Press "Enter" to skip to content

அந்தமானில் ‘ராமசுவாமி தீவு’ – நரேந்திர மோதி அறிவித்த பரம்வீர் சக்ரா அதிகாரிகளில் ஒருவர் தமிழர்

நேதாஜியின் 126ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி, அந்தமான் மற்றும் நிகோபாரில் உள்ள 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டினார். இதில் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரனின் பெயரும் உள்ளது.

இந்த தீவுகள் எதிர்கால தலைமுறையினருக்கு உத்வேகமாக இருக்கும் என்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

“இன்று, நான் அந்தமான் மக்களிடம் உரையாற்றுவது எனக்கு பெருமையான தருணம். ஏனெனில் 1943இல் இந்த பூமியில்தான் சுபாஷ் சந்திர பாவனை முதல் முறையாக மூவர்ண தேசிய கொடியை ஏற்றினார்,” என்று பிரதமர் மோதி கூறினார்.

முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 21 தீவுகளுக்குப் பெயர் சூட்டும் பிரதமரின் முன்முயற்சியை பாராட்டினார். இந்த நடவடிக்கை நாட்டின் படை வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று அவர் கூறினார்.

பரம் வீர் சக்ரா என்றால் என்ன?

பரம் வீர் சக்ரா (PVC) என்பது இந்திய ராணுவத்தில் மிக உயரிய பதக்கமாகும். இது போர்க்காலத்தில் சிறந்த வீர, தீர செயல் புரிந்தவர்களை கெளரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இந்த விருது “எதிரியின் முன்னரங்கில் மிகவும் வெளிப்படையான துணிச்சலுடன் செயல்படுவோரின் தீரத்தை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டது?

இந்தியாவின் முதல் பரம் வீர் சக்ரா விருது பெற்ற மேஜர் சோம்நாத் சர்மாவின் பெயர், அந்தமானில் உள்ள மிகப்பெரிய தீவுக்கு பெயரிடப்பட்டது, 1950இல் வீர மரணத்தை தழுவிய பிறகு அவருக்கு பரம் வீர் சக்ரா கிடைத்தது.  

பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த 21 பரம் வீர் சக்ரா பெறுவோர் பட்டியலில் மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரனின் பெயரும் இடம்பெற்று உள்ளது. இவர் அப்போதைய பம்பாயில் பிறந்த தமிழர். 

மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரனை அவரது சகாக்கள் ‘பாரி’ என்று அழைக்கிறார்கள். 

இலங்கையில் ராணுவ நடவடிக்கை

மேஜர் ராமசுவாமி

பட மூலாதாரம், INDIAN ARMY

1972ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி  இந்திய ராணுவத்தின் 15ஆவது படையணியான மஹர் படைப்பிரிவில் செகண்ட் லெஃப்டினன்ட் ஆக குறுகிய கால ராணுவ கமிஷன் பணியில் சேர்ந்தார். 

1974ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி அவர் லெஃப்டினன்டாக பதவி உயர்வு பெற்ற பிறகு, அவருக்கு முழு பதவிக்கால ராணுவ பணி வழங்கப்பட்டது. 1979ஆம் ஆண்டு அக்டோபர் 12இல் அவர்  ராணுவ கேப்டனாகவும், 1984ஆம் ஆண்டு ஜூலை 31இல் அவர் ராணுவ மேஜர் ஆகவும் பதவி உயர்வு பெற்றார்.

மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன் 1987ஆம் ஆண்டு நவம்பர்  25ஆம் தேதி அன்று இரவு இலங்கையில் ஒரு தேடுதல் நடவடிக்கையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது குழுவினரை ஐந்து ஆயுதம் ஏந்திய போராளிகள் தாக்கினர். அப்போது ஆயுததாரிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அவர்களை பின்னால் இருந்து சுற்றி வளைத்து மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன் தாக்குதல் நடத்தினார்.

அதைத்தொடர்ந்து கைகலப்பு சண்டையின் போது, ஒரு போராளி அவரது மார்பில் சுட்டார். ஆனாலும் மனம் தளராத மேஜர் பரமேஸ்வரன் அந்த ஆயுததாரியின் துப்பாக்கியை பறித்து அவரை சுட்டுக் கொன்றார். பலத்த காயமடைந்த போதிலும், அவர் இறக்கும் வரை படையினருக்கு உத்தரவுகளை பிறப்பித்து தனது கட்டளையை அவர்கள் செயல்படுத்த ஊக்குவித்தார். 

கடைசியில் ஐந்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர், மூன்று துப்பாக்கிகள் மற்றும் இரண்டு ராக்கெட் லாஞ்சர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் அந்த பகுதியில் பதுங்கியிருந்த மேலும் சில ஆயுததாரிகள் அழிக்கப்பட்டனர்.

அவர் இறந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரியில் அணிவகுப்பு பயிற்சி சதுக்கத்துக்கும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராணுவ வீட்டுவசதி வாரியத்துக்கும் மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன் பெயர் சூட்டப்பட்டது. 

இந்தியாவின் பிற மாநிலங்களில் பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்கள் மரணம் அடைந்த போதும் அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய அங்கீகாரம், வசதிகளை அவர்கள் சார்ந்த மாநில அரசுகள் செய்து தருகின்றன.

இதேவேளை, மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றபோதும் அவர் இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் உயிர் நீத்தவர் என்பதால் அவரது குடும்பத்தாருக்கு போதிய அங்கீகாரம் தரப்படவில்லை என்று ராமசுவாமியுடன் பணியாற்றிய சக அதிகாரிகள் தங்களுடைய கவலையை வெளிப்படுத்தியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

அந்தமானில் பெயர் சூட்டப்பட்டுள்ள பிற பரம்வீர் சக்ரா அதிகாரிகள் விவரம்: மேஜர் சோம்நாத் சர்மா, சுபேதார் மற்றும் கெளரவ கேப்டன் (அப்போது லான்ஸ் நாயக்) கரம் சிங், 2வது லெஃப்டினன்ட் ராம ரகோபா ராணே, நாயக் ஜாதுநாத் சிங், நிறுவனம் ஹவில்தார் மேஜர் பிரு சிங், கேப்டன் ஜிஎஸ் சலாரியா, லெஃப்டினன்ட் கர்னல் (அப்போது மேஜர்), தன் சிங் தாபா, சுபேதார் ஜோகிந்தர் சிங், மேஜர் ஷைத்தான் சிங், லான்ஸ் நாயக் ஆல்பர்ட் எக்கா, மேஜர் ஹோஷியார் சிங், செகண்ட் லெஃப்டிணன்ட் அனன் கேத்ரபால், ஃபிளையிங் ஆஃபிசர் நிர்மல்ஜித் சிங் சேகான், நாயக் சுபேதார் பானா சிங், கேப்டன் விக்ரம் பத்ரா, லெஃப்டினன்ட் மனோஜ் பாண்டே, சுபேதார் மேஜர் சஞ்சய் குமார், சுபேதார் மேஜர் யோகேந்திர சிங் யாதவ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »