Press "Enter" to skip to content

40 வயது ஆகியும் ‘சிங்கிள்’ பெண்ணாக உலகம் சுற்றும் ஐஸ்வர்யா, திருமணத்தை வெறுத்தது ஏன்?

பட மூலாதாரம், Aishwarya Sampath

“திருமண வாழ்க்கை, குழந்தை என இரண்டும் இருந்தால்தான் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையே முழுமையடைகிறது” என்பதுதான் இந்திய பெரும்பான்மை சமூகத்தின் மனப்பான்மை.

ஆனால், கல்வி, பயணம், வாசிப்பு அனுபவம் இவையும் வாழ்க்கையை முழுமையடையச் செய்யும், நம்மை மகிழ்ச்சியாக்கும் என்கிறார், சென்னையைச் சேர்ந்த 40 வயதான ஐஸ்வர்யா சம்பத். “திருமணம் செய்யாமல் இருக்கும் பெண்கள் எப்போதும் அழுதுகொண்டு கவலையுடன் இருப்பார்கள், தனியாக இருப்பார்கள் என்பதில்லை. நம் வாழ்க்கையை நாம் எப்படி வாழப் போகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது” என உற்சாகமாகப் பேசுகிறார் ஐஸ்வர்யா.

சென்னையில் பொறியியல், பெங்களூருவில் எம்பிஏ படித்த ஐஸ்வர்யா, மும்பையில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் ஹெச்.ஆர்-ஆக பணிபுரிந்துள்ளார்.

சிறு வயதிலிருந்தே சுதந்திரமாக, தனியாக வாழப் பழகிய ஐஸ்வர்யா, தன்னுடைய 20களில் பார்த்த காதல் திரைப்படங்களில் வரும் கதாநாயகர்களைப் போல காதலர் – கணவர் அமைய வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அதற்குப் பிறகு திருமணமே வேண்டாம் என அவர் முடிவெடுத்தது ஏன்?

”குச் குச் ஹோத்தா ஹை’, ‘அலைபாயுதே’ திரைப்படங்களைப் பார்த்து அதில் வரும் கதாநாயகர்களைப் போன்று வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என நினைத்திருக்கிறேன். மாதவன் என்னை வசீகரித்தார். அதே மாதிரிஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)கில் ‘என்றென்றும் புன்னகை’ பாடலை பாடிக்கொண்டு என்னுடைய பார்ட்னர் வருவார் என்றெல்லாம்கூட நினைத்திருக்கிறேன்” என்கிறார் ஐஸ்வர்யா.

கல்லூரி, வேலை எனச் செல்லும்போது காதல் உறவுகள் அமையவில்லையா, ஏன் திருமணம் வரை அந்த உறவுகள் நீடிக்கவில்லை என்று கேட்டால், “நான் இரண்டு முறை காதல் உறவுகளில் மிகத் தீவிரமாக இருந்துள்ளேன். ஆறு ஆண்டுகள் வரை நீடித்த அந்த உறவு, திருமணம் வரை செல்லவில்லை. அதற்குப் பிறகும் தீவிரமாக அல்லாமல் சில உறவுகளில் இருந்திருக்கிறேன்.

பிடிக்கிற மாதிரி இருக்கும். ஆனால், அது திருமணம் செய்துகொள்வது வரை செல்லாது. இந்த உறவுகளின் வாயிலாக, ஆண்கள் அவ்வளவு நேர்மையாக இருப்பதில்லை என நான் புரிந்து கொண்டுள்ளேன். அதற்காக ஆண்கள் மீது வெறுப்பு இல்லை. நான் கொண்டிருந்த உறவுகளில் இடைவெளிகள் இருந்திருக்கிறது. நான் சந்தித்த ஆண்கள் கூறும் சில விஷயங்களில் ’பிடிப்பு’ இருக்காது. அதற்காக ஆண்களை மொத்தமாகக் குறை சொல்ல முடியாது,” என்கிறார். 

வீட்டில் பார்த்த சில வரன்களும் தனக்கு திருமண உறவை நோக்கிச் செல்வதற்கு ஏற்றதாக அமையவில்லை என்கிறார் ஐஸ்வர்யா. 
”28-29வது வயதில் எனக்காகப் பார்த்த மாப்பிள்ளை ஒருவர் செல்போனில் என்னிடம் பேசினார். தன்னைப் பற்றி மட்டுமே அவர் பேசினார். உணவு உட்பட எல்லாவற்றிலும் தனக்குப் பிடித்தமானதைக் கூறிக்கொண்டிருந்தார்.

ஒருமுறை கூட எனக்கு என்ன பிடிக்கும் என்பதைக் கேட்கவில்லை. எனக்கு வெறுத்துவிட்டது. நன்கு படித்த, வங்கித்துறையில் நல்ல நிலையில் உள்ள அவருக்கே எதிரில் உள்ள ஒரு பெண்ணின் விருப்பத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அதுதான் ஆணாதிக்க மனப்பான்மை,” என்கிறார் ஐஸ்வர்யா. 

“என்னுடையமீதி வாழ்க்கையைச் சேர்ந்து கழிக்கும் அளவுக்கு யார் மீதும் எனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை. ஏனென்றால் அவரைத்தான் நாம் தினமும் காலையில் பார்க்கப் போகிறோம். அதனால் இணையும் முன்பாகப் பெரிதும் யோசிக்க வேண்டும். திருமண வாழ்க்கை ஒரு சிறை போன்றதுதான். அந்த சுவற்றுக்குள்ளேதான் நீங்கள் இருக்க வேண்டும்.

25 வயதில் பார்ட்னரை கண்டுபிடித்து 28 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் அது சரிவராது. இவர்தான் சரியானவர் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? குறிப்பிட்ட வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு ஒருவரைத் திருமணம் செய்ய எனக்கு விருப்பமில்லை” எனத் தீர்க்கமாகக் கூறுகிறார் ஐஸ்வர்யா. 

ஐஸ்வர்யா சம்பத்

பட மூலாதாரம், Aishwarya Sampath

”யாதும் ஊரே யாவரும் கேளிர்”

தான் வளர்ந்த குடும்ப சூழல் மிக முற்போக்கானது என்றும் ஆனால் வெளி உலகத்தில் ஆண்களிடம் தான் பல முரண்களைச் சந்தித்ததாகவும் கூறுகிறார், ஐஸ்வர்யா. 

”அம்மா கிரிஜா போடிநாயக்கனூரை சேர்ந்தவர். அப்பா சம்பத் கோயம்புத்தூரை சேர்ந்தவர். என்னுடைய குடும்பத்தில் பெண்கள் முற்போக்குடன் வலுவானவர்களாக இருந்தவர்கள். அம்மா சத்தமாகத்தான் பேசுவார். வெட்கப்பட மாட்டார், தன் கருத்துகளைக் கூறுவார். பாட்டி, அம்மா, அம்மாவின் சகோதரிகள் எல்லோருமே இப்படித்தான். அந்த சூழலில்தான் நான் வளர்ந்தேன். 

நாங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். நாங்கள் மனிதத்தை விரும்புபவர்கள், “உண்மையான திராவிடர்கள்.” “நீ பொண்ணு, நீ இப்படி இருக்கக்கூடாது” என யாருமே சொன்னது கிடையாது. அப்பா, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பவர். 

என்னுடைய பாதுகாப்புக்காக சில அறிவுரைகளைக் கூறுவார்களே தவிர, அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் எனக் கூறியது கிடையாது. ”உனக்கு வயசாகிடுச்சு, நீ திருமணம் செய்துக்கணும்” என்று இதுவரை என் பெற்றோர் கூறியது இல்லை. திருமணத்திற்காக எந்த சமாதானமும் தியாகமும் செய்துகொள்ள வேண்டியதில்லை என்று கூறுவார்கள்.

“உத்தர பிரதேசம், பிகார், கொல்கத்தா, மும்பையில் ஆணாதிக்க மனப்பான்மை தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருப்பதாக நினைக்கிறேன். தமிழ்நாட்டில் ஏன் அவ்வளவு இல்லை என நான் நினைக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் பெரியார்” என, தான் வளர்ந்த சூழல், திருமண உறவு குறித்த தனது முடிவில் செலுத்திய தாக்கம் குறித்து கூறினார் ஐஸ்வர்யா. 

ஐஸ்வர்யா சம்பத்

பட மூலாதாரம், Aishwarya Sampath

ஆணாதிக்க மனப்பான்மை

“அந்தக் காலத்தில் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் இல்லை. ஆனால், இப்போது அப்படியில்லை. பொருளாதார சுதந்திரம் உள்ளது. ‘திருமணத்திற்குப் பிறகு அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்” என்பதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.

இந்தியாவில் ஆணாதிக்கம் பெரும் பிரச்னை. என்னுடைய அப்பா அப்படியில்லை. அப்படிப்பட்ட சூழலில் இருந்துவிட்டு நான் வெளியே செல்லும்போது அதற்கு முரணான ஆட்களைச் சந்தித்தேன். காதலித்தவர்களும் அப்படி இருந்தனர்,” என்கிறார் ஐஸ்வர்யா. 

குடும்பத்தைத் தாண்டி உறவினர்கள், நண்பர்கள் திருமணம் குறித்துக் கேட்டால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டால், “அதற்கு பயந்துவிட்டால் நாம் வாழ்க்கையில் எதுவுமே செய்ய முடியாது. சிங்கிள் பெண்ணாக நீங்கள் உங்களைப் பற்றி முழுமையாக புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்” என்றார். 

“பயணங்களே வாழ்க்கைத் துணை”

துணை இல்லாமல் தனிமையில் வாழ்க்கையைக் கழிப்பது அழுத்தம் நிறைந்ததாக இல்லையா, எப்படி உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறீர்கள் என ஐஸ்வர்யாவிடம் கேட்டால், ”என் மகிழ்ச்சிக்கு பயணங்கள்தான் காரணம்” என்கிறார். 

”முதல்முறை தனியாகப் பயணித்தபோது நிச்சயமாக பயமாக இருந்தது. ஏனெனில், இந்தியாவில் எங்கும் தனியாகப் பயணித்தது இல்லை. மும்பை, பெங்களூருவில் தனியாக இருந்திருந்தாலும் பயமாகத்தான் இருந்தது.

31 வயதிலிருந்து தனியாகப் பயணிக்க ஆரம்பித்தேன். ஹெச்.ஆராக பணிபுரிந்தபோது எனக்கு சில லட்சங்களில் வருமானம் இருந்தது. அதைச் சேமித்து வைத்திருந்தேன். எனக்கு பாரிஸ் செல்ல வேண்டும் என ஆசை இருந்தது. ஏன் திருமணம் செய்துகொண்டு ’ஹனிமூன்’ வரை காத்திருக்க வேண்டும் என எனக்குத் தோன்றியது. 

முதலாவதாக தாய்லாந்துக்கு சென்றேன். ஏதாவது பிரச்னை என்றால் உடனடியாக இந்தியா திரும்பிவிடலாம் என்றுதான் தாய்லாந்தை தேர்ந்தெடுத்தேன். 

ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணித்துள்ளேன். 5-6 மாதங்கள் வரை பயணிப்பேன். தனியாகப் பயணித்தபோதுதான் நாம் மகிழ்ச்சியாக இருக்க ஓர் ஆண் தேவையில்லை என்பது எனக்குப் புரிந்தது. நாமாகவே மகிழ்ச்சியாக இருக்கலாம். என் வாழ்க்கையை நான் வாழ ஆரம்பித்தேன்.

“பொறுப்பே இல்லாம மகிழ்ச்சியா சுத்திக்கிட்டு இருக்கா”, “உனக்கு வாழ்க்கைல ஏதாவது பிடிப்பு இருக்கா?”ன்னு என்னோட நண்பர்களே சொல்லுவாங்க, ஆனா அவங்கதான் திருமண வாழ்க்கையில மாட்டிக்கிட்டு தவிக்கிறாங்கன்னு நான் நினைக்கிறேன்” என்கிறார் ஐஸ்வர்யா. 

ஐஸ்வர்யா சம்பத்

பட மூலாதாரம், Aishwarya Sampath

பெரும்பாலும் ‘ஏர் பி&பி’ என்ற முறையில், வரவு செலவுத் திட்டம் செலவில்தான் பயணிக்கிறார் ஐஸ்வர்யா. 

’ஏர் பி&பி’ முறையில் ஒரு வீட்டில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஹோட்டலில் தங்காமல் ஒருவரின் வீட்டில் தங்கும்போது உள்ளூர் அனுபவம் அதிகமாகக் கிடைக்கும் என்கிறார் ஐஸ்வர்யா.

பயணங்களின்போது அவர் சந்தித்த பெண்கள், தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கைப் பாதைக்கு மிக முக்கியக் காரணம் என்கிறார்.

”பாங்காக்கில் கொசாமோயி (Ko Samui) தீவுக்குச் சென்றேன். அங்கு எம்மா என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தனியாக வாழும் பெண்ணை சந்தித்தேன். சென்னை வரை தனியாக அவர் பயணித்துள்ளார். அவருடன் இணைந்து நீண்ட நாட்கள் தாய்லாந்தில் பயணித்தேன். பயணங்களின்போது மெக்சிகோ, அர்ஜெண்டினாவை சேர்ந்த என்னைப் போன்ற பல பெண்களைச் சந்தித்துள்ளேன்.

ஆஸ்திரியாவுக்கு பயணம் செய்தபோது அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு நடிகையைச் சந்தித்தேன். 37-38 வயதில்தான் அந்நாட்டில் திருமணம் குறித்தே சிந்திப்போம் என அவர் கூறினார். ஒவ்வொரு நாட்டிலும் இந்த வயது மாறுகிறது. 

65 வயது வரை ’சிங்கிளாக’ உள்ள பெண்கள் பயணிப்பதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் தங்களுடைய வாழ்க்கை, விருப்பங்களை என்னிடம் பகிர்ந்துகொள்வார்கள்.”

பிரான்ஸ், குரேஷியா, ஸ்பெயின், இத்தாலி, ருமேனியா, செக் ரிபப்ளிக் உள்ளிட்ட நாடுகளுக்குத் தனியாகப் பயணித்துள்ள ஐஸ்வர்யா, பயணிக்கும்போது தன்னுடைய வேலையிலிருந்து விலகி, ஓராண்டுவரை இடைவெளி எடுத்து தன்னுடைய சேமிப்பைக் கொண்டு பயணிப்பதாகக் கூறுகிறார்.

”ஐரோப்பாவில் சுமார் 6 மாதங்கள் வரை இருந்திருக்கிறேன். ஒரு நாட்டுக்குச் செல்லும்போது எதுவுமே பிளான் செய்ய மாட்டேன். 3-5 நாட்கள் என செல்ல மாட்டேன். ஒரு டைம்டேபிள் போட்டுப் பயணிக்க முடியாது. எங்கு செல்கிறேனோ அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைக்கு நான் என்னைத் தகவமைத்துக்கொள்வேன். உள்ளூர் ஆளாகவே மாறிவிடுவேன். உள்ளூர் ஆட்கள் நம்முடன் நண்பர்களாகி விடுவார்கள். தனியாக இருக்க மாட்டீர்கள்,” என உற்சாகத்துடன் கூறுகிறார் ஐஸ்வர்யா.

பயணங்களின்போது உணவுக்கு அதிகமாக செலவழிக்காமல் இருக்க, ஜூஸ், பிரெட், சீஸ், பழங்கள் இவற்றைத்தான் அதிகமாகச் சாப்பிடுவதாகக் கூறுகிறார் ஐஸ்வர்யா.

அம்மா ஆனால்தான் நீ பெண் எனக் கூறுவார்கள், அப்படியெல்லாம் இல்லை. அப்படி சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள். ஒரு விஷயத்தைக் கேட்டுக் கேட்டு அதைத்தான் உண்மை என நம்புகிறோம். நீங்கள் குரோஷியாவில் ஏட்ரியாட்டிக் கடலை பார்க்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழவில்லை என்று அவர்களிடம் நான் சொல்வேன்.” 

பயணங்கள் வாயிலாக பல மொழிகளைக் கற்றுக்கொண்ட ஐஸ்வர்யா, தெலுங்கு, மலையாளம், இந்தி, ஸ்பானிஷ், இத்தாலி, குரோஷியன், போர்ச்சுகீஸ் என 9 மொழிகள் தனக்குத் தெரியும் என்கிறார். பயணங்கள் தவிர்த்து புத்தகங்களையும் தன் துணையாக கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. 

“நான் நிறைய படிப்பேன், பயணங்களின்போது புத்தகங்கள் எடுத்துச் செல்வேன். தனியாக ரெஸ்டாரண்ட் செல்லும்போது புத்தகங்கள் எடுத்துச் செல்வேன். புத்தகங்கள் படிக்கும்போது நான் தனிமையில் இருப்பது போன்ற எண்ணம் ஏற்படுவது இல்லை. புத்தகம் படிக்கும்போது நாம் வேறு ஓர் உலகத்தில் இருப்போம்,” என்றார்.  

ஐஸ்வர்யா சம்பத்

பட மூலாதாரம், Aishwarya Sampath

“தனிமையில் வாழவில்லை”

”சிங்கிள்’ பெண்கள் என்றால் எப்போதும் கவலையாக இருப்பார்கள் என்றுதான் சமூகம் நினைக்கிறது. ஆனால், நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யமாக செய்ய நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அந்த விஷயம் ‘பார்ட்னர்’ மூலமாகத்தான் நடக்க வேண்டும் என்பதில்லை. 

திருமணம் செய்யவில்லை என்றால், நீங்கள் தனியாக இருப்பீர்கள் என்பதில்லை. உங்கள் வாழ்க்கையில் நிறைய பேர் வருவார்கள். 
திருமணம் ’நார்மல்’ என்றும் சிங்கிளாக இருப்பது ’நார்மல்’ இல்லை எனவும் நினைக்கிறோம். ஆனால், எதிர்கருத்துதான் ’நார்மல்’ என நான் கூறுகிறேன்” என்றார் ஐஸ்வர்யா.

இதற்குப் பின் திருமண எண்ணம் தோன்றுமா எனக் கேட்டால், “நான் இனி திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என தீர்க்கமாகக் கூறுகிறார். 

“உங்கள் மீது நம்பிக்கை வேண்டும்”

”40 வயதாகிவிட்டது என்பதால் நான் சோர்ந்துவிடவில்லை. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். ஆரோக்கியமாக இல்லையென்றால் உலகம் உங்களிடம் அன்பாக இருக்காது. அதனால் உங்களை நீங்கள் நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். என்னை மற்றவர்கள் ’ஆண்ட்டி’ என்றுகூட கூறலாம். ஆனால், எனக்கு என் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மற்றவர்கள் கூறும்போது நமக்கு கவலை இருக்காது. 

புதிதாக ஒன்றை முயல்வதற்கு எப்போதும் தயங்கக்கூடாது என்பதுதான் பயணங்கள் வாயிலாக நான் கற்றுக்கொண்ட ஒன்று. தெரியாத இடத்திற்குச் செல்லும்போது நிச்சயம் உங்களுக்கு உதவி வந்து சேரும்,” என்றார். 

தன்னுடைய பயணங்கள், தான் சந்தித்த பெண்கள் குறித்து புத்தகம் எழுதத் திட்டமிட்டுள்ளார் ஐஸ்வர்யா. அடுத்தகட்டமாக, ஐரோப்பா சென்று பாலினம், மனித உரிமைகள் குறித்து படிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »