- எழுதியவர், ரெஹான் ஃபஸல்
- பதவி, பி.பி.சி. செய்தியாளர்
-
பட மூலாதாரம், Getty Images
முகலாய சுல்தான்களைப் பற்றிய ஒரு பாரசீகப் பழமொழி மிகவும் பிரபலமானது. அது ‘அரியணை அல்லது கல்லறை’ என்பது தான்.
முகலாய வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால், ஷாஜகான் தனது இரு சகோதரர்களான குஸ்ரோ மற்றும் ஷஹ்ரியார் ஆகியோரின் மரணத்திற்கு உத்தரவிட்டது மட்டுமல்லாமல், 1628 இல் அவர் அரியணை ஏறியபோது அவரது இரண்டு மருமகன்கள் மற்றும் உறவினர்களையும் கொன்றார்.
ஷாஜகானின் தந்தை ஜஹாங்கீர் கூட அவரது இளைய சகோதரர் தான்யாலின் மரணத்திற்கு காரணமானார்.
ஷாஜஹானின் காலத்துக்குப் பிறகும் இந்தப் பாரம்பரியம் தொடர்ந்தது. அவரது மகன் ஔரங்கசீப் தனது மூத்த சகோதரர் தாரா ஷிகோவின் தலையைத் துண்டித்து இந்தியாவின் சிம்மாசனத்தில் தனது அதிகாரத்தை நிறுவிய பிறகும் இந்த பாரம்பரியம் தொடர்ந்தது.
ஷாஜகானுக்கு மிகவும் பிடித்தமான மூத்த மகன் தாரா ஷிகோவின் சிறப்பம்சம் என்ன?
சமீபத்தில் வெளியான ‘தாரா ஷுகோ, தி மேன் ஹூ வுட் பி கிங்’ புத்தகத்தின் ஆசிரியர் அவிக் சந்தாவிடம் இந்தக் கேள்வியை வைத்தேன்.
அவரது பதில், “தாரா ஷிகோ மிகவும் பன்முகத்தன்மையும் கடினமான ஆளுமையும் கொண்டிருந்தார். ஒருபுறம், அவர் மிகவும் அன்பான மனிதர், சிந்தனையாளர், சிறந்த கவிஞர், அறிஞர், உயர்நிலை இறையியலாளர், சூஃபி மற்றும் நுண்கலை அறிவைக் கொண்ட இளவரசர், ஆனால் மற்றொரு பக்கம், அவருக்கு நிர்வாகம் மற்றும் இராணுவ விவகாரங்களில் ஆர்வம் இல்லை, அவர் இயல்பிலேயே பழைமைவாதியாகவும் மக்களைப் புரிந்துகொள்வதில் ஆற்றல் குறைந்தவராகவும் இருந்தார்.” என்பது தான்.

பட மூலாதாரம், DARA SHUKOH THE MAN WHO WOULD BE KING
ராணுவ செயல்பாடுகளிலிருந்து விலக்கி வைத்த ஷாஜஹான்
தாரா, ஷாஜகானுக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார், அவரைத் தன் கண் பார்வையில், தனது அவையிலேயே வைத்துக்கொண்டார். ராணுவப் பயிற்சிக்கு அனுப்பவும் அஞ்சினார்.
அவிக் சந்தா கூறுகிறார், “ஔரங்கசீப்பை இராணுவப் பயிற்சிக்கு அனுப்ப ஷாஜகானுக்கு எந்தத் தயக்கமும் இல்லை, அப்போது அவருக்குப் பதினாறு வயதுதான் இருந்திருக்க வேண்டும். அவர் தெற்கில் ஒரு பெரிய இராணுவப் பிரசாரத்தை வழிநடத்துகிறார். அதேபோல், முராத் பக்ஷ் குஜராத்திற்கும் ஷாஷுஜா வங்காளத்திற்கும் அனுப்பப்பட்டார்கள். ஆனால் அவருக்கு மிகவும் பிடித்த மகன் தாரா ஷாஜகானின் அரசவையில் இருக்கிறார். அவரைத் தன் கண்பார்வையிலிருந்து அகல விடவில்லை.
அதன் விளைவு, அவருக்குப் போர் அனுபவமோ அரசியல் அனுபவமோ இல்லாமல் போனது. ஆனால் ஷாஜஹானுக்கு தாராவை தனது வாரிசாக்க மிகவும் விருப்பம் இருந்தது. அரசவையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அவரை அரியணையில் அமர வைத்து அவருக்கு ‘ஷாஹே புலந்த் இக்பால்’ என்ற பட்டம் அளித்துத் தனக்குப் பிறகு இந்தியாவின் அரியணையில் தாரா அமரப்போவதாக அறிவித்தார்.
இளவரசராக இருந்த தாராவுக்கு அரச கருவூலத்தில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் மொத்தமாக வழங்கப்பட்டது. அவருக்கு தினமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

பட மூலாதாரம், DARA SHUKOH THE MAN WHO WOULD BE KING
யானை சண்டையில் ஔரங்கசீப்பின் வீரம்
1633 மே 28 அன்று மிகவும் வியத்தகு சம்பவம் நடந்தது, அதன் விளைவு பல ஆண்டுகளுக்குப் பிறகே வெளிப்படத் தொடங்கியது.
ஷாஜஹானுக்கு யானைகளின் சண்டையைப் பார்ப்பதில் மிகவும் விருப்பம் இருந்தது. சுதாகர் மற்றும் சூரத்-சுந்தர் ஆகிய இரண்டு யானைகளின் சண்டையைப் பார்க்க அவர் உப்பரிகையிலிருந்து இருந்து கீழே வந்தார்.
சண்டையில், சூரத் சுந்தர் யானை மைதானத்தை விட்டு ஓடத் தொடங்கியது, சுதாகர் கோபத்துடன் அதன் பின்னால் ஓடியது. இந்தக் காட்சியைப் பார்த்த மக்கள் பீதியில் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தனர்.
யானை ஔரங்கசீப்பை தாக்கியது. குதிரை சவாரி செய்து கொண்டிருந்த 14 வயதான ஔரங்கசீப், தனது குதிரை ஓடுவதைத் தடுத்து, யானை அருகில் வந்தவுடன், தனது ஈட்டியால் அதன் நெற்றியில் தாக்கினார்.
இதற்கிடையில் சில வீரர்கள் அங்கு ஓடி வந்து ஷாஜகானை சுற்றி வட்டமிட்டனர். யானையை பயமுறுத்துவதற்காக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன, ஆனால் யானை தும்பிக்கையால் ஔரங்கசீப்பின் குதிரையை வீழ்த்தியது.

பட மூலாதாரம், Getty Images
அது விழுவதற்கு முன், ஔரங்கசீப் அதிலிருந்து கீழே குதித்து, யானையுடன் சண்டையிடத் தனது வாளை எடுத்தார். அதே நேரம், இளவரசர் ஷூஜா யானையைப் பின்னால் இருந்து தாக்கினார்.
யானை அவரது குதிரையை பலமாகத் தாக்கியதில், ஷூஜாவும் குதிரையிலிருந்து கீழே விழுந்தார். அப்போதுதான் அங்கிருந்த ராஜா ஜஸ்வந்த் சிங்கும், பல அரச வீரர்களும் தங்கள் குதிரைகளில் அங்கு வந்தனர். சுற்றிலும் சத்தம் வரவே சுதாகர் அங்கிருந்து ஓடி விட்டது. பின்னர் ஔரங்கசீப் பேரரசர் முன் கொண்டுவரப்பட்டார். அவர், மகனை ஆரத் தழுவினார்.
பின்னர் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் ஔரங்கசீப்புக்கு பகதூர் என்ற பட்டம் வழங்கப்பட்டது என்று அவிக் சந்தா கூறுகிறார். ஔரங்கசீப்பின் எடைக்கு எடை தங்கம் அவருக்குப் பரிசளிக்கப்பட்டது. இந்த அத்தனை குழப்பத்தின்போதும், தாரா அங்கேயே தான் இருந்தார். ஆனால் அவர் யானைகளைக் கட்டுப்படுத்த முயலவில்லை.
ஒருவகையில், இந்தச் சம்பவம், பின்னர் இந்தியாவின் அரியணையை யார் பிடிப்பார்கள் என்பதற்கான ஆரம்ப அறிகுறியாக அமைந்தது.
மற்றொரு வரலாற்றாசிரியர் ராணா ஸஃப்வி, “தாரா சம்பவ இடத்திலிருந்து சிறிது தொலைவில் இருந்தார். அவர் விரும்பியிருந்தாலும் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை. அவர் வேண்டுமென்றே பின்வாங்கினார் என்று கூற முடியாது,” என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
முகலாய வரலாற்றிலேயே மிகவும் ஆடம்பரமான திருமணம்
நாதிரா பானோவுடனான தாரா ஷிகோவின் திருமணம் முகலாய வரலாற்றிலேயே மிகவும் ஆடம்பரமான திருமணம் என்று வர்ணிக்கப்படுகிறது.
அப்போது, இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்திருந்த பீட்டர் மாண்டி என்பவர் தனது கட்டுரை ஒன்றில் அந்தத் திருமணத்தில் 32 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் அதில் 16 லட்சம் ரூபாயை தாராவின் மூத்த சகோதரி ஜஹானாரா பேகம் கொடுத்ததாகவும் எழுதியுள்ளார்.
இந்தத் திருமணம் குறித்து விளக்கிய அவிக் சந்தா, “சக்கிரவர்த்திக்கு மட்டுமல்லாமல் மூத்த சகோதரி ஜஹானாரா உட்பட அனைவருக்கும் தாரா மிகவும் பிடித்தமானவர். அந்த நேரத்தில் அவரது தாயார் மும்தாஜ் மஹால் காலமாகியிருந்தார். ஜஹானாரா பேகம் பாட்ஷா பேகமாக மாறினார். அவரது மனைவி இறந்த பிறகு, ஷாஜகான் முதல்முறையாக ஒரு பொது விழாவில் தோன்றினார். திருமணம் பிப்ரவரி 1, 1633 அன்று நடந்தது, விருந்து விசேஷங்கள் பிப்ரவரி 8 வரை தொடர்ந்தது. இந்த நேரத்தில், இரவில் பல பட்டாசுகள் வெடிக்கப்பட்டன, விளக்கொளி பிரகாசித்தது. இரவும் பகலும் ஒன்று போலக் காட்சியளித்தன.
திருமண நாளில் மணமகள் அணியும் காலணியின் விலை எட்டு லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது,” என்றார்.

பட மூலாதாரம், DARA SHUKOH THE MAN WHO WOULD BE KING
கந்தஹார் மீது படையெடுத்த தாரா
தாரா ஷிகோவிற்கு ஒரு பலவீனமான போர் வீரன் மற்றும் திறமையற்ற நிர்வாகி என்ற பிம்பம்தான் இருந்தது. ஆனால் அவர் போரில் கலந்து கொள்ளவில்லை என்பதல்ல.
அவரே தனது சொந்த முயற்சியில் கந்தஹார் மீது படையெடுத்துப் போரிடச் சென்றார். ஆனால் அங்கு தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.
அவிக் சந்தா விளக்குகிறார், “கந்தஹாரிலிருந்து ஔரங்கசீப் தோல்வியுற்றவுடன், தாரா ஷிகோ இந்தப் போரை வழிநடத்த முன்வருகிறார், ஷாஜஹானும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்.
தாரா 70 ஆயிரம் பேர் கொண்ட இராணுவத்துடன் லாகூரை அடைகிறார். இதில் 110 முஸ்லீம்களும் 58 ராஜ்புத் போர்வீரர்களும் உள்ளனர். இந்தப் படையில், 230 யானைகள், 6000 மண் தோண்டுபவர்கள், மற்றும் பல போர் தந்திரிகள், மந்திரவாதிகள் மற்றும் அனைத்து வகையான மௌலானா மற்றும் சாதுக்களும் ஒன்றாகச் சென்றனர்.
தனது படைத் தலைவர்களின் ஆலோசனையைப் பெற்றிருக்க வேண்டிய தாரா, இந்த தந்திரிகளையும் மௌலானாக்களையும் கலந்தாலோசித்து தாக்கும் நாளைத் தீர்மானிக்கிறார். அவர்களுக்காக அதிக செலவும் செய்தார். மறுபுறம், பாரசீக வீரர்கள் மிகவும் விரிவான பாதுகாப்புத் திட்டத்தைச் செய்திருந்தனர். பல நாள் போருக்குப் பிறகும் தோல்வியைத் தழுவி, வெறுங்கையுடன் டெல்லிக்குத் திரும்ப வேண்டியதாயிற்று தாராவின் படைக்கு.”

பட மூலாதாரம், DARA SHUKOH THE MAN WHO WOULD BE KING
வாரிசுக்கான போட்டியில் ஔரங்கசீப்பிடம் தோல்வி
ஷாஜகானின் நோய்வாய்ப்பட்ட பிறகு, வாரிசு யார் என்பதில் மிகப்பெரிய போட்டி இருந்தது. அதில் ஔரங்கசீப் மிகத் தீவிரமாக இருந்தார்.
ஔரங்கசீப்பிடம் தாரா தோற்றதுதான் பாகிஸ்தான் பிரிவினைக்கு வித்திட்டது என்பது பாகிஸ்தான் நாடக ஆசிரியர் ஷாஹித் நதீமின் கூற்று. இந்தப் போரில் ஔரங்கசீப் பெரிய யானையின் மீது ஏறிக்கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் வில் அம்புகள் ஏந்திய 15000 வீரர்கள் நடந்து வந்தனர். அவரது வலது பக்கத்தில் அவரது மகன் சுல்தான் முகமது மற்றும் ஒன்றுவிட்ட சகோதரர் மீர் பாபா இருந்தனர்.
நஜபத் கானின் அணி சுல்தான் முகமதுவுக்கு அடுத்ததாக இருந்தது. இது தவிர இளவரசர் முராத் பக்ஷின் தலைமையில் மேலும் 15000 வீரர்கள் இருந்தனர். அவரும் உயரமான யானை மீது அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் அவரது இளைய மகன் அமர்ந்திருந்தான்.
அவிக் சந்தா கூறுகிறார், “ஆரம்பத்தில் இரு படைகளுக்கும் இடையே சமமான சண்டை இருந்தது. ஆனால், தாரா தரப்பு சற்று பலமாகவே இருந்தது. ஆனால் பின்னர் ஔரங்கசீப் உண்மையான தலைமைத்துவ திறனை வெளிப்படுத்தினார்.
அவர் தனது யானையின் நான்கு கால்களையும் சங்கிலியால் கட்டினார், அதனால் அவர் பின்வாங்கவும் முடியாது, முன்னோக்கியும் செல்ல முடியாது. பின்னர் அவர், ‘துணிச்சலானவர்களே! தைரியத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது,தோல்வியடைவதைவிட உயிர்த் தியாகம் செய்வது மேல்’ என்று கோஷமிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
யானையை விட்டு இறங்கி தவறு செய்த தாரா
அவிக் சந்தா மேலும் கூறுகிறார், “பின்னர் கலீலுல்லா கான் தாராவிடம் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள். ஆனால் நீங்கள் ஏன் உயரமான யானை மீது அமர்ந்திருக்கிறீர்கள்? ஏன் உங்களை ஆபத்தில் ஆழ்த்துகிறீர்கள்?
அம்பு அல்லது தோட்டா உங்கள் உடலைத் துளைத்தால், அதன் பிறகு என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். தயவு செய்து, யானையை விட்டு இறங்கிக் குதிரையில் ஏறிப் போரிடுங்கள் என்றான்.
தாரா அந்த அறிவுரையை ஏற்றுக்கொண்டார். தாராவின் வீரர்கள் யானையைப் பார்த்ததும் அவர் சவாரி செய்த அம்பாரி காலியாகிவிட்டதாக வதந்திகள் எங்கும் பரவ ஆரம்பித்தன. தாராவையும் எங்கும் காணவில்லை. தாரா பிடிபட்டார் அல்லது சண்டையில் இறந்துவிட்டார் என்று அவர்கள் நினைத்தார்கள். வீரர்கள் மிகவும் பதற்றமடைந்தனர், அவர்கள் பின்வாங்கத் தொடங்கினர், சிறிது நேரத்தில் ஔரங்கசீப்பின் வீரர்கள் தாராவின் வீரர்களைத் தாக்கத் தொடங்கினர். “
இத்தாலிய வரலாற்றாசிரியர் நிக்கோலாவ் மனுச்சி தனது ‘ஸ்தோரியா தோ மோகோர்’ புத்தகத்தில் இந்தப் போரைப் பற்றி மிக விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
அதில் அவர், “தாராவின் படையில் முறையாகப் பயிற்சி பெற்ற வீரர்கள் யாரும் இல்லை. அவர்களில் பலர் முடி திருத்துவோர் அல்லது கசாப்புக் கடைக்காரர்கள், அல்லது எளிய வேலையாட்கள். தாரா தனது குதிரையை புகை மேகங்கள் வழியாக இட்டுச் சென்றார். தைரியமாகத் தோன்ற முயன்று, வாத்தியம் முழங்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.
எதிரி இன்னும் சிறிது தூரத்தில் இருந்தாலும் அவர்கள் தரப்பிலிருந்து எந்தத் தாக்குதலும் இல்லை, துப்பாக்கிச் சூடும் இல்லை. தாரா தன் வீரர்களுடன் முன்னேறிச் சென்றார். ஔரங்கசீப்பின் படைகளை அவர்கள் எட்டியவுடன் அவர்கள் பீரங்கிகளாலும் ஒட்டகங்களின் மீதிருந்து சுழல் துப்பாக்கிகளாலும் அவர்களைத் தாக்கினர். இந்த திடீர் மற்றும் துல்லியமான தாக்குதலுக்கு தாராவும் அவரது ஆட்களும் தயாராக இல்லை.”
மனுச்சி, “ஔரங்கசீப்பின் இராணுவத்தின் குண்டுகள் தாராவின் வீரர்களின் தலைகளையும் உடற்பகுதிகளையும் துண்டாடத் தொடங்கியதால், ஔரங்கசீப்பின் பீரங்கிகளுக்கு பதிலளிக்கும் வகையில் தனது பீரங்கிகளையும் முன்னோக்கிக் கொண்டு வர வேண்டும் என்று தாரா கட்டளையிட்டார். முன்னேறும் அவசரத்தில் அவர்கள் தங்கள் பீரங்கிகளை விட்டுச் சென்று விட்டனர்” என்று மேலும் எழுதுகிறார்.

பட மூலாதாரம், DARA SHUKOH THE MAN WHO WOULD BE KING
திருடர்களைப் போல ஆக்ரா கோட்டையை அடைந்தனர்
பிரபல வரலாற்றாசிரியர் ஜதுநாத் சர்க்கார் ஔரங்கசீப்பின் வாழ்க்கை வரலாறு குறித்து எழுதியுள்ளார். அதில், இந்தப் போரில் தாராவின் தோல்வியைப் பற்றி மிக நெருக்கமான விளக்கத்தை அளித்துள்ளார்.
சர்க்கார் எழுதுகிறார், “குதிரையில் நான்கு அல்லது ஐந்து மைல்கள் ஓடிய பிறகு, தாரா ஷிகோ சிறிது ஓய்வெடுக்க ஒரு மரத்தடியில் அமர்ந்தார். ஔரங்கசீப்பின் வீரர்கள் அவரைப் பின்தொடரவில்லை என்றாலும், தாரா தனது தலையை பின்னால் திருப்பும்போதெல்லாம், ஔரங்கசீப்பின் வீரர்களின் பேரிகை முழக்கங்கள் அவர் காதுகளில் கேட்பது போலவே உணர்ந்தார். ஒரு கட்டத்தில் நெற்றியில் தோலை அறுப்பதால் தலையில் இருந்த கவசத்தை கழற்ற நினைத்தார். ஆனால் கைகள் மிகவும் சோர்வாக இருந்ததால் கைகளைத் தலை வரை கூடத் தூக்க முடியாமல் போனது.”
சர்க்கார் மேலும் எழுதுகிறார், “இறுதியாக இரவு ஒன்பது மணியளவில், தாரா சில குதிரை வீரர்களுடன் திருடர்களைப் போல ஆக்ரா கோட்டையின் பிரதான வாயிலை அடைந்தார். குதிரைகளும் மிகவும் சோர்வாக இருந்தன. வீரர்களின் கைகளில் தீப்பந்தங்கள் இல்லை. முழுவதும் அமைதி நிலவியது. நகரில் ஏதோ துக்கம் நிலவுவது போல இருந்தது. எதுவும் பேசாமல், தாரா குதிரையிலிருந்து இறங்கி தனது வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டார். முகலாய பேரரசுக்கான போட்டியில் தாரா ஷிகோ தோற்றுவிட்டார்.

பட மூலாதாரம், DARA SHUKOH THE MAN WHO WOULD BE KING
தந்திரமாக தாராவை பிடித்த மலிக் ஜீவன்
ஆக்ராவை விட்டு ஓடிய தாரா முதலில் டெல்லி சென்று அங்கிருந்து முதலில் பஞ்சாப் சென்று பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். அங்கு மலிக் ஜீவன் அவரை ஏமாற்றி ஔரங்கசீப்பின் தலைவர்களிடம் ஒப்படைத்தார். டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, பெரும் அவமானத்துடன் டெல்லி வீதிகளில் ஊர்வலமாக நடத்தி வரப்பட்டார்.
அவிக் சந்தா, “ரோமானிய தளபதிகள் தாங்கள் தோற்கடித்தவர்களை அழைத்து வந்து, கொலோசியத்தை சுற்றி வரச் செய்தாரோ, அதையே ஔரங்கசீப்பும் தாரா ஷிகோவுடன் செய்தார். தாரா ஆக்ரா மற்றும் டெல்லி மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தார். இவ்வாறு அவமானப்படுத்தியதன் மூலம், ஔரங்கசீப் மக்களின் அன்பினால் மட்டுமே இந்தியாவின் பேரரசராக வேண்டும் என்று கனவு காண முடியாது என்று சொல்ல விரும்பினார்,” என்று விளக்குகிறார்.

பட மூலாதாரம், Getty Images
குட்டி யானையில் அமர்த்தி தில்லி ஊர்வலம்
தாராவிற்கு நடந்த இந்த அவமானத்தை பிரெஞ்சு வரலாற்றாசிரியர் பிரான்சுவா பெர்னியர் தனது ‘முகலாய இந்தியாவில் பயணங்கள்’ என்ற புத்தகத்தில் மிகவும் விருப்பத்துடன் விவரித்துள்ளார்.
பெர்னியர் எழுதுகிறார், “தாரா ஒரு சிறிய யானையின் முதுகில், ஒரு மூடப்படாத பானையின் மீது அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் மற்றொரு யானையின் மீது அவரது 14 வயது மகன் சிஃபிர் ஷிகோ இருந்தார். அவருக்குப் பின்னால் ஔரங்கசீப்பின் அடிமை நாசர்பேக் உருவிய வாளுடன் இருந்தார்.”
தாரா தப்பியோட முயன்றாலோ அல்லது காப்பாற்றிக்கொள்ள முயன்றாலோ உடனடியாக தலை துண்டிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருந்தது. உலகின் பணக்கார அரச குடும்பத்தின் வாரிசு கிழிந்த உடையில் சொந்த நாட்டு மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டார். தலையில் நிறம் மாறிய தலைப்பாகை கட்டப்பட்டிருந்தது. மேலும் அவரது கழுத்தில் ஆபரணங்களோ, நகைகளோ இல்லை.”
பெர்னியர் மேலும் எழுதுகிறார், “தாராவின் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவரது கைகள் சுதந்திரமாக இருந்தன. ஆகஸ்ட் மாதத்தின் கொளுத்தும் வெயிலில், அவரது புகழ் பாடப்பட்ட டெல்லியின் தெருக்களில் இந்த உடையில் அணிவகுத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரம்கூட கண்களை உயர்த்தாமல், நசுங்கிய மரக்கிளை போல் அமர்ந்திருந்தார். அவரது நிலையைப் பார்த்து இருபுறமும் நின்றவர்களின் கண்களில் நீர் வழிந்தது.

பட மூலாதாரம், Getty Images
பிச்சைக்காரனுக்கு சால்வை
தாராவை இப்படி ஊர்வலம் வரச் செய்து கொண்டிருந்தபோது ஒரு பிச்சைக்காரனின் குரல் கேட்டது.
அவிக் சந்தா விளக்குகிறார், “ஓ தாரா! ஒரு காலத்தில் நீ இந்த மண்ணின் எஜமானனாக இருந்தாய். நீ இந்தச் சாலை வழியாகச் செல்லும்போது, நீ எனக்கு எதையாவது கொடுத்தாய். இன்று உன்னிடம் கொடுக்க ஒன்றுமில்லை என்று சத்தமாகச் சொன்னான்.
இதைக் கேட்ட தாரா தன் தோள்களில் இருந்த சால்வையை எடுத்துப் பிச்சைக்காரனை நோக்கி எறிந்தான். இந்தச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சக்கரவர்த்தி ஔரங்கசீப்பிடம் தெரிவித்தனர். உடனே அணிவகுப்பு முடிந்ததும், தாராவும் அவரது மகன் சிஃபிரும் கிஸ்ராபாத் சிறைக் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.”
சிரச் சேதம்
அதற்கடுத்த நாள் ஔரங்கசீப்பின் நீதிமன்றத்தில் தாரா ஷிகோவை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அவர் இஸ்லாத்தை எதிர்ப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டார். ஔரங்கசீப் 4000 குதிரை வீரர்களை டெல்லியை விட்டு வெளியேற உத்தரவிட்டார் மற்றும் தாரா குவாலியர் சிறைக்குக் கொண்டு செல்லப்படுவதாக வேண்டுமென்றே வதந்திகளைப் பரப்பினார். அதே மாலையில் ஔரங்கசீப், நாசர் பெய்கை அழைத்து தாரா ஷிகோவின் துண்டிக்கப்பட்ட தலையைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்.
அவிக் சந்தா விளக்குகிறார், “நாசர் பெய்க் மற்றும் அவரது வேலைக்காரர்கள் மக்பூலா, மஹ்ராம், மஷூர், ஃபராத் மற்றும் ஃபதே பகதூர் ஆகியோர் கத்திகளுடன் கிஸ்ராபாத் அரண்மனைக்கு செல்கிறார்கள். அங்கு தாராவும் அவரது மகனும் இரவு உணவிற்குத் தங்கள் கைகளால் சமைக்கிறார்கள். உணவில் விஷம் கலந்திருக்குமோ என்ற அச்சம் காரணமாகத் தாங்களே சமைக்கிறார்காள். நாசர் பெய்க் தனது மகன் சிபிரை அழைத்துச் செல்ல வந்ததாக அறிவிக்கிறார். சிஃபிர் அழத் தொடங்குகிறார், தாரா தனது மகனை மார்போடு அணைத்துக்கொண்டார். நாசர் பெய்க் மற்றும் அவரது கூட்டாளிகள் தாராவிடம் இருந்து சிபிரை வலுக்கட்டாயமாக விடுவித்து வேறு அறைக்கு அழைத்துச் சென்றனர்.”
அவிக் சந்தா மேலும் விளக்குகிறார், “தாரா ஏற்கெனவே தலையணையில் ஒரு சிறிய கத்தியை மறைத்து வைத்திருந்தார். அவர் கத்தியை எடுத்து நாசர் பெய்க்கின் கூட்டாளிகளில் ஒருவரைத் தனது முழு பலத்துடன் தாக்குகிறார். ஆனால் கொலையாளிகள் அவரது இரு கைகளையும் பிடித்தனர். மேலும் அவர் மண்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தலை தரையில் அழுத்தப்பட்டு, நாசர் பெய்க் தனது வாளால் தாராவின் தலையை வெட்டினார்.”

பட மூலாதாரம், Getty Images
வெட்டப்பட்ட தலை ஔரங்கசீப் முன்
தாரா ஷிகோவின் துண்டிக்கப்பட்ட தலை ஔரங்கசீப்பிற்கு காட்டப்படுகிறது. அப்போது அவர் தனது கோட்டை தோட்டத்தில் அமர்ந்துள்ளார். தலையைப் பார்த்ததும், தலையில் உள்ள இரத்தத்தைக் கழுவி, தன் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஔரங்கசீப் கட்டளையிடுகிறார்.
“இந்தத் தலை தனது சகோதரனுடையது என்பதை ஔரங்கசீப் தனது கண்களால் சரிபார்க்க உடனடியாக அங்கு தீப்பந்தங்களும் விளக்குகளும் கொண்டு வரப்படுகின்றன. ஔரங்கசீப் இதோடு நிற்கவில்லை. மறுநாள் அதாவது 31 ஆகஸ்ட் 1659 அன்று, அந்த தாராவின் துண்டிக்கப்பட்ட உடற்பகுதியை யானை மீது அமர்த்தி, அவர் முதன்முறையாக ஊர்வலம் சென்ற டெல்லியின் அதே தெருக்களில் மீண்டும் ஒருமுறை அணிவகுத்துச் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டார்.
இந்தக் காட்சியைக் கண்ட தில்லி மக்கள் துக்கம் தாங்காமல் அழுது புலம்புகின்றனர். பெண்கள் வீட்டிற்குள் சென்று அழத் தொடங்குகின்றனர். தாராவின் இந்த துண்டிக்கப்பட்ட உடல் ஹுமாயூனின் கல்லறையின் முற்றத்தில் புதைக்கப்பட்டது” என்று சந்தா குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஷாஜஹான் மனதை உடைத்த ஔரங்கசீப்
இதற்குப் பிறகு, ஆக்ரா கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த தனது தந்தை ஷாஜகானுக்கு ஔரங்கசீப் பரிசு ஒன்றை அனுப்பி வைத்தார்.
இத்தாலிய வரலாற்றாசிரியர் நிக்கோலாவ் மனுச்சி தனது ஸ்தோரியா தோ மோகோர் என்ற புத்தகத்தில், “ஷாஜகானுக்கு ஒரு கடிதம் அனுப்பும் பொறுப்பை ஆலம்கிர் தனது வேலைக்காரன் அத்பர் கானிடம் கொடுத்தார். அந்தக் கடிதத்தின் உறையில் உங்கள் மகன் ஔரங்கசீப் உங்கள் சேவையில் இருக்கிறார் என்று எழுதப்பட்டிருந்தது.
முதிய வயதில் தனது மகன் தன்னை நினைவு வைத்திருப்பது குறித்து மகிழ்ந்த ஷாஜஹான், வந்த பரிசுப் பொருளைப் பார்க்க விரும்புகிறார். அதன் மூடியை விலக்கிய ஷாஜகான் அலறிவிட்டார். அதில் அவரது மூத்த மகன் தாராவின் வெட்டுப்பட்ட தலை வைக்கப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், DARA SHUKOH THE MAN WHO WOULD BE KING
கொடுமையின் எல்லை
மனுச்சி மேலும் எழுதுகிறார், “இந்தக் காட்சியைப் பார்த்து, அங்கிருந்த பெண்கள் உரத்த குரலில் அழத் தொடங்கினர். அவர்கள் மார்பில் அடித்துக்கொண்டு ஆபரணங்களைக் கழற்றி எறிந்தனர். ஷாஜகான் கடுமையான அதிர்ச்சியில் இருந்தார். அவரை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.
“தாராவின் எஞ்சிய உடல் ஹுமாயூனின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில், தாராவின் தலை தாஜ்மஹாலின் முன்புறத்தில் புதைக்கப்பட்டது.
ஷாஜகானின் கண்கள் எப்போது அவரது மனைவியின் கல்லறைப் பக்கம் சென்றாலும் மூத்த மகனின் தலையும் அங்கேயே இருக்கும்.”
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com