- வெட்டி டேன்
- பிபிசி நியூஸ்
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் காலில் சுட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மனிதர், இம்ரான் கான் “மக்களை தவறாக வழிநடத்துவதால்” அவரை தான் கொல்ல விரும்பியதாக தெரிவித்துள்ளார், இது தொடர்பாக அவர் பேசிய வாக்குமூலத்தின் காணொளியை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். எந்த நிலையில் இந்த காணொளி பதிவு செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையே, மக்கள் தன்னுடன் உள்ளதாக இம்ரான் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு, தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கிய ‘நீண்ட பயணம்’ என்று பெயரிடப்பட்ட பேரணியை நடத்திக்கொண்டிருந்தபோது அவர் சுடப்பட்டார்.
“அதிகார அமைப்பு எனக்கு எதிராக உள்ளது,” என பிபிசியிடம் கடந்த செவ்வாய்கிழமை இம்ரான் கூறியிருந்தார்.
அதிகாரத்தில் இருந்து கீழே இறங்கிய இம்ரான் கான், எதிர்கட்சியாக அரசியலில் புது தெம்போடு மீண்டு எழுவது பாகிஸ்தான் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது என்று திரும்பிப் பார்ப்போம்…
ராணுவத்துக்கு வேண்டாதவராக மாறிய தருணம்
2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராகத் தேர்வானார். ஊழலுக்கு முடிவு கட்டுவதாகவும், பொருளாதாரத்தை சீரமைப்பதாகவும் கூறி அரசியலில் ஒரு புதிய சக்தியாக அவர் எழுச்சி பெற்றார்.


பெரும் அளவிலான மக்கள் ஆதரவு அவருக்கு இருந்தது. அதே போல பாகிஸ்தானில் அதிகார அமைப்பு என்று குறிப்பிடப்படும் அல்லது ராணுவத்தின் மறைமுக ஆதரவும் அவருக்கு இருந்தது.
“அவர்களால் அவர் உருவாக்கப்பட்டார்,” என இம்ரான் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் உறுப்பினர் ஒருவர் பிபிசியிடம் முன்னர் தெரிவித்திருந்தார். “அவர்கள்தான் அவரை அதிகாரத்துக்குள் கொண்டு வந்தனர்,” என்றும் அவர் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், உயரும் பணவீக்கம், வெளிநாட்டு கடன் ஆகியவற்றின் காரணமாக பொதுமக்கள் இடையே அவருக்கான ஆதரவு சரிந்தது. அவர் பொருளாதாரத்தை தவறாக கையாள்கிறார் என்ற தொடர் குற்றச்சாட்டுக்கும் உள்ளானார்.
தவிர பாகிஸ்தானின் சக்திவாய்ந்த ராணுவத்துக்கும் அவருக்குமான உறவில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் உளவு அமைப்பு ஒன்றின் புதிய தலைவர் நியமனத்துக்கான கோப்பில் கையெழுத்திட இம்ரான் கான் மறுத்ததும் அவரது வீழ்ச்சிக்கான காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ராணுவத்துக்கும் இம்ரான்கானுக்கும் இடையிலான உரசலை எதிர்கட்சிகள் பிடித்துக் கொண்டன. 2022 மார்ச் மாதம் அவரது ஆதரவு எம்பிக்கள் தொடர்ந்து பதவி விலகியதால், அது அவரது நாடாளுமன்ற பெரும்பான்மையை பாதித்தது.
எனவே எதிர்கட்சிகள் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தன. ஆனால், இம்ரான்கானோ நாடாளுமன்றத்தை கலைக்க முடிவு செய்தார். உடனடியாக தேர்தலும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் அரசியலமைப்பு சட்டத்துக்கு மாறாக செயல்பட்டதாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் அவரது பதவி பறிபோனது.
கடும் விமர்சகர் ஆனார்
ஆனால், இம்ரான் கான் அமைதியாக இருக்கவில்லை.
அரசுக்கு எதிராக, ராணுவத்துக்கு எதிராக மோதுவதற்குப் பதில், நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று அனல் பறக்கும் உரைகளை நிகழ்த்தினார்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி எதிரணி அதிரும் வகையில் முக்கியமான பஞ்சாப் மாநிலத்தின் சட்டப்பேரவையை கைப்பற்றியது. பிஎம்எல்-என் எனும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் தேசிய கட்சியை தோற்கடித்தது.
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கான முன்னோட்டம் இது என்று பஞ்சாப் தேர்தல் முடிவை பலரும் கருதினர்.
பிரதமராக இருக்கும் போது தம்மை சந்தித்த வெளிநாட்டு தூதுவர்களிடம் இருந்து இம்ரான் கான் ரோலக்ஸ் கைக்கெடிகாரங்கள், ஒரு மோதிரம் மற்றும் ஒரு ஜோடி கஃப் லிங் ஆகியவற்றை பரிசாகப் பெற்றார்.
வெளிநாட்டு தூதுவர்களிடம் இருந்து பரிசாகப் பெற்ற இந்த பொருட்கள் குறித்து தவறான தகவல்களை கொடுத்ததாகவும் அதிக விலைக்கு விற்றதாகவும் குற்றம் சாட்டிய பாகிஸ்தான் தேர்தல் ஆணையம், அக்டோபர் மாதம் இம்ரான் கான் எந்த அரசாங்கப் பதவியையும் வகிக்கக்கூடாது என்று கூறி தகுதி நீக்கம் செய்தது.
இந்த முடிவு அரசியல் நோக்கம் கொண்டது என்று இம்ரான் கான் கூறினார். நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களை கூட்டி, தேர்தல் நடத்தும்படி அரசை வலியுறுத்தி தலைநகர் இஸ்லாமாபாத்தைநோக்கி ஒருவார கால பேரணி செல்லத் தொடங்கினார். நவம்பர் 11 ஆம் தேதி அவரது பேரணி இஸ்லாமாபாத் நகரை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
அவரது வாகனத் தொடரில் எண்ணற்ற வேன்கள், இருசக்கர வாகனங்கள் வந்தன. திறந்த வண்டியில் இருந்தபடி பாகிஸ்தானின் பெரிய மாநிலமான பஞ்சாப் செல்லும் வழியில் ஆதரவாளர்கள், மக்களிடம் பேசினார்.
“ஆறுமாதங்களில், இந்த நாட்டை கைப்பற்றும் ஒரு புரட்சியின் அத்தாட்சியாக நான் இருப்பேன்,” என தமது ட்விட்டர் பக்கத்தில் இந்தவாரத்தின் தொடக்கத்தில் இம்ரான் கான் பதிவிட்டிருந்தார். “அது மென்மையான ஒன்றாக தேர்தல் வழியில் இருக்குமா அல்லது பேரழிவை ஏற்படுத்தும் ரத்தக்களறியான வழியில் இருக்குமா என்பது மட்டும்தான் இப்போதைய கேள்வி,” என்றும் அவர் கூறியிருந்தார்.
பேரணி பார வண்டியில் அமைக்கப்பட்ட மேடையில் நின்றிருக்கும்போது வியாழக்கிழமையன்று இம்ரான் கான் சுடப்பட்டார்.
தொடர்ந்து போராடுவதாக ஆதரவாளர்கள் உறுதி
வலது காலின் பின்பகுதியில் நேரிட்ட குண்டு காயத்துடன் உயிர் தப்பிய இம்ரான்கான் இப்போது, நல்ல நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது இம்ரான்கானின் பின்னால் நின்றிருந்த முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், தாக்குதல் நடத்தியவரிடம் இருந்து இம்ரான்கான் ஆதரவாளர்கள் துப்பாக்கியை பறிக்க முயன்றனர் என்று கூறினார்.
“இதன் காரணமாகத்தான் தாக்குதல் நடத்திய நபரின் குறி தவறியது,”என்றும் அவர் கூறினார்.
பிரதமர் ஷரீப் இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால், இது குறித்து பேசிய இம்ரான் கானின் மூத்த ஆதரவாளரும், செய்தித் தொடர்பாளருமான ரவூப் ஹாசன், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் நேரடியாக தொடர்பு இருக்கிறது என்று குற்றம்சாட்டினார். காணொளி வாக்குமூலமானது, தோற்றுப்போன தாக்குதலை மூடி மறைக்கும் முயற்சியாகும் என்றும் விமர்சித்தார்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் தேசம் முழுவதுக்குமான ஒரு போராட்டத்தை இம்ரான் கான் கட்சியினர் முன்னெடுத்தனர்.
சில போராட்டக்காரர்கள் ஏற்கனவே போராட்ட இடத்தில் குழுமியிருந்தாக உள்ளூர் செய்தி நிறுவனமான டான் கூறியுள்ளது. ஒரு ராணுவ அதிகாரியின் வீட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கான பிடிஐ கட்சி ஆதரவாளர்கள் குழுமியிருக்கும் காணொளி வெளியாகி இருப்பதாக கூறியுள்ளது.
“இம்ரான் கான் மீதான தாக்குதல் குறித்து சுதந்திரமான நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம். இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்,” என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் போராட்டக்காரர்களில் ஒருவர் கூறினார்.
இம்ரான் கானின் பேரணியை தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்வோம். இந்த பேரணி ஒரு போதும் நிறுத்தப்படாது என்று மற்றொரு போராட்டக்காரர் உறுதிபடக் கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com