பட மூலாதாரம், Getty Images
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பாக, அந்நிறுவனத்திற்கும் ஈலோன் மஸ்கிற்கும் இடையேயான பேச்சுவார்த்தை நீதிமன்றம்வரை சென்று இழுபறியில் இருந்த நிலையில், அண்மையில் ட்விட்டர் நிறுவனத்திடம் ஈலோன் மஸ்கின் வழக்கறிஞர் அளித்த கடிதம் மூலம் இந்த விவகாரம் முடிவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.
அந்த கடிதத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ஈலோன் மஸ்க் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவது, X என்ற “எவரிதிங் ஆப்” செயலியை உருவாக்குவதை துரிதப்படுத்தும் என கடந்த புதன்கிழமையன்று ஈலோன் மஸ்க் பதிவிட்டிருந்த ஒரு ட்வீட் பேசுபொருளானது.
ட்விட்டரை ஈலோன் மஸ்க் வாங்குவது தொடர்பான இந்த விவகாரம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. ட்விட்டர் நிறுவனத்தின் கணிசமான பங்குகளை ஈலோன் மஸ்க் வாங்கியிருந்த நிலையில், அவரை முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட குழுவில் சேர அந்நிறுவனம் அழைப்பு விடுத்தது. முதலில் அதை ஏற்றுக்கொண்ட ஈலோன் மஸ்க், பின்னர் மறுத்து விட்டார். அதனைத் தொடர்ந்து, ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க அவர் விருப்பம் தெரிவித்தார்.
முதலில், ஈலோன் மஸ்க்கிடம் அதிக பங்குகள் குவிவதைத் தடுக்க முயற்சி எடுத்த ட்விட்டர் நிறுவனம், பின்னர் மொத்த நிறுவனத்தையும் கையகப்படுத்துவதற்காக அவர் கொடுக்க முன்வந்த 44 பில்லியன் அமெரிக்க டாலரை ஏற்க முடிவெடுத்தது.
அதன் பிறகு, ட்விட்டரில் உள்ள போலி கணக்குகளின் எண்ணிக்கை அந்நிறுவனம் கூறியதைவிட அதிகம் என ஈலோன் மஸ்க் கூற, ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்தது.
பின்னர், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவில் இருந்து பின்வாங்குவதாக ஈலோன் மஸ்க் அறிவித்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு

பட மூலாதாரம், Getty Images
எந்தவித முன்யோசனையும் இல்லாமல் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் ஈலோன் மஸ்க் இறங்கியதாக ஊகங்கள் எழுந்தன. இதற்கான தொகையையும் தன்னுடைய மின்சார தேர் நிறுவனமான டெஸ்லாவின் சில பங்குகளையும் விற்று நிதி திரட்ட ஈலோன் மஸ்க் முடிவு செய்திருந்தது, அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்களை அச்சம் கொள்ளச் செய்ததோடு, இறுதியில் அந்த முடிவில் இருந்து அவரைப் பின்வாங்கவும் செய்தது.
இரு வாரங்களுக்குள்ளாகவே இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் எதிர்கொண்டனர். ட்விட்டர் விற்பனையை நிறைவு செய்ய ட்விட்டர் நிர்வாகம் கட்டாயப்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து எந்தவொரு தரப்பும் வெளியேறினால் மற்றொரு தரப்பிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் அந்த ஒப்பந்தத்தில் முன்னரே குறிப்பிடப்பட்டிருந்தது.
ஈலோன் மஸ்க் மற்றும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் இடையேயான கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்திய தனிப்பட்ட செய்திகள் மற்றும் அதைத் தீர்த்து வைக்க ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி எடுத்த முயற்சிகள் உட்பட சில தனிப்பட்ட விஷயங்கள் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்தன.
எல்லாவற்றுக்குமான X செயலி

பட மூலாதாரம், Getty Images
“X எவரிதிங் செயலி” குறித்த அவரது ட்விட்டை பார்க்கையில், சீன செயலியான’WeChat’ போன்ற செயலியை உருவாக்க ஈலோன் மஸ்க் முயற்சிப்பதாகத் தெரிகிறது. செய்தி அனுப்புதல், சமூக வலைத்தளம், பணம் அனுப்புதல், உணவு வாங்குதல் செய்வது உட்பட பல வசதிகளை உள்ளடக்கியது ‘WeChat’.
300 மில்லியன் வரையிலான மாதாந்திரப் பயனர்களைக் கொண்டுள்ள ட்விட்டர் நிறுவனம், அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் மிகச்சிறியதே. அதேபோல, டிக்டாக், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் போல அதிவேகமான வளர்ச்சியை எப்போதும் ட்விட்டர் கண்டதில்லை. அரசியல்வாதிகள், உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர ட்விட்டரை பரவலாகப் பயன்படுத்துவதால் அது செல்வாக்குமிக்கதாகக் கருதப்படுகிறது.
ட்விட்டரை வாங்குவதற்கான விருப்பத்தை ஈலோன் மஸ்க் முதலில் தெரிவித்தபோது, ட்விட்டர் தளத்தை அதிகப்படியான கருத்து சுதந்திரத்திற்கும் மிதவாதத்திற்குமான தளமாக மாற்ற விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.
ஈலோன் மஸ்க் வழக்கறிஞரின் கடிதம் குறித்த தகவல் வெளியானதும், ட்விட்டரின் பங்குகள் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. ட்விட்டர் தளத்தை முற்றிலும் மாறுபட்ட களமாக ஈலோன் மஸ்க் மாற்ற நினைக்கலாம். அது ஒருவேளை, தற்போதுள்ள பயனர்களை அந்நியப்படுத்தலாம். அதேநேரத்தில் புதிய பயனர் கூட்டத்தையும் கொண்டு வரலாம்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com