான கட்டணம், அவர்களுடைய சம்பள தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவல்களை நம்மிடையே பகிர்ந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள், மியான்மர் தொலைதூர நிறுவனங்களில் ஏஜென்டுகள் மூலம் தாங்கள் விற்கப்பட்டு விட்டதாக அதிர்ச்சிகர தகவலையும் வெளியிடுகின்றனர்.
தங்களுடைய நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டுமானால், இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் மதிப்பில் இருபது லட்சத்தை கொடுத்து விட்டுப்போகும்படி வேலை வழங்கிய நிறுவனங்களை நடத்தும் குழுவினர் மிரட்டுவதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும், தானியங்கி துப்பாக்கி சகிதமாக அங்குள்ள நிறுவனங்களை நடத்துவோர் தங்களுடைய பகுதிகளை தாங்களே பாதுகாத்துக் கொள்வதாகவும் அதைப் பார்க்கும்போது அவர்கள் சட்டவிரோத ஆயுதக் குழுக்களாக இருக்கலாம் என்றும் மியான்மரில் சிக்கியுள்ள தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த மூன்று தினங்களாக மியான்மரின் எல்லையில் உள்ள மோயி நதிக்கு அருகே அமைந்திருக்கும் மியாவாடியில் தங்கியிருக்கும் தமிழர்கள் சிலர் பிபிசி தமிழை தொடர்பு கொண்டு தங்களுடைய நிலையை விவரித்தனர்.
அங்கு சிக்கியுள்ள தமிழர்களில் மூன்று பேர் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் திருவாரூர் மற்றும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த குழுவில் மேலும் இருவர் உள்ளனர். அவர்கள் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் சில நிமிடங்களுக்கு மட்டுமே அவர்களுக்கு செல்பேசி பயன்படுத்த அனுமதி இருப்பதால் அந்த நேரத்தில் தாய்நாட்டில் உள்ள தங்களுடைய குடும்பத்தினரை தொடர்பு கொண்டு இந்த இளைஞர்கள் பேசி வந்துள்ளனர். அவர்கள் சொன்ன தகவல்களின்படி, மியாவடி பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் தொழில்முறையற்ற வகையில் கட்டுமான நிலையில் இருக்கும் பல கட்டடங்களில் இயங்கி வருவதாகவும் அவற்றில் பெரும்பாலானவை சட்டவிரோதமான வேலைகளை செய்து வருவதாகவும் தெரிய வருகிறது.
ஆயுத கும்பல்கள் கட்டுப்பாட்டில் மோசடி நிறுவனங்கள்

தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக ஆற்றைக் கடந்து மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டபோது, அவர்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கெடுபிடிகளைக் கடந்து வந்ததாக நம்மிடம் தெரிவித்தனர். அந்த ஆயுத கும்பல்கள் பார்ப்பதற்கு ராணுவ வீரர்கள் சீருடையில் இருந்தாலும் உண்மையில் அவர்கள் ஏதோ ஆயுத கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்கின்றனர் இந்திய இளைஞர்கள்.
“ஒவ்வொரு நாளும் எங்களுக்கு கரணம் தப்பினால் மரணம் என்பது போல வேலைக்கு செல்கிறோம், காலையில் உயிருடன் சென்றால் மீண்டும் இரவு தங்கும் இடத்துக்கு உயிருடன் வருவோமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. எங்களை எப்படியாவது மீட்டுக் காப்பாற்றி தாய்நாடுக்கு அழைத்துச் செய்ய உதவி செய்யுங்களேன்,” என்று நம்மிடையே தமிழர்கள் ஐந்து பேரும் கண்ணீர் மல்க பேசினார்கள்.
“சட்டவிரோதமாக பணியைச் செய்ய மறுப்பவர்கள் கைவிலங்கு பூட்டப்பட்டு கண் முன்னேயே தண்டிக்கப்படுவதை அன்றாடம் பார்க்கிறோம். அதேபோல, நிர்ணயித்த இலக்குத் தொகையை எட்டாத நபர்களும் தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இங்கிருந்து சில நிறுவனங்களில் பணியாற்றிய தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் தாய்நாட்டுக்கு சென்ற தகவல் இங்குள்ளவர்களுக்கு தெரிய வந்தது. அதன் பிறகு எங்களை இந்த கும்பல்கள் நடத்தும் விதம் கடுமையாகியிருக்கிறது. கட்டுப்பாடுகளும் அதிகரித்து விட்டன. உங்களிடம் உரையாடும் இந்த தகவலை கூட அவர்கள் நினைத்தால் இடைமறித்துக் கேட்டு விட முடியும். உங்களிடம் பகிரும் எல்லா தகவலையும் முற்றிலுமாக அழித்து விட்டே இங்கிருந்து நகர்வோம்,” என்று இளைஞர்களில் ஒருவரான பிரேம்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறினார்.

இந்த இளைஞர்களிடம் பேசியபோது அவர்கள் ஒவ்வொருவருடைய குடும்பத்தாரின் விவரத்தை நாம் பெற்றுக் கொண்டோம். தமிழ்நாட்டில் உள்ள அவர்களில் சில குடும்பங்களிடம் பேசினோம். மியான்மரில் உள்ள இளைஞர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுடைய பெயரை இங்கே மாற்றிக் குறிப்பிடுகிறோம்.
தாயகத்தில் தவிக்கும் குடும்பங்கள்
முதலாவதாக நாம் பேசியது பிரேம்குமாரின் குடும்பத்தாரிடம். இவரது தந்தை தண்டுவடம் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டதால் பொறியியல் பட்டதாரியான தனது ஒரே மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்திருக்கிறார். தனது மகன் வெளிநாடு சென்ற கதையை நம்மிடையே அவர் பகிர்ந்து கொண்டார்.
“ஒரு முகவர் சொல்லி கடன் வாங்கித்தான் என் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பினேன். துபாய்க்கு சென்றதும் அங்கு வேலை இல்லை என்று கூறி சில வாரங்கள் தங்க வைத்துள்ளனர். பிறகு தாய்லாந்தில் வேலை என்று சொல்லியுள்ளனர். அங்கு வேறொரு ஏஜென்ட்டிடம் எனது மகனும் அவனுடன் சென்ற சில இந்தியர்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்குப் பிறகே அவன் மியான்மரில் இருக்கும் விஷயமே தெரிய வந்தது. அப்போது கூட எங்கோ ஓரிடத்தில் பிள்ளை வேலை செய்கிறான் என்று நினைத்தேன். ஆனால், சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்தில் இருந்து தமிழர்கள் 13 பேர் தப்பி வந்த பிறகு ஊடகம்க்களிடம் சொன்ன தகவலுக்குப் பிறகே என் மகன் எந்த அளவுக்கு பெரிய ஆபத்தான இடத்தில் வேலை செய்து வருகிறான் என்பது தெரிந்தது. நான் வாங்கிய கடனுக்கான வட்டியை கஷ்டப்பட்டாவது கட்டிக் கொள்கிறேன். தயவு செய்து என்னுடைய பிள்ளையை காப்பாற்றி கொடுங்க,” என்கிறார் பிரேம்குமாரின் தந்தை.
அடுத்ததாக நாம் பேசியது மணிக்குமாரின் மனைவி சந்தியாவிடம். பி.காம் படித்து விட்டு இஸ்திரி கடையில் தந்தையுடன் வேலை செய்து வந்திருக்கிறார். குடும்பச் சூழல் காரணமாக வெளிநாட்டில் தரவு என்ட்ரி வேலை, நல்ல சம்பளம் என்று முகவர் ஒருவர் கூறவே, மணிக்குமார் துபாய்க்கு சென்று அங்கிருந்து தாய்லாந்து வழியாக மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டிருக்கிறார்.
“மியான்மரில் எனது கணவர் ரொம்ப கஷ்டப்படுகிறார். தினமும் 14-16 மணி நேரம் வரை வேலை செய்கிறார். அவர் கஷ்டப்படுறத என்னால தாங்கிக்க முடியலை. நல்லதோ, கெட்டதோ சொந்த ஊரிலேயே கிடைச்சத வெச்சு உயிர் வாழ்ந்துக்குறோம். அவரை காப்பாத்த அரசாங்கத்து கிட்ட பேசுங்க,” என்கிறார் சந்தியா.

பட மூலாதாரம், Getty Images
பிறகு நாம் ராம்குமாரின் தாயாரிடம் பேசினோம். சொந்த ஊரில் கூரியர் வேலை செய்து வந்த ராம் பி.காம் வரை படித்துள்ளார். துபாய் வேலைக்கு போகலாம் என்ற ஆசையில் கடல் கடந்து போன தன் மகன், இப்போது மியான்மரில் சரியான உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகக் கூறுகிறார் அவரது தாயார்.
இரண்டொரு நாளுக்கு ஒரு முறை செல்பேசியில் பேசும்போது கூட என் மகன் பயந்து, பயந்து பேசுகிறான். தப்பி வருவது பற்றியோ அது தொடர்பான யோசனைகளையோகூட தொலைபேசியில் பேசாதீர்கள். எங்களுடைய அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. செல்பேசியை பறித்துக் கொண்டுதான் வேலைக்கே அனுப்புகிறார்கள். மியான்மரை விட்டு தப்பிப் போக திட்டமிட்டு வருகிறோம் என்று தெரிந்தால் கூட உயிருக்கே ஆபத்தாகி விடும் என்று பயப்படுகிறான் என் மகன் என்கிறார் ராம்குமாரின் தாயார்.
பிபிசி தமிழ் பேசிய ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் இப்படி ஒவ்வொரு கதையும் வேண்டுகோள்களும் உள்ளன. இந்த குடும்பத்தினர் அனைவருக்கும் பொதுவாக உள்ள ஒரே விஷயம், வெளிநாட்டில் வாழும் தங்களுடைய பிள்ளைகளை எப்படி தாய்நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அறியாமல் இருப்பதுதான்.
இவர்களின் கோரிக்கைகள் மற்றும் மியான்மரில் உள்ள தமிழர்களின் நிலை குறித்தும் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையருக்கு தகவல்களை பிபிசி தமிழ் அனுப்பியிருக்கிறது.
மேலும் 37 இந்தியர்கள்

பட மூலாதாரம், Getty Images
இதற்கிடையே, நாம் குறிப்பிட்ட ஐந்து தமிழர்கள் மட்டுமின்றி மியான்மரில் உள்ள மற்றொரு மோசடி நிறுவனத்தில் பணயாற்றி வரும் 37 இந்தியர்களில் உள்ள மேலும் சில தமிழர்கள் பிபிசி தமிழிடம் தங்களை மீட்பது தொடர்பான தகவலை தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல உதவிடும்படி பேசியுள்ளனர். அவர்களில் திருச்சி, மதுரையைச் சேர்ந்த தலா மூன்று பேர், சென்னை, புதுச்சேரியைச் சேர்ந்த தலா ஒருவர், கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேர் அடங்குவர்.
அவர்கள் சொல்லும் தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. அவற்றை இங்கே பகிர்கிறோம்.
“பாங்காக் விமான நிலையம் வந்ததும் தாய்லாந்து எல்லை வரை வெவ்வேறு கார்களில் அழைத்து வரப்பட்டோம். அப்புறம் ஓர் ஆற்றைக் கடக்கச் செய்து மியான்மர் பகுதியல் விட்டு விட்டு எங்களை அழைத்து வந்த குழு சென்று விட்டது. மியான்மருக்கு வந்து விட்டோம் என்ற தகவலே கைபேசி டவரை வைத்துத்தான் தெரிஞ்சிக்கிட்டோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
“‘தரவு என்ட்ரி வேலை என்று சொல்லிதான் அழைச்சிட்டு வந்தாங்க. வந்தப்புறம்தான் இது சட்டவிரோத வேலைன்னு தெரிஞ்சது. வேலை செய்ய மறுத்தால் 5,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்து விட்டு போ என்கிறார்கள். அவ்வளவு பணம் எங்களிடம் ஏது? அதனால் வேறு வழியின்றி வேலை செய்கிறோம். அப்படி வேலை செய்ய மறுத்தால் அதிர்ச்சி வைத்து தண்டனை தருவார்கள். கொடுப்பதாக சொன்ன சம்பளத்தில் எதற்கெடுத்தாலும் அபராதம் போடுவார்கள்,” என்று அவர்கள் கூறினர்.

பட மூலாதாரம், Getty Images
“இங்க எங்களுடைய வேலையே விசித்திரமாக இருக்கிறது. ஃபேஸ்புக் மூலம் வேலைவாய்ப்பு இருப்பதாக நாங்கள் போலியாக ஒரு விளம்பரத்தை வெளியிட வேண்டும். பிறகு அதில் விருப்பம் உள்ளவர்களின் தகவல்களை திரட்டி அதை எங்களுக்கு தரப்பட்ட எண்ணுக்கு பகிர்வு பண்ண சொல்வார்கள். நாங்க பயன்படுத்தும் ஃபேஸ்புக் கணக்கு எல்லாம் போலி முகவரிகள். நாங்க தரும் தகவல்களில் உள்ள நபர்களை, எங்களைப் போல வேறொரு குழு தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறி வேலையில் சேர்க்கத் தூண்டும். வாடிக்கையாளரிடம் பேசி ஹோட்டல் புக்கிங் செய்வதால் கமிஷன் கிடைக்கும் என்று சொல்வார்கள். முதல் இரண்டு நாட்களுக்கு கிரிப்டோ வாலட்டில் பணம் போடுவர். மூன்றாம் நாள் பண ஆசையில் வாடிக்கையாளர் தொடர்பு கொள்ளும்போது அவரால் புக்கிங்கை முடிக்க முடியாது. அவர் ஆசையில் போட்ட பணமும் மோசடி குழுவால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும். இது இங்கு நடக்கும் மோசடி வேலைகளில் ஒரு வகை மட்டுமே”
“இங்க இருந்து எங்களால தப்பி வெளியே போக முடியாத அளவுக்கு எல்லா இடங்களிலும் ஆயுதம் தாங்கிய கும்பல்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். தங்குமிடம், அலுவலகம் மட்டும்தான் சென்று வர முடியும். வேறு எதற்கும் அனுமதி இல்லை. 13 தமிழர்கள் தப்பிச் சென்ற பிறகு இங்கு நிலைமை மிகவும் மாறி விட்டது,” என்று தங்களுடைய நிலைமையை தமிழர்கள் பகிர்ந்துள்ளனர்.
மியான்மரைப் போலவே கம்போடியாவிலும் ஒரு மோசடி வேலைவாய்ப்பு நிறுவன கும்பல் இந்தியர்கள் பலரை இலக்கு வைத்து கட்டாய சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளது. சமீபத்தில் வணிக விசாவில் கடந்த ஜூலை மாதம் ரூ.3 லட்சம் செலவு செய்து கம்போடியா நாட்டிற்கு சென்ற சையது இப்ராஹிம் அங்கிருந்து தப்பித்து இரு தினங்களுக்கு முன்பு தமது சொந்த ஊரான திருச்சி தில்லைநகருக்குத் திரும்பியிருக்கிறார்.
சரியான சம்பளம் கொடுக்காமல் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட தாம் கம்போடியா நிறுவனத்தால் கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்திய வெளியறவுத்துறை என்ன சொல்கிறது?

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்ஷியிடம் பேசினோம்.
“இந்தியாவில் உள்ளவர்களை இலக்கு வைத்து மோசடியாக சில வேலைவாய்ப்பு ஆசைகள் காட்டப்படுகின்றன. மியான்மரின் மியாவாடி பகுதியில் இருந்து இதுவரை சுமார் 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அங்கு பிடிக்கப்பட்டிருந்த சில இந்தியர்கள் வெளியேறி விட்டனர். ஆனால், அவர்கள் மியான்மர் காவல்துறையிடம் பிடிபட்டுள்ளனர். சட்டவிரோதமாக தங்களுடைய நாட்டுக்குள் நுழைந்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அங்கிருந்து தாமாகவே வரலாம் அல்லது அவர்களை அழைத்து வருவதற்கான முயற்சிகளை நாமும் மேற்கொள்ளலாம். ஆனால், அந்த நாட்டில் 300 – 500 பேர் வரை இருப்பதாக ஊடகங்களில்தான் படித்தேன். அத்தகைய துல்லியமான எண்ணிக்கை எங்களிடம் கிடையாது,” என்கிறார் அரிந்தம் பக்ஷி.
“பெரும்பாலும் இந்த இந்தியர்கள் தாய்லாந்து வழியாக மியான்மருக்குள் கடத்தப்பட்டவர்கள். எனவே, சரியான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்திக் கொண்டே இந்தியர்கள் வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதை சரிபார்க்க பல வழிகள் உள்ளன. லாவோஸ், கம்போடியாவில் கூட இப்படிப்பட்ட மோசடி கும்பல்கள் இந்தியர்களை இலக்கு வைத்து சிக்க வைக்கின்றன. சம்பந்தப்பட்டவர்கள்தான் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். மியான்மரில் உள்ள பலரும் இந்திய வெளியுறவுத் துறையிடம் தங்களுடைய நிலை பற்றி தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அரிந்தம் பக்ஷி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமிழ்நாடு அரசாங்கத்தை எப்படி அணுகுவது?

மியான்மர் அல்லது வேறு எந்த நாட்டிலாவது துயருரும் நிலையில் இருந்தால், அவர்களை மீட்டுத் தாயகத்துக்கு அழைத்து வர சில நடைமுறைகளை அரசாங்கம் பின்பற்றுகிறது. அதற்கு ஏதுவாக சில வழிமுறைகளை சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தாரும் தங்களுடைய ஊரில் இருந்தபடியே மேற்கொள்ளலாம்.
- முதலில் பாதிக்கப்பட்ட நபர் தங்களுடைய மகனோ, மகளோ அவரது நிலை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு மூலம் தெரிவித்து பத்திரமாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள உதவிடும்படி கோர வேண்டும். அந்த கோரிக்கை மனுவில், மகனோ, மகளோ அவரைப் பற்றிய விவரம், அவர் தங்கியுள்ள இடம், வேலை பார்க்கும் இடம், செல்பேசி எண், கடவுச்சீட்டு விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆட்சியர் மூலமாக இல்லாமல் நேரடியாகவும் 044-28525648, ISD-044-28520059 ஆகிய தொலைபேசி, 044-28591135 என்ற தொலைநகல், [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரகத்தை தொடர்பு கொள்ளலாம்.
- இந்த மனுவை பெற்றுக் கொள்ளும் மாவட்ட ஆட்சியர், அதை சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அலுவல்பூர்வ கடிதம் மூலம் கோருவார்.
- ஆட்சியரின் மனு கிடைத்தவுடன், அதை பரிசீலிக்கும் ஆணையரகம், மனுவில் உள்ள விவரங்களை சரிபார்த்து சம்பந்தப்பட்ட வெளிநாட்டில் வாழும் நபருடன் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு, டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறையை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவிப்பார்.
- டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை, சம்பந்தப்பட்ட நபர் பிடிபட்டுள்ள அல்லது தங்கியிருக்கும் நாட்டுக்கான இந்திய தூதரை தொடர்பு கொண்டு விவரத்தை பகிர்வார்.
- ஒருவேளை வெளிநாட்டில் இந்தியர் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தாலோ தடுப்பு முகாமில் இருந்தாலோ அவரை மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வரும் சட்ட உதவிகளை அங்குள்ள இந்திய தூதர் வழங்குவார். அதுவே, சட்டவிரோதமான முறையில் ஏதேனும் குழுவால் இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தால், அவரை மீட்க சம்பந்தப்பட்ட நாட்டின் அரசாங்கத்துடன் இந்திய வெளியுறவுத்துறை உயரதிகாரிகள் பேசி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி வேண்டுகோள் விடுப்பர். இதில் எந்த நடைமுறை சாத்தியமோ அதை இந்திய தூதர் மூலமாக இந்திய அரசாங்கம் கையாளும். பிறகு இந்திய தூதர் மூலம் மீட்கப்படும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர இந்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசும் நடவடிக்கை எடுக்கும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com