பட மூலாதாரம், Getty Images
இந்தோனீசியாவின் ஜம்பி மாகாணத்தில் பெண் ஒருவரை மலைப்பாம்பு ஒன்று கொன்று விழுங்கியதாக உள்ளூர் உடகங்கள் தெரிவிக்கின்றன. நடந்தது என்ன?
சுமார் 50 வயது ரப்பர் தோட்டத் தோட்டத் தொழிலாளியான ஜாஹ்ரா கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.23) காலை வழக்கம்போல, ரப்பர் தோட்ட வேலைக்குச் சென்றுள்ளார்.
ஆனால், அவர் இரவு வீட்டுக்கு திரும்பி வரவில்லை எனக் கூறப்பட்டது. எனவே, குழுக்களாக பிரிந்து அவரை பலரும் பல இடங்களில் தேடியுள்ளனர். அடுத்த நாள், பெருத்த வயிற்றுடன் அப்பகுதியில் கிடந்த மலைப்பாம்பு ஒன்றை அந்த கிராமவாசிகள் கண்டனர். சந்தேகப்பட்டு அந்தப் பாம்பைக் கொன்று, வயிற்றைக் கிழித்துப் பார்த்தபோது ஜாஹ்ராவின் உடல் உள்ளே இருந்தது.
“பாம்பின் வயிற்றுக்குள் இருந்து அவரது உடல், கண்டெடுக்கப்பட்ட போது, பெரிதாக சேதமடைந்திருக்கவில்லை” என்று பெட்டாரா ஜம்பி காவல் நிலைய தலைவர் ஏகேபி எஸ் ஹரேஃபா உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ஜஹ்ராவின் கணவர் ஞாயிற்றுக்கிழமை இரவு, ரப்பர் தோட்டத்தில் ஜஹ்ராவின் ஆடைகளும் அவர் பயன்படுத்தும் கருவிகளும் கிடப்பதைக் கண்டார். அதன்பிறகே, தேடுதலை தீவிரப்படுத்த குழுக்களை அனுப்பியுள்ளார்.
அடுத்தநாள் காலை, சுமார் 16 அடி நீளமுள்ள (5மீ) மலைப்பாம்பை பெருத்த வயிறுடன் கண்டபிறகு அதனைக் கொன்று, பாதிக்கப்பட்டது ஜஹ்ராதானா என்று கிராமவாசிகள் கண்டறிந்தனர்” என்று ஹரேஃபா சிஎன்என் இந்தோனீசியாவிடம் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக நடந்தாலும், இந்தோனேசியாவில் ஒருவர் மலைப்பாம்பால் விழுங்கப்பட்டு உயிரிழப்பது இது முதல் முறையல்ல. 2017 – 2018 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும், இதே போன்ற இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன.

பட மூலாதாரம், SAMSON KIRUBAKARAN
மலைப்பாம்புகள் தங்கள் உணவை முழுவதுமாக விழுங்கக்கூடியவை. அதற்கேற்றவாறு, அவற்றின் தாடைகள் மிகவும் நெகிழ்வான தசைநார்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அவை பெரிய இரையை விழுங்கமுடியும்.
“மலைப் பாம்புகள் பொதுவாக எலிகள் மற்றும் பிற விலங்குகளை உண்கின்றன. ஆனால் அவை ஒரு குறிப்பிட்ட அளவை அடைந்தவுடன், கலோரிகள் போதுமானதாக இல்லாததால், அவை எலிகளை கண்டுகொள்வதில்லை,” என்று நிபுணர் ஒருவர் பிபிசியிடம் முன்பு கூறினார்,
“மலைப் பாம்புகளின் இரை எவ்வளவு பெரியதோ அந்த அளவுக்கு அவற்றால் பெரிதாக முடியும்” என்று சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகத்தின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அதிகாரி மேரி-ரூத் லோ கூறுகிறார். அவற்றின் இரைகளில், பன்றிகள், பசுக்கள் போன்ற பெரிய விலங்குகளும் அடங்கும்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com