Press "Enter" to skip to content

“உச்சத்தில் பொருளாதார நெருக்கடி, வேலை வாய்ப்பின்மை” – இந்திய அரசின் வரவு செலவுத் திட்டம் சவால்கள்

பட மூலாதாரம், Getty Images

வரவிருக்கும் வரவு செலவுத் திட்டம் 2024 பொதுத்தேர்தலுக்கு முந்தைய நரேந்திர மோதி அரசின் முழு வரவு செலவுத் திட்டம்டாக இருந்தாலும் அரசின் வருவாய் மற்றும் செலவினங்களைக் கருத்தில் கொண்டு, அது எளிய மக்களுக்கான வரவு செலவுத் திட்டம்டாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான இந்தியாவின் மீட்சியில் இருக்கும் சீரற்ற தன்மை காரணமாக சமூகத்தில் அதிகம் பாதிக்கப்படக் கூடிய பிரிவினருக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இரண்டாண்டு பெருந்தொற்றுக்குப் பிறகு உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் மந்தநிலை விளிம்பில் உள்ள நிலையில், 2023ஆம் ஆண்டு ஒப்பீட்டளவில் இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது.

ஜிடிபி இலக்கில் சற்று குறைவு ஏற்பட்டிருந்தாலும், உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 6-6.5 சதவிகிதமாக இருக்க வாய்ப்புள்ளது.

கூடுதலாக, பணவீக்கம் குறைகிறது. எரிசக்தி விலைகள் குறைகின்றன. நாட்டில் தொடர்ந்து வலுவான முதலீடுகள் கிடைப்பதோடு, நுகர்வோர்கள் செலவினமும் அதிகரித்து வருகிறது. மேலும், ‘சீனா-பிளஸ்-ஒன்’ உலகளாவிய உற்பத்தி கொள்கை மூலம் இந்தியாவும் பயனடைகிறது.

ஆனால், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டம் ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தின் விரிவாக்கத்தை மேலும் பரந்ததாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீரற்ற மீட்சி

டாவோஸில் சமீபத்தில் முடிவடைந்த உலகப் பொருளாதார மன்றக் கூட்டங்களில் பேசிய சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத், சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் நிதிக் கொள்கையைப் பயன்படுத்தும்படி அரசியல்வாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஜிடிபி வளர்ச்சி குறித்த கணிப்பு சிறப்பாக இருந்தாலும் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. அதேபோல, சமத்துவமின்மையும் மோசமடைந்துள்ளது.

இந்தியாவின் 40 சதவிகித சொத்துகள் 1 சதவிகிதம் பேருக்குச் சொந்தமானது என்பது பிரிட்டிஷ் தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபாமின் சமீபத்திய கண்டுபிடிப்பில் தெரியவந்தது. ஆனால், இந்தக் கணக்கீட்டு முறைகளில் குறைபாடுகள் இருப்பதாகப் பலர் சுட்டிக் காட்டினர்.

ஆனால் மலிவு விலை வீடுகளுக்கான தேவை குறைந்து வருவது, இரு சக்கர வாகனங்களைவிட சொகுசு கார்களுக்கான தேவை அதிகரித்திருப்பது போன்ற பிற தரவுகள், பெருந்தொற்றுக்குப் பிந்தைய கே-வடிவ பொருளாதார மீட்சியைக் காட்டுகின்றன.

இதில், பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆவர். ஏழைகள் மேலும் ஏழையாவர். நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் இதன் அறிகுறிகளைத் தெளிவாகக் காண முடிகிறது.

தாமதமாகும் ஊதியம்

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான அரசியல் மோதலில் சிக்கித் தவிக்கும் மாநிலமான மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குப் பிபிசி பயணம் செய்தது.

அரசின் கிராமப்புற வேலைகள் உத்தரவாத திட்டத்தின் கீழ் ரூ.2,000 கோடி அளவிலான ஊதியம், ஓர் ஆண்டுக்கும் மேலாகத் தாமதம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.

சுந்தரா மற்றும் ஆதித்யா சர்தார் தம்பதியினர் இந்த வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் குளம் தோண்டும் பணியில் 4 மாதங்கள் ஈடுபட்டனர். தற்போது ஊதிய தாமதம் காரணமாக தங்கள் உணவுத் தேவையைச் சமாளிக்க கடன் வாங்கியுள்ளதாகவும் தங்கள் குழந்தையை பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டதாகவும் பிபிசியிடம் தெரிவித்தனர்.

அனைத்து பழங்குடி குக்கிராமங்களிலும் இதே மாதிரியான துயரக் கதைகளைக் கேட்க முடிந்தது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டம்

பட மூலாதாரம், Getty Images

“மேற்கு வங்கத்தில் ஓர் ஆண்டுக்கும் மேலாக நிறுத்தி வைத்துள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் வேலைவாய்ப்பின்மையில் உச்சநிலை நிலவும் இந்த நேரத்தில் இது மனிதத்தன்மையற்ற செயல். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியது போல இது மக்களை கட்டாய உழைப்பில் ஈடுபடுத்திய செயல்“ என்கிறார் சமூக செயற்பாட்டாளர் நிகில் டே.

இந்த ஊதிய தாமதம் என்பது மேற்குவங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்ட பணியாளர்களுக்கு மத்திய அரசு செலுத்த வேண்டிய தொகையாக ரூ. 4 ஆயிரம் கோடிவரை நிலுவையில் உள்ளது.

செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சி சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மீது இருப்பதாக பொருளாதார வல்லுனர் ஜீன் ட்ரெஸ் குற்றம் சாட்டுகிறார்.

“ஒரு காலத்தில் இதற்கான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவிகிதமாக உயர்ந்தது. தற்போது அரை சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இந்தத் திட்டத்தில் நிலவும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுடன், இந்த வரவு செலவுத் திட்டத்தில் மீண்டும் அதை ஒரு சதவிகிதமாக அதிகரித்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்கிறார் டிரேஸ்.

கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று கால அவசர உதவித் திட்டங்களை நீட்டிக்கவும், உலகளாவிய புவிசார் அரசியல் தாக்கத்தை எதிர்கொள்ளவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், கிராமப்புற வேலை திட்டத்திற்கான செலவுகள், உணவு மற்றும் உர மானியங்களுக்கு குறைவான நிதியே வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டன.

சமநிலைப்படுத்தும் செயல்

ஆனால் மோதி அரசின் ஆபத்தான நிதி நிலையைக் கருத்தில் கொண்டு, ஒருபுறம் ஏழைகளின் சமூகப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்கும் வளர்ச்சிக்கு ஆதரவான செலவினங்களை அதிகரிப்பதற்கும் மறுபுறம் வரவு செலவுத் திட்டம் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் இடையே செய்ய வேண்டிய கடினமான சமநிலைப்படுத்தும் பணி நிதியமைச்சருக்கு உள்ளது.

இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் நிதிப் பற்றாக்குறை கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக 4-4.5 சதவிகிதம் இருந்த நிலையில், தற்போது 6.4 சதவிகிதமாக உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் அரசாங்கத்தின் மொத்தக் கடன் இரண்டு மடங்காகியுள்ளதால், உணவு மற்றும் உரங்கள் மீதான மானியங்கள் நான்கில் ஒரு பங்காக குறைக்கப்படலாம் என்று ராய்ட்டர்ஸின் பொருளாதார நிபுணர்களின் கருத்துக்கணிப்பு கண்டறிந்துள்ளது. கொரோனா கால இலவச உணவு திட்டத்தையும் அரசாங்கம் ஏற்கெனவே நிறுத்திவிட்டது.

அதிகரித்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, அதாவது ஏற்றுமதியில் இருந்து அரசாங்கம் ஈட்டும் வருவாய்க்கும் இறக்குமதியில் செலவழிக்கும் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசம், மற்றொரு சவாலாக உள்ளது.

“உலகளாவிய முதலீட்டாளர்களின் உணர்வு மற்றும் பிராந்திய வர்த்தக முறை ஆகியவற்றால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இவை தற்போது நல்ல நிலையில் இல்லை” என DBS குழும ஆராய்ச்சியின் சமீபத்திய அறிக்கையில் தலைமை பொருளாதார நிபுணர் தைமூர் பெய்க் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகள் மந்தநிலையை எதிர்கொள்ள உள்ளதால் இந்திய ஏற்றுமதிக்கான தேவை குறைய வாய்ப்புள்ளது. மேலும், உள்நாட்டில் நிலவும் இறுக்கமான நிதி நிலைமைகள், உள்நாட்டு தேவையை முடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரியில் இந்திய மைய கட்டுப்பாட்டு வங்கி வட்டி விகிதங்களை மேலும் உயர்த்தும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டாலும், மோதி அரசாங்கம் இந்த ஆண்டு கடும் பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறது. பணப் பற்றாக்குறையை சிறப்பாக சமாளிக்க வரவு செலவுத் திட்டம் அறிவிப்புகளைத் தாண்டி, தொடர்ச்சியான கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »