பட மூலாதாரம், Hockey India
எப்படியும் வெற்றிபெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் ஆட்டத்தின் முக்கால் பகுதி நேரம் வரை விரைந்து சென்று கொண்டிருந்த இந்திய அணி கடைசியில் தோற்றுப் போனதால் அதன் ஹாக்கி உலகக் கோப்பை கனவு தகர்ந்து போனது.
ஒடிசாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் நியூசிலாந்து அணி பெனால்டி ஷூட் அவுட், சடன் டெத் முறையில் இந்தியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. நிர்ணயிக்கப்பட்ட 60 நிமிடங்களில் இரு அணிகளும் 3-3 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தன.
முதல் பெனால்டி ஷூட் அவுட்டிலும் இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. இதன் பிறகு சடன் டெத் தொடங்கியது. இதன்படி ஒரு வாய்ப்பைத் தவறவிட்டாலும் எதிரணி அதில் கோல் அடித்துவிட்டாலும் வெற்றி எதிரணி வசமாகிவிடும்.
சடன் டெத்தில் நியூசிலாந்து அணிக்கு முதல் வாய்ப்பு கிடைத்தாலும் கோல் அடிக்க முடியாமல் போனது. இந்தியாவும் முதல் வாய்ப்பை தவறவிட்டது.
இதில் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக கிருஷ்ணா பதக் களமிறங்கினார். இது மோசமான விளைவுகளைக் கொடுத்தது.
நியூசிலாந்தும் இந்தியாவும் அடுத்த இரண்டு வாய்ப்புகளை கோலாக மாற்றின. அதன் பிறகு இரு அணிகளும் வாய்ப்புகளை தவறவிட்டன.
இறுதியாக, நியூசிலாந்து அடுத்த வாய்ப்பை கோலாக மாற்றியது. ஆனால் இந்தியா தனது வாய்ப்பைத் தவறவிட்டது. இதுவே போட்டியின் முடிவைத் தீர்மானித்தது. இதன் மூலம் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இருந்து இந்தியா வெளியேறியது.
இனி நடக்கும் காலிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.

பட மூலாதாரம், Hockey India
போட்டியில் என்ன நடந்தது?
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய இந்த ஆட்டம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்றது.
உலகக் கோப்பை ஹாக்கியின் இந்த கிராஸ்ஓவர் ஆட்டத்தில் இரு அணிகளும் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 3-3 என சமநிலையில் இருந்தன.
இந்த ஆட்டத்தின் முதல் காலிறுதி கோல் ஏதுமின்றி இருந்தது.
ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் இந்தியாவுக்கு முதல் பெனால்டி கார்னர் கிடைத்தது ஆனால் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்கால் கோல் அடிக்க முடியவில்லை.
ஏழாவது நிமிடத்தில் நியூசிலாந்து கேப்டன் நிக் வுட்ஸ் மற்றும் 9-ஆவது நிமிடத்தில் இந்தியாவின் மன்பிரீத் சிங் கிரீன் அட்டை ஆகியோருக்கு கிரீன் அட்டை காட்டப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளும் தலா இரண்டு நிமிடங்களுக்கு 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து முன்னிலையில் இருந்த இந்தியா
இரண்டாவது காலிறுதியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, 17-ஆவது நிமிடத்தில் லலித் உபாத்யாய் பந்தை கோலுக்குள் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
21-ஆவது நிமிடத்தில் இந்தியாவுக்கு இரண்டு பெனால்டி கார்னர்கள் கிடைத்தாலும் இந்திய அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதன்பின், 23-ஆவது நிமிடத்தில் இந்திய அணி மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பை இழந்தது.
அடுத்த நிமிடமே பெனால்டி கார்னரில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அடித்த ஷாட்டை நியூசிலாந்து வீரர் ஒருவர் தடுத்தாலும், பந்து அவரை திசை திருப்பி சுக்ஜித் சிங்கை அடைந்தது, அவர் எந்த தவறும் செய்யாமல் கோல் அடித்தார்.
இதன் மூலம் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. ஆனால் இந்தியா இந்த முன்னிலையை நான்கு நிமிடங்கள் மட்டுமே தக்கவைக்க முடிந்தது. ஆட்டத்தின் 28-ஆவது நிமிடத்தில் நியூசிலாந்தின் சாம் லேன் தனது அணிக்காக முதல் கோலை அடித்தார்.
ஆட்டத்தின் பாதி நேரம் வரை இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது.

பட மூலாதாரம், Hockey India
மீண்டும் கோல் அடித்த இந்தியா
இதன்பின், இடைவேளை முடிந்து இரு அணிகளும் திரும்பியபோது, ஆட்டத்தின் 40-ஆவது நிமிடத்தில், வருண் குமார் பெனால்டி கார்னரை கோலாக மாற்றியதன் மூலம், இந்தியாவின் முன்னிலை 3-1 என அதிகரித்தது.
ஆனால் அதன் பிறகு போட்டியின் போக்கு படிப்படியாக மாறத் தொடங்கியது. நியூசிலாந்து அணி சார்பில் கேன் ரசல் 43-ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க, பின்னர் 49-ஆவது நிமிடத்தில் ஷான் ஃபின்லே ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.
இரு அணிகளுக்குமிடையிலான ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்து பின்னர் பெனால்டி ஷூட் அவுட்டில் இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தபோது சடன் டெத் முறையில் முடிவு தீர்மானிக்கப்பட்டது.
இந்த தோல்வியின் மூலம் உலக கோப்பை ஹாக்கியில் காலிறுதிக்கு செல்லும் இந்தியாவின் கனவு தகர்ந்தது.
வரும் 24-ஆம் தேதி உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து நடப்பு சாம்பியன் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.
Source: BBC.com