Press "Enter" to skip to content

ரொசெட்டா ஸ்டோன்: சித்திர எழுத்துமுறை மர்மத்தை விளக்கியதில் அரேபியர்கள் பங்கு இருட்டடிப்பு செய்யப்பட்டதா?

பட மூலாதாரம், British Museum

200 ஆண்டுகளுக்கு முன்பு ‘ரொசெட்டா ஸ்டோன்’ என்ற கல்வெட்டில் இருந்த குறிப்புகள் முழுமையாக புரிந்துகொள்ளப்பட்ட பிறகு, ஹைரோகிளிஃப்ஸ் எனப்படும் எகிப்தியர்களின் சித்திர முறை எழுத்துகள் தொடர்பான மர்மம் முடிவுக்கு வந்தது. நீண்ட காலத்திற்கு முன்பே, அரபு அறிஞர்கள் இந்தப் பண்டைய எழுத்துகளைக் கொண்டு சொந்த முயற்சியில் சில விஷயங்களைக் கண்டுபிடித்ததாக பிபிசி கல்சரில் ‘சீக்ரெட் லாங்குவேஜஸ்’ என்ற புதிய தொடரில் டெய்சி டன் எழுதியுள்ளார்.

ஃப்ரெஞ்ச் மொழியியல் அறிஞர் ஜீன் பிரான்கோயிஸ் சாம்போலியன் பல ஆண்டுகளாக ரொசெட்டா ஸ்டோனில் உள்ள ஹைரோகிளிஃப்களை புரிந்துகொள்ள சிரமப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், 1822ஆம் ஆண்டு செப்டம்பரின் ஒரு பிற்பகலில் அவருக்கான விடை கிடைத்தது. அந்த உற்சாகத்தில், குறிப்புகளை சேகரித்துக்கொண்டு, தனது சகோதரனைத் தேடி விரைந்தார்.

நெப்போலியனின் லெப்டினன்ட்களில் ஒருவரான பியர் பிரான்கோயிஸ் சேவியர் பௌச்சார்ட் என்ற இராணுவப் பொறியாளர், 1799ஆம் ஆண்டு ஜூலையில் நகரின் கோட்டையை இடித்து புனரமைக்கும் பணியை மேற்கொண்டார். அப்போது, இடிபாடுகளுக்கு அடியில் ஒரு கல்வெட்டை அவர் கண்டறிந்தார். அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என்று உணர்ந்த அவர், அதைச் சுத்தம் செய்துவிட்டு கெய்ரோவில் உள்ள பிரபல ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக எடுத்துச் சென்றார்.

வியக்கத்தக்க வகையில், அந்தக் கல்வெட்டில் இருந்த குறிப்புகளில் மூன்றுவகையான எழுத்துகள் இடம்பெற்றிருந்தன. அவை ஒவ்வொன்றும் மிகவும் வித்தியாசமாக இருந்தன. அதில் ஒன்று பழமையான கிரேக்க மொழியிலும், மற்றொன்று எகிப்திய ஹைரோகிளிஃப் மொழியிலும் எழுதப்பட்டிருந்தது. மூன்றாவது வகை எழுத்து சிரியாக் மொழியாக இருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், பின்னர் அது டெமோடிக் என அடையாளம் காணப்பட்டது. பௌச்சார்ட் மூன்று எழுத்துகளும் ஒரே விஷயத்தைச் சொன்னதாகக் கருதி, கிரேக்க மொழி மூலம் மற்ற இரண்டையும் விளக்கலாம் என நினைத்தார். ஆனால், தற்போதுவரை அவை முழுவதும் புரிந்துகொள்ளப்படவில்லை.

பின்னர், அந்தக் கல் லண்டனில் உள்ள பழங்கால சரித்திரங்களை ஆராயும் சங்கத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு பிரதிகள் எடுக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள நகரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டன. மூலப்பிரதி மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் விருப்பப்படி 1802ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

Presentational grey line
Presentational grey line

கிரேக்கத்தில் கூறப்பட்டிருந்ததை மொழிபெயர்த்து, அதன் ஊடாக மற்ற இரண்டு மொழிகளில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள பலரும் முயற்சித்தனர். இந்த மூன்று எழுத்துகளில் கூறப்பட்டுள்ள உள்ளடக்கம் ஒரே மாதிரியானவை என்றும், எகிப்து அரசராக ஐந்தாம் டோலமி இருந்த கிமு 2ஆம் நூற்றாண்டு கால வழிபாட்டு முறை குறித்து மெம்பிஸில் உள்ள பாதிரியார்கள் சபையால் இயற்றப்பட்ட ஆணையுடன் தொடர்புடையவை என்றும் அதில் புரியக்கூடிய வகையில் இருந்த எழுத்துகள் தெளிவுபடுத்தின.

ரோசெட்டா ஸ்டோன்

பட மூலாதாரம், British Museum

1799இல் கல்வெட்டு கிடைத்ததற்கும் 1822இல் சாம்போலியன் அதனைப் புரிந்துகொண்டதாக கூறிய தருணத்திற்கும் இடையேயான காலக்கெடுவை வைத்தே கல்வெட்டில் இருந்ததைப் புரிந்துகொள்வது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பதை அறியலாம். இதில் முரண் என்னவென்றால், முழுவதும் புரிந்துகொண்டதாக சாம்பொலியன் நினைத்த தருணத்தில் பாதியளவே அவர் புரிந்திருந்தார்.

சாம்பொலியன் கண்டுபிடிப்பின் இருநூறாவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் வரும் அக்டோபர் 13ஆம் தேதி லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் ஒரு கண்காட்சி தொடங்குகிறது. லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள அந்தக் கல்வெட்டோடு இணைக்கப்பட்டுள்ள விளக்கக் குறிப்பில் ஃபிரான்சில் பிறந்த அறிஞர் சாம்போலியன் பண்டைய எகிப்திய மொழியின் கட்டமைப்பு தர்க்கத்தை அதன் பல்வேறு வடிவங்களில் முதலில் புரிந்துகொண்டவர் எனக் கூறப்பட்டுள்ளது. உண்மையிலேயே சாம்பொலியன் முன்னோடியா?

ரொசெட்டா ஸ்டோன் கண்டுபிடிக்கப்படுவதற்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அரேபிய அறிஞர்கள் எகிப்திய நினைவுச்சின்னங்கள் மற்றும் கல்லறை ஓவியங்களில் அவர்கள் கண்டறிந்த ஹைரோகிளிஃப்கள் குறித்து ஆராயத் தொடங்கினர். சித்திர எழுத்து முறை முதன்முதலில் கிமு 3250இல் உருவாக்கப்பட்டது. இது எகிப்திய மொழியில் ‘தெய்வீக வார்த்தைகள்’ என்றும் கிரேக்க மொழியில் ‘புனித செதுக்குதல்’ அல்லது ‘ஹைரோகிளிஃப்’ என்றும் அறியப்பட்டது. இந்த எழுத்துமுறை பயன்பாடு கி.பி 5ஆம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தாலும், இந்த இடைக்கால அறிஞர்கள் அந்த எழுத்து வடிவத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளவற்றை வெளிப்படுத்த முடியும் என்றும் நம்பினர்.

9ஆம் நூற்றாண்டில், அபு பக்கர் அஹ்மத் இபின் வஹ்ஷியா எனும் இராக்கிய ரசவாதி, இழந்த விஞ்ஞான அறிவை மீட்டெடுக்கும் நம்பிக்கையோடு ஹைரோகிளிஃப்களை மொழிபெயர்ப்பதில் தனது கவனத்தைத் திருப்பினார். “இந்த நம்பிக்கை நம்புவதற்கு கடினமானது அல்ல. சில கோவில் சுவர்களில் ரசவாதம் தொடர்பான அறிவியல்பூர்வமான தகவல்கள் உள்ளன” என்கிறார் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் தொல்லியல் கழக மூத்த கெளரவ ஆய்வாளரும், கத்தார் பல்கலைக்கழக பிரஸ்ஸின் கையகப்படுத்துதல் துறையின் தலைவருமான மருத்துவர் ஒகாஷா எல் டேலி.

Ibn Wahshiyya's 985 AD translation of the Ancient Egyptian hieroglyph alphabet

பட மூலாதாரம், Alamy

10ஆம் நூற்றாண்டின் பாக்தாதி புத்தக விற்பனையாளரின் மகனான இபின் அல்-நதிம், இப்னு வஹ்ஷியாவின் சின்னங்கள் நிறைந்த குறிப்பேடுகளைப் பார்த்து பதிவு செய்துள்ளார். இப்னு வஹ்ஷியாவால் சில ஹைரோகிளிஃப்களை மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அல்-நடிம் கூறுவதுபடி, அறியப்பட்ட எழுத்துமுறையைப் பயன்படுத்தி அறியப்படாத ஒன்றை விளக்க முயற்சிக்கும் செயல்முறையில் அவர் வெளிப்படையாகச் செயல்பட்டார்.

சாம்போலியனின் போட்டியாளரான தாமஸ் யங் என்பவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இந்த முறையைப் பயன்படுத்தினார். அவரது வாழ்க்கை வரலாறு புத்தகமான’எல்லாவற்றையும் அறிந்த கடைசி மனிதன்’ புத்தகத்தில் ஹைரோகிளிஃப்களைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலை டெமோடிக் எழுத்துகள் வழங்கலாம் என்பதை உணர்ந்து, அதில் தாமஸ் யங் கவனம் செலுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. 1814ஆம் ஆண்டின் ஒரு புத்தகத்தில், ரொசெட்டா ஸ்டோனில் இருந்த மூன்று எழுத்துகள் தொடர்பான தனது சில செயல்பாடுகளை யங் வெளிப்படுத்தியுள்ளார். டெமோட்டிக்கைப் புரிந்துகொள்வதில் அவர் பெற்ற வெற்றி சாம்பொலியனுக்கு விலைமதிப்பற்றதாக இருந்தது.

திரட்டப்பட்ட ஞானம்

“அறிவியல் முன்னேற்றம் என்பது ஒரு திரட்டப்பட்ட விஷயம். சாம்பொலியன் ஒன்றுமில்லாமல் வேலை செய்யவில்லை. அவர் முந்தைய பங்களிப்புகளைப் படிப்பதில் இருந்து தொடங்கினார். அவருக்கு அரபு மொழியும் தெரியும்” என்கிறார் மருத்துவர் எல் டேலி. எனவே இடைப்பட்ட ஆயிரமாண்டு காலத்தில் ஹைரோகிளிஃப்களைப் புரிந்துகொள்ள முயன்ற அரபு எழுத்தாளர்களின் சில படைப்புகளை மொழியியலாளர்கள் அணுகியிருக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

முந்தைய மேற்கத்திய அறிஞரான ஜெர்மனியின் அதானசியஸ் கிர்ச்சர், எகிப்திய ஹைரோகிளிஃப்கள் தொடர்பான தனது சொந்த புத்தகத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ளும் போது, அரேபிய குறிப்புகளை கவனத்தில் எடுத்துக்கொண்டார். 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெளியான கிர்ச்சரின் ‘ஓடிபஸ் எஜிப்டியாகஸ்’ புத்தகத்தில் 40க்கும் மேற்பட்ட அரபு ஆதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்னு வஹ்ஷியாவின் பணி பற்றிய அவரது பார்வையில் சந்தேகத்திற்கு இடமில்லை. துரதிர்ஷ்டவசமாக, சாம்பொலியன் தனது ஆதாரங்களை இதே போன்று மேற்கோள் காட்டத் தவறிவிட்டார். சாம்பொலியனின் வெற்றியில் முந்தைய அறிஞர்களின் பங்களிப்பை எந்த விதத்திலும் மதிப்பிடுவது கடினம்.

கிழக்கில் உள்ள அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் பங்களிப்பு இந்த வகையில் இருட்டடிப்பு செய்யப்படுவது வழக்கத்திற்கு மாறானது ஆல்ல. ‘தி மேப் ஆஃப் நாலெட்ஜ்’ புத்தகத்தின் ஆசிரியரான மருத்துவர் வயலட் மோல்லர், பழங்காலம் முதல் மறுமலர்ச்சி கருத்துக்களைக் கொண்டு செல்வதில் கருவியாக இருந்த அரபு அறிஞர்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் அல்லது வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

“இதன் பின்னணியில் உள்ள தனிப்பட்ட நோக்கம் என்ன என்பதை அறிய முடியாது. உதாரணமாக, கிரேக்க எழுத்தாளர் கேலனின் மருத்துவப் புத்தகங்கள் கிரேக்க மொழியில் இருந்து அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, ஹுனைன் இப்னு இஅதிர்ச்சி என்ற மனிதரால் குறிப்பிடத்தக்க திருத்தம் செய்யப்பட்டன. சில லத்தீன் அறிஞர்கள் இந்தப் படைப்பை முற்றிலும் கிரேக்க மொழியில் அறிமுகப்படுத்துகின்றனர். அறிவின் வழித்தடமாக இருந்த அரபு அறிஞரைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை” என்கிறார் அவர்.

“கிரேக்கர்கள் உயர்ந்த அறிவாற்றல் கொண்டவர்கள் என பரந்த நம்பிக்கை இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அரேபியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே இருந்த பகைமையின் விளைவாக இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வும் இருந்தது. வட ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஓர் அரேபிய அறிஞர் இத்தாலியில் ஒரு படைப்பை லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார். ஆனால், அவரும் அதே இருட்டடிப்பைச் செய்தார். கிரேக்க அறிவை அடிப்படையாகக் கொண்ட நூல்கள் ஐரோப்பிய அறிஞர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கலாம்” என்கிறார் மோல்லர்.

Hunayn ibn Ishaq translated many classical Greek texts, including medical and scientific treatises, into Arabic and Syriac

பட மூலாதாரம், Alamy

ஒருவேளை, சாம்பொலியன் தனது ஆதாரங்களை பிற்காலத்தில் இணைத்திருக்கலாம். மருத்துவர் டேலி குறிப்பிடுவது போல, ஹைரோகிளிஃப்களைப் புரிந்துகொண்டதாக நினைத்த அடுத்த 10 ஆண்டுகளில் சாம்பொலியன் இறந்துவிட்டார். இப்னு வஹ்ஷியாவைப் போல, எந்தெந்த படைப்புகளை ஆராய்ந்தேன் என்று சாம்பொலியன் குறிப்பிட்டிருந்தால் அதில் அதானசியஸ் கிர்ச்சர் இடம்பெற்றிருப்பார்.

ஹைரோகிளிஃப்களில் தேர்ச்சி பெறுவதற்கு காப்டிக் மொழியில் புலமை பெறுவது முக்கியம் என்பதையும் கிர்ச்சர் தெளிவுபடுத்துகிறார். காப்டிக் என்பது 24 கிரேக்க எழுத்துகளை ஏழு எகிப்திய டெமோடிக் எழுத்துகளுடன் இணைத்த பிற்பட்ட எகிப்திய எழுத்துமுறை ஆகும். இது பெரும்பாலும் அறிவுசார் தளங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்த எழுத்துமுறை மற்றும் ஹைரோகிளிஃப்களுக்கு இடையே உள்ள ஆரம்பகால தொடர்பை ஏற்படுத்தியவர்களில் அல்-இத்ரிசி என்ற 13ஆம் நூற்றாண்டின் எகிப்திய அறிஞரும் ஒருவர். அல்-இத்ரிசியின் காலகட்டத்தில் பல அரபு கையெழுத்துப் பிரதிகள் உண்மையில் காப்டிக் இலக்கண வழிகாட்டிகளைக் கொண்டிருந்தன. அவற்றில் பல மேற்கத்திய நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டன. சில ஹைரோகிளிஃபிக் குறியீடுகளை காப்டிக் எழுத்துகளோடு பொருத்திப் பார்ப்பதன் மூலம் கிர்ச்சர் இரண்டு எழுத்து முறைகளுக்கும் இடையேயான தொடர்பை மேலும் ஆய்வு செய்தார். இந்த செயல்பாட்டில், சில ஹைரோகிளிஃப்கள் ஒலிப்பு அர்த்தங்களைக் கொண்டிருப்பதாக முந்தைய அரபு அறிஞர்களின் கருதுகோளை அவர் உறுதிப்படுத்தினார்.

சாம்பொலியன் இதே முறையைப் பின்பற்றி, ஆரம்பத்தில் எழுத்து வடிவத்தின் ஒலிப்பு உறுப்பை குறைத்து மதிப்பிட்டார். எகிப்தியர் அல்லாத பெயர்களை எழுதப் பயன்படுத்தும்போது ஹைரோகிளிஃப்கள் முக்கியமாக ஒலிகளை வெளிப்படுத்துகின்றன என்பது அவரது முதல் எண்ணம். பின்னர், ஒலிப்பு எழுத்துகளின் மையக் கூறு என்றும், எகிப்திய பெயர்களைக் குறிக்கவும் அவை பயன்படுத்தலாம் என்பதை அவர் உணர்ந்தார். ஒரு ஒலி ஒன்றுக்கு மேற்பட்ட ஹைரோகிளிஃப்களால் குறிப்பிடப்படலாம் என்பதையும் அவர் காட்டினார். பின்னர், இது எழுத்துவடிவம் மட்டுமல்ல, பேசும் மொழி என்பதையும் அவர் உணர்ந்தார்.

இந்தக் கண்டுபிடிப்புகளில் சாம்பொலியனின் மகத்தான பங்களிப்பு மறுப்பதற்கில்லை. “சாம்பொலியன் இல்லாவிட்டால் நம் அறிவு இன்னும் சில தசாப்தங்கள் காத்திருக்க வேண்டியிருந்திருக்கும்” என்கிறார் மருத்துவர் எல் டேலி.

ரொசெட்டா ஸ்டோனில் உள்ள ஹைரோகிளிஃப்களை சாம்பொலியன் புரிந்துகொண்டது, பல நூற்றாண்டுகளாக புரிந்துகொள்ள முடியாத நூற்றுக்கணக்கான நூல்களை மொழிபெயர்க்க உதவியது. மேலும், புலமை மற்றும் விவாதத்திற்கான எண்ணற்ற புதிய வழிகளையும் திறந்தது. எனவே, தனது விடாமுயற்சி மற்றும் அறிவார்ந்த செல்வாக்கிற்காக பெற்ற பாராட்டுகளுக்கு சாம்பொலியன் தகுதியானவர்.

ஆனால் சாம்பொலியனின் மகத்தான சாதனையை 200 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் கொண்டாடும் வேளையில், தங்களது சொந்த கண்டுபிடிப்புகள் மூலம் அவருக்கு உதவிய மற்ற அறிஞர்களைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டாமா? இப்னு வஹ்ஷியா, அதானசியஸ் கிர்ச்சர் மற்றும் தாமஸ் யங் போன்றவர்கள் மிகவும் மர்மமான பண்டைய எழுத்துகளின் மர்மங்களைத் திறக்க அயராது உழைத்தனர் என்பது விவாதத்திற்குரியது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தொடங்கிய புதிரின் மையமாக அவர்களை மீண்டும் வைக்க வேண்டிய நேரம் இது.

Banner

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »