Press "Enter" to skip to content

“2,500 கோடியை கடலில் போடுவதா?” – சேது சமுத்திர திட்டம் பற்றி உள்ளூர் மக்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதனை ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். ஆனால், தங்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறி பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இதைத் தொடங்க வைத்தது திமுக.

ரூ.2,427 கோடி செலவில் இதைச் செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. 03.07.2005 அன்று மதுரையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

மணல் திட்டுகளுக்குப் பாதிப்பு

சேதுக்கால்வாய் - உத்தேசப் பாதை

பட மூலாதாரம், Sethusamudhram Corporation

ராமேஸ்வரம் அருகில் உள்ள இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கை தலைமன்னார் வரையிலான கடல் பகுதியில் 13 மணல் திட்டுகள் உள்ளன.

தனுஷ்கோடியிலிருந்து முதல் 6 திட்டுகள் இந்தியாவிற்கும், அடுத்த 7 திட்டுகள் இலங்கைக்கும் சொந்தமானவை. இந்த மணல் திட்டுகள் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களின் நம்பிக்கைகளோடு தொடர்புள்ளவை. இவை ஆதம் பாலம் என்றும் ராமர் பாலம் என்றும் அழைக்கப்படுகிறவை. சேது என்ற வடமொழி சொல்லுக்கு தமிழில் பாலம் என்பதே பொருள். இந்த மணல் திட்டுகள் ராமர் அமைத்த பாலம் என்று ராம பக்தர்கள் நம்புகிறார்கள்.

சேது சமுத்திர திட்டத்தால் இந்த மணல் திட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அது இது இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்றும் கூறி, உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கோபாலகிருஷ்ணன் பிள்ளை ராமர் பாலம் என்று குறிப்பிடப்படும் பகுதிக்கு சேதம் வராமல் சேது சமுத்திர திட்டத்தை முன்னெடுப்பதற்கான கூடிய சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்துஅறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டார்.

இதற்காக அமைக்கப்பட்டதுதான் பச்சோரி குழு.

குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த நிலையில், கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் நீதிமன்றத்தில் வாய்தா வாங்கப்பட்டது.

மேலும் இது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நீண்ட கால வழக்குகளில் ஒன்று.

திட்டத்தால் உள்ளூர மக்களின் வாழ்வாதாரம் உயருமா?

1964ஆம் ஆண்டு பேரழிவைக் கொண்டு வந்த புயலுக்கு முன் தனுஷ்கோடி குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்பட்டது. இப்போது சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் ராமேஸ்வரம் தீவு
அந்தக் காலத்து தனுஷ்கோடி போல் அந்நிய செலாவணியை அதிகம் ஈட்டித் தரும் ஒரு பகுதியாக மாறும்; இதனால் ராமேஸ்வரம் மக்களுக்குத் தொழில், வேலைவாய்ப்பு கிடைத்து வாழ்வாதாரம் உயரும் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

அதேநேரம் இந்த திட்டத்தால் சிறு தொழில் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு மாற்று தொழில் தேடிச் செல்லும் நிலை ஏற்படுவதுடன், உள்ளூர் மக்களுக்கு எந்த ஒரு தொழில் முன்னேற்றமும் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

2,500 கோடியை கடலில் போடுவதா?

ஜெரோம்

பட மூலாதாரம், Jerome

சேது கால்வாய் திட்டம் என்பது பயன் இல்லாத திட்டம் என்கின்றனர் பாரம்பரிய மீனவர்கள். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பாரம்பரிய மீனவர் ஜெரோம், “வேலை வாய்ப்புகள் கிடைக்கும், அந்நிய செலாவணி பெருகும் என ஒரு போலியான பிம்பத்தைக் கட்டமைத்து சேது சமுத்திர திட்டத்தை முன்னெடுப்பதாக மீனவர்கள் பார்க்கிறோம்.

தனுஷ்கோடி முதல் வேதாரண்யம் வரை உள்ள கடல் பகுதி மிகவும் ஆழம் குறைந்த பகுதி. இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் இந்த கடல் பகுதியில் 10 முதல் 12 மீட்டர் மட்டுமே ஆழப்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பார்த்தால், அந்த கால்வாய் வழியாக 36 டன் எடை கொண்ட கப்பல்கள், அதுவும் குறைந்த வேகத்தில் மட்டுமே செல்ல முடியும்.

அதிக எடை கொண்ட கப்பல் இந்த வழியில் பயணிக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு.

இத்திட்டத்தால் தமிழ்நாட்டு பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். தனுஷ்கோடி முதல் வேதாரண்யம் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் கடல் நீரோட்டத்தின் போக்குக்கு ஏற்ப மீன்பிடித் தொழில் செய்கிறோம்.

மீன் பிடிக்கும்போது கடல் நீரோட்டத்தில் வலைகள் சேது கால்வாய் பகுதிக்குச் சென்றால் மீனவர்களால் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்,” என்றார்.

பாக் நீரிணை - மன்னார் வளைகுடா

பட மூலாதாரம், Getty Images

இத்திட்டத்தைச் செயல்படுத்துவது என்பது, 2500 கோடி ரூபாயை வீணாகக் கடலில் கொட்டுவது போல என மேலும் கூறுகிறார் ஜெரோம்.

அரசு சொல்வதைப் போல் இத்திட்டத்தால் எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்று கூறும் அவர், “ஆங்கிலேயர் காலத்தில் சேது சமுத்திர திட்டத்தை ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளி கடல் பகுதியில் துவங்க திட்டமிட்டு அது முடியாமல் போனதால் வேதாளையில் இருந்து இத்திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்து அது தோல்வியில் முடிந்ததால் ஆங்கிலேயர்கள் இத்திட்டத்தைக் கைவிடப்பட்டனர். ஆங்கிலேயர்களால் கைவிடப்பட்ட திட்டம் என்றால் அது சேது சமுத்திர திட்டம் மட்டுமே.

தனுஷ்கோடி பகுதியில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்து கடலில் மண் தோண்டும் பணி நடைபெற்றது. ஆனால் தனுஷ்கோடி முதல் இலங்கை வரை இருக்கக்கூடிய மணல் திட்டுகளை பொறுத்த அளவு கடல் நீரோட்டத்தின் போக்குக்கு ஏற்பவே திட்டுகளில் மணல் இருக்கும். வருடத்தில் பல மாதங்கள் கடல் நீரோட்டத்தில் மணல் திட்டுகள் காணாமல் போய்விடும். அப்படிப்பட்ட புவியியல் அமைப்பை கொண்ட இடத்தில் எப்படி கால்வாய் அமைக்க முடியும்” என்று கேட்கிறார் ஜெரோம்.

‘ஆங்கிலேயரால் கைவிடப்பட்ட திட்டம்’

ராமமூர்த்தி

பட மூலாதாரம், Ramamurthi

ஆங்கிலேயரால் 1960ஆம் ஆண்டு கைவிடப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை அதே வழித்தடத்தில் மீண்டும் செயல்படுத்த தமிழ்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது; ஆனால், கடலுக்கு நடுவே உள்ள ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ராம மூர்த்தி பிபிசி தமிழிடம் பேசுகையில், “தனுஷ்கோடி அடுத்துள்ள நான்காவது மற்றும் ஐந்தாவது மணல் திட்டுகளுக்கு இடையிலோ, சேது மற்றும் ஐந்தாவது மணல் திட்டுக்கு இடையிலோ சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதால் கடற்கரை ஒழுங்குமுறையின்படி மாநில அரசுக்கு வருவாய் கிடைக்காது.

இத்திட்டத்தை ராமேஸ்வரம் அடுத்துள்ள கோதண்டராமர் கோயில் – அரிச்சல்முனை இரண்டுக்கும் இடையே உள்ள கரை பகுதி வழியாக செயல்படுத்தினால் அங்கு சிறிய துறைமுகம் அமையும், அதன் வழியாக வணிகம் நடைபெற்று மாநில அரசுக்கும் உள்ளூர் மக்களுக்கும் வருவாய் கிடைக்கும்.

ராமர் பாலத்தை சேதப்படுத்திதான் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என எந்தக் கட்டாயமும் இல்லை. இலங்கைக்கு அருகே உருவான புயல் மற்றும் சுனாமி உள்ளிட்டவற்றில் இருந்து ராமேஸ்வரத்தைக் காப்பாற்றியது ராமர் பாலம்தான். எனவே ராமர் பாலத்தை தவிர்த்து மாற்று வழியில் இத்திட்டத்தைச் செயல்படுத்தினால் நிச்சயம் வரவேற்கதக்கது” என்றார்.

“தமிழ்நாடு அரசு தற்போது தொலைநோக்குப் பார்வை இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறது; இந்து அமைப்புகளைப் பொறுத்த அளவு சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் கடலுக்கு நடுவில் அமைந்துள்ள ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் இந்த திட்டத்தை செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை,” என்கிறார் அவர்.

“இலங்கை கடற்படை சிக்கலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்”

ஜேசுராஜா

பட மூலாதாரம், Jesuraja

பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர்கள் முழுதாக இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள், இந்து முன்னணியோ ராமர் பாலத்துக்கு சேதம் இல்லாமல் இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்கிறது. ஆனால், விசைப்படகு மீனவர்களோ இந்த திட்டத்தை ஆதரிக்கின்றனர்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா, கடந்த 2006ஆம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப்பட்டது. 

ஆனால் இடையில் ராமர் பாலம் என்ற ஒரு சர்ச்சையால் அந்த பணி நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் சட்டசபையில் சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விசைப்படகு மீனவர்கள் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடல் எல்லை மிக குறைந்த தூரத்திலேயே வந்துவிடுகிறது. ஆகவே நாங்கள் அடிக்கடி எல்லை தாண்டி செல்ல நேரிடுகிறது. இதனால் இலங்கை கடற்படையின் பிரச்னையால் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம்.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் வட பகுதி மீனவர்கள் தென் பகுதிக்கும் தென் பகுதி மீனவர்கள் வட பகுதிக்கும் சென்று மீன் பிடிக்க வசதியாக இருக்கும். மேலும், கப்பல்கள் சேது சமுத்திரக் கால்வாய் வழியாகச் சென்றால் நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்,” என்றார் ஜேசுராஜா.

மணல் மூடாமல் இருக்க பராமரிப்பு பணி முக்கியம்

சேது சமுத்திரத் திட்டத்தால் தூத்துக்குடி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் பயன் பெறுமா என்பது குறித்து தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்க தலைவர் வேல் சங்கர் பிபிசி தமிழிடம் பேசுகையில், ”சேது சமுத்திர திட்டம் இந்திவுக்கு முக்கியமான திட்டம்,” என்றார்.

மேலும், “இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சேது சமுத்திர திட்டத்தை தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கம் வரவேற்கிறோம். தூத்துக்குடியில் இருந்து கொழும்பு செல்லும் கப்பல்கள் எளிதில் சென்று வருகிறது.

ஆனால் கொல்கத்தா, சென்னை மற்றும் கிழக்கு கடல் பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் கப்பல்கள் அனைத்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் காலதாமதமாகடச் சுற்றி வருகிறது. சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுற்றி வரும் நேரம் குறைவதுடன், கப்பல்களுக்கு எரிபொருள் செலவு குறையும் இதனால் ஏற்றுமதி இறக்குமத நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.,” என்றார்.

வேல் சங்கர்

இத்திட்டத்தால் வணிக ரீதியாக லாபம் கிடைப்பதுடன், இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை உள்ளிட்ட பாதுகாப்பு துறை கப்பல்கள் அவசர காலத்தில் சேது கால்வாய் வழியாக பக்கத்து மாநிலங்களுக்கு செல்ல முடியும். இதனால் நாட்டின் பாதுகாப்பு அதிகரிக்கும்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்துள்ள அரசு கால்வாய் தோண்டும்; பகுதியில் உள்ள மணல் மீண்டும் மூடாமல் இருக்க தொடர்ந்து மணலை அள்ளி அப்பகுதியை சூயஸ் கால்வாயை போல் பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்க தவறினால் நிச்சயம் இத்திட்டம் தோல்வி அடையும்.

சேது சமுத்திர கால்வாயை பராமரிக்க சரக்கு கப்பலிடம் இருந்து வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் போதுமானதாக இருக்காது. எனவே அரசு கூடுதல் கட்டணம் வசூலிக்க நேரிடும். கூடுதல் சுங்க கட்டணம் வசூலித்தால் கப்பல்கள் சேது கால்வாய் தவிர்த்துவிட்டு கூடுதல் எரிபொருள் செலவு செய்து மீண்டும் சுற்றி தூத்துக்குடி வரும்.

எனவே சேது கால்வாய் பராமரிக்கும் தொகையை அரசு ஏற்க வேண்டும் அல்லது பாதுகாப்புத் துறையிடம் இருந்து பெறவேண்டும். இப்படி செய்தால் சேது சமுத்திர திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்,” என்கிறார் தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்க தலைவர் வேல் சங்கர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »