Press "Enter" to skip to content

ஈலோன் மஸ்க் ட்விட்டர் ப்ளூ டிக் பெற 8 டாலர் நிர்ணயிப்பதாக அறிவிப்பு – கொதிக்கும் பிரபலங்கள்

பட மூலாதாரம், Reuters

ஈலோன் மஸ்க், ட்விட்டர் பயனர்களில், தனது பெயருக்கு அருகே கணக்கு ட்விட்டரால் உறுதி செய்யப்பட்டது என்பதைக் குறிக்கும் ப்ளூ டிக் அங்கீகாரம் கொண்டவர்களுக்கு மாதம் 8 டாலர் வசூலிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

சமூக ஊடக தளமான ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்திய பிறகு செய்யவுள்ள மாற்றங்களின் ஒரு பகுதியாக, “ஸ்பேம்/ஸ்கேம் போன்றவற்றை வீழ்த்துவதற்கு இது அவசியம்,” எனக் கூறினார் மஸ்க்.

ட்விட்டரால் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளில், பயனர் பெயருக்கு அடுத்துள்ள நீல நிற டிக் குறி இப்போது இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை நம்பகத்தன்மை வாய்ந்த ஆதாரங்களை, நபர்களை அடையாளம் காண்பதைக் கடினமாக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

உலகின் மிகப்பெரிய பணக்காரரான மஸ்க், பணம் செலுத்தும் பயனர்களுக்கு பதில்கள், தேடல்களில் முன்னுரிமை மற்றும் விளம்பரங்களில் முன்னுரிமை இருக்கும் என்று கூறினார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்களின் கையில் அதிகாரம்! மாதம் 8 டாலருக்கு ப்ளூ,” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார். பழைய ப்ளூ டிக் சரிபார்ப்பு முறையை, “நிலவுடைமை சமுதாய அமைப்பின் பிரபுக்களின் கீழ் விவசாயிகள் போன்ற அமைப்பு” என்று அவர் விமர்சித்தார்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

ப்ளூ டிக் பயனர்களை சர்பார்க்கும் ட்விட்டரின் முந்தைய முறை, ஒரு குறுகிய இணைய விண்ணப்ப படிவத்தை உள்ளடக்கியது. பிரபலங்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் போன்ற ஆள்மாறாட்டத்திற்கு ஆளாகக்கூடிய இலக்குகளாக இருப்பவர்களுக்கு என ஒதுக்கப்பட்டது.

ட்விட்டர் நிறுவனம், 2009ஆம் ஆண்டில் இந்த முறையை அறிமுகப்படுத்தியது. போலி கணக்குகளைத் தடுக்க இந்நிறுவனம் போதுமான நடவடிக்கையை எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வழக்கையும் எதிர்கொண்ட பிறகு இந்த முறையைக் கொண்டுவந்தது.

ஆனால், பல ஆண்டுகளாக லாபம் ஈட்டாத ட்விட்டரின் வணிகத்தை மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஈலோன் மஸ்க், கடும் சவாலை எதிர்கொள்கிறார்.

சில நிறுவனங்கள் தனது தலைமையின் கீழ் தளத்தில் விளம்பரம் செய்யக் காத்திருக்கும் நிலையிலும், ட்விட்டர் விளம்பரங்களை நம்பியிருப்பதைக் குறைக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

அவருடைய எலெக்ட்ரிக் தேர் நிறுவனமான டெஸ்லாவின் போட்டியாளரான ஜெனரல் மோட்டார்ஸ், கடந்த வாரம் ட்விட்டரில் அதன் விளம்பரங்களை வெளியிடுவதை நிறுத்தி வைப்பதாகக் கூறியது.

ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையில், வேறு சில முக்கிய நிறுவனங்கள், ஈலோன் மஸ்க் மேற்கொள்ளும் மாற்றங்கள் எப்படிச் செயல்படப் போகின்றன என்பதைப் பார்க்க காத்திருப்பதாகவும் அதற்கு இடைப்பட்ட காலத்தில் ட்விட்டரில் தற்காலிகமாக தங்கள் விளம்பரங்களை அவை நிறுத்திவிட்டன என்றும் ஒரு முன்னணி விளம்பர நிறுவனத்திற்கான ஊடக விளம்பரங்களை வாங்குபவர் பிபிசியிடம் கூறினார்.

திங்கட்கிழமையன்று, உலகின் மிகப்பெரிய விளம்பர நிறுவனங்களில் ஒன்றான ஐபிஜி, ட்விட்டரில் “நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை” உறுதி செய்வதற்கான திட்டங்களில் கூடுதல் தெளிவு தேவை எனக் கூறி, தனது வாடிக்கையாளர்களுக்கு அந்தத் தளத்தில் விளம்பரங்களை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு அறிவுறுத்தியது. உலகின் மிகப் பெரிய பிராண்டுகள் சிலவற்றின் சந்தைப்படுத்தலுக்கான வரவு செலவுகளைக் கையாள, ஐபிஜி நிறுவனத்திற்கு ஓராண்டுக்கு ஒரு பில்லியன் பவுண்டுகள் வழங்கப்படுகிறது.

ப்ளூ டிக் சலுகைகளுக்கான கட்டணம் மாதந்தோறும் 20 டாலராக இருக்கலாம் என்று கூறிய அசல் அறிக்கை, ப்ளூ டிக் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

தளத்தில் பலரும் எழுத்தாளர் ஸ்டீஃபன் கிங், இந்த மாற்றங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில், “எனக்கு ட்விட்டர் தான் பணம் செலுத்த வேண்டும்” என்று எழுதினார். அதைப் பலரும் வழிமொழிந்தனர்.

அதற்கு மஸ்க், “எப்படியாவது நாம் பில்களை செலுத்தியாக வேண்டுமே!” என்று பதிலளித்தார்.

Banner

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »