Press "Enter" to skip to content

பிரேசில் அதிபர் தேர்தல்: போல்சனாரோவை தோற்கடித்த லூலு – வலதுசாரியிலிருந்து இடதுக்கு மாறுகிறதா நாடு?

பட மூலாதாரம், Reuters

பிரேசில் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, தீவிர வலதுசாரியான தற்போதைய அதிபர் ஜேர் பொல்சனாரோவை தோற்கடித்ததால் பிரேசில் இடதுசாரி பக்கமாகத் திரும்பியுள்ளது.

பிரேசிலின் அரசியல் களத்தில் எதிரெதிர் பக்கங்களில் நேருக்கு நேர் மோதிய இரண்டு போட்டியாளர்களின் வலது, இடது எனப் பிளவுபட்ட பிரசாரத்திற்குப் பிறகு, லூலா 50.9% வாக்குகளைப் பெற்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாமல் சிறையில் இருந்தது, அதிபர் பதவிக்கு நிற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது போன்றவற்றுக்குப் பிறகு ஓர் அரசியல்வாதியாக லூலாவுக்கு இது பிரமிக்க வைக்கும் மறுபிரவேசம்.

பிரேசிலின் அரசாங்க எண்ணெய் நிறுவனமான பெட்ரோப்ராஸுடனான ஒப்பந்தங்களுக்கு ஈடாக பிரேசிலின் கட்டுமான நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

லூலா தனது தண்டனை ரத்து செய்யப்படுவதற்கு முன்பாக 580 நாட்கள் சிறையில் இருந்தார். அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் அரசியல் களத்தில் இறங்கினார்.

அவருடைய வெற்றி உரையை, “என்னை உயிரோடு புதைக்க முயன்றார்கள். இதோ மீண்டு வந்துவிட்டேன்” என்று தொடங்கினார்.

line

லூலா குறித்த ஐந்து முக்கிய தகவல்கள்

வெற்றிக்குப் பிறகு தனது மனைவி ரோசேஞ்சிலாவை அணைத்துக்கொண்ட லூலா

பட மூலாதாரம், Reuters

  • அவருக்கு 77 வயதாகிறது
  • இடதுசாரி அரசியல்வாதி
  • முன்னாள் கொல்லர்
  • 2003 முதல் 2010ஆம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தார்
  • 2018ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார்
line

ஆரம்பத்திலிருந்தே அவர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் முதல் சுற்றில் கணிக்கப்பட்டதைவிட மிகக் குறைவான வாக்குகளை பெற்று அவர் முன்னிலையில் இருந்தபோது, பிரேசிலியர்கள் கணிப்பின் துல்லியத்தைச் சந்தேகிக்கத் தொடங்கினார்கள்.

நிறுவன அமைப்புகளும் ஊடகங்களும் தனக்கு எதிராக இருப்பதாகவும் அதனால் அவருக்குள்ள ஆதரவு குறைத்து மதிப்பிடப்படுவதாகவும் போல்சனாரோ வைத்த குற்றச்சாட்டுகளை நம்பிய அவருடைய ஆதரவாளர்கள், அவரது வெற்றியில் முழு நம்பிக்கை கொண்டிருந்தனர்.

லூலாவை “ஒரு திருடன்” என்று முத்திரை குத்தி, அவரது தண்டனையை ரத்து செய்ததால் அவர் நிரபராதி என்று அர்த்தமல்ல என்றும் சரியான சட்ட நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் வாதிடும் போல்சனாரோவின் ஆதரவாளர்களை இடதுசாரி தலைவர்களின் வெற்றி குழப்பமடையச் செய்யலாம்.

ஜேர் போல்சனாரோ தோல்வியடைந்தாலும் அவருக்கு நெருக்கமான அரசு பிரதிநிதிகள் பெரும்பான்மையாக உள்ளனர். அதாவது லூலா சட்டமன்றத்தில் அவரது கொள்கைகளுக்குக் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்வார்.

ஆனால், ஜனவரி 2003 மற்றும் டிசம்பர் 2010-க்கும் இடையில் இரண்டு முறை பதவியிலிருந்த லூலாவுக்கு அரசியல் கூட்டணிகளை உருவாக்குவது புதிதல்ல.

அவரது துணை அதிபருக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது முன்னாள் போட்டியாளரான ஜெரால்டோ அல்க்மினை அவர் தேர்ந்தெடுத்தார். அவர் முந்தைய தேர்தல்களில் லூலாவை எதிர்த்துப் போட்டியிட்டார்.

ஜேர் போல்சனாரோ

பட மூலாதாரம், Getty Images

கூட்டணியை உருவாக்கும் அவரது உத்தி பலனளித்தது, அவரது தொழிலாளர் கட்சிக்கு வாக்களிப்பதைப் பற்றிச் சிந்திக்காத வாக்காளர்களையும் அந்த முடிவு அவர் பக்கம் இழுத்தது.

அவரது வெற்றி உரையில், அவர் தனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து பிரேசிலியர்களுக்கும் சேர்த்து ஆட்சி செய்வேன் எனக் கூறி, ஒரு சமரச தொனியில் பேசினார்.

“இந்த நாட்டிற்கு அமைதியும் ஒற்றுமையும் தேவை. மக்கள் இனி போராட விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

ஜேர் போல்சனாரோ இன்னும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. தீவிர வலதுசாரி அதிபர் பிரேசிலின் மின்னணு வாக்குப்பதிவு முறையின் நம்பகத்தன்மையில், எந்த ஆதாரத்தையும் வழங்காமல் சந்தேகம் எழுப்பியதால் பிரசாரம் ஒருபுறம் மிகவும் பதட்டமாக இருந்தது.

இதனால், முடிவு அவருக்கு எதிராக வந்தால் அவர் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாரோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் இரண்டாவது சுற்றுக்கு ஒருநாள் முன்பு, அவர், “சிறிதளவும் சந்தேகமில்லை. யார் அதிக வாக்குகளைப் பெற்றாலும் வெற்றியைப் பெறுவார்கள். அதுதான் ஜனநாயகம்,” என்றார்.

line

போல்சனாரோ பற்றிய ஐந்து முக்கிய தகவல்கள்

ஜேர் போல்சனாரோ

பட மூலாதாரம், Reuters

  • இவருக்கு 67 வயதாகிறது
  • தீவிர வலதுசாரி
  • முன்னாள் ராணுவ கேப்டன்
  • இரண்டாவது ஆட்சிக்காலத்திற்காக வேட்பாளராக அதிபர் தேர்தலில் நின்றார்
  • பிரேசிலின் மின்னணு வாக்குப்பதிவு முறையின் நம்பகத்தன்மையில் ஆதாரமற்ற சந்தேகங்களை எழுப்பினார்
line

தேர்தல் நாளிலேயே வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், வாக்களிப்பதைத் தடுக்கும் முயற்சி என்று லூலாவின் பிரசாரம் கூறியதால் அது காவல்துறையினரால் நிறுத்தப்பட்டது.

தேர்தல் மன்றத்தின் தலைவரான அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ், அனைத்து சோதனைச் சாவடிகளையும் சாலை தடைகளையும் நீக்குமாறு நெடுஞ்சாலை காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

சில வாக்காளர்கள் வாக்களிக்க தாமதமானாலும், யார் வாக்களிப்பதும் தடுக்கப்படவில்லை என்று அவர் கூறினார். ஆனால், இந்த சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

லூலாவை விட அவருக்குக் குறைவான வாக்குகள் பதிவானது அதிகாரபூர்வமாக இருப்பதால் போல்சனாரோ எப்போது, என்ன சொல்வார் என்று இப்போது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

பிரேசில் தேர்தல் அங்கு மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது. குறிப்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போல்சனாரோ அரசாங்கத்தின் இன்னொரு நான்கு ஆண்டுகள் அமேசான் மழைக்காடுகளில் மேலும் காடழிப்புக்கு வழிவகுத்திருக்கும் என்று கவலைப்படுகிறார்கள்.

பிரேசில் தேர்தல்

பட மூலாதாரம், EPA

லூலா தனது வெற்றி உரையில், “அமேசானை பாதுகாக்க சர்வதேச ஒத்துழைப்புக்கு தயாராக இருப்பதாக” கூறினார்.

“இன்று நாம் பிரேசில் மீண்டு வந்துவிட்டதாக உலகத்திற்குச் சொல்கிறோம். இப்போத் உள்ளதைப் போல் சர்வதேச அரசியலில் ஒதுக்கி வைக்கப்பட முடியாத அளவுக்கு பிரேசில் மிகவும் பெரிய நாடு,” என்று கூறினார்.

ஆனால், அவரது பேச்சின் மையத்தில் பட்டினையை சமாளிப்பதற்கான வாக்குறுதி இருந்தது. இது பிரேசிலில் அதிகரித்து வருகிறது. 3.3 கோடிக்கும் மேலான மக்களைப் பாதிக்கிறது.

லூலாவின் முதல் இரண்டு பதவிக் காலத்தில் அவர் பிரபலமடைந்ததற்கு முக்கியமான காரணம், லட்சக்கணக்கான பிரேசில் மக்களை வறுமையிலிருந்து மீட்டது.

ஆனால், தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதாரத்தில் அந்த சாதனையை மீண்டும் உருவாக்குவதற்கான நிதியைக் கண்டுபிடிப்பது, குறிப்பாக விரோதம் கொண்ட காங்கிரஸால் அவர் தடுக்கப்பட்டால், எளிதான காரியமாக இருக்காது.

Banner

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »