Press "Enter" to skip to content

43 லட்சம் இந்தியர்கள் சாக வின்ஸ்டன் சர்ச்சில் காரணமானது எப்படி?

பட மூலாதாரம், ROLI BOOKS

பிரிட்டனில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 24 ஆம் தேதி முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அவர் இரண்டாம் உலக போரின் நாயகனாக நினைவு கூரப்படுகிறார்.

ஹிட்லர் போன்ற சக்தி வாய்ந்த சர்வாதிகாரியை எதிர்த்துப் போராடி தோற்கடித்த தலைவராக அவர் பார்க்கப்படுகிறார்.

அவர் பிரிட்டனில் ஒரு சக்திவாய்ந்த தலைவராக பார்க்கப்படுகிறார் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் பிரிட்டனின் காலனித்துவ வரலாற்றில் அவரது ஆட்சியுடன் தொடர்புடைய ஒரு இருண்ட அத்தியாயமும் உள்ளது. இது இந்தியாவுடன் நேரடியாக சம்மந்தப்பட்டது.

பிரிட்டனில் அவர் நாயகன் என்றால் இந்தியாவில் அவர் ஒரு பகைவன். 1943 இல் வங்காளத்தில் பட்டினி காரணமாக ஏற்பட்ட லட்சக்கணக்கான இறப்புகளுக்கு சர்ச்சில் தான் காரணம் என்று இந்திய மக்களும் நாட்டின் பெரும்பாலான வரலாற்றாசிரியர்களும் கருதுகின்றனர்.

இந்தப்பஞ்சத்தில் உணவு கிடைக்காமல் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்தனர் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. சர்ச்சிலின் கொள்கைகளால் இது நடந்தது என்றும் அவை இல்லாமல் இருந்திருந்தால் பெரும்பாலான மரணங்களை தவிர்த்திருக்கலாம் என்று
வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள்.

1943-ம் ஆண்டு வறட்சியால் பல லட்சம் பேர் உயிரிழந்ததற்கு வின்ஸ்டன் சர்ச்சில்தான் காரணம் என்று பல வரலாற்றாசிரியர்களுடன் கூடவே காங்கிரஸ் தலைவர் சசி தரூரும் கூறி வருகிறார்.
சசி தரூர் பிரிட்டனில் ஒருமுறை ஆற்றிய உரையில், ” சர்ச்சிலை ஆழமாகப் படிக்க வேண்டிய தேவை உள்ளது. ஹிட்லரின் கைகளைப் போலவே அவரது கைகளும் ரத்தம் தோய்ந்தவை. குறிப்பாக அவர் எடுத்த முடிவுகளால், 1943-44ல் வங்காளத்தில் பயங்கர உணவு நெருக்கடி ஏற்பட்டது. அதில் 43 லட்சம் பேர் உயிரிழந்தனர்,” என்று குறிப்பிட்டார்.

மனிதன் உருவாக்கிய துயரம்

மனிதன் உருவாக்கிய துயரம்

பட மூலாதாரம், BRITISH PATHE

“இவரைத்தான் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் தூதராக ஆங்கிலேயர்கள் தொடர்ந்து முன்வைக்கின்றனர். அவர் 20 ஆம் நூற்றாண்டின் மோசமான ஆட்சியாளர்களில் ஒருவர் என்று நான் கருதுகிறேன்,” என்று சசி தரூர் மேலும் கூறினார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியரான சுகதா பாவனை கடந்த 40 ஆண்டுகளாக வங்காளப் பஞ்சம் குறித்து எழுதி வருகிறார்.

வங்காளத்தில் ஏற்பட்ட பயங்கரமான பஞ்சம் ஒரு ‘அமைதியான படுகொலை’. இதற்கு பிரிட்டிஷ் அரசும் சர்ச்சிலும் பொறுப்பு என்று பிபிசி இந்தியிடம் அவர் தெரிவித்தார்.

“பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அமைப்பின் சுரண்டல் இறுதியில் பஞ்சத்திற்கு காரணமாக இருந்தது. ஆனால் இரண்டு காரணங்களுக்காக சர்ச்சிலை பொறுப்பாளியாக கருத வேண்டும். முதலில் அவர் அந்த நேரத்தில் பிரதமராக இருந்தார். இரண்டாவதாக அவரைச் சுற்றி பழமைவாத அணுகுமுறையுடன் கூடிய இனவெறி கொண்ட ஆலோசகர்கள் இருந்தனர். இந்தியர்கள் உண்மையில் முழுமையாக வளர்ச்சியடையவில்லை என்று அவர்கள் நினைத்தனர்.அதனால்தான் வங்காளத்தில் லட்சக்கணக்கான மக்கள் இறப்பது அவர்களுக்கு முக்கியமானதாகத்தோன்றவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

சர்ச்சில் வேண்டுமென்றே புறக்கணித்தாரா?

சர்ச்சிலுக்கு எல்லாம் தெரிந்திருந்தது என்கிறார் பேராசிரியர் சுகதா போஸ்.

“வங்காளத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி அவருக்கு எல்லாம் தெரியும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் நிர்வாகத்தினரும் தங்களின் அறிக்கைகளை அவருக்கு அனுப்பினார்கள். அந்த அறிக்கைகளில், வங்காளத்தின் துயரம் பற்றிய முழுமையான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சர்ச்சிலின் அணுகுமுறை இனவெறி கொண்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம்,”என்று அவர் குறிப்பிட்டார்.

வங்காள பஞ்சம்

பட மூலாதாரம், BRITISH PATHE

சோனியா பர்னேல், ’’முதல் லேடி, தி லைஃப் அண்ட் வொர்க்ஸ் ஆஃப் கிளமென்டைன் சர்ச்சில்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். சர்ச்சிலைப் பற்றி மிக அதிகமான வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. அவர் ஒரு கதாநாயகன் மற்றும் வில்லனும் கூட என்று அவர் எழுதியுள்ளார்.

சர்ச்சிலுக்கு பல பொறுப்புகள் இருந்தன. ஏனெனில் அந்த நேரத்தில் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. போர் அவசரநிலை மற்றும் தனது ஆட்சியின் மற்ற எல்லா பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் அவர் சமாளிக்க முயன்றார் என்று சோனியா பெர்னேல் குறிப்பிட்டுள்ளார்.

வங்காளத்தின் வறட்சியை சர்ச்சில் வேண்டுமென்றே புறக்கணிக்கவில்லை என்று பிரிட்டனின் எக்ஸெட்டர் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் டோய் பிபிசி உடனான உரையாடலில் தெரிவித்தார்.

“அவர் வேண்டுமென்றே இந்தியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ய விரும்பவில்லை. அவருக்கும் சொந்த நிர்பந்தங்கள் இருந்தன” என்று ரிச்சர்ட் கூறுகிறார்.

பிரிட்டனில் உள்ள வரலாற்றாசிரியர் யாஸ்மின் கான் சமீபத்தில் பிபிசிக்கு அளித்த பேட்டியில், ”போரின் போது இருந்த உலகளாவிய நிலைமைகள் பஞ்சத்தை ஏற்படுத்தியது. தானியப் பற்றாக்குறை மனிதனால் ஏற்படுத்தப்பட்டது,” என்று கூறினார்.

“தெற்காசியர்களை விட வெள்ளையர்களுக்கு முன்னுரிமை அளித்ததற்காக நாம் நிச்சயமாக அவர்களை குறை கூறலாம். இது தெளிவாக பாரபட்சமான அணுகுமுறை,”என்றார் அவர்.

ஒரு வேதனையான அத்தியாயம்

கிராமங்களில் உணவு தானியங்கள் கிடைக்காததால், மக்கள் உணவு தேடி நகரங்களுக்குச் சென்று அங்கு பட்டினியால் இறந்தனர். கல்கத்தாவின் தெருக்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான இறந்த உடல்களை அகற்ற வேண்டியிருந்தது என்று பல எழுத்தாளர்களும், வரலாற்றாசிரியர்களும் பதிவு செய்துள்ளனர்.

கிறிஸ்டோபர் பெய்லி மற்றும் டிம் ஹார்பர் ஆகியோர் தங்களது ‘Forgotten Armies Fall of British Asia 1941-1945’ என்ற புத்தகத்தில், “அக்டோபர் நடுப்பகுதியில் கல்கத்தாவில் இறப்பு விகிதம் மாதத்திற்கு 2000 ஆக இருந்தது. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க படைவீரர்கள் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வெளியே செல்லும்போது சாலையில் பட்டினியால் இறந்தவர்களின் சடலங்களை கழுகுகளும் காகங்களும் தின்று கொண்டிருப்பதை கண்டனர்,”என்று எழுதியுள்ளார்.

இந்தத்தகவல்கள் அனைத்தும் சர்ச்சிலையும் சென்றடைந்தன. ஆனால் அது அவர் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தியது போலத்தெரியவில்லை.

வங்காள பஞ்சம்

பட மூலாதாரம், CHITTAPROSAD/DAG ARCHIVES

முதியவர் சித்ரகுமார் ஷாம்தோ 1943 இல் வயதில் இளையவராக இருந்தார். ஆனால் அவர் அந்த சோகமான காட்சிகளை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்.

“நானும் எனது குடும்பமும் பல நாட்கள் பட்டினி கிடந்தோம். மக்கள் எலும்புக்கூடுகளாக மாறுவதைப் பார்க்க பயமாக இருந்தது. நீங்கள் ஒருவரைப்பார்க்கும்போது அவர் மனிதரா அல்லது பேயா என்று சொல்வது கடினமாக இருந்தது. நான் ஒரு கால்வாயின் அருகில் சென்றேன். அங்கு நிறைய உடல்கள் கிடந்தன. நாய்களும் கழுகுகளும் அவற்றை சாப்பிட்டுக்கொண்டிருந்தன. பிரிட்டிஷ் அரசு எங்களை பட்டினி போடுக்கொன்றது.”என்று அவர் கூறினார்.

பெங்காலி கலைஞரும் பத்திரிகையாளருமான சித்தபிரசாத் பட்டாச்சார்யா கிராமம் கிராமமாகச் சென்று பேரழிவைப் பற்றி செய்திகள் சேகரித்தார். அவர் தனது செய்திகளை தொகுத்து ஒரு இதழை வெளியிட்டார். அதற்கு அவர் ‘ஹங்ரி பெங்கால்’ என்று பெயரிட்டார். அவர் 1943 ஆம் ஆண்டு வங்காளப் பஞ்சத்தின் போது நிலவிய கடுமையான வறுமையின் படங்களை வரைந்தார். தனது செய்தி அறிக்கைகளில் நிலைமையின் தீவிரத்தைக்காட்ட ஓவியங்களை பயன்படுத்தினார்.

ஆனால் பிரிட்டிஷ் அரசு அவரது புத்தகத்தின் சுமார் ஐயாயிரம் பிரதிகளை அழித்துவிட்டது. அப்போது பிரிட்டிஷ் அரசு வறட்சி குறித்து செய்தி வெளிடுவதை தடைசெய்தது என்று பேராசிரியர் சுகதா பாவனை கூறுகிறார்.

இத்தகைய சூழ்நிலையில் சித்தபிரசாத் பட்டாச்சார்யாவின் பணி சாகசமானது. ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையாளரும் அதே அளவுக்கு தைரியமானவராக இருந்தார் என்று பேராசிரியர் சுகதா பாவனை கூறுகிறார்.

பிரிட்டிஷ் தணிக்கை

“மார்ச் 1943 முதல் அக்டோபர் 1943 வரை யாரும் பஞ்சத்தைப் பற்றி செய்தி வெளியிட அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தணிக்கையை மீறி முதல் முறையாக பஞ்சம் குறித்த செய்தியை வெளியிட்ட ஸ்டேட்ஸ்மேன் செய்தித்தாளின் ஆசிரியர் இயன் ஸ்டீபன்ஸை பாராட்டியே ஆக வேண்டும். பின்னர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை வெளியிடத் தொடஙகினார். இதற்குப் பிறகு, பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஆறு மாதங்கள் தாமதமாக, வங்காளம் பேரழிவு தரும் பஞ்சத்தின் பிடியில் இருப்பதை ஏற்றுக்கொண்டது,” என்று சுகதா பாவனை தெரிவித்தார்.

சர்ச்சில் அதைப் பற்றி முழுமையாக அறிந்திருந்தார். ஆனால் 1943 ஆகஸ்டில் அவர் வங்காளத்திற்கு நிவாரணப் பொருட்களை வழங்க மறுத்துவிட்டார்.

அப்போதைய வைஸ்ராய் ஆர்க்கிபால்ட் வேவலும் வங்காளத்தில் ஏற்பட்ட வறட்சி குறித்து சர்ச்சிலுக்கு தெரிவித்தார். பேரழிவைப் பற்றி அவர் தனது நாட்குறிப்பில், “வங்காளப் பஞ்சம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவுகளில் ஒன்றாகும். இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு மத்தியில் நமது நற்பெயரை அது கெடுத்தது,”என்று எழுதியுள்ளார்.

வின்ஸ்டன் சர்ச்சில்

பட மூலாதாரம், BRITISH PATHE

காந்தி ஏன் இன்னும் இறக்கவில்லை?

பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அதிக தானியங்களை அனுப்புமாறு வைஸ்ராய் வேவல் கோரியபோது சர்ச்சில் வேண்டுமென்றே பட்டினியால் வாடும் வங்காளத்திலிருந்து தானியத்தை போரில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் வீரர்களுக்கு அனுப்பு முடிவு செய்தார்.

இந்தியாவின் சொந்த உபரி தானியங்கள் சிலோனுக்கு (இலங்கை) அனுப்பப்பட்டது. சர்ச்சில் அரசு ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த கோதுமை நிரம்பிய கப்பல்களை இந்திய துறைமுகங்களில் நிறுத்தாமல் மத்திய கிழக்கு நோக்கி அனுப்பியது. அமெரிக்காவும் கனடாவும் இந்தியாவிற்கு உணவு உதவிகளை அனுப்ப முன்வந்தன. ஆனால் அதுவும் சர்ச்சிலால் நிராகரிக்கப்பட்டது.

பஞ்சம் பற்றிய வைஸ்ராயின் மிகவும் அத்தியாவசியமான தந்திக்கு சர்ச்சில் பதிலளிக்கவில்லை என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவரது முடிவின் விளைவாக ஏற்பட்ட இறப்புகள் குறித்து அதிகாரிகள் அவரது கவனத்தை ஈர்த்தபோது, எரிச்சல் அடைந்த அவர் ஒரு தந்தியை அனுப்பினார். அதில் அவர் “ஏன் காந்தி இன்னும் இறக்கவில்லை?” என்று கேட்டிருந்தார்.

பிரிட்டனின் நாயகன் சர்ச்சில் ஒரு சர்ச்சைக்குரிய நபராக இருந்தார் என்பதும், 1943ல் வங்காளத்தில் பயங்கர பஞ்சத்தால் ஏற்பட்ட லட்சக்கணக்கான இறப்புகளுக்கு பொறுப்பாளியாக கருதப்படுவார் என்பதும் உண்மை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »