Press "Enter" to skip to content

ஆஸ்கருக்கு சென்ற `எலிபெண்ட் விஸ்பரர்ஸ்`  : பொம்மன், பெள்ளி இப்போது என்ன செய்கிறார்கள்?

பட மூலாதாரம், KartikiGonsalves/Instagram

தமிழகத்தின் முதுமலை பகுதியில்  யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியிருக்கிறது. `எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் கதை, இன்று உலகின் அத்தனை ஓரங்களிலும்  பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முனுமுனுக்க வைத்திருக்கிறது.  

காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும், அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும் `எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்தி கொன்சால்வ்ஸ்.

தாயை பிரிந்து, உடம்பில் பல காயங்களுடன், வால் வெட்டுபட்டு,  இறக்கும் தருவாயில் ஒரு குட்டி யானை காட்டிற்குள் கண்டெடுக்கப்படுகிறது. காப்பகத்தில் இருந்த பலரும் இனி அதை காப்பாற்றி வளர்த்தெடுப்பது கடினமான காரியம் என ஒதுங்கி கொள்ள பொம்மன் மட்டுமே அதனை என்னால் காப்பாற்ற முடியும் என்று கூறி தன்னுடன் அழைத்து வருகிறார்.

யானையை வளர்ப்பதற்கு அவருக்கு துணையாக பெள்ளியும் வருகிறார். அந்த யானைகுட்டிக்கு ரகு என பெயர் சூட்டி தனது குழந்தையை போலவே பராமரித்து வந்த அவர், தான் சொன்னது போலவே அந்த குட்டியை இயல்பான உடல்நிலைக்கு தேற்றிவிட்டார். அதன்பின் அவருக்கு துணையாக வந்த பெள்ளிக்கு அம்மு என்ற பெண் குட்டி யானையை பராமரிக்க கொடுக்கிறார்கள். ஒரே கிராமத்தைச் சேர்ந்த பொம்மனும், பெள்ளியும் 50 வயதை கடந்தவர்கள். யானை பராமரிப்பில் ஒன்றாக ஈடுபட்டு வந்த பொம்மனும், பெள்ளியும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

பொம்மன், பெள்ளி, ரகு, அம்மு என நால்வரும் ஒரு குடும்பமாக மாறுகிறார்கள். இந்த தம்பதியினர் யானைகளின் மீது கொண்டிருக்கும் இத்தகைய நிபந்தனையற்ற அன்புதான் `எலிபெண்ட் விஸ்பரர்ஸ்` ஆவணப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. ஆஸ்கருக்கான இறுதி பரிந்துரை பட்டியலில் இப்போது இந்த ஆவணப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.


ஆனால் இத்தனை பெரிய வரவேற்பு தங்களின் கதைக்கு கிடைக்குமென பொம்மன், பெள்ளி சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.  எப்போதும்போல் எந்தவொரு பரபரப்பும் இல்லாமல்  முதுமலையில் தங்களது அன்றாட வேலையை பார்த்து வருகின்றனர்.

பொம்மன், பெள்ளியிடம் பேசுவதற்காக  பிபிசி தமிழ் அவர்களை தொடர்புகொண்டபோது  பொம்மன் யானையுடன் காட்டிற்குள் சென்று கொண்டிருந்தார். `நேரம் ஆகிருச்சு சீக்கிரம் கிளம்பு` என்று பெள்ளியின் குரல் மட்டும் பிண்ணனியில் ஒலித்தது. யானையுடன் சென்றுக்கொண்டே பொம்மன் நம்மிடம் பேச துவங்கினார். ஆனால் இப்போது அவருடன் இருக்கும் யானையின் பெயர் ரகு அல்ல கிருஷ்ணா!

யானை, ஆவணப்படம், முதுமலை

பட மூலாதாரம், KartikiGonsalves/Instagram

`இந்த ஆவணப்படத்தை எடுத்த கார்த்திகி என்னும் பெண் எனக்கு நீண்டநாட்களாக தெரிந்தவர்தான். அவரும் அவருடைய நண்பர்களும் அடிக்கடி முதுமலை வருவார்கள். அப்படி ஒருமுறை ரகுவை நான் எடுத்து வளர்க்க துவங்கிய காலத்தில் அவர்கள் வந்திருந்தார்கள். அப்போதுதான் இந்த குட்டியானையுடன் சேர்த்து உங்களை ஒரு படம் எடுக்கிறோம் என கூறி இந்த ஆவணப்படத்தின் படபிடிப்பை அவர்கள் ஆரம்பித்தனர்` என்று பிபிசியிடம் பேச துவங்குகிறார் பொம்மன்.


` இரண்டு ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து  இந்த படப்பிடிப்பை மேற்கொண்டனர். ஒவ்வொரு முறை வரும்போது வெவ்வேறு எண்ணிக்கையிலான  ஆட்கள் வருவார்கள். அவ்வபோது முதுமலைக்கு வரும் அவர்கள் காலையில் சிறுது நேரம், மாலையில் சிறுது நேரம் என படப்பிடிப்பை தொடர்ந்து வந்தனர். அவர்கள் பெரும்பாலும் மும்பையிலிருந்து வந்தவர்கள் என நினைக்கிறேன்` என்றும்  அவர் குறிப்பிடுகிறார்.

சர்வதேச அளவில் முக்கியமான விருதாக கருதப்படும் ஆஸ்கருக்கு தற்போது இந்த ஆவணப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்தான கேள்வியை பிபிசி தமிழ் அவரிடம் முன்வைத்த போது, `அவர்கள் எங்களை படம் பிடித்து வந்த நேரத்தில்  நாங்கள் அதனை மிகவும் சாதாரணமாகத்தான் நினைத்தோம். இது இவ்வளவு பெரிய அளவில் பேசப்படும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது எங்களை பார்ப்பதற்கு எங்கள் வீட்டிற்கு நிறைய பேர் வருகிறார்கள், எங்களிடம் பேட்டி காண்கிறார்கள். காட்டிற்குள் நாங்கள் எப்போதும் போல எங்களது வேலையை பார்த்துவந்தோம். எங்களை இன்று உலகம் முழுக்க பார்க்க செய்திருக்கிறார்கள். இது அனைத்திற்கும் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திகிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்` என்று நெகிழ்கிறார் பொம்மன். 

யானை, ஆவணப்படம், முதுமலை

பட மூலாதாரம், KartikiGonsalves/Instagram

யானை பராமரிப்பில் தனக்கு இருக்கும் அனுபவத்தையும் பிபிசியிடம் பகிர்ந்துகொள்ள துவங்கிய அவர், ` எனது  அப்பா, தாத்தா என என்னுடைய முன்னோர்கள் அனைவரும் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வந்தவர்கள்தான். என் அப்பாவின் இறப்புக்கு பிறகு எனக்கு போஸ்டிங் வழங்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டிலிருந்து நான் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். யானைகள் தான் என்னுடைய உலகம்` என்று கூறுகிறார். 

அவர் தொடர்ந்து பேசும்போது, ` யானைகளை நம்முடைய சொந்த குழந்தைகள் போல் பார்த்துகொள்ள வேண்டும். நம்முடைய குழந்தைகள் கூட ஒருசில நேரம் நாம் சொல்வதை கேட்டுகொள்ளும். ஆனால் யானைகுட்டிகள் அப்படியல்ல. அதிகமாக குறும்பு செய்ய கூடியவை அவை. ஆனால் அது எவ்வளவு சேட்டைகள் செய்தாலும் அதை நாம் பொறுமையாக கையாள வேண்டும். இல்லையென்றால் அது நம்மிடம் கோபித்துகொள்ளும். அதேப்போல் காயமடைந்து வரும் குட்டியானைகளை அதிக கவனத்துடன் கையாள வேண்டும். அப்படி காப்பகத்தில் மற்றவர்களிடம் கொடுக்கபட்ட சில குட்டியானைகள் உயிர்பிழைக்கவில்லை. ஆனால் அதனை சரியாக கையாள்வேன் என்பதால் என்னிடம் காயமடைந்த குட்டி யானைகளை நம்பி ஒப்படைப்பார்கள். 

அப்படித்தான் ரகுவும் என்னிடம் வந்தது. ஆனால் ரகுவை வளர்ப்பதற்கு எனக்கு  இன்னொருவருடைய உதவியும் தேவைப்பட்டது. அதற்காக நான் பலரிடம் பேசிபார்த்தேன். ஆனால் இந்த யானை பிழைக்காது இது உனக்கு தேவையில்லாத வேலை என அனைவரும் பின்வாங்கிவிட்டனர். அப்போதுதான் பெள்ளி என்னுடன் நம்பிக்கையாக வந்தார்.

ரகுவை நாங்கள் நல்லபடியாக வளர்த்து கொண்டு வந்தபின், பெள்ளியிடம் அதிகாரிகள் அம்மு என்ற குட்டியானையை ஒப்படைத்தனர். யானைகளை வளர்ப்பதற்காகத்தான் நானும், பெள்ளியும் ஒன்றாக இயங்க  துவங்கினோம். அதன்பின் எங்களுக்குள் ஏற்பட்ட புரிதல் காரணமாக திருமணம் செய்துகொண்டோம். எங்களை சேர்த்து வைத்தது கூட இந்த யானைகள்தான் ` என்று மகிழ்கிறார் பொம்மன்.

யானை, ஆவணப்படம், முதுமலை

பட மூலாதாரம், KartikiGonsalves/Instagram

இவை அனைத்திற்கும் பிறகுதான் பொம்மனுக்கு பெள்ளிக்கும் சோதனை காலம் ஏற்பட்டது. ரகு வளர்ந்த பின் அதிகாரிகள் அதை மற்றொருவரிடம் ஒப்படைத்துவிட்டனர். அது `எலிபெண்ட் விஸ்பரர்ஸ்` ஆவணப்படத்திலேயே பதிவு  செய்யப்பட்டிருக்கும்.  அதேப்போல் தற்போது பெள்ளியிடம் இருந்த அம்மு என்ற யானையை பொம்மி என பெயர் மாற்றம் செய்து வேறொருவருக்கு வனத்துறை அதிகாரிகள் கொடுத்துவிட்டனர்.

இதுகுறித்து பேசிய பொம்மன், `கிட்டதட்ட 10 ஆண்டுகளாக நாங்கள் ரகுவை வளர்த்து வந்தோம். ஆனால் இப்போது அது எங்களிடம் இல்லை. அதேப்போல் அம்மு சென்றதிலிருந்து பெள்ளி மிகவும் வருத்தமாக இருக்கிறார். நாங்கள் ஒரு குடும்பமாக இருந்தோம். ஆனால் இப்போது எல்லாம் வெறுமையாக மாறிவிட்டது. இப்போது என்னிடம் கிருஷ்ணா என்ற யானையை கொடுத்துள்ளனர். அது வயதில் மூத்த யானை. என்னுடைய வயதிற்கு அதனை வளர்ப்பது சற்று கடினமாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் கூட அது என்னை தாக்கிவிட்டது. உடலில் இன்னும் அந்த வலி இருக்கிறது` என்கிறார் அவர். 


கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பொம்மன் இதுவரை “ யானைகளை வளர்த்திருக்கிறார். இன்று தங்களை பற்றி எடுக்கப்பட்டிருக்கும் ஆவணப்படம் சர்வதேச அரங்கம் வரை சென்றிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் ரகுவும், அம்முவும் தங்களிடமிருந்து  பிரிக்கப்பட்டிருப்பது பொம்மனையும், பெள்ளியையும் வெகுவாக பாதித்திருக்கிறது. 


`எங்களுடைய வாழ்விற்கும், நாங்கள் உன்னும் உணவிற்கும், எங்களுடைய மகிழ்ச்சிக்கும் யானைகளே காரணம். ஏனெனில் யானைகள்தான் எங்களுடைய  தெய்வங்கள் ` என தீர்க்கமாக முடிக்கிறார் பொம்மன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »