Press "Enter" to skip to content

வியாழன் கோளை சுற்றி வரும் ஐஸ் நிலாக்களை ஆராயப் போகும் ஜூஸ் செயற்கைக்கோள்

பட மூலாதாரம், NASA/JPL-CALTECH/SWRI/MSSS

வியாழன் கிரகத்தின் பனிக்கட்டி நிலவுகளை ஆராய்வதற்காக ஐரோப்பா தனது மிகப்பெரிய விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள உள்ளது.

ஜூஸ் செயற்கைக்கோள் பிரான்சின் துலூஸ் நகரில் இறுதிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் பிறகு தென் அமெரிக்காவில் உள்ள ஏவுதளத்திற்கு அனுப்பப்படும்.

ஏப்ரல் மாதத்தில் பூமியில் இருந்து தனது பயணத்தை அது தொடங்கும். 

இந்த 6000 கிலோ விண்கலம் வியாழனின் நிலவுகளான காலிஸ்டோ, கேனிமீட் மற்றும் யூரோபா ஆகியவற்றில் தரையிறங்கி இவற்றில் ஏதாவது ஒன்று உயிர்கள் வாழ தகுதியானதா என ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. 

இது கற்பனையானது போல் தோன்றலாம். வியாழன் கிரகத்தை சுற்றி ஏராளமான நிலவுகள் உள்ளன. இவையனைத்தும் சேர்ந்து ஜோவியன் அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜோவியன் அமைப்பு சூரியனில் இருந்து வெகுதொலைவில் உள்ளதால், பூமியில் விழும் சூரிய ஒளியில் இருபத்தி ஐந்தில் ஒரு பங்கை மட்டுமே பெறுகிறது. 

ஆனால், ராட்சத கிரகமான வியாழனை அழுத்தும் மற்றும் தள்ளும் புவியீர்ப்பு விசையானது, அதன் நிலவுகளுக்கு ஆழத்தில் அதிக அளவு திரவ நீரைத் தக்கவைத்துக்கொள்ளும் ஆற்றலையும் வெப்பத்தையும் வழங்குகின்றன. நீர் இருந்தால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளது என்பதை நாம் பூமி மூலம் அறிவோம்.

“யூரோபாவை பொருத்தவரை , பனி மேலோட்டத்தின் அடியில் 100 கிமீ ஆழத்தில் ஒரு ஆழமான சமுத்திரம் இருப்பதாக கருதப்படுகிறது” என்று கூறுகிறார் பிரிட்டனில் லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் திட்ட விஞ்ஞானியுமான எம்மா பன்ஸ். 

“பூமியில் உள்ள ஆழமான சமுத்திரத்தை விடவும் அவை 10 மடங்கு ஆழமானவை. சமுத்திரம் ஒரு பாறைத் தளத்துடன் தொடர்பு கொள்கிறது என்று நாங்கள் நினைக்கிறோம். இதன் காரணமாக,  இது கலவை மற்றும் சில சுவாரஸ்யமான வேதியியல் இருக்கும் ஒரு காட்சியை வழங்குகிறது ” என்று அவர் பிபிசியிடம் கூறினார். 

ஜூஸ் செயற்கைக்கோளின் 6.6 பில்லியன் கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த பயணம் 8.5 ஆண்டுகள் வரை நீடிக்கும். 

ஜூலை 2031 வியாழன் கிரகத்தை சென்றடையும் இந்த செயற்கைக்கோள் அங்கிருந்து மூன்று நிலவுகளுக்கும் சென்றடைந்து இறுதியாக 2034ல் கேனிமீட்டில் நிரந்திரமாக தஞ்சமடையும். 

வியாழன் கிரகம் :ஜூஸ் செயற்கைக்கோள்

ஜூஸுக்குப் பின்னால் உள்ள ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (இ.எஸ்.ஏ) திட்டக் குழு இந்த வாரம் ஒரு பெரிய ஆய்வை நடத்தி, இந்த திட்டம் தயார் நிலையில் இருப்பதாக முடிவு செய்துள்ளது. 

ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஏர்பஸ் 1.6 பில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 14 ஆயிரம் கோடி) செலவில்  ஜூபிடர் ஐசி மூன்ஸ் எக்ஸ்ப்ளோரரின் கட்டுமானத்தை முன்னெடுத்துள்ளது.

இதன் தயாரிப்புக்காக ஐரோப்பா முழுவதிலும் இருந்து நிபுணத்துவம் மற்றும் கூறுகளை  அதன் உற்பத்தியாளர்கள் பெற்றுள்ளனர். 

ஜூஸின் 10 அறிவியல் கருவிகள் உட்பட அனைத்தும் இப்போது முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. 

“அகச்சிவப்பு, புலப்படும் மற்றும் புற ஊதா என அனைத்து சாத்தியமான அலைவரிசையிலும் கூடிய ஏராளமான உயர்திறன் ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்)  எங்களிடம் உள்ளன ” என, வெள்ளி மற்றும் கருப்பு செயற்கைக்கோளின் ஒரு பக்கத்தில் தொங்கும் பெட்டிகளின் தொகுப்பை சுட்டிக்காட்டி பொறியாளர் சிரில் கேவல் விளக்கினார். 

“வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான கவர்களுக்கு அடியில்  இந்த கருவிகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். ஜானஸ் என்று அழைக்கப்படும் உயர் திறன்  கொண்ட தொலைநோக்கி, நிலவுகளுக்கு மிக அருகில் சென்று அற்புதமான புகைப்படங்களை எடுக்கும். அவை பிரமிக்கவைக்கும் காட்சிகளாக இருக்கும்.  ஏனெனில் அது வெறும் 400 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கும். ” என்று ஏர்பஸ் ஜூஸ் திட்ட மேலாளர் கூறினார்.

வியாழன் கிரகம் :ஜூஸ் செயற்கைக்கோள்

பட மூலாதாரம், NASA/SWRI

இதில் உள்ள ரேடார்கள் நிலவுகளின் உள்ளேயும் உற்று நோக்கும்.  லேசர் அளவீடு அமைப்பான லிடார் அவற்றின் நிலப்பரப்பு தொடர்பாக 3டி வரைப்படங்களை உருவாக்கும்.  காந்தமானிகள் அவற்றின் சிக்கலான மின் மற்றும் காந்த சூழல்களைக் கண்டறியும்; மற்றும் சென்சார்கள் அவற்றைச் சுற்றியுள்ள துகள்களை மாதிரி செய்யும்.  

ஜூஸ் குறிப்பிட்ட “உயிர் குறிப்பான்களை” தேடாது; ஆழமான கடல்களில் வேற்றுகிரக மீன்களைக் கண்டறிய அது முயற்சி செய்யாது. எதிர்கால பயணங்கள் பின்னர் இன்னும் விரிவாக ஆராயக்கூடிய, வசிப்பிடத்திற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதே இதன் வேலை. வியாழனின் பனிக்கட்டி நிலவுகளில் ஒன்றில் தரையிறக்கி அதன் மேலோடு வழியாக கீழே உள்ள தண்ணீருக்கு துளையிடும் யோசனையை விஞ்ஞானிகள் நீண்ட காலமாக யோசித்து வருகின்றனர்.

ஒருநாள் அது நடக்கும். ஒருவேளை, இந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் கூட அது  இருக்கலாம். 

சூரிய குடும்பத்தின் வெளிப்புற பகுதிகள் குறித்து நீங்கள் வேலை செய்யும்போது, பொறுமை அவசியம் தேவை. பூமி மற்றும் வியாழனின் சுற்றுப்பாதைகள் வெறும் 600 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கலாம். ஆனால், ஒரு அற்புதமான ராக்கெட் இல்லாமல் நீங்கள் எளிதாக நேரடியாக சென்றுவிட முடியாது.   ஐரோப்பாவின் ஏரியன் 5 சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், அது அந்த மாதிரியான திறன் பெற்றது அல்ல. 

அதற்கு பதிலாக, இது ஜூஸ் செயற்கைகோளை வீனஸ் மற்றும் பூமியின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தும் வேறு ஒரு சுற்று பாதையில் அனுப்பும். இதன் மூலம் வாயு கிரகத்தின் ஆய்வை துரிதப்படுத்தும். 

ஜூஸ் ஒரு குளிரூட்டப்பட்ட தொட்டி போல் கட்டப்பட்டுள்ளது.

வியாழன் கிரகம் :ஜூஸ் செயற்கைக்கோள்

பாதுகாப்பற்ற நிலையில், வியாழனைச் சுற்றி சுழலும் கடுமையான கதிர்வீச்சில் அதன் எலக்ட்ரானிக்ஸ் விரைவாக சிதைந்துவிடும். அந்த நீண்ட பயணமானது வீனஸை நோக்கி உள்நோக்கி சென்று பின்னர் வாயு கிரகத்தை நோக்கி செல்லும் போது செயற்கைக்கோளின் வெளிப்புறத்தில் வெப்பநிலை 250C இலிருந்து மைனஸ்-230C ஆக இருக்கும்.

“கதிர்வீச்சில் இருந்து கணினிகளை பாதுகாக்கவும் அதே அளவிலான வெப்பநிலையில் குழாய்களின் நெட்வொர்க் மூலம் அவற்றை பராமரிக்கவும் விண்கலத்தின் உள்ளே இரண்டு பெரிய பெட்டகங்கள் உள்ளன, ” என்று கூறுகிறார் வெப்பநிலை நிபுணரான செவெரின் டெஷாம்ப்ஸ்.

உந்துவிசை அமைப்புக்கும் இதே முறைதான். ஏவப்படும்போது சிறப்பான முறையில் செயல்பட அதன் இயக்கம்  சற்று வெதுவெதுப்பாக 20C என்ற அளவிலேயே பராமரிக்கப்பட வேண்டும். 

தனது பணிகளை ஜூஸ் செயற்கைக்கோள் மட்டும் தனியாக மேற்கொள்ளப்போவதில்லை. 

அமெரிக்க வான்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தனக்கு சொந்தமான கிலிப்பர் என்ற செயற்கைக்கோளையும் அனுப்புகிறது. 

ஜூஸ் செயற்கைகோள் பூமியில் இருந்து புறப்பட்டு சென்ற பிறகு தனது பயணத்தை கிலிப்பர் தொடங்கினாலும், தனது ஐரோப்பிய தோழனுக்கு முன்பே அது பயண இலக்கை சென்று அடைந்துவிடும். யூரோபா குறித்து இது அதிகம் கவனம் செலுத்தவுள்ளது. 

இரண்டு செயற்கைக்கோள்களும் சேர்ந்து ஒரு சக்திவாய்ந்த குழுவை உருவாக்கும்.

“இரண்டையும் ஒன்றாகக் கொண்டிருப்பது உங்களுக்கு மிகவும் ஆழமான புரிதலை கொடுக்கும், மேலும் இது என்ன நடக்கிறது என்பதற்கான சில யூகங்களை நீக்குகிறது” என்று ஜூஸின் காந்தமானி கருவியின் முதன்மை ஆய்வாளர் பேராசிரியர் மைக்கேல் டகெர்டி கூறினார்.  

“இது சுவாரஸ்யமாக இருக்கும், எடுத்துக்காட்டாக, கிளிப்பர் யூரோபாவைக் கடந்து செல்லும் போது சந்திரனில் இருந்து ஒரு ப்ளூம் வருகிறது என்றால், கிளிப்பர் நெருக்கமான அளவீடுகளை செய்யும், ஆனால் ஜூஸ் அது யூரோபாவைச் சுற்றியுள்ள சூழலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது  மற்றும் வியாழனில் உள்ள அரோரல் விளக்குகளில் நாம் பெரிய புள்ளிகளைப் பெறுகிறோமா என்பதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும்.  ”

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »