Press "Enter" to skip to content

மக்களின் ‘பழிதீர்க்கும் பயணம்’ எப்படி இந்தியாவின் சுற்றுலாத் துறையைக் காப்பாற்றியது?

பட மூலாதாரம், Getty Images

கோவிட் பெருந் தொற்று, சுற்றுலாப் பயணங்களைத் தடுத்து வைத்திருந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்திற்குப் பிறகு, இந்தியாவின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் தற்போது நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியுள்ளது. சுயாதீன செய்தியாளர் ருபினா ஏ கான் இந்த நம்பிக்கைக்கான உந்துதல் குறித்து எழுதியுள்ளார்.

சுற்றுலாத்துறை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3% பங்கு வகிக்கிறது. 2019இல் இது சுமார் 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியது.

ஆனால், பெருந்தொற்றுப் பேரிடர் தொடங்கியபோது மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் இந்தத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டில் 27.4 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே இந்தியாவிற்கு வருகை தந்தனர். அதற்கு முந்தைய ஆண்டில் இந்த அளவு 1.93 கோடி என்று அதிகாரபூர்வ தரவு காட்டுகிறது.

வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, பெருந்தொற்றுப் பேரிடருக்கு முந்தைய நிலையை இந்தியா நெருங்கவில்லை என்றாலும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எழுச்சி அவர்களை மேலும் உற்சாகப்படுத்துவதாக பயண நிறுவனங்களை நடத்துபவர்களும் ஹோட்டல் தொழில்துறை நிர்வாகிகளும் கூறுகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியர்கள் இப்போது பயணத்தின் மீதான தீவிர உந்துதலோடு பயணிக்கிறார்கள். நீண்ட நாட்கள் பயணிப்பதற்கான வாய்ப்பே இல்லாமல் இருந்த பிறகு அதற்கான வாய்ப்பு கிடைக்கையில் வாய்ப்பின்றித் தவித்த நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாகப் பயணித்துத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கும் இந்தப் பழக்கம் ‘பழிதீர்க்கும் பயணம்(Revenge travel)’ என்று அழைக்கப்படுகிறது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

பெருந்தொற்றுப் பேரிடருக்குப் பிறகான, பணியைச் செய்துகொண்டே பயணத்தை மேற்கொள்ளும், பணியுடன் சேர்ந்த சுற்றுலாப் பயணங்கள் மற்றும் சின்னச் சின்ன விடுமுறைகளின்போது செய்யும் சிறு பயணங்கள் மூலமாகவும் சுற்றுலாத் துறை பயனடைகிறது.

மேக் மை ட்ரிப் என்ற பயண இணையதளத்தின் நிறுவனரும் தலைவருமான தீப் கல்ரா, “2020ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இந்தத் துறை ஏற்றம் காணத் தொடங்கியது, அன்றிலிருந்து தொடர்ந்து மீண்டு வந்துகொண்டிருக்கிறது,” என்று கூறினார்.

“உண்மையில், கடந்த மூன்று காலாண்டுகளும் எங்கள் நிறுவனத்திற்கு மிகவும் லாபகரமானவை,” என்று அவர் கூறுகிறார்.

அதிகரிக்கும் உள்நாட்டு சுற்றுலா பயணங்கள்

இந்தப் பேரிடர் இந்தியர்களுக்கு தங்கள் சொந்த நாட்டுக்குள் பல பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியா எப்போதும் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. வரலாற்று கோட்டைகள், பிரமிக்க வைக்கும் அரண்மனைகள் முதல் அடர்ந்த காடுகள் வரை, பயணிகள் பார்க்க விரும்பும் இடங்களுக்குப் பஞ்சமில்லை.

பல மாதங்களாக சர்வதேச பயணங்கள் தடைபட்டதால் அதிகமான இந்தியர்கள் விடுமுறை எடுத்து நாட்டிற்குள்ளேயே பயணிக்கும் முடிவுகளை எடுத்தனர் என்கிறார் பயண நிறுவனமான எஸ்.ஒ.டி.சி.யின் நிர்வாக இயக்குநர் விஷால் சூரி.

மக்களின் 'ரிவெஞ்ச் பயணம்' எப்படி இந்தியாவின் சுற்றுலாத்துறையைக் காப்பாற்றியது?

பட மூலாதாரம், Getty Images

“பெருந்தொற்றுப் பேரிடர் இந்தியர்களுக்கு ஒரு கட்டடத்திற்குள்ளேயே இருப்பதைத் தாண்டி வெளியுலகத்தை ரசிக்க வைத்து,” என்று சூரி கூறுகிறார்.

இதனால், இதுவரை யாரும் சென்றிடாத இடங்களைத் தேடுவது அதிகரித்துள்ளதாக அவர் கூறுகிறார். யாத்திரைகள், ஆன்மீக பயணங்கள், உள்நாட்டு உணவு, கலாசார பாதைகள் மற்றும் சாகசங்களை அனுபவிக்கும் வழிகளை மக்கள் நாடுகின்றனர்.

இந்தப் பேரிடர் இந்தியாவுக்குள்ளேயே அல்லது தனது மாநிலத்திற்குள்ளேயே மேற்கொள்ளும் பயணங்கள், பணியைச் செய்துகொண்டே பயணத்தை மேற்கொள்ளும் பணியுடன் சேர்ந்த சுற்றுலாப் பயணம் போன்ற புதிய போக்குகளை உருவாக்கியது.

“பிரத்யேகத்தன்மை, தனியுரிமை ஆகியவற்றோடு, பயணிக்கும்போது வீட்டில் இருப்பதைப் போன்ற எண்ணத்தை அளிக்கக்கூடிய ஹோம்ஸ்டே போன்ற தங்குமிடங்களில் முன்பதிவு செய்வதை பயணிகள் இப்போது மிகவும் வசதியாக உணர்கின்றனர்,” என்று இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கங்களுடைய கூட்டமைப்பின் மூத்த அதிகாரி பிரதீப் ஷெட்டி கூறுகிறார்.

மேக் மை ட்ரிப்பில் இருக்கும் கல்ரா இதை ஒப்புக்கொள்கிறார். தங்களால் முடியும் போதெல்லாம் உள்நாட்டிலேயே பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே சூடுபிடித்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

“பயணம் மேற்கொள்வது இப்போது இன்னும் வழக்கமானதாகிவிட்டது. வருடாந்திர இடைவெளி இப்போது குறுகிய இடைவெளிகளாக, சிறு விடுமுறைகளாக மாறியுள்ளன. மக்கள் பல வார இறுதி விடுமுறைகள் மற்றும் பருவகால விடுமுறைகளின் அதிக நேரத்தை பயணத்திற்கு எடுத்துக் கொள்கிறார்கள்,” என்று அவர் கூறுகிறார்.

சிவப்புக் கோடு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிவப்புக் கோடு

விருந்தோம்பல் துறையில் ஏற்பட்ட தாக்கம்

இந்த மாற்றம் இந்தியாவில் உள்ள ஹோட்டல்களுக்கு வருமானம் ஈட்டக்கூடியதாக மாறியுள்ளது. ஏனெனில், மக்கள் தற்போது தங்களுடைய சர்வதேச சுற்றுலா விடுமுறைகளுக்கென பொதுவாக ஒதுக்கும் பணத்தை உள்நாட்டுப் பயணத்தின்போது சிறந்த வசதிகளைப் பெறுவதற்காகப் பயன்படுத்தத் தயாராக உள்ளனர்.

சில சொகுசு விடுதிகள் தொற்றுப் பேரிடரின் இடைவெளியில் அவற்றின் விலைகளைக் குறைத்தன. இது முன்பதிவு மற்றும் குறுகிய கால வருவாய் அதிகரிக்க வழிவகுத்தது.

ஆடம்பர ஹோட்டல்களின் தாஜ் சங்கிலியை இயக்கும் இந்தியாவின் மிகப்பெரிய விருந்தோம்பல் நிறுவனமான தி இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் லிமிடெடின் சிஓஓ புனீத் சத்வால், “ஒவ்வொரு தொடர்ச்சியான கோவிட் அலைகளுக்குப் பிறகும் அதிலிருந்து மீண்டு வருவது வலுவானதாகவும் விரைவானதாகவும் இருந்தது” என்கிறார்.

மேலும், “இன்று தி இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் லிமிடெடின் மக்கள் ஹோட்டல்களில் வந்து தங்குவது குறித்த புள்ளிவிவரங்களின்படி, அந்த எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விட அதிகமாக உள்ளது. இது முதன்மையாக உள்நாட்டு சுற்றுலா பயணங்களால் தூண்டப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

ராஃபிள்ஸ் உதய்பூர், பன்னாட்டு ஹோட்டல் சங்கிலியான ராஃபிள்ஸால் நடத்தப்படுகிறது. இதுவொரு தனியார் தீவில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் பெருந்தொற்றுப் பேரிடரின் இரண்டாம் அலைக்குச் சில மாதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 2021இல் திறக்கப்பட்டது.

இந்தியாவில் உள்நாட்டு சுற்றுலா மீண்டு வரத் தொடங்கியுள்ளது

பட மூலாதாரம், Getty Images

ஆனால், இந்த ஹோட்டல் இந்தியாவில் அதன் முதல் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் “ஆரோக்கியமான ஆக்கிரமிப்பு(மக்கள் ஹோட்டல்களில் வந்து தங்குதல்) விகிதத்தை” கண்டுள்ளது என்று இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான அந்த ஹோட்டலின் மூத்த துணைத் தலைவர் புனித் தவான் கூறுகிறார்.

மேலும், “ஒப்பிடுவதற்கு எங்களிடம் தொற்றுநோய்க்கு முந்தைய அளவீடு எதுவுமில்லை என்றாலும் நல்ல எதிர்வினை கிடைப்பதை நாங்கள் கவனித்துள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.

குளிர்காலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மற்றும் வரவுள்ள திருமண பருவத்தில் தொடங்கி இன்னும் பரபரப்பான ஆண்டிற்காக ஹோட்டல் தயாராகி வருவதாக தவான் கூறுகிறார்.

அதோடு, கார்ப்பரேட் பயணத்தை மீண்டும் தொடங்குவது போன்ற பிற நேர்மறையான அறிகுறிகளும் உள்ளன என்கிறார் கல்ரா. இது பயணத் துறையின் ஒட்டுமொத்த மீட்புக்கும் உதவும் வகையில் வரும் காலாண்டுகளில் இன்னும் அதிகரிக்கும்.

Banner

சவால்கள்

நம்பிக்கை இருந்தபோதிலும் உள்நாட்டு சுற்றுலாவால் மட்டுமே இந்தத் துறையை பேரிடருக்கு முந்தைய வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது என்று தொழில்துறையில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

சுற்றுலாத் துறை

பட மூலாதாரம், Getty Images

செப்டம்பரில் இந்திய சுற்றுலாத் துறை அமைச்சர், சுற்றுலாத் துறையின் அனைத்து வகையான மறுமலர்ச்சியையும் நோக்கி அரசாங்கம் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

ஆனால், வெளிநாட்டு வருகை தொடர்ந்து மோசமாக உள்ளது. முந்தைய ஆண்டை விட 2021இல் 44.5% குறைந்துள்ளதாகத் தரவு காட்டுகிறது.

“இந்தியா உலக மக்களை வரவேற்கும் வகையிலான ஒரு பிரசாரத்தைக் கூட இன்னும் வெளியிடவில்லை. நமக்குத் தேவையானது, நம்மைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு பயணிகளை உற்சாகப்படுத்துகின்ற, குறிப்பாக சீனாவுக்கு பயணம் செய்துகொண்டிருந்த, இப்போது பயணிக்காத 60 மில்லியன் மக்களை ஈர்க்கக்கூடிய ஒரு நட்சத்திர விளம்பர யுக்தி,” என்கிறார் இந்தியாவின் சிறந்த பயண நிறுவனங்களில் ஒன்றான டிராவல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநரான தீபக் தேவா.

மேலும் அரசாங்கம் தனது இ-விசா வசதியை மீட்டெடுக்க வேண்டும் என்று கூறுகிறார். குறிப்பாக, பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தருகிறார்கள். அவர்களுக்கான தற்போதைய நடைமுறை மிகவும் சிக்கலானது.

இருப்பினும், உள்நாட்டு, சர்வதேச பயணங்கள் இரண்டும், “இங்கு ஒன்றாக வளர வேண்டும். ஒன்றுக்கொன்று எதிராக இல்லை,” என்று கல்ரா கருதுகிறார்.

“சர்வதேச பயணங்கள் தற்போது மீண்டும் முன்னணிக்கு வருவதால், அடுத்த சில காலாண்டுகளில், சர்வதேச பயணங்களும் முழுமையாக மீட்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்கிறார் கல்ரா.

Banner

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »