Press "Enter" to skip to content

தென்னாப்பிரிக்காவில் புதிய ஜுலு மன்னர் பதவிவேற்பு – யார் இவர்? மக்கள் ஏன் இவரை நேசிக்கிறார்கள்?

பொதுவாக தென்னாப்பிரிக்கர்கள் அரியணையின் ரசிகர்கள் அல்ல. ஆனால், நேற்று நடந்த புதிய ஜுலு சாம்ராஜ்ஜிய அரசரின் முடிசூட்டு விழா மொத்த நாட்டையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இது தென்னாப்பிரிக்க வரலாற்றில் மிக முக்கிய தருணம்.

அந்நாட்டு வரலாற்றில் பல விஷயங்களுக்கு இந்த விழா தொடக்கமாக அமையவுள்ளது.

ஜனாதிபதி சிரில் ரமபோசாவினால் 49 வயதான மிசுசுலு கா ஸ்வெலிதினி, முறைப்படி மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார். கறுப்பின ஜனாதிபதி ஒருவர் ஜுலு முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.

அதேபோல, இது 1994ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா ஜனநாயக நாடாக மாறிய பிறகு நடக்கும் முதல் ஜுலு முடிசூட்டு விழாவாகும்.

1994ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க நிறவெறி அரசாங்கத்தின் கீழ் நடந்த முந்தைய முடிசூட்டு விழாவில் மன்னர் குட்வில் ஸ்வெலிதினி கா பெகுசுலுவுக்கு முடிசூட்டப்பட்டது. அவர் கடந்த ஆண்டு மார்ச் 12ஆம் தேதி மரணமடைந்த நிலையில், அடுத்ததாக யார் அரியணை ஏறுவது என்பது தொடர்பாக அவர்கள் குடும்பத்தினர் மத்தியில் போட்டி நிலவியது. தற்போது புதிய மன்னராக மிசுசுலு கா ஸ்வெலிதினி அறிவிக்கப்பட்டுள்ளது, பொதுவெளியில் நடந்த தர்மசங்கடமான அந்தக் குடும்பப் பகைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்.

தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை மன்னர் பதவி என்பது வெறும் கௌரவப் பதவி மட்டுமே. அந்தப் பாரம்பரியப் பதவி அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும். மன்னர் குட்வில் ஸ்வெலிதினி கா பெகுசுலுவுக்கு முடிசூட்டப்பட்டபோது அவர் மேற்கத்திய உடை அணிந்து வர வேண்டும் என சிறுபான்மை வெள்ளையின அதிகாரிகள் எதிர்பார்த்ததால், கோர்ட் சூட் அணிந்தே அவர் கலந்துகொண்டார். மேலும், ஜுலு கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சிறுத்தை தோல் போன்ற ஆடையை தோளின் குறுக்காக அணிந்திருந்தார்.

ஆனால், நேற்று நடைபெற்ற விழாவில் மிசுசுலு கா ஸ்வெலிதினி தங்களுடைய பாரம்பரிய உடையிலேயே கலந்துகொண்டார்.

மன்னருக்கான அங்கீகார சான்றிதழை மிசுசுலுவிடம் ஜனாதிபதி ரமபோசா வழங்கியதைத் தொடர்ந்து, அவர் ஜுலு சாம்ராஜ்ஜியத்தின் ஒன்பதாவது மன்னரானார்.

முதன்முறையாக அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் மன்னரின் முடிசூட்டுவிழா நேற்று நேரலை செய்யப்பட்டது.

குவாசுலு-நடால் மாகாணத்தில் உள்ள குவாகாங்கேலமன்கெங்கனே அரண்மனையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினிக்கு பாரம்பரிய முறைப்படி முடிசூட்டு விழா நடந்த நிலையில், தற்போது இந்த விழா அதிகாரப்பூர்வமாக நடைபெற்றது.

பாரம்பரிய முறையில் நடந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட நிலையில், நேற்று நடைபெற்ற விழாவில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள், பொதுமக்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான ஜூலியஸ் மலேமா தலைமையிலான எக்கனாமிக் ஃப்ரீடம் ஃபைட்டர்ஸ் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் புதிய மன்னருக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன.

பொதுமக்கள் ஏன் இவரை நேசிக்கிறார்கள்?

அரியணைக்கான வாரிசு போட்டி விவாகரத்தால் ஊடகங்கள் மூலமாக தென்னாப்பிரிக்கா முழுவதும் மிசுசுலு கவனம் பெற்றார். அது பலரது அன்பையும் அவருக்குப் பெற்றுத்தந்தது.

இளம் தென்னாப்பிரிக்கர்கள் தங்களில் ஒருவராக அவரை அடையாளம் கண்டதால் சமூக ஊடகங்களில் மிசுசுலு பிரபலமானார். தன்னுடைய முதல் உரையில் அவர் சொதப்பியபோது சாதாரணமாக அவரைக் கிண்டல் செய்தனர்.

நிகழ்வைக் காண பாரம்பரிய உடையில் வருகை தந்த பொதுமக்கள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதை அடுத்து, 2021ஆம் ஆண்டு ஜூலையில் மிகப்பெரும் கலவரம் வெடித்தது. அந்தக் கலவரத்தைக் கைவிடுமாறு குவாசுலு-நடால் பகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அந்த உரையை அவர் ஆற்றியிருந்தார். முதலில் ஜூலு மொழியில் அந்த உரையை திணறித்திணறி வாசித்த மிசுசுலு, பின்னர் ஆங்கிலத்தில் சரளமாக வாசித்தார்.

கடந்த மாதம் ரீட் நடனம் எனப்படும் பதின்ம வயது பெண்களுக்கான சடங்கு விழாவை மேற்பார்வை செய்த மன்னர் மிசுசுலு, “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை நம் தேசத்திற்கு அவமானம். பெண்கள் மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும். ஆண்களாக நாம் சிறப்பாக செயல்பட வேண்டும்” என பாலின வன்முறைக்கு எதிராகப் பேசினார்.

டர்பன் நகரில் நடந்த முடிசூட்டு விழாவுக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த ஓர் இளம் பெண், “மன்னராக அவருக்குப் பின்னால் நாங்கள் உள்ளோம் என்பதைக் காட்டுவதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளோம்” என பிபிசியிடம் கூறினார்.

யார் இந்த மிசுசுலு கா ஸ்வெலிதினி?

குட்வில் ஸ்வெலிதினி கா பெகுசுலு – மன்ட்ஃபோம்பி டிலாமினி தம்பதியின் முதல் மகனான மிசுசுலு கா ஸ்வெலிதினி, 1974ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி குவாலாபிசாவில் பிறந்தார்.

பீட்டர்மரிட்ஸ்பர்க்கில் உள்ள செயின்ட் சார்லஸ் கல்லூரியில் தனிப்பட்ட முறையில் கல்வி கற்ற அவர், அமெரிக்காவின் ஜாக்சன்வில் பல்கலைக்கழகத்திலும் பயின்றுள்ளார்.

இவருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »