Press "Enter" to skip to content

கருவிலேயே ஸ்டெம் செல் அறுவை சிகிச்சை – குழந்தை பிறக்கும் முன்பே உடல் முடங்கிப் போகாமல் தடுத்த மருத்துவர்கள்

  • மிஷல் ராபர்ட்ஸ்
  • கணினி மயமான சுகாதார பிரிவு ஆசிரியர்

பட மூலாதாரம், UC Davis Health

ஸ்டெம் செல் பேட்ச் என்ற சிறப்பு சிகிச்சை முறையைப் பயன்படுத்தி குழந்தை கருவில் இருக்கும்போதே, அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முதுகெலும்பு குறைபாடுகளை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

யுசி டேவிஸ் சுகாதார நிறுவனத்தின் இந்த ஆராய்ச்சி தண்டுவட நரம்பு மற்றும் முதுகெலும்பு சரியாக வளர்ச்சியடையாத ஸ்பைனா பிஃபிடா என்ற குறைபாட்டால் பாதிப்பட்ட மற்றவர்களுக்கும் உதவக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

கருவில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மூன்று குழந்தைகளும் தற்போது பிறந்துள்ளன.

குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகளுக்கு இந்த மருத்துவ ஆய்வுக் குழு அவர்களைக் கண்காணிக்கும்.

முதுகுத் தண்டு மற்றும் முதுகெலும்பில் ஏற்படும் ஸ்பைனா பிஃபிடா என்ற இந்த பாதிப்பு, சில நேரங்களில் நரம்பு சேதம் காரணமாக உடல் இயக்கம் தொடர்பான பிரச்னைகள் உட்பட வாழ்நாள் முழுவதும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்த பாதிப்பு மோசமாக இருந்தால், தண்டுவட நரம்பு வெளிப்படையாகத் தெரியும் வகையில் இருக்கும். பிறப்பதற்கு முன்போ அல்லது பிறந்தவுடனேயோ அப்படி வெளியே தெரியும் வகையில் இருப்பதைச் சரிசெய்யவில்லை என்றால் கால்கள் முற்றிலும் முடங்கிப் போகலாம்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

ஏற்கெனவே அறுவை சிகிச்சை நிபுணர்கள் கருப்பையிலுள்ள சிறு துவாரத்தின் வழியே மேற்கொள்ளக்கூடிய கீஹோல் அறுவை சிகிச்சையைப் பயன்படுத்தி தண்டுவடம் வெளியே தெரியும் வகையில் இருந்த பிளவை சரிசெய்துள்ளனர். இப்போது அமெரிக்க மருத்துவக் குழு ஒரு படி மேலே சென்று, அந்த பாதிப்பை சரிசெய்ய செயற்கை இணைப்பைப் பொருத்தி சிகிச்சையளித்தனர்.

அது குழந்தையோடு சேர்ந்து வளரக்கூடிய வகையிலான முதிர்ச்சியடையாத ஸ்டெம் செல்களைக் கொண்ட ஓர் இணைப்பு.

இந்த சிகிச்சை முறையை முன்பு விலங்குகள் மீது நடத்தியபோது மிகவும் நம்பிக்கைக்குரிய முடிவுகள் கிடைத்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். செம்மறி ஆடு, டார்லா, ஸ்பேங்கி ஆகிய புல்டாக் குட்டிகளிடம் இந்த சிகிச்சை முறையைச் செம்மைப்படுத்துவதற்காக அவர்கள் முயன்று பார்த்துள்ளனர்.

இந்த சிகிச்சையைப் பெற்ற முதல் நபர்களில் குழந்தை ராபியும் ஒன்று.

ராபியின் அம்மாவான எமிலி, இது தங்களால் மறுக்க முடியாத உயிர்நாடி என்று கூறுகிறார்.

“இந்தப் பிரச்னை இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரிய வருவதற்கு முன்பாக ஸ்பைனா பிஃபிடா பற்றி எங்களுக்குத் தெரியாது. இந்த சிகிச்சையில் ஒரு பகுதியாக இருந்ததற்கு நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். எங்கள் மகளுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான வாய்ப்பை நாங்கள் முற்றிலுமாக வழங்குவோம்,” என்று அவர் கூறினார்.

அவர்களின் அறுவை சிகிச்சை நிபுணரான டயானா ஃபார்மர், “அறுவை சிகிச்சை எந்தத் தடையுமின்றி முடிந்தது. தாயும் கருவிலுள்ள குழந்தையும் சிறப்பாக இருந்தார்கள்,” என்றார்.

குழந்தை ராபி

பட மூலாதாரம், UC Davis Health

ஓராண்டுக்கு முன்பு ராபி பிறந்த நாளின் அந்தத் தருணத்தை எமிலி நினைவு கூர்ந்தார்.

“அவளை நான் பார்க்க முடியாது என்பதே என்னுடைய முதல் பயமாக இருந்தது. ஆனால், அவர்கள் அவளை என்னிடம் கொண்டு வந்தார்கள். நான் முதல்முறையாக அவளது கால்விரல்கள் அசைவதைப் பார்த்தேன். அது எனக்கு அவள் நன்றாக இருக்கிறாள் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது,” என்றார்.

யுசி டேவிஸ் மருத்துவக் குழுவுடைய பரிசோதனையின் ஒரு பகுதியாக சுமார் 35 குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கத் திட்டமிட்டுள்ளது. சிகிச்சை எவ்வளவு சிறப்பாகப் பலனளிக்கிறது என்பதை மதிப்பிடுவதற்கு கூடுதல் ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு தேவை.

ராபியும் மற்ற குழந்தைகளும் நடை மற்றும் இதர திறன்களுக்கான பயிற்சிகளோடு அவர்களுடைய ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் கணக்கிடுவதற்கான பரிசோதனைகளையும் மேற்கொள்வார்கள்.

பேராசிரியர் பாவ்லோ டி கோப்பி பிரிட்டனில், லண்டனின் கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். அவர் ஸ்பைனா பிஃபிடாவுக்கு சிகிச்சையளிக்க, கருவிலுள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து வருகிறார். மேலும், ஸ்டெம் செல் இணைப்புகளைப் பயன்படுத்துவது பிரதிபலன்களை இன்னும் மேம்படுத்தலாம் என்கிறார். அவர், “அப்படித்தான் நம்புகிறோம். ஆனால், காத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்று பிபிசியிடம் கூறினார்.

ஸ்பைனா பிஃபிடா எதனால் ஏற்படுகிறது என்பது தெரியவில்லை. ஆனால், பல காரணிகள் குழந்தைக்கு இந்த நிலையை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தை அதிகரிக்கலாம்.

அதில், கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலம் (வைட்டமின் B9) போதுமான அளவுக்கு இல்லாதது மிக முக்கியமான ஒன்று.

பிரிட்டனில் உள்ள லண்டன் இம்பீரியல் கல்லூரி பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவத்தில் நிபுணரான பேராசிரியர் நீனா மோடி, கருத்தரித்தல் மற்றும் கர்ப்ப காலத்தில் பெண்கள் கூடுதல் மருந்துகளை எடுத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இது ஸ்பைனா பிஃபிடா பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கான மிக மலிவான, எளிய நடவடிக்கை என்கிறார்.

Banner

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »