- எழுதியவர், டெய்சி டன்
- பதவி, பிபிசிக்காக
-
பட மூலாதாரம், Trustees of the British Museum
கிரேக்க கவிஞர் ஹோமரின் ஒடிசி முதல் அலெக்சாண்டர் போப் வரை பல நூற்றாண்டுகளாகவே ட்ரோஜன் போர் கவர்ச்சிக்குரிய ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால், இந்த புராதன போர் கசப்பான உண்மையா அல்லது முழுவதும் கட்டுக்கதையா? டெய்சி டன் ஆதாரங்களுடன் அதை விளக்குகிறார்.
சிறந்த எழுத்தாளர்களால் மொழிபெயர்க்கப்பட்ட புராதன கதைகள் அடங்கிய ஆஃப் காட்ஸ் அண்ட் மென் (Of Gods and Men) எனும் புதிய புத்தகத்தைத் தொகுத்தபோது, ட்ரோஜன் போர் பல்வேறு காலகட்டங்களில் எங்கும் வியாபித்திருந்ததை அறிந்தபோது ஆச்சர்யமடைந்தேன்.
ஜான் டிரைடன், அலெக்சாண்டர் போப், லூயிஸ் மெக்னீஸ் போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த கவிஞர்கள் இந்த புராணக் கதையின் வெவ்வேறு பதிப்புகளை மொழிபெயர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
ட்ரோஜன் போர் ஒருவரிடம் ஆழமான உணர்வுகளை கிளப்புவதற்கு காரணம் அது மிகச் சிறந்த கதை என்பது மட்டும் அல்ல, மாறாக அப்போர் உண்மையில் நடந்தது என நீண்ட காலமாக சந்தேகிக்கப்படுவதே காரணம்.

பட மூலாதாரம், Trustees of the British Museum
பண்டைய கிரேக்கர்களுக்கு ட்ரோஜன் போர் கட்டுக்கதை என்பதையும் தாண்டி மேலானது. தங்களது கடந்த காலத்தின் சகாப்தத்தை வரையறுக்கும் ஒரு தருணமாக அதைக் கருதினர்.
கிரேக்க வரலாற்று அறிஞர் ஹராடட்டஸ் மற்றும் கிரேக்க கணிதவியலாளர் எரடாஸ்தினீஸ் ஆகியோரிடமிருந்து கிடைத்த வரலாற்று ஆதாரங்கள், ட்ரோஜன் போர் உண்மையில் நிகழ்ந்தது என்றே யூகிக்கப்படுகிறது.
கிரேக்க கவிஞர் ஹோமரின் இலியாட் இதிகாசத்தின்படி, பண்டைய கிரேக்க நகரமான மைசீனியின் அரசர் அகமெம்னான் தலைமையிலான கிரேக்கர்களுக்கும் ப்ரீங் அரசரின் தலைமையிலான ட்ரோஜன்களுக்கும் பிந்தைய வெண்கலக் காலத்தில் ஆரம்பித்த போர் 10 ஆண்டுகளாக நீடித்தது.
ப்ரீங் அரசரின் மகன் பாரிஸ், மூன்று பெண் தெய்வங்களுக்கு இடையிலான போட்டியில் அப்ரோடைட் எனும் பெண் தெய்வத்தை மிக அழகான தெய்வம் எனத் தீர்ப்பளித்தான். பதிலுக்கு பாரிஸுக்கு அரசர் அகமெம்னானின் சகோதரருடைய மனைவி ஹெலெனை பரிசாக அளித்தார் அப்ரோடைட்.
இதனால், ட்ரோஜன்களை தண்டிக்க அகமெம்னான் மற்றும் அவருடைய சகோதரர், தங்களின் வலிமையான போர்ப்படையுடன் ட்ராய் நகரை நோக்கிப் படையெடுத்தனர். போரில் வெற்றி பெற்று, ட்ரோஜன்களை மண்டியிடவும் வைத்தனர்.

பட மூலாதாரம், Trustees of the British Museum
பண்டைய காலத்தில் மதிப்புமிக்க வரலாற்று அறிஞர்கள்கூட இந்த போர் உண்மையில் நடைபெற்றது என்றே நம்பினர். கி.மு. 5ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் ‘வரலாற்றின் தந்தை’ என அழைக்கப்பட்ட ஹராடட்டஸ், தன்னுடைய காலத்திற்கு 800 ஆண்டுகளுக்கு முன்பு ட்ரோஜன் போர் நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கிரேக்க கணிதவியலாளர் எரடாஸ்தினீஸ் அப்போர் நடந்த காலம் கி.மு.1184 என, இன்னும் குறிப்பாகத் தெரிவித்துள்ளார். எனினும், நவீன வரலாற்று அறிஞர்கள் இன்னும் இதுகுறித்து சந்தேகத்துடனேயே உள்ளனர்.
ட்ரோஜன் போர் உண்மையில் நடைபெற்றதா?
ட்ராய்: மித் அண்ட் ரியாலிட்டி (Troy: Myth and Reality) எனும் பெயரில், லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் இதுதான் மையக் கேள்வியாக இருந்தது.
இந்தக் கண்காட்சியில் இந்தப் போரினால் ஈர்க்கப்பட்ட கிரேக்க ஜாடிகள், ரோமானிய ஓவியங்கள் மற்றும் பல சமகால கலைப் படைப்புகள், பிந்தைய வெண்கல காலத்தைச் சேர்ந்த தொல்லியல் கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ட்ரோஜன் போர் குறித்த கதையில் வரலாற்றின் வாயிலாக உண்மையைக் கண்டறிய முனையும் மக்களின் ஆர்வம் அந்தக் கண்காட்சியில் தெளிவாகத் தெரிந்தது.

பட மூலாதாரம், Claudia Plamp/ Staatliche Museen zu Berlin, Museum für Vor-und Frühgeschichte
இந்தப் போரில் எஞ்சிய ட்ரோஜன்களின் வழித் தோன்றல்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் அளவுக்குச் சென்றனர் ரோமானியர்கள்.
விர்ஜில் எழுதிய அனீயட் எனும் கவிதையில், மரக்குதிரையில் கிரேக்கர்கள் நுழைந்த பிறகு எரிந்துகொண்டிருக்கும் கோட்டையிலிருந்து தன் படையுடன் கதையின் நாயகன் அனீஸ் எப்படி தப்பித்தான் என்பதை விளக்குகிறது.
அந்த குதிரை எப்படி தயாரிக்கப்பட்டது என்பதை விளக்கும் பகுதியை இங்கிலாந்தின் முதல் அதிகாரபூர்வ அரசவைக் கவிஞர் ஜான் டிரைடன் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
“கிரேக்கர்கள் கடினமான போரால் சோர்வடைந்தனர்” என்றும் “அதிபயங்கர உயரம் கொண்ட குதிரை போல் தோன்றியது” எனவும் அவர் குறிப்பிடுகிறார். போரில் தப்பித்த அனீஸ் மற்றும் அவரது படையினர் இத்தாலியில் தஞ்சம் அடைந்தனர்.
கசப்பான உண்மைகள்
ட்ரோஜன் போரின் எதார்த்தத்தை மக்கள் நம்பியிருப்பதில் ஆச்சரியமில்லை. போரின் கொடூரமான உண்மைகள் இலியட் இதிகாசத்தில் சிறிதும் தயக்கமின்றி விவரிக்கப்பட்டுள்ளன.
அவை அவதானிப்பின் அடிப்படையில் இல்லை என்று நம்புவது கடினம். தண்ணீரில் இறந்து கிடக்கும் சிப்பாய் குறித்து, “விலங்குகளும் மீன்களும் அவரைச் சுற்றி மும்முரமாகி, அவரின் சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள கொழுப்பை விழுங்குகின்றன” என விவரிக்கப்பட்டுள்ளது.
ட்ரோஜன் போரை தலைமை தாங்கி நடத்திய அக்கீலியஸ், ஹெக்டரை ஈட்டியால் தொண்டையில் குத்திக் கொன்றபோது, “ஒரு மனிதனின் வாழ்க்கை மிக விரைவாக அழிக்கப்படுகிறது,” என அதை மார்ட்டின் ஹேமண்ட் மொழிபெயர்த்துள்ளார்.
ட்ராய் நகரமும் இந்த இதிகாசங்களில் தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு வாசகன் அந்நகரத்தின் வசீகரமான சுவர்களால் ஈர்க்கப்படுவது தவிர்க்க முடியாததாகிறது.

பட மூலாதாரம், Roberta Fortuna and Kira Ursem/ National Museet Denmark
உண்மையில் ஹோமரின் ட்ராய் நகரத்தை மீண்டும் கண்டுபிடிப்பதற்காக, பணக்கார பிரஷ்ய தொழிலதிபர் ஹென்ரிச் ஷ்லிமேன் என்பவர், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தற்போதைய துருக்கிக்கு பயணித்தார்.
நவீன துருக்கியின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஹிசார்லிக்கில் ட்ராய் நகரமாக இருப்பதற்கான, சாத்தியமான இடம் இருப்பதாக அறிந்து அங்கு ஆதாரங்களைத் தோண்டத் தொடங்கினார்.
அங்கிருந்து பல பண்டைய பொக்கிஷங்களை கண்டுபிடித்தார். அவற்றில் பல தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் பெரும்பாலானவை பிந்தைய வெண்கல காலத்தைச் சேர்ந்தவை என அவர் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது, ட்ரோஜன் போர் நடைபெற்ற காலம் என ஹோமர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அவை இன்னும் நூற்றாண்டுகள் பழமையானவையாக இருக்கலாம் என அறிந்தபோது அவர் சரியான இடத்தைத் தோண்டினார். பண்டைய ட்ராய் நகரம் ஹிசார்லிக்கில் கண்டறியப்பட்டுள்ளதாக, பெரும்பாலான வரலாற்று அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, ட்ராய் நகரம் உண்மையானது.
ஹோமரின் ட்ரோஜன் போருடைய காலப்பகுதியுடன் தொடர்புடைய ஹிசார்லிக்கின் தொல்பொருள் அடுக்கில் நெருப்பு பற்றிய சான்றுகள் மற்றும் சிறிய எண்ணிக்கையிலான அம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தச் சான்றுகள் போரைக்கூட சுட்டலாம். மத்திய துருக்கியில் வாழ்ந்த பழங்கால மக்களான ஹிட்டைட்டியர்களால் உருவாக்கப்பட்ட கல்வெட்டுகளும் அங்கு உள்ளன.
இவை ட்ராய் மீதான சர்ச்சையை விவரிக்கிறது. ட்ராய் நகரத்தை அவர்கள் ‘விலுசா’ என்று அறிந்திருந்தனர். இவை எதுவும் ட்ரோஜன் போருக்கு ஆதாரமாக இல்லை. ஆனால் ஒரு மோதல் இருப்பதாக நம்புபவர்களுக்கு, இந்தத் தடயங்கள் வலுவூட்டுகின்றன.

பட மூலாதாரம், Devonshire Collections, Chatsworth/ Chatsworth Settlement Trustees
ஹோமரின் காவியத்தில் ஆதிக்கம் செலுத்தும் ட்ரோஜன் போர் முற்றிலும் மாறுபட்டதாக இருந்திருக்கும். ஹோமர் விவரித்த அளவில் ஒரு போர் நடப்பதை கற்பனை செய்வது கடினம்.
ஹோமரின் போரில் வீரர்களின் நடத்தை, மனிதர்களின் செயல்கள் போன்றவை உண்மையானவையாகத் தெரிகின்றன.
உலகளாவிய மோதலை மிகவும் ஆழமான ஒன்றாக, போரின் உண்மைகளை முன்னிலைப்படுத்தியது ஹோமரின் மேதைமை. கவிதைகளின் அற்புதமான தருணங்களில்கூட காலம் கடந்த உண்மைகளை ஹோமர் உருவகப்படுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், Trustees of the British Museum
ரத்தம் மற்றும் தாழ்ந்த நிலையிலான உலகம் இரண்டுக்குமான விளக்கத்தை கிரேக்கர்கள் ட்ரோஜன் போரின் பாரம்பரியத்திலிருந்து கண்டறிந்தனர்.
ரத்தக்களரி கொண்ட அந்தக் காலம் தற்போது இறந்துவிட்டது. ஆனால், ட்ரோஜன் போரில் நிறைந்திருந்த வீரமும் தற்காப்பும் இறக்கவில்லை. போருக்குப் பிந்தைய உடனடி நிகழ்வுகள்கூட வன்முறையால் நிறைந்திருந்தன.
இந்தப் போர் உண்மையுடன் எவ்வாறு இணைக்கப்பட்டிருந்தாலும், ட்ரோஜன் போர் கிரேக்கர்கள் மீதும் நம் மீதும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த ஒரு போரினால் ஈர்க்கப்பட்டதா அல்லது வெறுமனே கதையாக இருந்தாலும், உலகில் அதன் அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளது, நினைவுகூரத்தக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com