Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சீனாவில் நிரம்பி வழியும் மயானங்கள்; பிணங்களை எரிக்கக் குவியும் கூட்டம்

  • பெட்ரா சிவிக்
  • பிபிசி உலக சேவை

பட மூலாதாரம், Getty Images

கோவிட் பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் திணறிவருகிறது சீனா. சீனா முழுவதுமுள்ள தகனக் கூடங்களுக்கு இறந்த உடல்கள் அதிக அளவில் கொண்டுவரப்படுவதால், கூட்டத்தைச் சமாளிக்க அவற்றின் ஊழியர்கள் சிரமப்படுவதாகக் கூறுகின்றனர்.

சீன அரசாங்கம் தனது கடுமையான ‘ஜீரோ-கோவிட்’ நடவடிக்கைகளை நீக்க முடிவு செய்ததை அடுத்து, எரிப்பதற்காகக் கொண்டுவரப்படும் உடல்களின் எண்ணிக்கையைச் சமாளிக்க முடியாமல், சீனா முழுவதும் உள்ள தகனக் கூடங்கள் திணறி வருகின்றன என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி முகமையில் பணிபுரியும் பெய்ஜிங் பத்திரிகையாளர் டேக் காங், டோங்ஜியாவோ பகுதியில் கோவிட் இறப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட தகனக் கூடம் மற்றும் இறுதிச் சடங்கு மண்டபங்களைப் பார்வையிட்டார்.

பெய்ஜிங்கிலிருந்து பிபிசியிடம் காங் பேசுகையில், “சவப்பெட்டிகள் தொடர்ந்து வெளியே எடுத்துச்

செல்லப்பட்டுக் கொண்டே இருந்ததால் ஒன்று அல்லது இரண்டு டஜன் பேர் வெளியே காத்துக்கொண்டிருந்தனர்,” என்கிறார்.

இறுதிச் சடங்கு மண்டபங்களைச் சுற்றியிருந்த கடைக்காரர்களிடம் அவர் பேசியபோது, அங்கு தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதாக அவர்கள் கூறினர்.

“வழக்கமாக ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு டஜன் உடல்கள் எரியூட்டப்படுவதற்கு மாறாக தற்போது தினமும் 50 முதல் 100 உடல்கள் வரை எரியூட்டப்படுவதாக அங்கிருந்த ஒருவர் குறிப்பிட்டுக் கூறினார்,” என்கிறார் காங்.

2.2 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பெய்ஜிங்கில் மட்டுமே இந்த இறுதிச் சடங்கு மண்டபங்கள் இப்படிப் பரபரப்பாக இல்லை. நாட்டின் வடகிழக்கிலிருந்து அதன் தென்மேற்கு வரை பல இடங்களில் இறப்பு எண்ணிக்கையைச் சமாளிக்க தகனம் செய்யும் ஊழியர்கள் போராடி வருவதாகத் தெரிவிக்கிறது ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம்.

பெய்ஜிங்கின் வடகிழக்கில் 700 கி.மீ. தொலைவில் உள்ள ஷென்யாங் நகரில், இறந்தவர்களின் உடல்கள் ஐந்து நாட்கள் வரை புதைக்கப்படாமல் விடப்படுவதாக ஓர் இறுதிச் சடங்கு மையத்தில் பணிபுரியும் ஊழியர் கூறினார். மேலும், “தகனக் கூடங்கள் இங்கு முற்றிலும் நிரம்பியுள்ளன. இதுபோன்ற ஒரு வருடத்தை நான் பார்த்ததே இல்லை,” என்கிறார் அந்த ஊழியர்.

அதேநேரம், கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை விவரிக்கவே முடியாது என்கிறார் காங்.

People waiting in their cars in front of the Dongijao crematorium and funeral home in Beijing

பட மூலாதாரம், Reuters

கடந்த திங்களன்று இரண்டு இறப்புகளும் செவ்வாயன்று ஐந்து இறப்புகளுமே கோவிட் காரணமாக ஏற்பட்டன என்கின்றனர் சீன அதிகாரிகள். கடந்த சில வாரங்களில் அதிகாரப்பூர்வமாக கொரோனா இறப்பு பதிவு செய்யப்பட்டது இதுவே முதன்முறை.

பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு சில கடினமான கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கட்டுப்பாடுகளை டிசம்பரில் சீனா நீக்கியது. இதனால் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மக்கள்தொகை கொண்ட சீனாவில் மீண்டும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

சீனா முழுவதும் உள்ள தகனக் கூடங்களில் என்ன நடக்கிறது?

டோங்கிஜாவோ நகருக்கு காங் சென்றுவந்த இரு நாட்களுக்கு பிறகும் சாலையில் இறந்தவர்களைத் தாங்கிச் செல்லும் வாகனங்கள் மற்றும் கார்கள் அணிவகுத்து நின்றதாக செய்தி வெளியிட்டது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை.

தொடர்ந்து தகனம் செய்யப்பட்ட உடல்கள் காரணமாகச் சூழ்ந்திருந்த புகைக்கு மத்தியிலும் டோங்கிஜாவோ பகுதிக்கு வெளியே சுமார் 30 வாகனங்கள் காத்துக்கிடந்தன. அங்கிருக்கும் தகனக் கூடங்களுக்கு வெளியே தங்களது அன்புக்குரியவர்களின் மிச்சங்களுக்காகக் காத்திருக்கும் குடும்ப உறுப்பினர்களைக் காண முடிகிறது.

சில தகன மேடைகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கி வருவதாக ப்ளூம்பெர்க் மற்றும் ஸ்கை நியூஸ் ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“சமீபத்திய நாட்களில் கொண்டுவரப்பட்ட உடல்களின் எண்ணிக்கை முன்பைவிட பல மடங்கு அதிகம்” என்று சீனாவின் தென்மேற்கில் உள்ள சோங்கிங்கில் உள்ள ஒரு தகனக் கூடத்தின் ஊழியர் ஏ.எஃப்.பி-யிடம் கூறினார்.

Relatives carry a picture frame of a loved at a crematorium in Beijing on December 20, 2022.

பட மூலாதாரம், Getty Images

அதுமட்டுமல்லாது, பல தகனக் கூடங்களில் உடல்களை வைப்பதற்கான குளிர்பதனக் கிடங்குகள் நிரம்பிவிட்டதாகக் கூறுகிறார் பெயரைத் தெரிவிக்க விரும்பாத ஊழியர் ஒருவர், “இது கோவிட் தொடர்பானதா என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. அப்படியிருந்தால் இதுகுறித்து நீங்கள் பொறுப்பான தலைவர்களிடம் கேட்க வேண்டும்,” என்கிறார்.

வேகமெடுக்கும் கொரோனா பரவல்

“கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக பரிசோதனை முடிவினை பெற்ற தங்களது உறவினர்கள் இறந்துவிட்டதாகக் கூறும் நபர்களிடம் பேசினேன். இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், அவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் கோவிட் காரணமாக எந்தவித அதிகாரப்பூர்வ இறப்பும் பதிவுசெய்யப்படவில்லை. கோவிட் இறப்புகளை சீனா கணக்கிடும் விதம் கொஞ்சம் தந்திரமானது,” என்று காங் கூறினார்.

2019இன் பிற்பகுதியில் வுஹான் நகரில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுப் பரவல் தொடங்கியதில் இருந்து சீனா 5,242 கோவிட் இறப்புகளையே பதிவு செய்துள்ளது. இது உலகளாவிய கணக்கின்படி மிகக் குறைவான இறப்பு எண்ணிக்கை ஆகும்.

ஆனால், கோவிட் பாதிப்புக்குப் பிறகு நிமோனியா அல்லது சுவாசக் கோளாறு ஆகியவற்றால் இறப்பவர்களின் கணக்கு மட்டுமே கோவிட் இறப்புகளாகக் கருதப்படும் எனச் சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

“கோவிட் பாதிக்கப்பட்ட பின் மாரடைப்பு அல்லது இதய நோய் ஏற்பட்டு இறப்பு ஏற்பட்டால் அது கோவிட் இறப்பு என்ற வகைப்பாட்டில் வராது” என்று பீக்கிங் பல்கலைக்கழக தலைமை மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவு தலைவர் வாங் குய்கியாங் கூறினார்.

தற்போதைய கோவிட் அலைக்கு மத்தியில் வைரஸின் புதிய கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) திரிபுகள் உருவாகக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“வைரஸின் பரவும் திறன் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் திறன் ஆகிய இரண்டும் ஒரே சமயத்தில் அதிகரிக்கும் என்பது ஒப்பீட்டளவில் சாத்தியமில்லை” என்று சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அதிகாரி சூ வென்போ கூறினார்.

கட்டாய கொரோனா பரிசோதனை விதிமுறை தளர்த்தப்பட்டதால் சீனாவின் கோவிட் தொற்று எண்ணிக்கையைக் கண்காணிப்பது கடினமாக்கியுள்ளது, எத்தனை பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்பதைக் கணக்கிடுவது இப்போது சாத்தியமற்றது என்று அதிகாரிகள் கடந்த வாரம் ஒப்புக்கொண்டுள்ளனர்.

“இறுதிச் சடங்கு ஒன்றிலிருந்தவர்களில் ஒருவர் இறப்புச் சான்றிதழில் மரணத்திற்கான காரணம் கோவிட் எனக் குறிப்பிடப்படாமல் நிமோனியா என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறினார்” என்று காங் கூறினார்.

2023-ல் பத்து லட்சம் இறப்புகள் எனக் கணிப்பு

இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் ஏவல்யூவேஷன் (IHME) எனும் நிறுவனத்தின் புதிய கணிப்பின்படி, கோவிட் கட்டுப்பாடுகள் திடீரென நீக்கப்படுவதால் 2023ஆம் ஆண்டு அதிக பரவல் ஏற்பட்டு பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

Delivery workers wait outside a pharmacy to pick up orders as coronavirus disease (COVID-19) outbreaks continue in Beijing, December 20, 2022

பட மூலாதாரம், REUTERS/Xiaoyu Yin

IHME என்பது அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு சுயாதீனமான உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி மையமாகும்.

ஏப்ரல் 1, 2023க்குள் 3,22,000 இறப்புகள் வரை ஏற்படும் என்றும், அதே தேதியில் நோய்த்தொற்று உச்சத்தை எட்டும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகும் பரவல் தொடர்ந்து இருக்கும் என ஆய்வு கணித்துள்ளது.

“சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையானது வைரஸின் முந்தைய திரிபுகளைக் கையாள்வதில் பலனளித்தது. ஆனால், ஒமிக்ரான் வகை திரிபுகளில் இது அதிக பலன் தராது,” என்று IHME இயக்குநர் கிறிஸ்டோபர் முர்ரே கூறுகிறார்.

ஹாங்காங்கில் சமீபத்தில் ஏற்பட்ட ஒமிக்ரான் பரவல் குறித்த தரவுகளின் அடிப்படையில் இந்த கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“வுஹானில் ஏற்பட்ட முதல் அலையின் போது பெரிய அளவில் இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், இறப்பு விகிதம் குறித்த தகவல்களைப் பெற ஹாங்காங்கை தேர்ந்தெடுத்தோம்,” என்கிறார் முர்ரே.

ஆனால் சீன மருத்துவமனைகள், அடுத்த அலை குறித்து இப்போதைக்கு அச்சப்படவில்லை என்றே தோன்றுகிறது.

பெய்ஜிங்கில் மருத்துவமனை ஒன்றைப் பார்வையிட்ட காங், “பெரிய கூட்டநெரிசலுக்கான அறிகுறிகள் எதுவும் இங்கு காணப்படவில்லை. ஆனால் நிச்சயமாக, பெய்ஜிங்கை வைத்து மட்டும் சீனாவின் ஒட்டுமொத்த நிலையைக் கணக்கிட முடியாது. ஏனென்றால், ஒட்டுமொத்த சீனாவிலும் சிறந்த மருத்துவ கட்டமைப்புகளைக் கொண்டது பெய்ஜிங்தான்,” என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »