Press "Enter" to skip to content

யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல்கள்: ஐ.நா முதல் அமெரிக்கா வரை ஒலிக்கும் கண்டனக் குரல்கள்

பட மூலாதாரம், Reuters

யுக்ரேனில் முதல் முறையாக கியவின் மையப்பகுதியில் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது உட்பட அந்நாட்டில் உள்ள எல்லா நகரங்களையும் குண்டுவீசி தாக்கிய பின்னர் ரஷ்யா பரவலான கண்டனத்துக்கு உள்ளானது.

இந்த தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயம் அடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய கட்டமைப்புகள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பல பிராந்தியங்களில் உள்ள மக்கள் குடிநீர், மின்சாரம் இன்றி அவதிப்படுகின்றனர்.

தலைநகர் கியவ் பகுதியில் வசிக்கும் மக்கள் மக்கள் வசிப்பிடங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக மக்கள் கூறினர். புகழ்பெற்ற தாராஸ் ஷெவ்செங்கோ பூங்கா, ஒரு பல்கலைக்கழகம், குழந்தைகள் விளையாடும் மைதானம் உள்ளிட்ட திங்கள் கிழமையன்று காலை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறினர்.

பொதுமக்கள் அதிகம் பேர் உயிரிழக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலானது ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் ஒரு மோசமான போர் என ஐ.நா. பொதுச்செயாளர் அன்டோனியோ குட்டரெஷ் விமர்சித்துள்ளார்.

யுக்ரேனில் போர் குற்றம் நடந்துள்ளதாக ஐரோப்பிய ஆணையம் கூறியுள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா ஃபொன்டெர்லயன், ரஷ்யாவானது பயங்கரவாதம் மற்றும் மிருகத்தனமான அணுகுமுறையில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கொடூரமானது என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது

பட மூலாதாரம், Getty Images

இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, யுக்ரேனிய அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியபோது, அதிநவீன வான்வெளி பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்ட, பதிலடி தாக்குதலுக்குத் தேவையான ஆதரவை யுக்ரேனுக்கு தொடர்ந்து வழங்குவதாக உறுதி அளித்தார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தமது சட்டவிரோத போரில் முற்றிலும் கொடூரமான தன்மையை வெளிப்படுத்துவதாக பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிறகு பேசிய ஸெலென்ஸ்கி, எதிரிக்கு மேலும் அதிக வலியைத் தரும் வகையில் போர்க்களத்தை உருவாக்கும் வகையில் தமதுபடைகளை வலுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சீனா, இந்தியா ஆகிய நாடுகள் யுக்ரேன் மீதான தாக்குதலுக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. எனினும், இரு நாடுகளும் போர் பதற்றத்தை தணிக்க அழைப்பு விடுத்துள்ளன.

நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய யுக்ரேனுக்கான தூதர், செர்கே கியிஸிட்ஸ்யா, யுக்ரேனியர்களின் குடியிருப்புப் பகுதிகளில் தனது குடும்பத்தினர் வசிக்கின்றனர் என்றும் அந்த பகுதியில் அண்மையில் ரஷ்யாவின் ஏகவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. எனவே குண்டு தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளும் வகையில், பாதுகாப்பான முகாமுக்கு தமது குடும்பத்தினரால் செல்ல முடியவில்லை என்றும் கவலை தெரிவித்தார்.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கொடூரமானது என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது

பட மூலாதாரம், EPA

தனது உறவினர்கள் சிலர் ஏற்கெனவே ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் முறையிட்டார். மேலும் கொடூர செயல்களில் ஈடுபடாவண்ணம் சாத்தியமான மற்றும் வலுவான வழிகளைப் பயன்படுத்தி ரஷ்யாவை அவசியம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். தான் ஐநா சபையின் அரங்குக்குள் நுழையும் போதெல்லாம் ரஷ்யாவுக்கான ஐநா பிரதிநிதிகள் ரத்தத்தின் பாதை நோக்கி வெளியேறுவதாக அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் அண்மைக்கால தாக்குதலைத் தொடர்ந்து ஐநா சபை ஒரு அவசரகால கூட்டத்தை கூட்டியுள்ளது. போலியான நடந்த வாக்கெடுப்புகளைத் தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு யுக்ரேனிய பகுதிகளை ரஷ்யா அதனுடன் இணைத்த வேளையில், இந்த அவை கூடியிருக்கிறது. இருப்பினும் திங்கட்கிழமை ரஷ்யா நடத்திய தாக்குதல்கள் காரணமாக யுக்ரேனிய பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட விவகாரத்துக்கு முக்கியத்துவம் குறைந்து விட்டது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

இந்த நிலையில், தீவிர தாக்குதல் நடத்த மக்கள் தனக்கு அதிகாரம் அளித்திருப்பதாக புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், முதல் அத்தியாயம் முடிவடைந்தது. அடுத்தடுத்த அத்தியாயங்கள் தொடரும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, புதினின் நெருங்கிய கூட்டாளியான பெலாரூஸ் தலைவர் அலெக்சாண்டர் லூகஷென்கோ, யுக்ரேனிடம் இருந்து தனது நாட்டுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் யுக்ரேன்-பெலாரூஸ் எல்லையில் உள்ள ரஷ்ய வீரர்களுடன் இணைந்து போர் புரிய தமது படைகளை அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.

“வேகமாக மாறி வரும் சூழல்களைக் கருத்தில் கொண்டு நமது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த தேவைப்படும் எல்லாவற்றையும் செய்வதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டிய தேவையில் இருக்கிறோம்,” என அலெக்சாண்டர் லூகஷென்கோ கூறியதாக அரசு ஊடகமான பெல்டா முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கொடூரமானது என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக,செயின்ட் பீட்டஸ்பர்க்கில் புதினுடன் நேருக்கு நேர் சந்தித்து பேசிய லூகஷென்கோ, ரஷ்யா-கிரைமியா இடையேயான முக்கியமான பாலத்தில் சனிக்கிழமை நடந்த குண்டு வெடிப்பு குறித்து குறிப்பிட்டு பேசும்போது, பெலாரஸுக்கு எதிராக திட்டமிடப்பட்ட கிரிமியன் பாலம்- 2 பற்றிய அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தனக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

எந்தவொரு ஆதாரங்களையும் முன் வைக்காமல், பெலாரூஸ் மீது தாக்குதல் நடத்துவது குறித்து யுக்ரேன் சித்திப்பது மட்டுமின்றி அதுகுறித்து திட்டமிடுவதாகவும் கூறினார். பெலாரூஸ் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு போரை கட்டவிழ்த்து விட யுக்ரேன் அதன் ஆதரவாளர்களால் தூண்டப்பட்டிருக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

“நாங்கள் இதை பார்த்தோம். எங்களுக்கும் இது தெரியும். நாங்கள் போர் தந்திரம் கொண்ட வீரர்கள் குழுக்களை உருவாக்கினோம், தெற்கு எல்லையின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் பயிற்சிகள் மேற்கொண்டோம். அதையே இப்போதும் செய்கிறோம்,” என்கிறார் லூகஷென்கோ.

பெலாரூஸ் நாடானது, அண்மைக்காலமாக ராணுவம், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ரஷ்யாவை அதிகமாக சார்ந்திருக்கும் நிலையில் உள்ளது. இதற்கு பதிலாக ரஷ்ய படைகள் பெலாரூஸ் பகுதிகளை தங்களது தளமாக பயன்படுத்திக் கொண்டு யுக்ரேனுக்குள் கடந்த பிப்ரவரியில் ஊடுருவின.

Banner

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »