Press "Enter" to skip to content

மலேசியாவுக்கு மருது பாண்டியர்களின் வாரிசு நாடு கடத்தப்பட்ட வரலாறு – அதிர்ச்சிக்குறிப்புகள்

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக

மருது சகோதரர்களின் வாரிசுகளில் ஒருவர் மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாகவும், அவர் அந்நாட்டிலேயே பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு உயிரிழந்ததாகவும் ஒரு தகவல் நீண்ட காலமாக உலவி வருகிறது.

காலஞ்சென்ற தமிழக முதல்வர் கருணாநிதிகூட மலேசியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது அங்கு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இது குறித்துப் பேசியுள்ளார். அதன் பிறகுதான் மலேசிய தமிழர்கள் பலருக்கும் மருது சகோதரர்கள் பற்றி தெரியவந்தது எனலாம்.

இதுதொடர்பான பல்வேறு பதிவுகள், ஆவணங்கள் மூலம் இளைய மருதுவின் மகனான துரைச்சாமி என்பவர்தான் நாடு கடத்தப்பட்டார் என்பது உறுதியானாலும், அவரது இறுதி வாழ்க்கை எப்படி கழிந்தது என்பதில் மலேசியத் தமிழர்கள் மத்தியில் இதுவரை தெளிவில்லை.

தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு சஞ்சிக் கூலிகளாக (ஒப்பந்தக் கூலி) ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அங்குள்ள ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யப் பணிக்கப்பட்டனர்.

இது ஒருபுறமிருக்க, 1818ஆம் ஆண்டு மருது பாண்டிய சகோதரர்களில் இளையவரான மருதுவின் மகன் துரைச்சாமி மலேசியாவில் உள்ள பினாங்கு தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவருடன் சில அரசியல் கைதிகள், பொதுமக்கள் உட்பட 71 பேர் நாடு கடத்தப்பட்டனர். (‘Military Reminiscences: Extracted from a Journal of Nearly Forty Years’ Active Service in the East Indies` (volume 1, பக்கம் 130)

மருது சகோதரர்கள் ஆதிக்கம் செலுத்திய தமிழகப் பகுதியை கர்னல் வேல்ஷ் என்ற ஆங்கிலேய அதிகாரி கண்காணித்து வந்தார். இவருக்கும் மருது சகோதரர்களுக்கும் தொடக்கத்தில் இணக்கமான உறவே நிலவியது.

அதிலும் இளைய மருதுவின் நெருங்கிய நண்பராக இருந்தார் கர்னல் வேல்ஷ். இவருக்கு ஈட்டி எறிய பயிற்சி அளித்ததே இளைய மருதுதான்.

1795, பிப்ரவரியில் தான் இளைய மருதுவை முதன்முதலாக சந்தித்துள்ளார் வேல்ஷ். அச்சமயம் இளைய மருதுவின் அரண்மனையில் அவருக்கென ஒரு பாதுகாவலர் கூட இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சிக்குறிப்புகள்

சிவகங்கை

இதுகுறித்து, ‘Military Reminiscences: Extracted from a Journal of Nearly Forty Years’ Active Service in the East Indies` (volume 1, பக்கம் 130) என்ற நூலில் வெல்ஷ் குறிப்பிட்டுள்ளார்.

சின்ன மருதுவின் நாடு வழியாக சென்றபோது நிகழ்ந்த சாதாரண சந்திப்பின் போது அவர் தமக்கு நண்பராகி விட்டதாகவும், அவரது திறந்தவெளி அரண்மனைக்குள் எவரும் சுதந்திரமாக சென்றுவர முடியும் என்றும் சின்னமருதுவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததாகவும் வெல்ஷ் கூறுகிறார்.

“நான் மதுரையில் இருந்த சமயத்தில் உயர்ந்த வகை அரிசியையும் சுவையான பழங்களையும் சின்ன மருது அனுப்புவார். குறிப்பாக கெட்டியான தோலுடன் கூடிய சுவை மிக்க பெரிய ரக ஆரஞ்சுப்பழங்கள் சின்ன மருதுவிடம் இருந்து எனக்கு அனுப்பப்படும். அத்தகைய அருமையான பழங்களை நான் இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலும் கண்டதில்லை,” என்று வெல்ஷ் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பின்னாட்களில் இவரது தலைமையில்தான் ஆங்கிலேய படை மருது சகோதரர்களை தூக்கிலிட்டது. இதுகுறித்தும் தமது நூலில் (பக்கம் 130) வெல்ஷ் குறிப்பிட்டுள்ளார்.

‘மானங்காத்த மருதுபாண்டியர்’ என்ற தமது நூலில் பேராசிரியர் ந. சஞ்சீவி அந்தச் சம்பவத்தை இவ்வாறு விவரிக்கிறார்.

“சின்ன மருதுதான் எனக்கு முதன்முதலாக ஈட்டி எறியவும், வளரி வீசவும் கற்றுக் கொடுத்தவர். வளரி எனும் ஆயுதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆற்றலும் திறமையும் படைத்த ஒருவர் 300 அடி தொலைவிலுள்ள ஒரு பொருள் மீது கூட வளரியை வியக்கத்தக்க வகையில் குறிபார்த்து எறிந்து வெற்றி பெறலாம்.

“இத்தகைய வீர மனிதனையே நான் பிற்காலத்தில் போர்க்காரணமாக காட்டு விலங்கைப் போல் விரட்டிப் படுகாயப்படுத்தி சாதாரண வேலையாட்களைக் கொண்டு பிடிக்க நேர்ந்தது. அதன்பின்னர் முறிந்துபோன தொடையோடு சிறையில் அவன் நொந்து கிடந்ததையும் இறுதியாக வீரம் மிக்க தன் அண்ணனோடும் அவன் வீரத்திற்குச் சிறிதும் குறையாத மகனோடும் உயிர்த்தோழர் பலரோடும் சாதாரண தூக்கு மரம் ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்ததையும் காண நேர்ந்தது,” என்று கர்னல் வேல்ஸ் தமது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது ‘மானங்காத்த மருதுபாண்டியர்’ புத்தகத்தில் (பக்.30) இடம்பெற்றுள்ளது.

மருது சகோதரர்களின் எழுச்சிப் போராட்டம்

மருது பாண்டியரின் நினைவிடம்

“கப்பம் கட்டாத ஒட்டுமொத்த பாளையக்காரர்கள் மீதும் ஆங்கிலேயருக்குக் கடும் கோபம். மொத்த பாளையத்தையுமே தீவைத்து அழிக்கத் திட்டமிட்டனர். கண்ணில் பட்ட ஆண்கள் அனைவரையும் கைது செய்தனர். மறுபேச்சின்றி தூக்கிலிட்டனர்,” என்கிறார் மலேசிய எழுத்தாளரும் ஆய்வாளருமான மலாக்கா முத்துக்கிருஷ்ணன்.

மருது சகோதரர்களுக் வீரதீரப் போராட்டம் என்பது 1785ஆம் ஆண்டு தொடங்கி 1801ஆம் ஆண்டு வரை நீடிக்கிறது. விடுதலைக்காக ஆங்கிலேயரை தைரியமாக எதிர்த்து நின்ற மருது சகோதரர்கள் 1,801ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி சிவகங்கைச் சீமையின் திருப்பத்தூர் கோட்டை வளாகத்தில் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிடும் உத்தரவை நிறைவேற்றியவர் கர்னல் வேல்ஷ்.

அப்போது நடந்தவற்றைத் தமது கட்டுரை ஒன்றில் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார் மலாக்கா முத்துக்கிருஷ்ணன். (மலேசியாவில் வெளிவரும் தமிழ் மலர் நாளேட்டில் 15-10-2020 அன்று வெளிவந்த கட்டுரை)

“தூக்குக் கயிறுக்கு முன்னால் பெரிய மருது நிற்கிறார். அப்போது தனக்கு எந்த ஒரு தயவு தாட்சண்யமும் காட்ட வேண்டாம் என்று வெள்ளைக்காரர்களைக் கேட்டுக் கொள்கிறார்.

‘நான் என் நாட்டைக் காப்பாற்றுவதற்குப் போராடினேன். ஆனால் தோற்கடிக்கப்பட்டேன். பரவாயில்லை. அதற்காக என்னுடைய உயிரைப் பறிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

‘இந்தச் சின்னச் சிறுசுகளைப் பாருங்கள். இந்தச் சிறுவர்கள் என்ன தவறு செய்தார்கள். என்ன பாவம் செய்தார்கள். இவர்கள் ஆயுதம் எதையும் எடுத்தார்களா? இல்லை இவர்களால் ஆயுதங்களைத் தான் தூக்க முடியுமா?

‘தயவு செய்து அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள். விட்டுவிடுங்கள்’ என்று கெஞ்சினார்.

உயிரை துச்சமென மதித்த மருது சகோதரர்கள்

சின்ன மருது பெரிய மருது

சாகும் போதுகூட மருது சகோதரர்கள் தங்கள் உயிரைப் பெரிதாக நினைக்கவில்லை.

மருதுவின் அந்தக் கடைசி ஆசை இருக்கிறதே, அதை இப்படியும் சொல்லலாம். கப்பல் கடலில் மூழ்குகிறது. கப்பல் தலைவன் அந்த ஆழ்கடலிடம் போய் மடிப் பிச்சை கேட்க முடியுமா? இங்கே அந்த மாதிரி தான் நடந்தது.

சின்ன மருது; பெரிய மருது மகன்களும்; பத்துப் பன்னிரெண்டு வயது பேரப் பிள்ளைகளும் தூக்கிலிடப் பட்டார்கள். அது ஒரு பெரிய கொடுமை. இந்தச் சடங்குகளை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் நிறுவனம்யின் 74, 77, 94-ஆம் ரெஜிமெண்ட் துருப்புகள் நடத்தின.

கப்பம் கட்டாத வாக்கு மொத்த பாளையக்காரர்கள் மீது ஆங்கிலேயருக்குப் பயங்கரமான கோபம். மொத்தப் பாளையத்தையுமே தீ வைத்து அழிக்கத் திட்டம் போட்டார்கள். கண்ணில் தென்படுகின்ற அத்தனை ஆண்களையும் பிடித்தார்கள். மறுபேச்சு இல்லாமல் தூக்கில் போட்டார்கள்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

திருப்பத்தூர் தூக்குக் கயிற்றில் மருது வாரிசுகள்

அதே திருப்பத்தூர் தூக்குக் கயிற்றில், பெரிய மருதுவின் மகன்கள் கருத்தம்பி; முல்லிக்குட்டித் தம்பி; சின்ன மருதுவின் மகன்கள் செவத்த தம்பி, முத்துசாமி உள்பட பலர் தூக்கு மரத்தைப் பார்த்தார்கள்.”

இந்தத் தூக்கிலிடும் கொடும் நிகழ்வின்போது சின்ன மருதுவின் மகன் துரைசாமி அந்த இடத்தில் இல்லாததால் உயிர் தப்பியதாகவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

எனினும் பிறகு துரைசாமி கைது செய்யப்பட்டதாகவும் அப்போது அவருக்கு 15 வயதுதான் ஆகியிருந்தது என்றும் முத்துக்கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

கர்னல் வெல்ஷ் தமது புத்தகத்தில் இதைப் பதிவு செய்துள்ளார் (பக்கம் 133). துரைசாமி நாடு கடத்தப்பட்டது குறித்தும் அவரது புத்தகத்தில் (பக்கம் 133-135) விவரங்கள் உள்ளன.

சின்ன மருது, பெரிய மருது

“போர் முடிந்ததும் எஞ்சியிருந்த பகைவர்களை எல்லாம் கப்பலேற்றித் தீவாந்தரம் அனுப்பும் பொறுப்பை நானே ஏற்க வேண்டியதாயிற்று. சின்னமருது மைந்தன் தனக்கு நேர்ந்த கதியை நொந்த உள்ளத்தோடு, ஆனால் கம்பீரமாகப் பொறுத்துக்கொண்டான். பெருந்தன்மையும் தியாக உணர்ச்சியும் தவழும் முகத்தோடு விளங்கிய அவ்விளைஞன் – இனிய பண்புகள் படைத்த அந்நல்லோன் – தன் கொடிய தலை விதியை ஒரு சிறு முணுமுணுப்பும் இன்றி ஏற்றுக் கொண்டான். ஆனால், அவனுடைய அழகு பொருந்திய திருமுகத்தில் குடி கொண்டிருந்த அந்த ஆழ்ந்த துயர உணர்ச்சியைக் கண்ணால் காண்பதும் கண்டு கலங்காமல் இருப்பதும் அறவே முடியாத செயல்.

“அவன் எனது நேரடியான பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தமையால், நான் அவன் தப்பி ஓடுவதற்கு உடந்தையாய் இருக்க முடியவில்லை. ஆனால், பலத்த பாதுகாப்புடைய ஒரே இடத்தில் நானும் அவனும் இருந்தமையால், அவனைத் தன் வேலையாள்களுக்கு நடுவிலேயே அவமானம் தரும் கைவிலங்குகளோடு நிற்கும் காட்சியினின்றும் விடுதலை செய்யக் கருதி, தன் முன்னாள் வேலையாள்களிடமிருந்து தனியாகப் பிரித்து வைத்தேன். அவன் கை விலங்குகளையும் கழற்றும்படி செய்தேன்.

“அவ்வாறு நான் என்னுடைய வருந்தத்தக்க பழைய நண்பன் சின்ன மருதுவின் மக்களுள் தப்பி உயிரோடிருந்த அந்த ஒரே மைந்தன் – பதினைந்தே ஆண்டான இளைஞன் – நிலையான தீவாந்தர வாசத்திற்கு இரையாக்கப்பட்டிருந்த துரைசாமியின் கைவிலங்குகளைத் தளர்த்தியது வாயிலாகத் தான் என் உள்ளத்தில் ஏதோ ஒரு வகையான துன்பம் கலந்த ஆறுதலாவது ஏற்பட்டது,” என்று கர்னல் வெல்ஸ் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் ‘மானங்காத்த மருதுபாண்டியர்’ புத்தகத்தில் (பக்.64) இடம்பெற்றுள்ளன.

துரைசாமியைத் தம்மால் நாடு கடத்தும் தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியவில்லை எனும் வருத்தம் வெல்ஷின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. துரைசாமியை நாடு கடத்திய அந்த இறுதித் தருணத்தை அவரும் கனத்த இதயத்தோடு தமது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், துரைசாமியின் உணர்வுகள் எவ்வாறு இருந்தன என்றும் வெல்ஸ் விவரித்துள்ளார்.

“எனக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பைத் தூத்துக்குடித் துறைமுகத்தில் லெப்டினன்டு ராக்ஹெட்டிடம் ஒப்படைத்த அந்தத் துயரம் நிறைந்த நாளை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது! அந்த இளைஞன் துரைசாமியைக் கடல் கடந்து போகும் கப்பலில் ஒப்படைத்த போது அழகொழுகும் அவன் முகத்தில் புதைந்து கிடந்த ஏக்கம் இப்பொழுதும் கண்ணெதிரே காண்பது போலவே தோன்றுகிறது.

“அதோடு அவனைப் போலவே வெந்துயரில் வீழ்ந்து கிடந்த அவன் நண்பர்கள், பெற்ற நாட்டைப் பிரியும் நேரத்தில் உண்டான பெருந்துன்பத்தைப் பேசாமலும் ஆண்மையுடன் பொறுத்துக்கொண்ட காட்சி இன்றும் என் கண் முன் தோன்றுகிறது” என்று பேராசிரியர் சஞ்சீவி வெல்ஸின் வார்த்தைகளை ஆவணப்படுத்தி உள்ளார்.

பினாங்கை துறைமுக நகரமாக மாற்ற ஆங்கிலேயர்கள் திட்டம்

மருது பாண்டியர்

மருது சகோதரர்கள் காலத்தில் தமிழகத்தில் இருந்து 71 பேர் அரசியல் கைதிகளாக பினாங்கு தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று கர்னல் வெல்ஷ் எழுதி, 1830ம் ஆண்டு வெளிவந்த நூலின் அடிப்படையில் சொல்கிறார் தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவரான ஜெர்மனியைச் சேர்ந்த முனைவர் சுபாஷினி.

மேலும், பால்மரத் தோட்டங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களாக சென்றவர்கள் பின்னர் அங்கேயே தங்கிவிட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

“வீரபாண்டிய கட்டபொம்மனும் ஊமைத்துரையும் தூக்கிலிடப்பட்ட பின்னர் பாளையக்காரர்கள் பலரை ஆங்கிலேர்கள் கைது செய்தனர். பின்னர் அரசியல் கைதிகள் பலர் மலேசியாவின் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டனர். இவர்களை வைத்து பினாங்கை ஒரு துறைமுக நகரமாக மாற்ற வேண்டும் என்பதே ஆங்கிலேயர்களின் திட்டம்.

“ஒருமுறை 71 பேர் இவ்வாறு நாடு கடத்தப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவராக சின்னமருதுவின் மகன் துரைச்சாமியும் இருந்தார். அப்போது அவருக்கு 15 வயது போல இருக்கும் என்கிறார் கர்னல் வெல்ஷ்.

“மலேசியா சென்ற பின்னர் மீண்டும் தமிழகம் திரும்ப துரைச்சாமி பலவாறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், அது சாத்தியமாகவில்லை. கடைசியில் அவர் பினாங்கிலேயே இறந்துபோனார் என்றும், அவர் தமிழகம் திரும்பி அங்கு உயிரிழந்ததாகவும் முரண்பட்ட தகவல்கள் உள்ளன,” என்கிறார் முனைவர் சுபாஷினி.

தப்பிப் பிழைத்த இளைய மருதுவின் மகன் துரைச்சாமி

மருது சகோதரர்கள்

மருது சகோதரர்கள் கொல்லப்பட்ட பிறகு குடும்பத்தையும் உறவுகளையும் இழந்துவிட்ட சோகத்தில் இருந்த துரைசாமி நாடு கடத்தப்படும் துயரத்துக்கும் ஆட்பட்டார்.

மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டபோது துரைச்சாமி எங்கிருந்தார், எப்படி தப்பிப் பிழைத்தார்? அவருக்கு உதவியது யார் என்பன குறித்துப் போதுமான விவரங்கள் இல்லை. எனினும் மருது பாண்டியர்களும் அவரது ஆதரவாளர்களும் கூண்டோடு கொல்லப்பட்ட பிறகே துரைச்சாமி ஆங்கிலேயர்களிடம் சிக்கியதாக மலாக்கா முத்துக்கிருஷ்ணன்.

“துரைச்சாமியின் இயற்பெயர் முத்து வடுகநாதன். அரசர் முத்து வடுகநாத ராஜாவின் நினைவாக சின்ன மருது இப்பெயரைத் தன் மகனுக்குச் சூட்டியுள்ளார். துரைச்சாமி பார்க்க அழகாக இருந்ததால் மருதுபாண்டியர்களின் ஆதரவாளர்களுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். அதனால் அவர்மீது அனைவரும் அதிக பாசம் கொண்டிருந்தனர்,” என்று செல்லியல்.காம் இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு பாசத்துடன் வளர்க்கப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு துரைச்சாமி பினாங்கு தீவுக்கு நாடு கடத்தப்பட, கப்பலில் ஏற்றப்பட்ட அந்த நொடியிலிருந்து அவரது வாழ்க்கையின் இரண்டாவது சோகப்பதிவு தொடங்கியது எனலாம்.

துரைசாமி உள்ளிட்ட அரசியல் கைதிகள் பினாங்கு தீவை நோக்கி மேற்கொண்ட பயணம் 76 நாட்கள் நீடித்தது. பயணத்தின்போது இவர்களில் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. காய்ச்சலால் ஒருவர் இறந்துபோனார். மற்றொருவர் கடலில் வீழ்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார். மற்ற அனைவரும் பினாங்கு சென்றடைந்தனர் என்று கர்னல் வெல்ஷ் குறிப்பிட்டுள்ளதாக மனைசெல்வி ராஜாராம் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளையர்கள் நாடு இவ்வாறு கடத்துவதையும் சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொடுமைப்படுத்தும் வகைகளில் ஒன்றாக வைத்திருந்தனர். இதன்மூலம் அன்றாடம் மனச்சோர்வுக்கு ஆட்பட்டு அவர்கள் இறந்துபோக வேண்டும் என்று கருதினர்.

அந்த வகையில் பெரிய மருதுவின் மருமகன் வேங்கன் பெரிய உடைய தேவர் என்பவர் சுமத்ரா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். சிவகங்கை ராஜாவான இவர், முதலில் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டார். எனினும் பின்னர் சுமத்ரா தீவிலுள்ள பென்கூலன் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

1825ஆம் ஆண்டு பெங்கால் மற்றும் சென்னையிலிருந்து சுமார் 800 கைதிகள் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டனர் என்று P.C. Majumdar எழுதிய Penal Settlements in Andaman’s, P.47-49 என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக மனைசெல்வி ராஜாராம் கூறியுள்ளார்.

1802ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி வேங்கன் பெரிய உடையார் தேவர் பெங்கூலன் சிறையில் காலமானதாக எம். பாலபகி ருஷ்ணன் தமது A struggle for freedom in the red soil of south என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

17 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த சந்திப்பு

மருது சகோதரர்கள்

நாடு கடத்திய பிறகு துரைச்சாமி குறித்து வெல்ஷ் அதிகம் யோசித்திருக்கவில்லை. எனினும் 1818ஆம் ஆண்டு அவர் மீண்டும் பினாங்கு செல்லவேண்டி இருந்தது. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு துரைசாமியைச் சந்திப்போம் என்று அவரும் நினைக்கவில்லை. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது துரைசாமிக்கு 33 வயதாகி இருந்தது. அவரது நிலையைக் கண்டு வெகுவாக வருந்தியுள்ளார் வெல்ஷ். அந்த சோக நிகழ்வை அவர் பதிவு செய்துள்ளார்.

மீண்டும் தாய்மண்ணுக்குத் திரும்பவேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்தார் துரைச்சாமி. கர்னல் வேல்ஷ் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று அவரைத் துரைச்சாமி சந்தித்தபோது ஒரு முதியவர்தான் தன்முன் நிற்பதாக நினைத்துவிட்டார் வேல்ஷ்.

பின்னர் அது, தன் நண்பர் சின்னமருதுவின் மகன் துரைச்சாமி என்பதை அறிந்தபோது துணுக்குற்றுப் போனார்.

“ஒருநாள் நான் அலுவலகத்தில் இருந்தபோது, திடீரென மூத்துத்தளர்ந்து போன ஓர் ஏழைக் கிழவன் என் முன் தோன்றினான். பழைய நினைவு எதுவுமே அற்ற மனத்தோடு இருந்த நான், அவனை அதிகாரக் குரலில், ‘நீ யார்? எதற்காக வந்தாய்?’ என்று அதட்டிக் கேட்டேன். அவன் என்னைச் சிறிது நேரம் உற்று நோக்கினான். கோடு கோடாய்த் திரை விழுந்து போன அவன் முகத்தில் தாரை தாரையாய்க் கண்ணீர் வழிந்தோடியது. நெடுநேரம் கழித்துக் கடைசியாகவன் சொல்லிய சொல், ‘துரைசாமி’ என்பது. ஆம்! அந்தச் சொல் என் இதயத்தில் ஈட்டி போலப் பாய்ந்தது!”

“என்னிடம் அவன் வந்த காரணம், தன் தாயகத்தில் வாழும் உறவினர்களுக்குக் கடிதம் அனுப்ப உதவவேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், சட்டம் அதற்கு இடம் தராததால், என்னால் ஒன்றும் செய்ய முடியாது என மறுத்துவிட்டேன்.”

தன் ‘நினைவுகளின்’ இறுதியில் கர்னல் வெல்ஷ் கூறியதைப் படிக்கும் போது நம் உள்ளத் துயர் எல்லை கடந்து போகிறது! இதோ இது பற்றி வெல்ஷின் இறுதிச் சொற்கள்:

“துரைசாமிக்கு என்னால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனால், இறுதியாக என் உள்ளத்தில் உள்ள நம்பிக்கையை மட்டும் கூறிவிடுகிறேன். துரைசாமியைப் பற்றி மேலே நான் சொல்லியுள்ள சொற்களை வருங்காலத்தில் படிக்கும் எந்தக் கிழக்கிந்தியக் நிறுவனம்த் தலைவனாவது அருள் கூர்ந்து ஒரு குற்றமும் செய்யாத இந்த மனிதனுக்கு முழு விடுதலை தர முடியாவிடினும், இவன் படும் அல்லலயாவது குறைக்க முற்படுவானாக!’ என்று மானங்காத்த மருதுபாண்டியர்’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துரைசாமி தனது இறுதிக்காலம் குறித்த முரண்பட்ட தகவல்கள்

மருது சகோதரர்கள் புத்தகம்

பட மூலாதாரம், AMAZON

“பினாங்கு சிறையிலிருந்து விடுதலையானதும் சென்னைக்குச் சென்றார் துரைச்சாமி. அங்கு ஆங்கிலேய அரசிடம் தமக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரியதுடன் மதுரையில் தங்கியிருக்கவும் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், திடீரென நோய்வாய்ப்பட்டதால் சிவகங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் காலமானதாக சில வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அதேசமயம் சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்ற அவர், அங்குள்ள கிராமங்களில் தமது குடும்பத்தாரையும் உறவினர்களையும் தேடி அலைந்ததாகவும் ஒரு குறிப்பு உள்ளது,” என்கிறார் முத்துக்கிருஷ்ணன்.

இப்படி துரைச்சாமியின் இறுதிக்காலம் எப்படியாகக் கழிந்தது என்பது குறித்து மலேசியத் தமிழர்கள் மத்தியில் முரண்பட்ட தகவல்கள் உள்ளன.

மனைசெல்வி ராஜாராமன் தமது The Great Kings Maruthu Pandiyars: The Spark of the First War of Independence கீழ்கண்ட தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அன்றைய பினாங்கு அரசாங்கம் துரைசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டதாகவும் இதையடுத்து அவர் இந்தியா வந்தடைந்ததாகவும் எஸ். குருதாசபிள்ள (S. Gurudhasa Pillai) எழுதிய ‘திருநெல்வேலி சீமை சரித்திரம்’ என்ற புத்தகத்தில் விவரம் உள்ளது (பக். 303).

இதேபோல் திரு. சந்திரகாந்த் பி. (Chandrakanth. P) தம்முடைய ஆளப்பிறந்த மருது மைந்தன் என்ற புத்தகத்தில் பினாங்கு சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் கைதிகளில் துரைசாமி உள்ளிட்ட 10 சுதந்திரப் போராட்ட வீரர்களே எஞ்சியிருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். (Ref. Kernial Singh Sandhu, “Tamil Other Indian Convicts in the Straights Settlements. 1790-1831) என்ற புத்தகத்தை அவர் மேற்கோள் காட்டியுள்ளர்.

பேராசிரியர் சி. ராக்கப்பன் எழுதிய Report of Marudhu Pandiars என்ற புத்தகத்தில் 1821ஆம் ஆண்டு துரைசாமி பினாங்கிலிருந்து மதுரை திரும்பினார் என்றும் அங்கு சில காலம் வாழ்ந்து மறைந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சில வரலாற்று ஆய்வாளர்கள் துரைசாமி சிவகங்கையில் காலமானார் என்றும் அவரது இறுதிச்சடங்கு காளையார் கோவிலில் நடைபெற்றது என்றும் குறிப்பிடுவதாக என்ற தமது புத்தகத்தில் மனைசெல்வி ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர்களால் 1802ஆம் ஆண்டு பினாங்கு தீவுக்கு நாடு கடத்தப்பட்டு, அங்கு நிகழ்ந்த கொடுமைகளையும் மீறி எஞ்சியிருந்த அரசியல் கைதிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதும் தாயகம் திரும்பவில்லை. மாறாக, பினாங்கிலேயே தங்கிவிட்டனர். அங்குள்ள பெண்களை மணமுடித்து இறுதி வரை மலேசியாவிலேயே வாழ்ந்து இறந்தனர். அந்த அரசியல் கைதிகளின் வாரிசுகள் இன்றளவும் மலேசியாவில் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

மருது சகோதரர்கள் கொல்லப்பட்டு 220 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனினும் நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த அந்த வீரரின் வாரிசுக்கு என்னவானது என்பது இதுவரை தெரியவில்லை.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »